19 Feb 2014

புதுமைப் பித்தனின் வாடா மல்லி


ஒரு மன அலசல் வாசிப்பு
       இங்கு புதுமைப்பித்தனின் கலைஞானத்தை ஆய்வுப் பொருளாக எடுக்கவில்லை.  மாறாக அச் சிறுகதையின் மையச் சொல்லாடல் சிலவற்றை வாசிக்க அவைகளை ஆய்வுப் பொருளாக்கப்பட்டிருக்கிறது.
       ஆய்வுப் பொருளை கட்டுடைக்க லெக்கானியம் என்ற ஆய்வுக் கருவியை உபயோகித்தால் அதிர்வோசை எந்தத் திசையில் இருக்கும் ?.
       சொல்லாடலின் வரிகளுக்கடியில் உறைந்துள்ள இயற்கை இணைவு ; வரிகளூடாக ஊடுபாவாக ஓடும் கதை சொல்லியின் மனப் போக்கையும் அறியமுடிகிறது.
       புதுமைப்பித்தனின் அதீத கோபம், மனக் கொந்தளிப்பே இந்தச் சிறுகதை. இரண்டு பக்க கேன்வாசில் – இச்சமூக மேல் சாதியின் கொடூர கலாச்சார வக்ரத்தை சித்ரமாக்கி விட்டிருக்கிறார்.
       இனி அச்சிறுகதையை அப்படியே கொடுக்கப்பட்டிருக்கிறது.
வாடா மல்லிகை
அவள் பெயர் ஸரஸூ; ஒரு பிராமணப் பெண்.  பெயருக்கு தகுந்ததுபோல் இருக்க வேண்டும் என்று நினைத்தோ என்னவோ பதினேழு வயதிற்குள்ளேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது.  அவள் கணவனுக்குக் காலனுடன் தோழமை ஏற்பட்டுவிட்டால் அதற்குச் சமூகம் என்ன செய்ய முடியும்?
       ஸரஸூ ஓர் உலாவும் கவிதை.  இயற்கையின் பரிபூரணக் கிருபையில் மலரும் பருவம்.  காட்டிலே ரோஜா யாருமின்றி உதிர்ந்தால் அதைப் பற்றிப் பிரமாதமாக யாரும் கவலைப்படமாட்டார்கள்.  ஆனால் நந்தவனத்திலே, மனத்தின் களிப்பில் குலாவக்கூடிய இடத்திலே, தனிமை என்ற விதி ஏற்பட்டால் அதைப் பற்றிப் பரிதவிக்காமல் முடியுமா?  இயற்கையின் போக்கைத் தடைசெய்துகொண்டு அவள் தியாகம் செய்கிறாள் ; அவள் பரிசுத்தவாதி என்று சமூகம் களித்துக்கொண்டு இருப்பது அதன் ரத்தவெறிதான்.  அவளுக்கு இந்தச் சமூகத்தில் உரிமையே கிடையாதா?  அவள் நிலைமை என்ன?  சாம்ராஜ்யப் பிரஜையின் நிலைதானா? சமூகம் என்ன செய்ய முடியும், வேதம் சொல்லுகிறது.  தர்ம சாஸ்திரம் சொல்லுகிறது என்று பேத்திக்கொண்டிருக்கும்...?
       ஸரஸூவுக்கு இதெல்லாம் தெரியாது.  அவள் ஒரு ஹிந்துப் பெண். வாயில்லாப் பூச்சி.பெற்றோரையும், புருஷனையும், முன்னோரையும் நம்பித்தான் உயிர் வாழ்ந்து வந்தாள்.  பெற்றோர் கலியாணம் செய்து வைத்தார்கள்.  புருஷன் வாழ்க்கையின் இன்பத்தைச் சற்றுக் காண்பித்துவிட்டு, விடாய் தீருமுன் தண்ணீரைத் தட்டிப் பறித்த மாதிரி, எங்கோ மறைந்துவிட்டான். அவனை இந்த உலகத்தில் இனிக் காண முடியாது.  பிறகு . . . கண்டால்தான் என்ன? அது போகட்டும். இப்படித்தான் இருக்க வேண்டும் என்று சொல்லிவைத்துவிட்டுப்போன முன்னோர்கள் கணவன் சென்றவிடத்தில் இருக்கிறார்கள்.  ஸரஸூ பெற்றோரைத் தட்டியது கிடையாது.  பிறகு முன்னோரை எப்படி எதிர்க்க முடியும்?  அவளும் பெண்தானே!  அச்சம் என்பதுதான் அவளுக்கு அணிகலன் என்று சமூகம் சொல்லுகிறதே.  பிறகு அவள் வேறு என்னவாக இருக்க முடியும்?  அவள் உயர்தர“ப் படிப்புப் படித்த பெண்ணா?  நாலு விஷயங்களைத் தானாக ஆராய்ச்சி செய்து கொள்ள அவளுக்குத் திறன் ஏது?  இயற்கையின் தேவை கட்டுக்கடங்காமல் மீறி ஒரு மிருகத்தின் முரட்டுத் தைரியத்தைக் கொடுக்கவில்லை.  கொடுத்திருந்தால் அவளைச் சமூகம் தூற்றுவதற்குத் தயார்.
       எந்த அமைப்பிலேயும் விதிவிலக்குகளான சிறுபான்மையோர் கஷ்டப்படத்தான் வேண்டும் என்று தத்துவம் பேசலாம்.தத்துவம் நன்றாகத்தான் இருக்கிறது!  ஸரஸூவின் உணர்ச்சிக்கு உரிமையில்லை – அவள் விதிவிலக்கு.
       ஸரஸூ எப்பொழுதும் மாடியின்மேல் காலை ஏழு மணிக்கே தலையை உலர்த்த வருவாள்.  அப்பொழுதே ஸ்நானமாகிவிடும்.  பெற்றோரின் பாசம், அவளைச் சமண முனி மாதிரி, ஒரு பெண்மையின் கோரமாக்கத் துணியவில்லை.  அதை எடுத்திருந்தாலும் அவள் கவலைப்பட்டிருக்க மாட்டாள்.  வாழ்க்கைக்கே வசதியில்லாமலிருக்கும் பொழுது சிகை போவது தானா பிரமாதம்?
       அவளைப் பார்த்தால் யாருக்கும் கண் கலங்கும்.  அவள் கண்களிலே ஒரு நிரந்தரமான துயரம், போக்க வழியில்லாத துன்பம் குடிகொண்டிருக்கும்.  அவள் சிரிக்கத்தான் செய்கிறாள்.  குதூகலமாகப் பேசத்தான் செய்கிறாள்.  இவை யாவற்றிற்கும் பின் சோகந்தான் நிலவும்.
       பிரம்மசாரியாக, உண்மையான பிரம்மசாரியாக நீ இருந்து பார்த்திருக்கிறாயா?  வேறு ஓர் உயர்ந்த இலட்சியம் உனது உள்ளத்தைக் கொள்ளை கொண்டு, உன்னை அப்படியே விழுங்கிவிடாவிட்டால் பிரம்மசரியம் உன்னைக் கொன்றுவிடும்.  உன்னை மிருகமாக்கி உனது உள்ளத்தைப் பேயாகச் சிதற அடித்துவிடும்.  ஆனால் கட்டாயத்தின் பேரில் இப்படிக் கன்னிகையாகக் காலங்கழிக்க வேண்டிய நிலைமையை என்ன சொல்வது?
       அன்று ஸரஸூவின் தம்பி துரைசாமிக்குச் சாந்திக் கலியாணம்.  முதலிலே ஸரஸூவுக்குத் தாங்க முடியாத குதூகலம் – தங்கள் வீட்டில் விசேஷம் வருகிறது என்றுதான், தம்பியின்மீது இருந்த ஒரு ஹிந்துத் தமக்கையின் அளவு கடந்த பாசத்தினால்.
       அன்று பகல் வந்தது. . . .
       அன்று இரவு வந்தது.  ஊரில் இருள்.  வீட்டில் ஒளி.
       வீட்டில் ஒளி:  ஸரஸூவின் உள்ளத்தில்?
       அவளுக்கு என்னென்னவோ நினைவுகளெல்லாம் குவிந்தன.  அப்படித்தானே மூன்று வருஷங்களுக்கு முன், முதல் முதலாக அவருக்கு . . .  என்னென்னவோ தோன்றின.  நேரமாக நேரமாக அவள் மனத்தில் அந்த மூன்று வருஷங்களுக்கு முந்திய சந்தோஷகரமான வாழ்க்கையை ஓர் இன்ப ஒளியாக்க முயன்ற அந்த இரவின் ஒவ்வொரு சிறு சம்பவமும். . . அவர் முதலில் என்ன கூச்சப்பட்டார்!  பிறகு அந்த உரிமை என்ற தைரியம்தானே. . . இவ்வளவு சீக்கிரம் அவள் வாழ்க்கை இருட்டிவிடும் என்று அப்பொழுது கண்டாளா?  என்னவோ சாசுவதமான அழியாத நித்திய வஸ்துவென்றல்லவோ. . .
       துரைசாமியையும் அவன் மனைவியையும் அழைத்துக் கொண்டு சென்றனர்.  கூச்சலும் அமளியும் அவளுக்குப் பொறுக்க முடியவில்லை.
தன்னை மீறிய, கட்டுக்கடங்காத ஓர் ஆவேசம் அவளைப் பிடர் பிடித்துத் தள்ளியது.  பின்புறம் புழக்கடைக்குச் சென்றுவிட்டாள்.
நானும் பின்தொடர்ந்தேன்.  அவள் நிலைமை எனக்கு ஒருவாறு தெரிந்தது.  அவள்மீது ஒரு பரிதாபம்.  அதனால்....
புழக்கடையில் ஒரு பெண் தேம்பிக்கொண்டு இருந்த சப்தம் கேட்டது.
நெருங்கினேன், அவள்தான்!
ஸரஸூ!
பதில் இல்லை.
இன்னும் நெருங்கித் தோளில் கையை வைத்தேன்.  உணர்ச்சியற்ற கட்டைபோல் இருந்தாள், உடல் தேம்புவதினால் குலுங்கியது.
ஸரஸூ!  நான் இருக்கிறேன், பயப்படாதே!  என்றேன்.
நான் ஒரு ஹிந்துப் பெண்!என்று கூறிவிட்டுச் சடக்கென்று உள்ளே சென்றுவிட்டாள்.
நான் திகைத்து நின்றேன்.  ஹிந்துப் பெண் என்றால் உயிர்வாழ உரிமையில்லையா?
நான் எவ்வளவு நேரம் நின்றேனோ!
மறுபடியும் அவள் வந்தாள்.
ஸரஸூ!  என்னை மன்னித்துவிடு.  நான் கூறியது வேறு.  நீ அர்த்தம் பண்ணிக்கொண்டது வேறு.  நான் உன்னை மணம் செய்து கொள்ளுகிறேன்!  என்றேன்.
கொள்கைக்காக நீர் தியாகம் செய்துகொள்ள முயலுகிறீர்.  அது வேண்டாம்-மிஞ்சினால் நான் உமக்குப் போகக் கருவியாகத்தான், உமது தியாகத்தின் பலிபீடமாகத்தான் நீர் கருதுவீர்.  அது எனக்கு வேண்டாம்.  நான் காதலைக் கேட்கவில்லை.  தியாகத்தைக் கேட்கவில்லை.  நான் தேடுவது பாசம்....
அது என்னிடம் இருக்கிறதுஎன்றேன்.  அவளிடம் இவ்வளவு எதிர்பார்க்கவில்லை.
அப்படியானால் திருமணம் வேண்டாம்... பாசம் இருந்தால் போதும்என்று சொல்லித் தலை குனிந்தாள்.
என்ன ஸரஸூ இப்படிச் சொல்லுகிறாய்-இரகசியம் பாபம் அல்லவா? கலியாணம் இதை நீக்கிவிடுமே!
எனக்கு உமது தியாகம் வேண்டாம்.  உமது பாசம் இருந்தால் போதும்!”.
நீ ஒரு பரத்தை!
உமது தியாகத்திற்கு நான் பலியாக மாட்டேன்-அதில் எப்பொழுதும் உமக்கு இந்தக் காலத்து நன்மதிப்பு ஏற்படும்.  தைரியசாலி என்பார்கள்.  அதை எதிர்பார்க்கிறீர்.  நான் பரத்தையன்று-நான் ஒரு பெண்.  இயற்கையின் தேவையை நாடுகிறேன்!என்றாள்.
எனது மனம் கலங்கிவிட்டது.  வெளியேறினேன்.....
மறுநாள் அவள் பிரேதம் கிணற்றில் மிதந்தது.  அதன் மடியில், நான் எதிர்பார்த்தபடியேஎன்று எழுதிய ஒரு நனைந்த கடுதாசி இருந்தது.

-ஊழியன்.7.1934.
-எப்போதும்
முடிவிலே
இன்பம்.
-புதுமைப்பித்தன்.          -காலச்சுவடு பதிப்பகம்.
ஒரு பெண்ணின் தன்னிலைத்தன்மையை (subjectivity) வாடா மல்லி என்று பெயர் சூட்டி கதையாடுகிறார்.
வாடாமல்லி என்பது மனஅலசல்படி ஒரு சிம்பாலிசம் (symbolism) அல்லது குறி (sign) எனலாம்.
வாடாமல்லி என்ற சிம்பாலிசம் சரசு என்ற பெண்ணின் குறிப்பான தன்னிலைத்தன்மையை பிரதிநிதித்துவம் செய்கிறது.
கதை சொல்லியை, கதைப்பாத்திரம் பாதித்து (affect) விட்டது.  ஒரு காயடிப்புச்சிக்கலால் பதட்ட மேற்பட்டுவிட்டது.  இந்தச் சிம்பாலிசம் சித்தத்தின் (அகத்தின்) முரண்பாட்டால்(intra psychical Conflict)  பிரக்ஞை, நனவிலிக்குமிடையிலான பிளவில் ஏற்படும் சக்தி (energy) பிரவாகமாகி, அவைகள் மனத்தின் அதிக ஒடுக்கப்பட்ட பகுதியை (part) கட்டமைக்கிறது.  அது முழுமையான, ஒரு திசை நோக்கிய சிம்பாலிசமாக (symbolism) கட்டப்படுகிறது.
Only what is repressed is symbolized. Only what is repressed needs to be symbolized”-Ernest jones.1910.


       ...பதினேழு வயதிற்குள்ளேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது.  மனமுவந்து என்ற பதத்தில் பிறர்துன்பத்தை கண்டு மகிழ்வு  அடையும் சமூகமிது என்கிறார் கதைசொல்லி.  அதாவது சமூகத்தின் வக்கிரத்தை அப்படிக் கிண்டலடிக்கிறார்.
அவள் ஒரு வாடாமல்லி.
இங்கு அது ஒரு குறியாக (sign) / சிம்பாலிக்காக வெடித்திருக்கிறது.  அந்த மலர் ஒரு பிரதி நிதித்துவம் ; அது சரசுவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
சரசுவின் தன்னிலைத் தன்மையை பிரதிநிதித்துவம் செய்கிறது.
வாடாமல்லி உயிருடன் இருக்கும் போதே அது சற்று காய்ந்திருப்பதாகப்படும்  மற்ற மலர்களோடு ஒப்பிடும் போது.
அது விதவையான பின்பும் கூட  அதன் தன்மையை இழக்காமல் இருப்பதே வாடா மல்லி.
இதைத்தான் வாசகருக்கு புதுமைப்பித்தன் slide show வாக 1934ல் காட்டியிருக்கிறார்.
விதவைப் பெண்ணின் பால் விருப்பத்தை (desire) தடை செய்து கொண்டு ... பரிசுத்தவாதி என்று சமூகம் களித்துக்கொண்டு இருப்பது அதன் ரத்த வெறிதான்என்கிறார்.  அவள் இப்போது காயடிக்கப்பட்டவளாக, எந்த அதிகாரமும், பேசும் சுதந்திரமும்-தன்னிலையாக-இல்லாதவள். அவளிடம் மொழி கூட இல்லை, அவள் தன் phallic யை இழந்துவிட்டாள். புதுமைப் பித்தன் கூறியபடி சமூகத்தின் ரத்தவெறிக்கு அவளின் phallus பறிபோய்விட்டது.
இப்போது அவள் சமூகத்தின் ஒரு பொருள் (object) அவ்வளவே..  நல்லது/கெட்ட/ சுபகாரியம் மூச்! அனைத்தும் பறிக்கப்பட்டவள்.  வரிக்க/ தரிக்க உரிமையற்றவள்.
புதுமையின் லட்சணத்தை கதை சொல்லி இப்படி வரைகிறார்.  ... புருஷன் வாழ்க்கையின் இன்பத்தைச் சற்று காண்பித்து விட்டு, விடாய் தீருமுன் தண்ணீரைத் தட்டிப் பறித்த மாதிரி, எங்கோ மறைந்துவிட்டான்.
புதுமைப்பித்தன் துயருறுபவர் மனத்தினூடே பயணிக்கும் கலையை கற்றுத் தேர்நதவராக இருந்திருக்கிறார் என்பதற்கான அத்தாட்சி இதுதான்.  பிரம்மச்சாரியாக, உண்மையான பிரம்மச்சாரியாக நீ இருந்து பார்த்திருக்காயா?  வேறு ஓர் உயர்ந்த இலட்சியம் உனது உள்ளத்தைக் கொள்ளைகொண்டு, உன்னை அப்படியே விழுங்கி விடாவிட்டால், பிரம்மச்சர்யம் உன்னைக் கொன்றுவிடும்”.
பால் வேட்கைக்கு  உயர்ந்த லட்சியம் / பதிலி  (sublimation) இல்லாவிட்டால் வேட்கை உன்னை அழித்துவிடும் என்பது ப்ராய்டின் 1900களின் கண்டுபிடிப்பு.  கிட்டத்தட்ட அதே காலத்தில் அது இலக்கியப் பிரதியாக தமிழில் சுவடுகளைப் பதிப்பித்திருக்கிறது.
கதையின் 3ம் பக்கத்தில் 8ம் பாராத் துவக்கத்தில் நானும் பின் தொடர்ந்தேன்”.  இந்த நான்யார்? கதைசொல்லியா / புதுமைப்பித்தனா?  அசரீரியாக சரசுடன் வாழ்ந்த அண்டை அசலானா?
 இனி ஓரங்கநாடகம்.
ஸரசு!  நான் இருக்கிறேன், பயப்படாதே!
நான் ஒரு ஹிந்துப் பெண்!
அவனின் கூற்றை அவள் வாசித்துவிட்டு பதிலை குறியீடாக நான் ஒரு ஹிந்துப் பெண்என்கிறாள்.தான் ஒரு Grandiose self என்ற மற்றமை(ஹிந்து) அடையாளத்தை முன்னிறுத்துகிறாள்
புதுமணத்தம்பதிகளின் குதூகலம் அவளைப் பாதித்துவிட்டது (affect).  இப்போது அவள் ஒரு நியுராட்டிக் . இந்நிலையில் ஆடவன் நானிருக்கிறேன் என்பதும், அவள் உடனடி மறுவினையும் வெளிப்படுகிறது.  அவள் மனம் தன் கடந்த காலம் நோக்கி கொண்டுசென்றுவிட்டது.
(புது வாழ்க்கை வந்தவுடன் கடந்த காலம் அழிந்து விடுவதில்லையே.)
நான் உன்னை மணம் செய்து கொள்கிறேன்.
அவன் சமூக யதார்த்தத்திலிருந்து இப்படிக் கூறுகிறான்.  விதவைக்கு என்ன வேண்டும்.  பொதுவழக்கு திருமணம்/மறுமணம் என்பதாகத்தானே இருக்கிறது.
ஆனால் இவள் வேற.
ஆனால்,
சரசுவின்  (Grandiose)   தன்னிலை வேண்டியது... நான் தேடுவது பாசம்.
இங்கே அவள் தேடுகின்ற பாசம் என்பது ஒரு குறிப்பான்.  குறிப்பீடல்ல.  அச்சொல் நனவிலியாய் அவள் தன்னிலையை (subject) பிரதிநிதித்துவம் செய்கிறது.
மனஅலசல்படி :
பாசம் ஒரு சிம்பாலிசம் (symbolism) / குறி (Sign).அது தாய் – சேய் கருத்தை அல்லது உறவை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.
இந்தக் குறிக்கு இப்போது 2வது குறித்தலையும் (secondary signification) பெறுகிறது.
அதாவது தாய் என்றும் அல்லது தாயுமானவர்(Motheror) என்றும் அர்த்தம் பெறுகிறது.
இக்கணத்தில் சரசு வேண்டுவது தாய்ப்பாசம் / வாஞ்சை. அது குறியாகிறது.
பாசம் என்பதை சிம்பாலிசம் என்று கூறுவதற்கான முகாந்திரம் மன அலசல் கோட்பாடுதான்.
பாசம் /குறி தொடக்க காலத்தை (primary element)  (சரசுவின்) பிரதிநிதித்துவப்படுகிறது.
பாசம்/குறிக்கு பருண்மையான பண்பு உள்ளது.
அல்லது பருண்மையாக வெளிப்படும் (சரசுக்கு) etc- Ernest jones.
நான் ஒரு பெண்.  இயற்கையின் தேவை ”. சரசுவின் ஆசை(Desire) எத்திசையை நோக்கியிருக்கிறது என்பது புலனாகிறது.  சரசுக்கு தலைசாய்க்க தாய்மடி வேண்டும் அவ்வளவே.
       அவனிடமும் அதைத்தான் எதிர்பார்த்தாள். ஆனால் மனைவி அந்தஸ்து (சமூக) கிடைக்கிறது. முடிவு நான் எதிர்பார்த்தபடியேஎன்ற சொல்லுடனும் கனத்த மனத்துடனும் முடித்துக்கொண்டாள்.
இதுவும் ஒரு பெண்தன்மைதான்.  பெண்ணியம் தான்.  ஆனால் தளம் வேறு.  தேடினால் கிட்டும். 
புதுமைப் பித்தனின் மனத்தை வெகுவாகப் பாதித்த சம்பவத்தின் தாக்கத்தை எதிர்காலத்தில் ஏற்றி வைத்துப் பார்த்ததால் பயந்து வரலாறு புனைவாயிருக்குமோ என்று தோன்றுகிறது.
[பி.கு:  இப்போது அவர் இருந்து அதே காத்திரத்துடன் இருந்திருந்தால் தர்மபுரி கல்லூரி மாணவன் இளவரசனின் காதல், திருமணம், சமூகம், அவன் இறுதி மூச்சை தண்டவாளத்தில் விட்டதை எப்படி எதிர் கொண்டிருப்பார்?       அந்த இலக்கியப்பிரதி என்ன சொல்லும்]
க.செ.

1 comment:

  1. //.”பதினேழு வயதிற்குள்ளேயே சமூகம் அவளுக்கு வெள்ளைக் கலையை மனமுவந்து அளித்தது.” ‘ மனமுவந்து ‘ என்ற பதத்தில் பிறர்துன்பத்தை கண்டு மகிழ்வு அடையும் சமூகமிது என்கிறார் கதைசொல்லி. அதாவது சமூகத்தின் வக்கிரத்தை அப்படிக் கிண்டலடிக்கிறார்.//

    இது போல கதையின் ஒவ்வொரு பகுதியையும் மிகவும் நுட்பமாக அலசியிருக்கிறீர்கள் அய்யா. அருமை!

    -தெ.சு.கவுதமன்

    ReplyDelete