20 Nov 2015

பாரதியின் கோபம், பரந்து கெடும் வள்ளுவன்.

சித்தம் ஒரு கட்டமைப்பு ; மனப்பாதிப்பை  நனவிலி மொழியில் உருவகமாக்கி கலாச்சாரத்திற்கு வித்தாகிறது . இப்படி ஒரு தன்னிலை தன் மனப்பாதிப்பை சமூக விழுமியமாக , இலக்கியமாக்கி விடுகிறது.
                       தனி ஒருவனுக்கு உணவில்லெயெனில்
  ஜெகத்தினை அழித்திடுவோம்              

 இத்தனை கோபம் பாரதிக்கு ஏன்? ஒருவனுக்கு உணவில்லையெனில் ; யார்?, எந்த சாதி , மதம் , என்பதெல்லாம் அவருக்கு பிரச்சினை இல்லை. ஒருவனுக்கு சாப்பிட உணவு கொடுக்க முடியாத ஒரு சமூகத்தை , கலாச்சாரத்தை அழித்துவிடுகிறது அவர் கோபம். அவரின் கோபம் அவர் பசிக்கு அல்ல ; யாரோ ஒருவரின் பசியை இவர் உணர்ந்ததால்  /  கேட்டதால் அவர் மனம் துன்பப்பட்டு விட்டது  /  பாதிப்புக்குள்ளாகி விட்டது ( affect ).
      அந்த பாதிப்பு  /  மனப்பாதிப்பு பாரதியின் - தன்னிலை உருவாக்கத்தில் , ஆசைக்குரிய தனிச்சிறப்பான இடத்திலிருந்து பிரிக்க முடியாதது   என்பது லெக்கானின் கூற்று.
      பாரதியின் ஆசை மனப்பாதிப்பு  தனி ஒருவனுக்கு உணவு இல்லையெனில் என்று மொழிக் கட்டமைப்பாக ( symbolic ) உள்ளது . அவன் கலாச்சாரம் , மன எழுச்சியை ரத்தமும் சதையுமான குறிப்பானாக்குகிறது - ஜெகத்தினை அழித்திடுவோம் - வலியுறுத்துகிறது.
      பாரதிக்கு முந்தியவன் தன் உணர்வை  /  பாதிப்பை மொழியில் இப்படி கற்பனை உலாவாக்கி விடுகிறான்.
      1062.         இரந்து முயிர்வாழ்தல் வேண்டிற் பரந்து
                        கெடுக வுலகியற்றி யான்  
வள்ளுவன் நம்பும் உலகை இயற்றிவனையே, தன் மனத்திலிருந்து வெளியேற்றுகிறான் -   பரந்து கெடுக .
       மன எழுச்சியானது , மனத்துயரம் , மனப்பாதிப்புகள் , வார்த்தைகளுடன் உறவுடையதாக இருப்பதைவிட கற்பனையானவற்றுடன் மிக நெருக்கமான உறவு கொண்டதாக இருக்கிறது   .  - Lewis A.krishner
      இந்த மனப்பாதிப்பு , மொழியில் கற்பனை உலாவாக வருவது என்பது இலக்கியத்தில் வழமையாக வடிவெடுக்கிறது        .
      ஒரு கவிஞன் இப்படிக் கேட்கிறான் : என்றோ இழந்த ஒன்றின் நினைவை ( lack ) , இல்லாமை  /  வெறுமை உணர்வு உறுத்த , அன்புக்கு ஏங்கி நிறமாறாத பூக்களை த் தேடுகிறான்  - தன் கற்பனை உலகில்.
க.செ
14-11-2015
 உதவிய நூல் : Having a Life- Lewis A.Krishner

2 comments:

  1. மனப்பாதிப்பு, //ஜகத்தினை அழித்திடுவேன்// என வெளிப்புறமாக வடிவம் கொள்வது போல, ஒன்றுமில்லாமல் அழிந்து போவேன் என உள்முகமாக வெளிப்படக் கூடுமோ என ஒரு கவிதை படித்தபோது தோன்றியது. ஒரு பகிர்தலுக்காக அந்த கவிதை:

    இனி இந்த மனதில் கவிதையில்லை

    இனி இந்த மனதில் கவிதையில்லை
    மணமில்லை மதுவில்லை மதுரமில்லை
    இனி இந்த மனதில் கனாக்களும் பூக்களும்
    மழையும் விடியலும் பாக்கியில்லை
    இனி இந்த மனதில் கவிதையில்லை.
    அழகில்லை பூப்போல் நிலவு சிந்த
    காதலில்லை கண்ணீருமில்லை.
    விரகமும் பீதியும் சிநேகமோகங்களும்
    தர்க்கமும் புகாரும் முற்றுமில்லை
    இனி இந்த மனதில் கவிதையில்லை
    இருளும் மனதிலின்று ஓணமில்லை
    சிரிப்பில்லை களிப்பில்லை சிறகுமில்லை
    மலர்தேடியோடும் மலைச்சரிவில்
    நிழல்வீசி நின்ற தேன்மாவுமில்லை
    தரவாட்டு முற்றத்தில் பூக்களமும்
    திரியிட்ட நிலவிளக்கும்
    சாய்ந்த இலவத்தின் தாழ்ந்த கிளையில்
    ஊஞ்சலும் ஏதோ குளிர்ந்த பாட்டும்
    அன்பார்ந்து மிகவே மெலிந்த கையால்
    அம்மா பரிமாறும் மெல்லிய சோறும்
    ஒரு வெள்ளப்பெருக்கில் அடித்துப்போக
    ஒரு காலகட்டம் விழியடைக்க
    இருளும் மனதிலின்று ஓணமில்லை
    இனி இந்த மனதில் கவிதையில்லை.
    இனி இந்த மனதில் இருப்பதென்ன?
    இரக்கத்தின் நான்கைந்து துளிகள் மட்டும்
    ஒரு கிண்டி நீரும் அதனுள்ளேயொரு
    சிறு துளசிக்கதிரும் அணையாவிளக்கும்
    ஒரு பிடிச்சாம்பலும் சொட்டுக் கண்ணீர் விழ
    உடனெழும் புகைச்சுருளும்
    ஒரு சத்தமில்லாத அலறலும் மட்டும்;
    இங்கேயென்னுள்ளில் வேறேதுமில்லை;
    கவிதைக்காய்க் கைநீட்டி வந்தவனே, வெறும்
    கரத்துடன் செல்லுக, திரும்பிச் செல்க
    இனி இந்த மனதில் கவிதையில்லை
    இனி இந்த மனதில் ...
    - சுகத குமாரி (மலையாளத்திலிருந்து தமிழில்: சுகுமாரன்)
    - சிபி

    ReplyDelete
    Replies
    1. அனாமதேயத்திற்கு பால்வகை ஏதுமில்லை என்று தோன்றுகிறது.

      ஆனால் , ஒரு நல்ல கவிதையை – இனி இந்த மனதில் கவிதையில்லை – அறிமுகப்படுத்தியது சிறப்பானது.
      ஆம், இனி இந்த மனதில் கவிதையில்லைதான் . ஏன் என்றால் மனப்பாதிப்பு தனிப்பட்டது. இவ்வகையான மனப்பாதிப்பு உள்முகமாகத்தான் திரும்பும் .
      மனச்சோர்வும் , கையறு நிலை, சாவுந்தல் ( சுய அழிப்பு ) போன்ற பிரதேசங்களில் மனம் பிரயாணம் பண்ணத்தான் செய்யும் .[ அதாவது , மகிழ்வுந்தலுக்கு (pleasure drive ) எதிரான நிலையாக சுய அழிப்பு உந்துகிறது ].
      “ இனி இந்த மனதில் கவிதை இல்லை “தான்.
      ஆனால், மகாகவியின் பாதிப்பு வலுத்தாக்குதலை ( aggression ) நோக்கித் திரும்புகிறது. -கற்பனைதான் -
      அந்தத் தன்னிலை சமூகத்தின்பால் பேரன்பு கொண்டது ; முன்னது தன்னுள் புகைந்து போகக்கூடியது. பாதிப்பின் வர்ணம் ஒன்றானாலும் Shade - கள் பலதரப்பட்டது.

      க.செ
      24-11-2015

      Delete