12 Dec 2013

கிருஷ்ணனும் கால்தூசும்.

ன்று வைகுண்ட ஏகாதசி.  கிருஷ்ணனை தரிசிக்க மகரிஷிகளும் பக்த கோடிகளும் துவாரகை நோக்கிச்செல்லும் ரோட்டில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார்கள்.

துவாரகையில் நாரதன், கிருஷ்ணனின் மனைவியரான பாமா, ருக்மணி ஆகியோர் கூட்டம் சேர்வதைப் பார்த்து மலைத்து கிருஷ்ண பக்திக்கு அளவேது ! என அவர்களாய்ப் புளகாங்கிதம் அடைந்தனர்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் ஒரு நமட்டுச் சிரிப்புடன் சோகமானார். “அய்யோ! தலைவலி, உயிர்போகுதே” என்றார்.

நாரதனோ “பரந்தாமா! உனக்கா தலைவலி” என்றார். மருத்துவர்கள் வரிசையாக நின்றனர், தைலங்கள் அளவில்லாமல் தடவப்பட்டது, தலைவலி போனதாகத் தெரியவில்லை. நேரமோ ஆகிக்கொண்டிருந்தது. பக்தர் கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது.

நாரதன் தலைமையில் ருக்மணி, பாமா சென்று, “பரந்தாமா! இந்தத் தலைவலிக்கு மருந்து என்னவென்று கட்டாயம் உனக்குத் தெரியும்.  தயவுசெய்து சொல்லிவிடு. எங்கிருந்தாலும் நாங்கள் கொண்டுவந்து விடுகிறோம்” என்று கேட்டனர்.

கிருஷ்ணன், “ஆம். எனக்குத் தெரியும். அது என் பக்தர்களிடம்தான் இருக்கிறது. ஆனால் அதை அவர்கள் எனக்குத் தருவார்களா என அஞ்சுகின்றேன்” என்றார்.

நாரதரோ கதறி அழுதுவிட்டார். “கிருஷ்ணா! உனக்காக என் உயிரையே தரத் தயாராக இருக்கிறேன்” என்றார். பாமாவும் ருக்மணியும் கண்ணீர் விட்டனர். “சாமி ! என்ன இப்படிச் சொல்லிவிட்டீர்கள்? என்ன வேண்டும் கேளுங்கள்” கோரசாகக் குரல் கேட்டது. “என்ன வேண்டும், சொல்லுங்கள் ஆண்டவரே” என்றனர்.

ஸ்ரீகிருஷ்ணர், “மகிழ்ச்சி. உண்மையான பக்தியுள்ள, என்மீது பக்தியுள்ள பக்தனின் பாதத்துளிதான் அந்த மருந்து.  அந்தப் பாதத்தூசியை எடுத்துவந்து என் நெற்றியில் தடவினால் என் தலைவலி போய்விடும்” என்றார்.

இதைக்கேட்டு அனைவரும் திடுக்கிட்டனர். “நாராயணா! நாராயணா!” என்றார் நாரதன். “என் பாதத்துளியை பகவான்  மீது தடவி அந்தப் பாவத்தைச் சுமக்க நான் தயாராக இல்லை” என்றார்.

மனைவியர் இருவரும், “நாரதா! நீரோ பக்தர் மட்டும்தான். நாங்கள் அவரின் பத்தினிகள். நாங்கள் அந்தப் பாவகாரியத்தைச் செய்ய முடியுமா” என்றனர்.

எல்லோரும் ஒருவர் முகத்தைப் பார்க்க அந்தப் பார்வை நாடு நகரமெங்கும் நகர்ந்து சென்றது. நேரமாகிக்கொண்டிருந்தது. ஏகாதசியும் நெருங்கிவிட்டது. உண்மையான பக்தனின் பாதத்துளி கிடைத்தபாடில்லை.

ஸ்ரீகிருஷ்ணனிடம் நாரதர், “சாமி! நேரமாகிறது. என்ன செய்யலாம்” என்றார். கிருஷ்ணனோ “நாரதா! பிருந்தாவனம் சென்று கோபியர்களிடம் கேட்டுப்பார், ஒருவேளை கிடைக்கலாம்” என்றார்.

உடனே நாரதர் பிருந்தாவனம் சென்றார். கிருஷ்ணனுக்கு வந்துள்ள பிணியையும் அதற்கான மருந்தையும் கோபியர்களிடம் சொன்னார்.

கோபியரோ நாரதரிடம் கோபித்துக் கொண்டனர். “எங்களோடு கிருஷ்ணர் இருந்தவரை எந்தநோயும் வந்ததில்லை.  நீங்களெல்லாம் அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை, அதனால்தான் நோய் என்றனர்.

அந்தப்பெண், “எங்களில் சிறந்த பக்தை யாரென்று சோதிக்க நேரமில்லை” என்று கூறிக் கொண்டே கீழே ஒரு துணியை விரித்தாள். எல்லாப் பெண்களையும் அழைத்து “உங்கள் பாதத்தின் துளி இந்தத் துணியில் படுமாறு ஒவ்வொருவரும் நடந்து செல்லுங்கள்” என்றாள்.

அவள் மேலும், கிருஷ்ணன் குணமானால் போதும். எங்களுக்குப் பாவம் வந்து சேர்ந்தாலும், நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை என்று பாதத்துளிகளின் மூட்டையைக் கட்டி நாரதரிடம் கொடுத்தார்.

நாரதர் உடனே துவாரகை வந்து கிருஷ்ணனிடம் நடந்ததெல்லாம் கூறி பாதத்துளியின் மூட்டையைக் காட்டினார்.

கிருஷ்ணன் மூட்டையைப் பிரித்து பிருந்தாவனப் பெண்களின் கால்தூசியை தனது நெற்றியில் பூசிக் கொண்டார். கிருஷ்ணனுக்குத் தலைவலி பறந்துவிட்டது.

நாரதர் கைகூப்பி, கண்ணீர் மல்கி, “விளங்கிவிட்டது. எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள். உண்மையான பக்தியின் லட்சணம் என்னவென்றுபுரிந்துவிட்டதுஎன்றார்.

ஒரு புராணக் கதையை / Myth–ஐ, நாட்டுப்புறவியல் கதையாடல்களை மனஅலசல் கருவியால் திறக்கமுடியுமா, வாசிக்கமுடியுமா என்ற சோதனை ஓட்டம்தான் இது.
இம்முயற்சி  (உளவியல் ஆய்வு) இப்போது நடைபெறத்தான் செய்கிறது. தமிழில் மானுடவியல் மூலம் Myth-ஐ கள ஆய்வு செய்திருக்கிறார்கள்.
பேராசிரியர் பக்தவத்சல பாரதியால் நரசிம்ம அவதாரம் பற்றி மானுடவியல் ஆய்வு ஒன்று “புதிய ஆராய்ச்சியில் வெளிவந்திருக்கிறது. இன்னும் பல முயற்சிகள், ஆய்வு நடந்திருக்கலாம்.
இவைகளைத் தொடர்ந்து ஒரு போக்காக ஆய்வுக்களம் இருப்பதாகத் தெரியவில்லை. (மானுடவியலாளர் லெவிஸ்ட்ராஸ் பற்றியெல்லாம் வெகுஜனப் பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன).
இங்கு மனஅலசல் ஆய்வுக்கு மேலே கண்ட கதைக்கு தலைப்பு என்ன? - கடைசியில் கூட வைக்கலாம்.
கிருஷ்ணன் அவதாரமாக-மனுசனாக – சித்தரிக்கும் கதையாடலில், மிகச் சின்ன கதை இது.  ‘மகாபாரதம்’  கதைகளின் குவியல். இது அந்தக் குவியலிலிருந்து ஒரு இனுக்கு.
கிருஷ்ணனுக்குத் தலைவலி என்பதே நம்பக் கூடியதாய் இல்லை. பக்தர்களுக்கு. ஏன்? பகவான் ஆயிற்றே!
பின் வலியால் துடிப்பது? அதுதான் பக்தர்களின் பதட்டத்திற்குக் (anxiety) காரணம்.
தலைவலி பகவானுக்கு. மருந்து என்னெவென்று அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் பகவானுக்கு உதவ யாருமில்லை, அவரின் பத்தினிகள் உட்பட.
பாவம் பரமாத்மா. அவர் கூடாரத்தில் எல்லோரும் இருக்கிறார்கள். ஆனாலும் கிருஷ்ணர் கண்களுக்கு அது No Mans land ஆக இருக்கிறது.
கால் தூசி பெறமாட்டாய். இதுஒரு வசைச் சொல்லாகத் தமிழில் உள்ளது. ஆனால் அதுதான் இங்கு பிரச்சனை.
பிரச்சனை கால்தூசி என்றவுடன், பகவானின் நெற்றிக்கு என்றவுடன், கொடுக்க ஆசைப்படத் தயாராக இருக்கும் நாரதன் உட்பட அனைவருக்கும் வருவது காயடிப்பு பயம் (castration fear). இந்தக் காயடிப்புச் சிக்கலை மீறினால்?... பதில்  “பாவம் வரும் (நாரதர்  தரும் பதில், பத்தினிகளும்தான்). அதைத் தொடர்ந்து ‘நரகம்.
பாவம்’, ‘நரகம் அச்சத்திற்குரியது. Taboo. இது Oedipal law.
அதாவது சனாதனம்.
ஒருவனின் பிறப்புக்கு முன்  மொழியில்  கட்டப்பட்ட கலாச்சாரச் சட்டம்; அந்தச் சட்ட மனத்தால் ஆளப்படுகிறான் மனிதன்.
யார் இயற்றியது; கிருஷ்ணனும், அவர் சூரியனுக்குச் சொல்ல.... இப்படியே மனுவிடம் சென்று, பின் மனுநீதியாகிவிட்டது. அதாவது, அத்வைதத்திற்கான ஈடிபலாக மனு உள்ளது எனலாம்.
அது மொழியில், கலாச்சாரத்தில் இருப்பதால் பாவம், நரகம் என்ற குறிப்பான்கள் மக்களைப் பார்த்து கட்டளை இட்டுக் கொண்டே இருக்கும். இதை அகவயப்படுத்திய தன்னிலைகள் சட்டத்தை, கலாச்சாரத்தை மீற முடியாது,
ஆகையால் கிருஷ்ணன் பலமான  Paradox-ல் சிக்கிவிட்டான்.  அவன் எய்த அம்பு அவனுக்கே திரும்பி வருகிறது.
கிருஷ்ணன் குருஷேத்திரத்தை நடத்தியவனாயிற்றே. தன்னை நோக்கி வந்த பாவம் நரகம் என்ற பக்தர்களின் பயத்தை பிருந்தாவன் நோக்கி கோபியர்களிடம் அனுப்பிவிட்டான்.
கோபியர்கள் பிரச்சனையை கால் வினாடியில் தீர்த்துவிட்டார்கள்.
கிருஷ்ணரின் மண்டைவலியும் போயே விட்டது. நாரதனுக்கு பக்தி என்றால் என்னவென்று தெரிந்துவிட்டது.
அன்று கிருஷ்ணதாசர் என்ற சமூகக் குழுவினருக்கான அனுபவமாயிற்று இக்கதை.
அனைவருக்கும் (தான்). பக்தி என்பது என்னவென்றால் அனைத்தையும் கடந்து- பாவம், புண்ணியம்,சரி, தப்பு, நரகம், சுவர்க்கம்-சென்றுவிடுவது.
கிருஷ்ணன் உணர்த்துவது இதுதான்.
DR.சுதிர்காக்கர் மேற்கத்தியனுக்கும், கிழக்கியத்தியனுக்கும் வித்தியாசமுண்டுஎன்பார். மேற்கத்தியனுக்கு I , “நான்” என்பது நான்தான்; கிழக்கிந்தியனுக்கு I’ , நான் என்பது அவன், அவன் குடும்பம், அவனின் கடவுள். Post modern காலத்தில் மெத்தப் படித்தவர்களிடம் இது தேய்பிறையாய் இருக்கிறது.
அதாவது இங்குள்ள தன்னிலை கடவுளை தன் அடையாளமாக்கிக் கொள்கிறது. இது மேற்கில் அரிது. அதாவது கடவுள் புறப்பொருள் அல்ல. அதுவும் தன்னிலைதான் என்ற நிலைப்பாடு. [அகவயப்பட்டதைப் பொருத்தே இது நடைபெறுகிறது].
இக்கதையில் இடம்பெற்ற பிருந்தாவனத்தின் கோபியர்களின் அக உலகம் (internal world)  கட்டப்பட்டிருந்த வழியாகவே கிருஷ்ணனிடம் உறவு வைத்தவர்கள்.
தனக்கான தலைவலிக்கு கால்தூசி மருந்தை இட்டுக்கொள்ளும் நிலைப்பபாடு இருப்பதால் ‘பாவம்’ ‘நரகம் என்ற காயடிப்பு அச்சதிற்கு (castration fear) உள்ளாகவில்லை.
ஆதலால் அவர்கள் ஒரு Imaginary phallus-ஐ கிருஷ்ணனுக்கு வழங்கத் தயாராகிவிட்டனர்.கிருஷ்ணனின் ஆசைப்பொருள் அது.
கோபியர்களின் நம்பிக்கை ‘நான்‘-ஐ கடந்து அவர்களின் ஆசைப் பொருளை (love object)  கடந்து செல்வதால் நடைமுறைவாழ்வின் பாவம், நரகம், புண்ணியம், ஒழுங்கு கடந்த நிலை அது என வாசிக்கத் தோன்றுகிறது.
இறுதியாக கிருஷ்ணன் மண்டைவலி என்று கூறியது பொய். உன்மையான பக்தி என்ன என்பதை எல்லோருக்கும் காட்டவேண்டும் என்ற கடவுளின் ஆசையே, அதாவது Imaginary phallus. ஒரு கற்பித ஆசை. அவனுடைய  Need அல்ல. அதனால்தான் அந்த ஆவலை கால்தூசு மூலம் கோபியர் நிறைவேற்றிவிட்டனர்.
பி.கு. [கடவுள் இருக்கிறாரா என்ற கேள்வி உடனே தலை காட்டும். மனஅலசலில் கடவுள் ஒரு ந்ம்பிக்கை, நம்புபவர்களுக்கு. அவ்வளவே. நம்பிக்கை என்றாகிவிட்டபிறகு அதன் இருப்பைப் பற்றிய கேள்விக்கு அவசியம் என்ன உள்ளது. இங்கு மொழியில் உள்ள (Myth-ஐ) கதையாடலை வாசிப்புக்கு மன அலசல் உட்படுத்தியிருக்கிறது அவ்வளவே].
இப்போது மற்றொரு ஞாபகம் வருதே. சிவனின் கண்ணில் அடையாளத்திற்காக செருப்பை வைத்தவன் கதை அது.
தலைப்பு: கிருஷ்ணனும் கால்தூசும்.                                                             

                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                        க. செ
                                                                                                                                                                                                                                                                    மற்றமை 5-வது இதழுக்காக

4 Dec 2013

நாவினால் சுட்ட புண் ஆறாது

மினி பஸ், சிற்றுந்து ஆகி பலகாலமாயிற்று.  நவம்பர் 2013-ல் சிற்றுந்து ஸ்மால் பஸ் ஆயிற்று.  பின்பு சிறிய பஸ் ஆகியிருக்கிறது.  இதில் உள்ள அரசியல் என்னவோ?  இதில் இருப்பது அரசியலா?  மூடத்தனம் (fetishism!) மொழியை, குறிப்பான்களை தனிநபர்களுக்குச் சொந்தமாக்கி அதை உச்சரித்தாலே வாய் புண்ணாகிவிடும் என்று நினைக்கிறார்கள் போலும்.  இந்த அரசியலில் தள்ளாடுவது தமிழ்மொழிதான்.  கண்ணுக்குப் புலப்படாமல் இருந்தாலும் ஆய்வறிவுக்கு புலப்பட்டிருக்க வேண்டாமா?  ஊடகங்கள் மௌனம் காட்டுவது எதனாலோ?  விளம்பரக் காசுக்காகவா?  (விளம்பரக் காசு என்பது ஒரு வகை லஞ்சம்தானே, (கோடிகளில் வரும்பொழுது)]

போகட்டும், இந்த அரசியலில் நமக்கு நாட்டம் இல்லை.  ஆனால், வள்ளுவர் தமிழுக்குச் சொந்தம்தானே!  “மெய்ப் பொருள் காண்பதறிவு“ என்பது மாணவர்களுக்கான மனப்பாடப் பகுதிக்கு மட்டுமா?  இல்லை இந்த நவீன காலத்துக்கும் பொருந்துமா?  விசயத்துக்கு வரலாம் :

இரட்டை இலை, உதயசூரியன், சுத்தியல் அருவாள், இவைகள் தமிழ் மனதுக்கு சின்னம் (sign) என்றும் அது அதற்கென்று அடையாளமாகியுள்ள கட்சிகளைப் பிரதிநிதித்துவம் பண்ணுகிறது என்றும் எல்லோருக்கும் தெரியும் .

இப்போது,  ....... ”அரசு ஸ்மால் பஸ்களில் நான்கு இலைகள் வரையப்பட்டுள்ளன.  அதில் இரண்டு இலைகள் பெரியதாகவும், தனித்தனியான தண்டுகள் கொண்டும் பிரிந்துள்ளன.  மற்றவை இரண்டு சிறிய இலைகள்.....”

....... “அனைத்து நான்கு இலைகளிலும் நரம்புகள் இருக்காது.  அரசு ஸ்மால் பஸ்சில் வரையப்பட்டுள்ள நான்கு இலைகளும் அதிமுக-வின் இரட்டை இலையும் எந்தவிதத்திலும் ஒத்திருக்கவில்லை என அந்தப் பதில் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது......”                             - தினமணி 27-11-2013.

இதை ஆய்வுப் பொருளாக எடுத்துக் கொள்ளுவதற்கு முன் ஒரு தப்படி முன்னுக்குச் செல்ல வேண்டியுள்ளது. 

மேலே சிற்றுந்தில் வரையப்பட்ட சித்திரத்திற்கு கொடுத்திருக்கும் குறிப்பீடு (signified) சரியானதுதான் ;  ஒத்துக்கொள்ளக்கூடியதுதான்.  ஆனால், இது ஒரு நாணயத்தின் (coin) ஒரு பக்கம் மட்டுமே.  நாணயத்திற்கு இரண்டு பக்கம் அல்லவா?

நாணயம் என்ற உவமானம் எடுத்ததற்கான பொருள் “ மெய்ப்பொருள் காண்பதறிவு “ என்ற தேடலின் விளைவுதான்.

(signification) குறித்தல் என்பது இரண்டு வகையாக இருக்கிறது.  ஒன்று  connotation   மற்றொன்று denotation.  Denotation என்பதற்கான பொருள் குறிப்பிட்ட, வெளிப்படையான அர்த்தம்.  அதாவது, அரசு கூறிய பதில் சரிதான்.  என்பதற்கான காரணமே இதுதான்.  அது    denotation -ஐ மட்டுமே குறிப்பிடுகிறது.  அது வெளிப்படையான அர்த்தத்தை மட்டுமே குறிப்பிடுகிறது.  நாணயத்தின் அடுத்த பக்கத்தில்  connotation இருக்கிறது.  அதற்குப் பொருள் வெளிப்படையாகத் தெரியும் பொருள் அன்றி உய்த்துணரக் கிடைக்கும் பொருள் என்று தமிழ்ச் சொல்லகராதி கூறுகிறது.

இது மொழியியல் அறிவின் பொருள் கூறும் விளக்கமாகும்.  சசூரின் மொழியியலில் ரோலன் பர்த் “ Berth makes much more of the concept, and uses it to refer the way which the sign work in a culture… ” என்கிறார். ஒரு குறி கலாச்சாரத்தில் எப்படி வேலை பார்க்கும் என்கிறார்.  பஸ்ஸில் வரையப்பட்ட இலை, நான்கு இலை இருந்தாலும், இலை என்று பார்த்தவுடன், அந்தப் படத்தைப் பார்த்தவுடன், அதாவது அந்தப் படம் குறிப்பான் என்று வைத்துக் கொண்டால் மனதில் ஏற்படுவது இலை, எண்ணிக்கை பின்புதான்.  ஏற்கனவே கலாச்சார சமூக மனத்தில் (சமூக நனவிலியில்) இலை என்ற குறிக்கான அர்த்தம் என்ன இருக்கிறதோ அதைத்தான் இது உடனடியாகக் குறிப்பிடும்.

ஆக, அவரவர் ஒரு சித்திரம் வரைவதும், அதற்கு அவரவர் ஒரு விளக்கம் கொடுப்பதும் அவரவர் கருத்துரிமைதான்.  ஆனால் , வள்ளுவர் கூறிய “மெய்ப்பொருள் காண்பதறிவு “ என்றால் மொழியியல், லக்கானின் மனஅலசல் போன்றவற்றை ஆய்வுக் கருவியாக பயன்படுத்தும்போது மட்டும்தான் மொழிக்கும் மனதுக்கும், மொழிக்கும் கலாச்சாரத்திற்கும் உள்ள உறவுகள் புலப்படும்.

                                                                                                               க.செ

                                                                                        மற்றமை - 5வது இதழுக்காக.

தும்பைவிட்டு வாலைப் பிடிப்பது

வெட்ககரமானது என்ற தலைப்பிலிருந்து,
........” இந்தியக் குற்றவியல் சட்டப்பிரிவின் 354ஏ, 354பி, 376, 376(2) ஆகிய பிரிவுகளின் கீழும், பணியிடங்களில் பெண்களுக்குத் தொல்லை தருவோரைத் தடுக்கவும், தண்டிக்கவும் வகை செய்யும் சட்டத்தின் கீழும் கோவா மாநிலப் போலீஸார் வழக்குகளைப் பதிவு செய்து உரிய நடவடிக்கைகளைத் துரிதமாக எடுத்து வருகின்றனர்.”                        - நவ 26, 2013, தி இந்து.

இப்படி ஒரு சட்டம் இருப்பது, “ தெகல்கா “ பத்திரிக்கையின் தலைமை ஆசிரியர் தருண் தேஜ்பாலுக்கு தெரியுமா ?  தெரியாதா ?  தெரிந்துதானே ”தன்னுடன் சேர்ந்து வேலை பார்க்கும் பெண் பத்திரிக்கையாளரை, நவம்பர் 7ந் தேதி நட்சத்திர ஓட்டலின் மின் தூக்கிக்குள் (லிப்ட்) திட்டமிட்டுத் தள்ளி பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளாக்கியிருக்கிறார்.....”

….. “ அதே செயலை அடுத்த நாளும் செய்ய முயற்சித்திருக்கிறார்.  பின்பு மீண்டும் மீண்டும் அவருடன் தொடர்பு கொண்டு தன்னுடன் பேசுமாறு அச்சுறுத்தியதுடன் நடந்த சம்பவத்தை ஏன் என் மகளிடம் சொன்னாய் என்று சீறியிருக்கிறார்......”

ஊடகத் தலைமை ஆசிரியருக்கு எல்லாம் தெரிந்தும் ஒரு பெண்ணிடம், தன் சகாவிடம் பலாத்காரம் செலுத்த எப்படித் தைரியம் வந்தது?ஏன் வந்தது? தெகல்கா தலைமை ஆசிரியர் தருண்தேஜ்பாலுக்கு, தேஜ்பாலின் நடவடிக்கை தனிமனிதச் செயல், அதற்கான தண்டனை என்பதோடு விசயத்தை முடித்துக் கொள்ள ஊடகங்கள் முயற்சிக்கிறது, கட்சிகளும் அப்படித்தான்.

ஒரு ஆண், பெண்ணை பலாத்காரத்திற்கு அடிபணியவைக்க நடந்த முயற்சி என்பதோடு நிறுத்திவிடாமல், தலைமை ஆசிரியரின் இந்த நடத்தையை ஒரு செய்தியாக வாசித்தால் இந்தச் செய்தி செய்திப்பரிமாற்றத்திற்கானது இல்லையா?

அதாவது, ஒரு ஆண், பெண் என்ற உறவில் மட்டும் இந்த நடத்தை வெளிப்படுகிறதா?  அப்படிச் சொல்ல முடியாது. 
இந்த நடத்தை ஒரு குறி (sign) அல்லது பிரதிநிதி.  ஒரு குறிப்பிட்ட உறவை அல்லது capacity - யை பிரதிநிதித்து வப்படுத்தவில்லையா?  அதாவது , தலைமை ஆசிரியர், மத்திய ஆளுங்கட்சிச் செல்வாக்கு உள்ளவர், அவரின் திமிர் உணர்வும் சேர்ந்துதானே இரண்டாவது நாளும் ஒரு பலாத்கார நடவடிக்கைக்கு முயற்சி செய்திருக்கிறது.  மேலும், தருண் தேஜ்பாலுக்கு இருப்பதென்ன?  சுயமோகம் என்னும் நோய் பீடித்துள்ள கலாச்சாரத்தால் செலுத்தப்படுபவராக, அதைத் தாங்கிப் பிடிப்பவராக இருப்பவர் இவர்.

இந்த சுயமோக நோய்க் கலாச்சாரத்திற்கு , “ Now  you are in Goa; drink as much as you want ” (The Hindu  , 23-11-2011 ) இந்தப் பொன்மொழி தேஜ்பால் உதிர்த்தது ;  ஆண்டு 2011, மேலும், அவர் நடத்தும் “ Think fest  “-ல் அவர் கூறியது, “eat and sleep well with any one you think of , but get ready to arrive early as we have packed house  ”  .  ( இதனை தமிழில் மொழியாக்கம் செய்தால் இப்படிக் கூறலாம் :  ” நீங்கள் கோவாவில் வேண்டுமளவு குடிக்கலாம் ;  நன்றாக சாப்பிட்டு, விரும்புபவருடன் படுத்து உறங்கலாம் ; விரைந்து வாருங்கள்... ” ). எந்தக் கலாசாரத்தை இந்தத் தேஜ்பால் பதாகையாக உயர்த்திப் பிடிக்கிறார்.  இதற்கு அழைக்கப்பட்ட விருந்தினர்களும், கோவா, இந்திய ஊடகங்களும், அரசியல் கட்சிகளும் எத்தனை லட்சம் செருப்புகளை வீசினர்?  (கண்டனத்துக்கான உருவகம்) .  ஏன் வீசவில்லை?  இதை அன்றே செய்திருந்தால் தன் சகதோழியை ஒரு பொது இடத்தில் சீரழிக்க இப்போது முயற்சி செய்திருப்பாரா இந்த ஆள்.  “தனிமனித சுதந்திரம்“ (கருத்து) என்று இதற்குப் பெயர் சூட்டி, இந்த நடத்தைக்குப் போகும் தைரியம் வந்திருக்குமா?  நடத்தையை செயல்படுத்தும் தைரியம் வந்திருக்குமா?

அவரின் சுயமோகம் நோய் பீடித்துள்ள கலாச்சாரத்திற்கு ஆட்பட்டது. இதை அவர் உணரவுமில்லை, யாரும் உணர்த்தியது மாதிரி தெரியவும் இல்லை.
   
“ சுயமோகம் அன்றாட வாழ்க்கையில் நிலவும் பகுத்தறிவுக்கு ஒவ்வாததையும் தனதாக்கிக் கொள்ளுகிறது . அன்றாடச் செயலில் பிறரிடம் பணிவை எதிர்பார்ப்பது , சமூகத்துடன் இணைவு இல்லாமை, ஒரே கெத்தாக தன் நிழலைப் பார்த்தே காலத்தைக் கடத்துவது, ஜனநாயக மறுப்பு, பாசிசப்போக்கு, அனைத்தும் சட்டம், ஒழுங்கைக் காப்பாற்ற என்ற கோஷத்தில் மக்கள் விரோத நடவடிக்கை”                                        - சிசாக்.

ஆக, சுயமோகக் கலாச்சாரம், அதைப் பிரதிநிதித்துவம் பண்ணும் தன்னிலைகளுக்கு பொதுவெளி என்ற எண்ணமோ மரியாதையோ, பெண் என்பவளை ஒரு தன்னிலையாகப் பார்ப்பதற்கு பதில் ஒரு  object - ஆகத்தான் பார்க்கிறார்கள், பார்ப்பார்கள் என்பது கவனத்துக்குரியது.

தனியார் அலுவலகமாக இருக்கட்டும் அல்லது அரசு அலுவலகமாக இருக்கட்டும் இந்த வகைச் சுயமோகப் பிரதிநிதித்துவங்கள் கலாச்சாரமாக இருக்கும் வரை இம்மாதிரிப் பலாத்காரம் ( aggressivity  ) போன்றவைகள் வாடிக்கையாகத்தான் இருக்கும்.  இந்த வளமை நீடித்துக்கொண்டுதான் இருக்கும்.

இங்கு  seduce  பண்ணுவதற்கும் (மயக்குதலுக்கும்) பஞ்சம் இராது . ஆக, இ.பி.கோ தண்டனைகள் நடந்தவைகளுக்கானது.  நடக்கப் போவதற்கு?  பள்ளி முதல் ஆகாய விமானம் உட்பட பெண்தன்மைக்கு ஒரு காத்திரமான நெருக்கடி இருந்துகொண்டே இருக்கிறது.
   
இந்தத் தளத்தில் (space) புதிய தன்னிலைகளை, அதாவது பெண்ணை  object ஆக இல்லாமல் தன்னிலையாகப் பார்க்கும் சித்தக்கட்டமைப்பை எப்படிக் கட்டமைக்கப் போகிறது இச் சமூகம் .  காத்திரமான விவாதத்திற்கு தயாராவோம்.

குறிப்பு :
வரும் பாராளுமன்றத் தேர்தலில் இந்த அவலத்திற்கு முடிவு கட்டும் திட்டம் எந்தக் கட்சிக்கேனும் உண்டா என்பதை ஓட்டளிப்பதற்கு முன் பரிசீலிக்கவும்ஃ

ஆக – 21, 2013,, இந்தியா டுடே-யில் அடுத்த பிரதமர் எதற்கு முன்னுரிமை தரவேண்டும் என்ற கேள்விக்கு

 ஊழல் ஒழிப்பு         பொருளாதார          பயங்காரவாத்த்               பெண்கள்
                                     ஸ்திரத்தன்மை       திலிருந்து காப்பது        பாதுகாப்பை
                                                                                                                          உறுதிசெய்வது
         70%                                   13%                                 10%                                   4%


இந்தப் பிரச்சினை, அதாவது பெண்ணின் பாதுகாப்புப் பிரச்சினை நாலாவது இடத்தைப் பிடித்திருக்கிறது.யாரிடமிருந்து என்றால் பி.ஜே.பி தலைவர் திரு.எல்.கே.அத்வானியிடமிருந்து.
                                           
                                                                                                          க.செ

                                                                                  மற்றமை – 5வது இதழுக்காக