30 Oct 2016

தீபாவளி , தீபாவளி

    வாசகர்களுக்கு தீபாவளி வாழ்த்துக்கள் சொல்ல என்னை மன அலசல் அனுமதிக்கவில்லை . மாறாக , தீபாவளி என்றவுடன் என்ன ? , என்ன ? என கட்டுடைத்துப் பார் என்ற அழுத்தம் நெஞ்சை ஆக்கிரமித்தது .
                முதலில் தீபாவளி என்ற பண்டிகையை / யுகாந்திர பண்டிகையை சுருக்கமாக  அறிய ,
………………………….
“ பிரம்மாவிடம் இருந்த வேதங்களை திருடிய அசுரன் ஒருவன், பாதாள லோகத்தில் ஒளிந்து கொண்டான். அதை மீட்க , வராக அவதாரமெடுத்து , பூமிக்குள் சென்றார் பெருமாள் . அப்போது , பூமித்தாயாருடன் ஏற்பட்ட ஸ்பரிசத்தில் , அவளுக்கு ,  ‘ பவுமன் ‘ என்ற மகன் பிறந்தான் .                                              
பவுமன் என்றால் , பூமியின் பிள்ளை ; அவன் கெட்ட குணங்களைக் கொண்டவனாக இருந்தான் . இதனால் ,  நரகாசுரன் ‘ என்று அழைக்கப்பட்டான். ‘அசுர குணம் கொண்ட மனிதன் ‘ என்று இதற்குப் பொருள்.
நரகாசுரன் வசித்த நகரம் , தற்போது அசாம் என்று அழைக்கப்படும் காமரூபம் பகுதியில் இருந்த , ப்ராக் ஜ்யோதிஷபுரம். ஜோதிஷபுரம் என்றால் பிரகாசமான பட்டணம் என்று பொருள் .‘ ப்ராக் என்றால் கிழக்கு அல்லது முன்பக்கம் ; இந்நகரமே , தற்போது , கவுகாத்தி எனப்படுகிறது .
தேவர்கள் மற்றும் பூலோக மக்களை கொடுமை செய்தான்  நரகாசுரன் . பெரிய இடத்துப் பிள்ளை என்பதால், அவனை யாரும் தட்டிக் கேட்க முடியவில்லை .
வேறு வழியின்றி நரகாசுரனின் தந்தையான பெருமாளிடம் புகார் செய்தார் பிரம்மா.
நரகாசுரனோ , தன் தாயைத் தவிர வேறு யாராலும் தனக்கு அழிவு வரக்கூடாது என்ற வரத்தைப் பெற்றிருந்தான். இதையடுத்து , இன்னொரு பிறவியில் , சத்தியபாமாவாகப் பிறந்து , கிருஷ்ணரை திருமணம் செய்தாள் பூமாதேவி .
அவளை அழைத்துக் கொண்டு , நரகாசுரனுடன் போருக்குச் சென்ற கிருஷ்ணர் , ஒரு கட்டத்தில் , நரகாசுரனால் தாக்கப்பட்டு, மூர்ச்சையடைபவர் போல் நடித்தார் . பதறிப்போன சத்தியபாமா , தன் கணவரைக் காப்பாற்ற தன் மகன் மீது அம்பு தொடுத்தாள் ; நரகாசுரன் இறந்தான் .
அதன்பின்பே , முற்பிறவி நினைவு வர , பெற்ற பிள்ளையையே கொன்றுவிட்டோமே என்று, அவளுக்கு வருத்தம் ஏற்பட்டது. அதேநேரம் அவனது மரணத்திற்காக , உலகமே தீபமேற்றிக் கொண்டாடுவதைப் பார்த்தாள். அதனால் , பெருமாளிடம் , தன் மகன் இறந்த நாளை , தீபாவளி என்றும் , அவன் தேய்பிறை சதுர்த்தசி திதியில் இறந்ததால் , நரக சதுர்த்தசி என்றும் பெயரிட்டு கொண்டாட அனுமதி கேட்டாள் . அதன்படி , தீபாவளி கொண்டாடப்படுகிறது ......
-தி.செல்லப்பா . தினமலர் வாரமலர் அக்டோபர் 23 , 2016
       படித்தவுடன் திகைப்புத்தான் முதலில் வருகிறது . ஒரு தாய் தன் மகன் என்று அறியாமல்  (கணவனுக்குத் தெரிந்தும் ) ; ( மாயக் கிருஷ்ணனுக்குத் தெரியும் ) , மனைவியிடம் சொல்லாமல் , தான் போரில் காயமடைந்து விட்டதாக நடித்து , மனைவியை உசுப்பேற்றி விடுகிறான் .
       தாய்  ( சத்தியபாமா ) கோபத்தில் மகனைக் கொன்று விடுகிறாள் . கொன்றபின் , கடந்தகால நினைவு வந்து தான் கொன்றது தன் மகனை என்று அறிந்து பூமித்தாய் புலம்புகிறாள் .
       தீபாவளி என்றால் நரகாசுரன் அழிந்த நாள் . ஆகையால் தீப ஒளி நாடெங்கும் .
       முதலில் இது ஒரு வைணவக் கதை . அது அனைவருக்குமானதாக கட்டப்பட்டுவிட்டது
       நரகாசுரன் யார் ? தந்தை கிருஷ்ணன் ; தாய் பூமாதேவி .
       அதாவது , தெய்வீகத் தம்பதியருக்கு பிறந்த மகன் அசுரன் ஆகிவிட்டான். அதனால் பெற்றோரே தங்கள் மகனைக் கொன்றுவிட்டனர். இதெல்லாம் தீபாவளியில் வெளிப்படாது . பிரதானமாக , நரகாசுரன் கொல்லப்பட்ட நாள் என்பதைத் தீபத் திருநாளாக அனைவரும் கொண்டாட வேண்டும் என்று முன்னிலைப் படுத்தப்பட்டிருக்கிறது (  projection ) வரலாறு .
       நரகாசுரன் செய்த குற்றமென்ன ? அரக்கன் , பிரதானமாக தேவர்களை துன்புறுத்தினானாம் .
                தேவர்களின் ஆட்சி அதிகாரத்தை நிலைகுலைய செய்துவிட்டான் போலிருக்கிறது .
                விஷ்ணுவின்  சர்வாதிகார ( Totalitarian  ) அதிகாரம் இந்த அதிகார மீறலை ஏற்காது.
      நரகாசுரன் எல்லை மீறிவிட்டான். ஆகவே அவனுக்கு ஈடிபல் அதிகாரம் விதித்தது மரணம் ; தேவர்களுக்கு மீண்டும் ஆட்சி அதிகாரம் .
      ஆனால் , தேவர்கள் அகலிகை போன்ற பெண்ணைக் கூட விட்டுவைத்ததில்லை . அசுரர்களும் தேவர்களும் உழைத்து , கடலைக் கடைந்து பெற்ற அமிர்தத்தை கபடத்தனமாக , மோகினி ஆட்டத்தால் அசுரர்கள் பெறமுடியாமல் செய்தது நெறியா ( Ethics ) ?
                இத்துடன் அசுரன் இறந்த நாளை தீபாவளி என்று கொண்டாட தம்பதிகள் நம்மைப் பணித்ததேன்?
       மகனைக் கொன்ற குற்றவுணர்வால் ( Guilty ) அசுரனின் நினைவை தீப நாளாக்கி விட்டார்களோ என்னவோ . அல்லது , வரலாற்றில் இடைச்செருகல் ஏதும் நடந்ததோ ? 
    ஒரு வைணவ கதையாடலை பிற சமயத்தினரும் கொண்டாட எப்படி ஏற்கவைக்கப்பட்டனர்? .
       தீபாவளி என்பது – அர்த்தமல்ல , குறிப்பீடு ( Signified ) அல்ல . அது “ குறிப்பான் “ (Signifier ) . ஒரு சமூகக் கட்டமைப்பின் வலைப் பின்னல் அது .
       அது பகுதியை முழுமையாய்க் காட்டும் நனவிலி . அது மாஸ்டர் குறிப்பான் ( Master signifier )  (மேட்ஸ்ப்ளாங்கோ).
                அது வைணவம் என்ற பகுதியில் பிறந்து இந்துக்களின் பல பிரிவினரையும் ஒன்றாக்கி தீப ஒளி ஏற்றுகிறது .
       பிறப்பிலேயே தீண்டாமையை உமிழும் சமூகத்தில் தீபாவளி அனைவருக்குமானதாக ஆக்கப்பட்டிருக்கிறது .
       வரலாற்றில் , ஆதியில் பாதிக்கப்பட்டவர்களைக் கூட முரண்பாட்டை உணரவிடாமல் தீபத் திருநாள் மயக்கிவிட்டது .
       சமூக அந்தஸ்தை பிறவியிலேயே இழந்தவர்கள் கூட இந்தத் தீபாவளியை ஏற்பதின் மூலம் சம அந்தஸ்து பெற்றுவிட்டதாக / பெற்றுவிடலாம் என்ற மாயையை உண்டாக்கியிருக்கிறது தீபாவளி
       தீபாவளி வர்க்கப் பிரிவினையையும் உடைத்திருக்கிறது ( தற்காலிகமாகத்தான் ) .
                ( ஆட்டுக்கறி , கோழிக்கறி , மாட்டுக்கறி ) இது ருசி பேதத்தால் அல்ல .
       சென்னையிலிருந்து பத்து லட்சம் பேர் சொந்த ஊருக்கு பேருந்தில் பயணம் செய்ய உளவியலாக கட்டாயப்படுத்தப்பட்டிருக்கிறது . ரயிலில் பயணப்பட்டவர்கள் கணக்கில் வரவில்லை .
       9 TO 5  வகையினரும் , அரசு ஊழிய உடம்புகளும் , மென்பொருள் ( soft ware ) ஊழியர்களும் சம்பளம் , கிம்பளத்தை பட்டுகளாக , நகைகளாக , பகட்டுடைகளாக மாற்றம் செய்துவிட்டது தீபாவளி.
       தீபாவளி , எப்படியோ எதிமறைகளை , முரண்களை மயக்கி ஏகத்துவத்தை நிலைநாட்டி விட்டிருக்கிறது .
      இப்படிப்பட்ட ஒரு கருத்தமைவை ( Ideology ) உள்ளடக்கியது தீபாவளி .
      இறுதியாக , தீபாவளி என்பது ஒரு பெண்ணிய பார்வை ( Female Gaze ) உணர்வு கொண்டது (லெக்கான்).
       ஆடை அணிகலன் , பகட்டு என ஒவ்வொருவரும் பிறரின் / மற்றவர்களின் ஆசைப்படு பொருளாக ( Object )  இருப்பதையே இக்கொண்டாட்டம் மையமாகக் கொண்டது எனலாம் .
       தீபாவளிக் கொண்டாட்டத்தின் பெரிய வெற்றி என்று எதைச் சொல்வது என்றால் முரணியக்கத்தில் ( சாதி / வர்க்கம் ) உள்ளவர்களை ஏகத்துவமாக்கிவிட்டதுதான் பெரிய வெற்றி எனலாம் . மீண்டும் பகுதியும் முழுமையும் ஒன்றல்ல என்பது மறக்கடிக்கப்பட்டுவிட்டது .

க.செ

19 Oct 2016

ஒரு கட்டாய விடுப்புக்குப் பின் மீண்டும்... மற்றமை

          1919 - ல் இத்தாலியில் ஒரு புதிய அரசியல் கட்சி கட்டப்பட்டது .
                அது இதுதான் .  “  பாசிஸ்ட்.
                தன் அரசியல் திட்டமாக முழக்கமிட்டது ....படுகவர்ச்சியாக .
        இத்தாலியை பழைய ரோமாபுரி சாம்ராஜ்ஜியத்தின் உன்னத நிலைக்கு உயர்த்தவேண்டும் என்றனர்.
       1922 -ல் ஆட்சியைப் பிடித்த பின் செய்த காரியம் ஒன்றுதான் . ஹிட்லருடன் ( நாஜி ) இணைந்து இரண்டாம் உலக யுத்தத்தை துவக்கியதுதான் மக்கள் கண்ட பலன் ; பழைய ரோமாபுரி ஆட்சியை அல்ல.                 ஆனால்,பாசிஸ்ட்டுக்கும் , நாஜிக்கும் “ நிரந்தரப் போராட்டம் , மனித இனத்தை , பலசாலியாக்கியிருக்கிறது ; நிரந்தர சமாதானம் , மனித இனத்தை அழித்துவிடும் ...    – தினமலர் . செப்.18.2016.
       இதுதான் மாவல்லமையின் (  grandiose narcissism )  ஆரோக்கியமற்ற மனம்.
     இதனின் எளிய வடிவம்
        கணவனை செல்போன் திருடியதற்காக கண்டித்த மனைவியை மூன்று முறை
 ‘  தலாக் ‘ கூறி விவாகரத்து செய்தார் தி இந்து 13-10 2016
தனிமனித ஒழுக்கம் , சமூக ஒழுக்கம் என்று பெண் பேசிவிட்டால்.... ஆணின் மாவல்ல சுயமோகம்  மனக்காயத்தால் துடிதுடித்து விடுகிறது . விளைவு மனைவிக்கு தண்டனை வழங்கல்தான் . ஆண் என்பது பெண்ணுக்கு எட்டாத மாவல்லமையானது.

 “ சர்ஜிகல் ஸ்ட்ரைக் ( Surgical Strike ) பற்றி விவாதிப்பது ராணுவத்தை அவமானப்படுத்துவதாகும் – வெங்கைய நாயுடு.
       பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் , தீவிரவாதிகள் மீது மிகத்துணிச்சலாக நமது ராணுவ வீரர்கள் தாக்குதல் நடத்தியுள்ளனர். அதில் சந்தேகங்கள் எழுப்புவது ராணுவத்தை நாம் அவமானப்படுத்துவது போலாகும் ...
[ மாவல்ல சுயமோகத்தின் (  grandiose narcissism )  பதில் ... “ சர்ஜிகல் ஸ்ட்ரைக் பற்றி ஆதாரம் கேட்பதற்கெல்லாம் பதில் அளிக்கவேண்டியதில்லை....]
தகவல் அறியும் உரிமைச் சட்டத்தைக் கொன்றுவிடும் மாவல்லமை .
[ ஈராக்கில் அமெரிக்க ராணுவம் செய்த அட்டூழியங்களை மறந்து போகலாமா? ராணுவம் கேள்விக்கு உட்படாததா ? குறைவற்றதா ” ?!.   வேதம் சொல்லும் “ பிரம்மமா அது ? ]
       பிரம்மம் .......அது ? .   அப்படித்தானே !


பிரதமர் நரேந்திர மோடியின் பெருமிதம்

        நாம் விஜயதசமியை கொண்டாட உள்ளோம்.இந்த ஆண்டின் விஜயதசமி நமக்கு மிகவும் சிறப்பான நாள் ஆகும் . தீய சக்தியை வென்றதைக் குறிக்கும் வகையில் கொண்டாடப்படும் இந்த விழாவை முன்னிட்டு நாட்டு மக்களுக்கு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் “ ....
        [ “  பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் 7 தீவிரவாத முகாம்கள் மீது இந்திய ராணுவம் சமீபத்தில் அதிரடியாக தாக்குதல் நடத்தி அழித்தது. இதை மனதில் வைத்து மோடி இவ்வாறு தெரிவித்துள்ளார். பிடிஐ “ ] - தி இந்து 10,10,2016.
       இது மோடிஅவர்கள் , சரஸ்வதி பூஜை , இன்று பிரபலமாகி வரும் விஜயதசமி அன்று பேசியது.
       விஜயதசமி இந்து சமயத்தில் ஒரு பண்டிகை. அதற்கே உரிய பாரம்பரிய காரணங்களுடன், அதாவது , வாழ்வின் வெற்றிக்கான மூலப்பொருட்களான ஆயுதங்களுக்கு ஆண்டுக்கு ஒருமுறை வணங்குவது மூலம் நன்றி செலுத்துவது. இது புராணகாலம் தொட்டு வந்திருக்கிறது.
       பாகிஸ்தான் மீதான    Surgical Strike  (  துல்லிய தாக்குதல் ) மிகச் சமீபகால , இந்திய ராணுவத்தின் ஒரு நடவடிக்கை ஆகும். இந்த நடவடிக்கை மோடி அரசாங்கத்தால் நடத்தப்பட்டது. இதன் வெற்றியை உச்சத்திற்கு கொண்டு செல்வதற்காக  மாவல்ல சுயமோகம் (  grandiose narcissism ) இதை விஜயதசமியுடன் இணைத்து விடுகிறது. அதாவது இனிவரும் ஆண்டுகளில் இந்த வெற்றியும் , விஜயதசமியும், மோடியும் பிரிக்க முடியாதவையாக நினைவுச் சுருளுக்குள் இருக்கும்.-விஜயதசமி என்பது மக்களின் ஆசைப்படுபொருளாகும் .அதற்குள்தான் மோடி தன் அரசியலைச் செயல்படுத்துகிறார்
       இந்த ஆரோக்கியமற்ற மனம் தொன்மையான ஆதி ஆசைப்படு பொருளான ( archaic object )  விஜயதசமியையும் , நவீன காலத்தின் சம்பவத்தையும் பிரித்துப் பார்க்க வேண்டும். இதைச் செய்யாமல் இரண்டையும் ஒன்றாக்கி தன் மாவல்லமைக்கு எடுத்துக்காட்டாக மக்கள் மனதில் ஒரு கருத்துருவத்தை கட்டுகிறார்கள்.
      இது ஆரோக்கியமற்ற சுயமோகத்தின் பீடிப்பாகும்.
      சர்ஜிகல் ஆபரேசன் பற்றி நாடு முழுவதும் விவாதம் “ – மோடி.
18-10-2016 டிவி செய்தி.

எதில் இருக்கிறது கௌரவம்
        “ தீவிரவாதிகளின் மீதான ராணுவத்தின் துல்லிய தாக்குதல் நாட்டின் கௌவரத்தை உயர்த்தியது-ஆர் எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத். - தி இந்து 12-10-2016.
       இங்கும் நாட்டின் கௌவரம் உலக அரங்கின் உச்சாணியில் இருக்க வேண்டும் என்ற பெரு ஆசையே , அந்த நிலையே கௌரவம் என்று இந்த மயங்கிய மனம் புரிந்து கொண்டிருக்கிறது. ராணுவமும் , நாடும் வேறுவேறானது. நாட்டின் கௌரவம் என்பது பல பரிமாணங்கள் கொண்டது . அது ராணுவத்தால் மட்டும் உயர்த்தப்படுகிறது என்று பேசுவது ஆரோக்கியமற்ற பாசிச போக்காகும்.  




ஆசையின்  கருத்துருவம்   உருவகமாக
     பாவம் இராவணன்
       பாவம் இராமன்
       இந்த புராதன நாயகர்களின் புகழில் பங்கு போட புதிதாக வந்துவிட்டனர்.
       பத்துத் தலை இராவணனாக பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப்பும் ;
       அவனை வதம் செய்யும் இராமனாக இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியும் அவதாரம் எடுத்துள்ள இடம் டிஜிட்டல் பேனர்கள் .
       ஊர் , உத்திரப்பிரதேசம் .  A “  Idea
        ஐடியா வுக்குச் சொந்தக்காரர்கள் சிவசேனா கட்சியினர் .
 – தகவல் சேகர் குப்தா . தி இந்து 12-10-2016
கவனிக்க : பரப்புரை
1.        சர்ஜிகல் ஆபரேசன் பற்றி நாடு முழுவதும் விவாதம் “ – மோடி.  .
 18-10-2016 டிவி செய்தி.
2.        .... எல்லையில் இந்திய ராணுவம் நடத்திய துல்லிய திடீர் தாக்குதலை இஸ்ரேலின் எக்ஸ்ப்ளாய்ட்ஸ் முறை வியூகத் தாக்குதலுக்கு நிகரானது . எல்லையில் நடத்தப்பட்ட அந்தத் தாக்குதல் குறித்து தற்போது உலகளவில் பேசப்படுகிறது. நமது ராணுவத்தின் திறன் மற்றவர்களை விட எந்த வகையிலும் சளைத்தது இல்லை என்பது உலக அரங்கில் நிரூபணமாகியுள்ளது ” .
( இமாச்சலப் பிரதேசத்தில் மூன்று நீர் மின் திட்டங்களை அர்ப்பணித்து உரையாற்றிய பிரதமர் நரேந்திர மோடி பேசியது ) – http:// tamil.thehindu.com /india . 18-10-2016
க.செ