2 May 2017

சாராயமும் உருட்டுக்கட்டையும்

.......மத்தியப் பிரதேசம் , சாகர் மாவட்டத்தில் உள்ள கர்ககோட்டா எனும் கிராமத்தில்
 ( அமைச்சரின் சொந்த ஊர் ) அக்‌ஷய திருதியை முன்னிட்டு 700 ஜோடிகளுக்கு திருமணத்தை அமைச்சர் நடத்தி வைத்தார் (கோபால் பார்கவா ; பஞ்சாயத்து ராஜ் மற்றும் கிராமப்புற அமைச்சர் ).
அப்போது அனைவரையும் ஆச்சரியப்படுத்தும் வகையில் மணப் பெண்களுக்கு மரக் கட்டைகளை அவர் வழங்கினார் . இது குறித்து அவர் கூறியதாவது :
 “ கணவன்மார்கள் குடிகாரர்களாக மாறாமல் இருப்பதற்காக மரக்கட்டையை  வழங்கினேன். கணவன்மார்களை குடிக்காதே என்று சொல்லும்போது மறுபடியும் குடித்தால் அவர்களை ‘ அடித்து ‘ திருத்தவே வழங்கியுள்ளேன் ”.....                                  தி இந்து 1-5-2017
“ ஒரு தன்னிலையை ( subject ) நெறிப்படி ( ethically ) நடக்குமாறு உந்துகின்ற முகமைக்கு ( agency ) மூன்று குறிப்பிடத்தக்க வார்த்தைகளை ப்ராய்டு பயன்படுத்துகிறார் . அவை , லட்சிய அகன் ( ideal ego ) , தன்முனைப்புக் குறிக்கோள் ( ego- ideal ) , பேரகன் ( super  ego ) .
ஆனால் , ப்ராய்டின் அட்டவணையில் விடுபட்ட நான்காவது முகமை ஒன்று உண்டு. அது ‘ ஆசையின் விதியாகும் ‘ ( law of desire ).
ஆசையின் விதிக்கும் , தன் முனைப்புக் குறிக்கோளுக்கும் ( ego- ideal ) [ அதாவது, சமூக- குறியீட்டு விதிமுறைகளின் வலைப்பின்னல் ( net work of social- symbolic norms ) , ஒரு தன்னிலை அவன் / அவள் கல்விச் சூழலில் அகவயப்படுத்திக் கொள்ளும் லட்சியத்திற்கும் ] இடையிலான இடைவெளியானது மிகமுக்கியமன ஒன்றாகும் “ – லெக்கான்.
நம்மை ஒழுக்க நெறியாளர்களாகவும் , முதிர்ச்சி பெற்றவர்களாகவும்  வளர்ப்பதற்கு இட்டுச் செல்லும் நலம் பயக்கிற முகமையாகத் தோற்றமளிக்கும் தன்முனைப்புக் குறிக்கோள்.
குடிகாரக் கணவர்களை ஒழுங்குபடுத்த உருட்டுக் கட்டை என்றால் ; வணிகப் பொருளாக சட்டப்படியான விற்பனைக் கடைகள் , பார்கள் ; இதை அரசின் வரவு செலவுக்கான வரும்படியாக சட்டமியற்றி , அதை நடமுறைப்படுத்தும் அரசு இயந்திரத்தினை எந்த வகையான கட்டையால் அடிப்பது .
சமூக- குறியீட்டு விதி முறைகளின்  வலைப் பின்னல் ( net work of social- symbolic norms ) , சினிமா / குடிமகன்களின் சரக்குகள், அதன் விளம்பரத்திற்காக கிரிக்கெட் சூப்பர் ஸ்டார்களும் , அவர்களின் குத்து டான்ஸ்களும் சுகமான இன்பத்திற்கு வழிகாட்டிகளாகவும் , ஆசை ஊக்கிகளாகவும்  செயல்படுவதில்லையா ?
கல்வியின் லட்சியம் கறிக் கோழிகளாக்குவதுதானே ?
மாணவர் / மாணவியரை ஒழுக்க நெறியாளர்களாக , முதிர்ச்சி பெற்றவர்களாக , சமூக அக்கறை உள்ளவர்களாக ஆக்குவதற்காகவா மெட்ரிகுலேசன் , இன்னபிற கல்வி நிலையங்கள் உள்ளன ? இவைகளும் சமூகச் சீரழிவுக்கு காரணமில்லையா? இவைகளுக்கு எந்தக் கட்டை ?
ஆண்கள் மட்டுமே குடிமகன்களாக இருப்பதாக மந்திரிக்கு நினைப்பு ; குடிமகள்கள் இல்லையா ?
பெண்கள் குடிமகள்களாவது அதிகமாகியிருக்கிறதா இல்லையா ? புள்ளி விபரங்கள் உண்டா?
மாண்புமிகு பா.ஜ.க மந்திரியின் இறுதியான முத்தாய்ப்புக் கருத்து மிக முக்கியமானதாகும்..
.... மது அச்சுறுத்தலில் இருந்து குடும்பங்களை காப்பாற்ற இது ஒரு முயற்சி. அரசோ அல்லது போலீஸோ தனியாக மாற்றத்தைக் கொண்டுவர முடியாது . பொது மக்கள்தான் மாற்றத்தைக் கொண்டுவர முன்வர வேண்டும் “ என்றார்.    – அதே நாளிதழ்.
       “ மனம்தூய்மை செய்வினை தூய்மை இரண்டும்
  இனம்தூய்மை தூவா வரும் “ – குறள் 455
ஒருவனின் மனத்தூய்மையும் , செயல் தூய்மையும் அவன் சார்ந்த குமுகாயத் தூய்மையைப் பற்றி வருவனவே – குறளியல் சிந்தனைகள் ; கு.ச. ஆனந்தன்
       இது குறளின் ஒழுக்கம் , தனிமனித தூய்மைக்கும் சமூகத்திற்குமுள்ள இயங்கியல் உறவாகத் தெரிகிறது .
ஆசையின் ஊற்றுக் கண் மற்றமையே.    
                                                                                   க.செ