17 Nov 2017

பேராசை எனும் BIG BOSS

பேராசையின் மூலாதாரங்கள் தெரியுமா? என்ரான்(Enran), வேர்ல்டு காம்(World com.), ஆண்டர்சன் (Anderson ) , அடல்பா(Adelpha) , ஹெல்த் சவுத் ( Health south ) ....இவைகள் பன்னாட்டு நிறுவனங்கள். சரி,  இது மறந்திருக்கலாம் .  கொங்கு நாட்டு ஈமு கோழிப் பண்ணைகள் , கொங்கு நாட்டு சீட்டுக்கம்பெனிகள், ஹர்ஷத் மேதா, கரூர் அன்புநாதன் , வேலூர் சேகர் ரெட்டி , ஜெயலலிதா , சசிகலா etc இவர்களெல்லாம் பொதுச் சொத்தை , மக்களின் பணத்தை தங்களின் பேராசைக்கு ஆகுதி ஆக்கிக்கொண்டனர்.
 முதல் பாராவில் சொன்ன பன்னாட்டுக் கம்பெனிகள் , குறிப்பாக அமெரிக்க வகை தொழில்நுட்ப சுரண்டலாம்.
கீழே கொடுக்கப்பட்டிருப்பது இந்திய கார்பரேட் கட்சிகளின் தலைவர்களின் ஊழல் பேராசையின் மொக்கை வடிவமாகும்.
லஞ்சம், திருட்டு, கறுப்பு பணம் என்பதெல்லாம் குறியீட்டுச் சொற்களாகும் . அடிப்படையில் வேசத்தைக் கலைத்துவிட்டால் பேராசை என்பது ஒளிவீசித் தெரியும்.
அரசாங்கம் இதற்கு குற்றத்தடுப்பு வழக்குப் ( criminal case ) போட்டு  ஏதோவொரு தண்டனையைக் கொடுக்கும். தனிமனித ரீதியில் மட்டுமே புரிதல் இருக்கும்.
பேராசையே அனைத்து சமூக அநீதிகளுக்குமான ஊற்றுக்கண்ணாகும். .இந்தக் கூற்றை கலாச்சார முன்னிருத்தலாக வெளிப்படுத்தியது நவீன உளவியல் அல்ல. அது யூத நெறியான 10 கட்டளைகளில் 10வது கட்டளையாகும்.
இங்கேயும் “ மண்பறீத்துண்ணேல் “; சொன்னது, பெண்ணியவாதி ஔவை .
யூத இலக்கியங்களும் பேராசையைக் கண்டிக்கிறதாம். மேலும் அதை தடை செய்வதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் பேராசை என்பது பொருள்குவிப்புக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது.
இங்கு 1951ல் நேரு காலத்திலேயே முந்த்ரா மோசடி 124 லட்சம்; 1960ல் தர்மதேஜாய் கப்பல் கம்பெனிக் கடன் ஊழல்; இந்திரா காலத்தில் நகர்வாலா ஊழல், ராஜீவ் ஆட்சியில் போபர்ஸ் பீரங்கி ஊழல்; 1992ல் நரசிம்மராவ் காலத்தில் ஹர்சத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் 8 லட்சம்  கோடிகள்; லாலு பிரசாத்தின் மாட்டுத்தீவன ஊழல் 900 கோடிகள்,
இவைபோன்ற இன்னபிறவைகள் பழைய ஊழலுக்கான மாதிரிகள்.
இன்றைய காலக்கட்டத்தில் ...
காமன்வெல்த் விளையாட்டு நிதி -7000 கோடிகள் -சுரேஷ் கல்மாடி
2013ல் சாரதா சீட்டுக் கம்பெனி மோசடி 40000 கோடிகள். ,இது வங்காளத்தில்.
தமிழ்நாட்டில் சேகர் ரெட்டி 500 கோடிகள் , கரூர் அன்புநாதன்... இன்னபிற.
(ஜெ,சசிகலாவின் பேராசை எத்தனை ஆயிரம் கோடிகள் என்று சரியாகத் தெரியவில்லை) இநத பேராசையே அதிகாரத்திற்கான மூலதனமாகவும் உள்ளது.
ஒரு எம்எல்ஏ , எம்பி சீட்டுக்கு கோடிக்கணக்கில் மக்களுக்கு ஓட்டுக்காக / அதிகார வெறிக்காக பணத்தை வீசி எறிகிறார்கள் . மொத்த எம்பி சீட்டுகள் , இந்தியாவின் அனைத்து எம்எல்ஏக்களுக்குமான ஓட்டுகளுக்காக எத்தனை லட்சம் கோடிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வீசப்பட்டிருக்கிறது . இதுவரை நடந்த தேர்தல்கள் எத்தனை என்று கணக்கிட்டால் அது கோடி கோடிகளாக இருக்கும்.
அரசியல் பொதுவெளியில் , மக்களின் கலாச்சாரத்தில் சீரழிவு மனப்போக்கை வெகு தாராளமாக விதைத்து எங்கு பார்த்தாலும் விஷமுள்ளான சீமைக்கருவேலம்தான். மக்களின் ஆரோக்கியமற்ற மனபாவத்தால் தேர்தலின்போது விலையில்லா பொருட்களுக்காகவும் , இலவசத்திற்காகவும் கூச்சமில்லா எதிர்பார்ப்பிற்கு அடிமையாகிவிட்டனர் ; பேராசைக்கான விளைநிலமாகிவிட்டனர்.
பேராசையால் குவித்த கோடிகளை உடையவர்களை, மக்களில் பெரும்பாலோர் அம்மா என்றும், சின்னம்மா என்றும், ஐயா என்றும் பாதாரவிந்தங்களில் அடிபணியக் காத்திருக்கின்றனர் 1
ஆசை என்பது பேராசையாகவே ; பிறர்பொருளைக் கவர்வதற்கான பேராசையாகவே உள்ளது . தெருவில் போகும் பெண்களின் பொருளைக் கவர்வது ; வீட்டில் உள்ள மூத்த குடிமகன்/மகளைக் கொன்று கொள்ளையடிப்பது; செல்பி நாட்டம் பரவியது கல்லூரி மாணவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டிவிட்டிருக்கிறது.
அத்துடன் பட்டம் பதவிகளுக்கான லஞ்சக் கலாச்சாரத்தை ஊக்கிவிடுகிறது.
“பேராசையே அனைத்து சமூக அநீதிகளுக்குமான ஊற்றுக்கண்ணாக உள்ளது“ என்கின்றனர். பிறர் பொருளைக் கவர்வதற்கான பேராசையானது மனித உறவுகளைக் குலைத்துவிடுகிற்து . இதனால்தான் யூதநெறியானது ‘எனக்கே முதலில்‘( me- first) என்கிற கவர்ந்து கொள்ளும் ( grabbing ) தூண்டலை மட்டுப்படுத்துமாறு முன்மொழிகிறது என்கின்றனர் . இத்தோடு செல்வப்பெருக்கால் வரும் பெருமையை கடுமையாக மறுக்கிறது யூத மதம்.
பேராசை என்பது கற்பிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது ; அது பாரம்பரியமாகவே சுவீகரிக்கப்பட்டதாக ,  அல்லது பொதுவானதாகவோ இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பேராசை பற்றி மன அலசல் கூறுவது :
 “லிபிடோ ( libido) , குழந்தை வாயின் ஆதார ஆற்றலாக , உடலின் முக்கிய அங்கமாக உள்ளது . இயல்பான மன எழுச்சி வளர்ச்சிப் போக்கில் இந்த உந்தலானது சமூகரீதியாக ஒப்புக் கொள்ளத்தக்க , பயனளிக்கக்கூடிய நடவடிக்கைகளாக , உதாரணமாக , இடப்பெயற்சி (displacement) , புனிதப்படுத்துதல் (sublimation), பதிலீடு செய்தல் (substitution) மற்றும் எதிர் நடவடிக்கை உருவாக்கம் (reaction formation) போன்றவைகளைச் செய்ய  உந்துகிறது  என்கின்றனர்.
      ஆதார ஆற்றலுக்கு மகிழ்வு கிட்டாதபோது அவன் / அவளுக்கு மனப்பதட்டம் ( anxiety ) மன இறுக்கம் (tension) , விரக்தி ( frustration ) போன்றவைகளாக அது வெளிப்படுகிறது “ என்கிறார் ஆப்ரஹாம் (1927)
      தேவைக்காக மட்டும் பொருள்குவிப்பு நடக்கவில்லை . மாறாக, பொருட்களைச் சேகரிப்பதில் , பிறர் அறியாமல் பதுக்கிவைப்பதில் ( hoarding ) கிடைக்கும் இன்பத்திற்காகவே பொருள்குவிப்பு நடைபெறுகிறது . அதாவது , பொருள்குவிப்பானது தனி அடையாளம் சார்ந்த ஒன்றாக , பாதுகாப்பு , நிம்மதி , அதிகாரத்தைப் பதிலீடு செய்கின்ற குறியீட்டு நடவடிக்கையாகவே உள்ளது . பணம் என்பது மரணமற்ற ( eternity ) வாழ்வை அடைவதற்கான மாய அதிகாரத்தின் ( illusive power) குறியீடாக உள்ளது என்கிறது மன அலசல்.

 குழந்தை வளர்ப்பை ஆய்வு செய்யும் அட்லர் (Adler ) , Getting Type 
(விரும்புவதையெல்லாம் அடைகின்ற வகைமாதிரியினர்) என்ற கருத்தை
முன்வைக்கிறார்.
குழந்தை வளர்ப்பின்போது குழந்தைகளிடம் செல்லம் காட்டுவது அல்லது சலுகை காட்டுவது , தாராளமாக அனுமதிப்பது ( permissiveness ) மூலம் விரும்புவதையெல்லாம் பெறுகின்ற வகைமாதிரியின ( getting type ) சித்த ஆளுமைப் பண்பு வளர்ச்சி அடைகிறது. குழந்தைகளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் அடைவதற்கு , விரும்புவதை யெல்லாம் பெறுவதற்கு , மற்றவர்களைவிட கூடுதலாகப் பெறுவதற்கு குழந்தைகள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக தனிமனித ஆளுமை ( personhood ) என்பது அவர்களுடைய பொருளாதார சொத்து மதிப்பிற்கு சமமானது என்றாகிவிடுகிறது.
      பாதுகாப்பற்றவர்களாக , அங்கீகரிப்பு தேடுபவர்களாக உள்ள பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மனம் விரக்தி அடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் குழந்தைகளின் உடனடியான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று , இடம்கொடுப்பவர்களாகிவிடுகிறார்கள் என்கிறார்  அட்லர்.
      குழந்தைகள் தங்களைத் தாங்களே சார்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன,பேராசைக்கு செல்வம் ஈட்டப்படும் வழிமுறைகள் ஒரு பொருட்டல்ல. பணம் பணத்திற்காகவே குவிக்கப்படுகிறது.
      வரைமுறையற்ற செல்வக்குவிப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி கவலை இல்லை.இயற்கை ஆதாரங்கள் அழிப்பு , சமூகப் பிளவுகள் , இல்லாமையின் துன்பம் பற்றி எந்த அக்கறையும் இல்லை. ஈட்டிக்காரர்களாக உலாவுகின்றனர் .
பேராசைக்கு வழிவகுக்கின்றது சுயமோக ஊக்கிகள். இன்றைய தமிழகத்தில் பேராசையும் பொருள்குவிப்பும் நீக்கமற நிறைந்துள்ளது.
பொருள்குவிப்பை நுகர்வுக் கலாச்சாரம் மிகச் ‘சிறப்பாக‘ கையாளுகிறது. ஆடித் தள்ளுபடியை தமிழகத்தின் பண்டிகையாக ஆக்கிவிட்டார்கள்.
பேராசைக்கு தீனி போட்டு வளர்ப்பதில் குடும்பத்திற்கு கணிசமான பங்குள்ளது. கள்ளத்தனமான வர்த்தக நடவடிக்கை, அரசு ஊழிய உடம்புகளின் லஞ்ச லாவண்யங்கள் இன்னபிற.
இதனால் இவர்களின் பிள்ளைகள் பிறர் வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள். நண்பர்களின் தேர்வு கூட சொத்துக் குவிப்பில் பெரும் பங்குவகிக்கிறது. பிள்ளை, மனைவிக்கு செல்வம் ஈட்டப்படும் வழிமுறைகள் ஒரு பொருட்டே அல்ல.
தங்களின் பெருந்தீனிக்கு செல்வம் இருந்தால் போதும் என்கிற மனோபாவமே மேலோங்கியுள்ளது.
பேராசைக்குணம் பெருமளவில் கற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இதற்கு நெய் ஊற்றி எரியும் தீபமாக நுகர்வுக் கலாச்சாரம் இருக்கிறது.
ஒரு மதத்தின் மறை நெறி கடின உழைப்பை புனிதமானதாகக் கூறுகிறது ( hard work as sacred ). பாவ மன்னிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சொத்துக்குவிப்பு என்பது மதரீதியான கடமை என்கிறது.
இப்போது சுயநலம் என்பது கேவலமான ஒன்று என்பது போய் சமூக இயல்பாக, கந்துவட்டிக் கலாச்சாரமாக உலாவி வருகிறது. இதனால் வரும் உயிர்ப் பலி கூட பரந்துபட்ட மக்களின் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் வித்திடவில்லை என்பது ஆச்சரியமாகும். காரணம் மக்கள் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஈர்ப்பு,வசியம் ஆகியவற்றின் அடிமைகளாக இருக்கின்றனர்.
இந்த ஈர்ப்பு,வசியம் ஆண்டு முழுவதையும் ஆடி மாதமாக மாற்றிவருகிறது.
ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் ( buy one ; get one free ).அதிரடி ஆஃபர்
( Offer ) பேராசையைப் புரிந்துகொள்வது என்பது மட்டுமே பேராசைக் குணத்தைப் போக்குவதில் பலனளிக்கப் போவதில்லை..

உளவியல்நுட்ப ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாமலேயே  தன்முனைப்பு சுயத்தின் வளர்ச்சியில் ( ego development ) மட்டுமே கவனம் குவித்து , நனவிலித் தளத்தில் மாற்றங்களைத் தூண்டிவிட முடியும் என்றாகிறது. கல்வி அறிவார்ந்த அறிதிறனை ( intellectual curiosity ) வளர்க்க முடியும்; தனிமனித ஆற்றலை ஊக்கப்படுத்த முடியும்.. கலை , இலக்கியம் சார்ந்தவைகளைத் தேடுமாறு தூண்டமுடியும். விளையாட்டுத் தளத்தில் ஈடுபடுமாறு தூண்டலாம்.
மற்றொன்று கல்வியாளர்களுக்கு :
பேராசை, நுகர்வுக் கலாச்சார வசியத்தை எந்தெந்த முறைகளில் மறு உற்பத்தி செய்கின்றன, வலுப்படுத்துகின்றன என்பதை கல்வியாளர்கள் பொறுமையாக, பலவந்த மில்லாமல் கட்டுடைத்து மாணவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.
அதைப்போலவே , நிலவுகின்ற பொருளாதார அமைப்பின் விழுமியங்களானது எவ்வாறு இந்த அமைப்பிற்கான பலிகடாக்களை உருவாக்குகின்றன என்பதையும் கல்வியாளர்கள் தெளிவாக விவரித்துவிடவும் முடியும்.
பேராசை நடத்தைகளின் ஊற்றுக் கண்கள் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவது , உளவியல்ரீதியாக ஒருங்கிணைப்பதில், சமூக விழுமியங்களை அகவயப்படுத்துதல் , சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல், மன அழுத்தத்தை வெற்றிகரமாக சமாளிப்பது போன்றவை அடங்கும்.
குறிக்கோளாக, பிறர் நலன் பேணுதல், படைப்பாக்கத் திறனை வளர்த்தல் , மனித குலத்துடனும் பிற ஜீவராசிகளுடனும் உறவுகளை வளர்த்தல், இதரரை சமமாகப் பாவித்தல் , பரஸ்பரம் பிறர்மீது அக்கறை செலுத்துவது மூலம் பதிலியாகும்பொழுது தன்னிலையானது சுதந்திர உணர்வைப் பெறுவது சாத்தியமாகும்.
க.செ


உதவிய கட்டுரைகள்
The  pathogenesis  of  Greed  :causes  and  consequences –Arthur Nikelly
 ( international journal of applied psycho analytic studies -2006 )
Abraham  ( coblentz 1965 )
படங்கள்உதவி ww.google.co.in

நன்றி:
                                                        மற்றமை பற்றி.. ஜமாலன்

1 comment: