21 Feb 2015

நானே மோடி ! நானே ராஜா !



நானே ராஜா  என்பது சிவாஜி , எஸ். வி. சுப்பையா நடித்த படம். வக்ர சுயமோகமுள்ள தம்பி எஸ். வி. சுப்பையா. அண்ணனின் அரச பதவியை ( சிவாஜி ) கைப்பற்ற நினைக்கும் பேராசை பற்றிய படம் அது. அரசனை ( சிவாஜியை ) கைது செய்துவிட்டு தன் மாளிகையில் ஆளுயுர கண்ணாடி முன் நின்று , நானே ராஜா ! ; நானே ராஜா !! என்று புல்லரித்து தன் பிம்பத்தைப் பார்த்து பூரணத்துவம் அடைவார் ராஜா.
   
பொதுவாக, தனியன்கள் சமூகக் குழுக்களுக்குள் வாழும்பொழுது சுயமோக வளர்ச்சிக்கான அமைப்பு அங்கில்லாததால் அந்த ஆசை நிறைவேறுவதில்லை. 
      பின்னர் , அரசியல் , கட்சி எனும்போது அதிலேயும் அடக்கித்தான் சுயமோகம் வெளிப் படுகிறது. ( தமிழ்நாடு விதிவிலக்கு )
      பாரதப் பிரதமர் பதவி அப்படி அல்ல. உச்சபட்ச சுயமோக வெளிப்பாட்டிற்கான அமைப்பு (structure) இருக்கும் போல் தெரிகிறது. சட்டரீதியாக இல்லை என்றுதான் தோன்றுகிறது.
      ஆனால், மோடி அரசபதவி ஏற்றபின் அவரின் அங்கங்களை மறைக்கும் உடைகள்
 ( தலைப்பாகை உட்பட ) வர்ணங்களும், கவர்ச்சிகளும், சுயமோகமும் வளர்ந்து ( self love ), அமெரிக்க அதிபருக்கு இணையாக தன்னை பிம்பப்படுத்தி , அவரை வரவேற்க மோடி அணிந்திருந்த மேல்கோட்டில் தங்க சரிகையில் மோடி, மோடி என்று எழுதப்பட்டிருந்தது உட்பட பல லட்சம் பெறுமானம் உள்ள உடையாக இருந்ததாம் . தான் எப்படிப் பார்க்கப்பட வேண்டும் என்ற சுயமோக ஆசை வெற்றி பெற்று, பிரதமர் என்ற அதிகார தளம் ( phallus ) நெறிகள் அற்ற, பகட்டானதாக இப்போது காட்சியளிக்கிறது. இனி அது கீழ்நோக்கி, கலாச்சாரமாக வரும் நாள் தொலைவில் இல்லை.
க.செ
©the author

20 Feb 2015

பலிகடாக்களுக்கு... நம்பிக்கை வருமா?


ஆதாரப்பூர்வமான ஒரு விசயத்தைப்பற்றி, அதைப் பத்திரிக்கைகள் செய்தியாக்கும்போது ஒரு              விளையாட்டு, அதைவிடச் சூதானவிளையாட்டு நடைபெறுகிறது . உதாரணத்திற்கு ,
பிப்.15-2015, HINDU-வில்
                “GODHRA COURT FREES  70 
                IN POST-GODHRA RIOTS  CASE  ” - என்று தலைப்பிட்டு செய்தியை வெளியிட்டிருக்கிறது.
                தமிழில்,   இந்து....
            குழந்தைகள் உட்பட 14 பேர் பலியான கலவரச் சம்பவம்
(கொட்டைஎழுத்தில்)  கோத்ரா வழக்கில்70 பேரும் விடுதலை
என்று செய்தி வெளியிட்டிருக்கிறது .
                ஏன் இந்த மனப்பாங்கு மாறுகிறது ? உண்மையில், கோத்ரா வழக்கு என்பது குஜராத் கலவரத்திற்கு தீப்பொறியாய் இருந்தது .  அதாவது , 2002, பிப்ரவரி 27-ந்தேதி குஜராத் மாநிலம்., கோத்ரா ரயில் நிலையத்திற்கு வந்த சபர்மதி ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 59 கரசேவகர்கள் உயிரிழந்தனர். தீ வைத்ததாகச் சொல்லப்பட்டவர்கள் முஸ்ஸீம்கள். இதைத் தொடர்ந்து குஜராத் மாநிலம் முழுவதும் கிட்டத்தட்ட ஒருவார காலம் படுகொலைகள் நடந்தன. அதில் ஒன்று பனஸ்கந்தா மாவட்டம்,சேஷன் கிராமத்தில் பெண்கள் உட்பட 14பேர் கொல்லப்பட்டனர். இது தொடர்பான வழக்கைத்தான்   கோத்ரா வழக்கு என்று தலைப்பிடுகிறது தமிழ் இந்து.

                கோத்ரா என்றவுடன் சபர்மதி ரயில் எரிப்புத்தான் இந்துக்களுக்கும், முஸ்ஸீம்களுக்கும் வரும் ; நினைவு  கூறமுடியும். ஆனால் ,  குஜாராத் கலவரம் என்றால், இந்துக்களின் முஸ்லீம்கள் மீதான கொலைவெறித் தாண்டவம் நினைவுக்கு வரும் . தமிழ் இந்து உடனடியாக பரபரப்பைத் (sensation ) தூண்ட வேண்டும் என்பதற்காக  கோத்ரா என்ற குறிப்பானைப் பயன்படுத்தியிருக்கிறது. இன்னும் எவ்வளவு நாட்களுக்கு தமிழ் வாசகத் தன்னிலைகளை பிண்டங்களாக்கி அரசியல் நடத்தப் போகிறதோ ?  தெரியவில்லை.
                இனி , இந்தவழக்கு பற்றி . குற்றச்சாட்டுக்களில் முதன்மையான குற்றச்சாட்டு இன்றைய பிரதமர் மோடியின்மீது எழுந்தது ; அவர் அன்று குஜராத்தின் முதலமைச்சர் . அவருடைய அரசுதான் இந்த 70 பேர் மீதும் வழக்குத் தொடர்ந்தது. தீர்ப்பளித்த நீதிபதி, குற்றம் சாட்டப்பட்டுள்ள 70பேர் மீதான குற்றங்களை நிரூபிக்க போதுமான ஆதாரங்கள் இல்லாததால் 70பேரும் விடுதலை செய்யப்படுகின்றனர் என்று குறிப்பிட்டுள்ளார்.
                அரசு வழக்கறிஞர் சொன்னதாக தமிழ் இந்துவின் வாக்குமூலம் ,
 வழக்கில் நேரடி சாட்சிகள் மௌனமாகிவிட்டனர். வாய்மொழி சாட்சிகள் ஒத்துழைப்பு      அளிக்கவில்லை என்கிறது.
ஆனால், ஆங்கில நாளிதழில்,    Eye Witnesses Turned Hostile    என்று உள்ளது. ஆங்கில இதழ் வாசகப்படி நேரடி சாட்சிகள் அதிகாரத்தால், RSS,  கலாச்சார இந்துப் போலிசாரால் பயமுறுத்தப்பட்டிருக்க வேண்டும் அல்லது ஏதோ விலை கொடுத்திருக்க வேண்டும் அவர்களுக்கு. அதனால்தான் அரசுக்கு ஆதரவாகச் சாட்சி சொல்ல வேண்டியவர்கள் அரசுக்கு எதிராகச் சாட்சி சொல்லிவிட்டனர். இந்த மனப்போக்கிற்குத்தான் இந்து தர்மம் என்று பெயரா?
இது பற்றி நாடு தழுவிய எந்தக் கேள்வியும் வந்ததாகத் தெரியவில்லை. குஜராத் மாநில நீதிமன்றம் குற்றவாளிகள் இல்லை என்று தீர்ப்பளித்துவிட்டது. அந்தக் கலவரத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கும் , கோத்ரா ரயில் எரிப்பில் இறந்த 59 கரசேவகர்களின் குடும்பங்களுக்கும் , குஜராத் கலவரத்தில் இறந்தவர்களின் மனக்காயம் , மனத்துயரம் , இழப்பு  , ஏக்கம் இவைகளுக்கெல்லாம் யார் பொறுப்பு ? என்ன தீர்வு கண்டிருக்கிறது குஜராத் அரசு அல்லது நீதிமன்றம்?
பலியாடுகள் பலியெடுத்தவர்களை மன்னித்துவிட்டனரா ? மறந்துவிட்டனரா?
சீழ்பிடித்த சுயமோகம் தன்னை , தன்னைச் சார்ந்தவைகளை புனிதமானதாகவும் , பிறரை , பிறர் சார்ந்தவைகளை தீயவையாகவுமதான் (evil ) பார்க்கும்  .
 எல்லா மதத்தினருக்கும் சமஉரிமை    மோடி.
இந்தச் சொல்லாடல், சேஷன் கிராமத்தில் 14 பேர் கொல்லப்பட்டதற்கு தண்டனை யாருக்கும் கிடையாது என்பது , மகிழ்ச்சிக்குரியது அல்ல. அத்துடன் நேரடிச் சாட்சிகள் ( eye witnesses) வழக்கின் எதிரிகள் பக்கம் சேர்ந்திருக்கிறார்கள். அந்த கிராம மக்களுக்கு மட்டுமல்ல, 14 பேரின் சாவுக்கான மனக்காயம், இழப்புணர்வு, கையறுநிலை அடைந்த மனங்களுக்கு
நேரடி சாட்சிகளின் பிறழ்வு ஒரு நோய்க் குறிப்பானாகி விடுகிறது.
இனி, இந்துக்கள் மீது  நியாய உணர்வற்றவர்கள்,  நம்பிக்கைகளுக்குத் தகுதியற்றவர்கள்  என்ற உணர்வு மேலெழும்பும் தானே?. இப்போது  எல்லா மத நம்பிக்கைகளும் இங்கு சமமாகப் பாவிக்கப்படும்   என்ற கூற்று நகைக்கத்தக்கதாகவே உணரப்படும் , இல்லையா?
சமூகக் குழுக்களுக்கிடையிலான நல்லுணர்வை எப்படியும் பாதுகாக்க வேண்டும் என்ற   அக்கறை ,  நெறி , அரசுக்கு , மதவாத இந்து மக்கள் குழுக்களுக்கு வேண்டாமா?
க.செ.
©the author

6 Feb 2015

... ' 9 ' ...

“ காட்டுவாத்தாகி

சிறகை விரி

வாழ்வும் வேடந்தாங்கலாகும் ”

                                            - ந.பிச்சமூர்த்தி  



சந்தேகம் வேண்டாம். இது கட்டுரைத் தலைப்புதான்.
அது எண்தான். ஆனால்,  இங்கு அதன் மதிப்பு வேற.
இயக்குநர் ஷங்கருக்கு....
இந்தக் கடிதம் இந்து ஜனவரி23 –ல் வெளிவந்திருக்கிறது.
கடிதம் எழுதியவர், லிவிங் ஸ்மைல் வித்யா . அந்தக் கொந்தளிப்பு வசப்பட்ட மனம் கேட்கிறது , தன்மானமே இருக்காது என்கிறீர்களா? ”. இந்தக் கேள்வி    பட இயக்குநர் ஷங்கர், நடிகர் விக்ரம் போன்றோரை நோக்கி எழுதப்பட்டிருந்தாலும், அதன்வீச்சு பாரதூரமானது, காத்திரமானதுமாகும்.
இக்கேள்வி ஆண்மையவாத அரசியலை எதிர்கொள்கிறது எனலாம்.
அரசியல் என்பது ஒரு கருத்தின் அடிப்படையில் வெகுஜனங்களிலிருந்து அணி திரட்டுவது
 ( mobilization ) என்று சுருக்கமாகச் சொல்லலாம்.
என்னதான் கலை, பொழுதுபோக்கு என்று சொன்னாலும் அது, பொழுதுபோக்கு நுகர்வுப் பொருள் (சினிமா)  உற்பத்திதான். எழுத்தாளர் சுஜாதா வார்த்தையில் அது கனவுத் தொழிற்சாலை . அவ்வளவுதான்.
இந்த ஊடகம் (சினிமா)  நுகர்வோரின் நாடி பிடித்து , பொருள் தயாரிப்போடு, கைதட்டுவாங்க
(ரசிகர்களை மகிழ்விக்கவாம்) என்கிற பெயரில்/ நகைச்சுவை என்னும் பெயரில் ஒரு ஒதுக்கப்பட்ட, விளிம்புநிலை சமூகக் குழுவினர் (திருநங்கைகள்) அருவருப்பான சமூக விரோதிகளாக சித்தரிக்கப்பட்டதாக   ’ பட இயக்குநர், கதாநாயகன் ஆகியோர் மீது எதிர்வினை ஆற்றியிருக்கிறார். இப்படி  லிவிங் ஸ்மைல் வித்யா கூறியிருந்தாலும், அதில் உறைந்துள்ள வீச்சு ஆண்மையவாத விழுமியம் / விதிகளை புறக்கணிக்கிறது. எப்படி என்றால்?,
பொட்டை என்று உங்களால் ஏளனமாக அறியப்படும் நாங்கள் உங்களது ஆண்மை பராக்கிரமத்திற்கு முன் அப்படி என்னதான் குறைந்துவிட்டோம் என்கிறார்.
இந்தச் சொல்லாடல் பெண்ணிய அரசியல், பெண்ணிய தன்னிலையிலிருந்து (subjects) ஆண் அதிகாரமையவாதத்திற்கு விடும் சவாலாகப் பார்க்கலாம்.
இக்கட்டுரையில் திருநங்கையரை கொச்சைப்படுத்திய படங்களின் வரிசையை பட்டியலிடுகிறார் வித்யா.
ஆனாலும் அபஸ்வரம் ஒலிக்கிறது. அந்தக் கட்டுரையின் இறுதியில் உங்களால் அந்நியப்படுத்தப்பட்டு, மலினப்படுத்தப்படும் நாங்களும் உங்கள் ரசிகர் பட்டாளங்களின் ஒரு பகுதிதான்... என்கிறார்.
மற்றமை (Other)-மக்களின் ரசனையை நுகர்ந்து பார்த்து உருவாக்கப்படுவதுதான் சினிமா. மக்கள் ரசனை, படம் பார்க்கும்பொழுது கைதட்டு விழுகிறதா இல்லையா? எப்போது? திருநங்கை மீது வெறுப்பு உமிழப்படும்போது. அந்தக் கைதட்டலின் பொருள் இயக்குநரின் அம்மாதிரியான தேர்வுக் காட்சியுடன் இணைந்துவிடுகின்றனர்/ வெறுப்புக்கு அவர்கள் கைகொட்டி கெக்கலிக்கின்றனர். இது பொதுப்புத்தியில் உள்ள ஆண் மேலாண்மை வக்கிரம். அதைத்தான் ஷங்கர்(இயக்குநர்கள்) விற்றுக் காசாக்கிக் கொள்கிறார்.(படத் தயாரிப்பாளர்களுக்கெல்லாம் வட்டி மீது தான் கண்)
ஆக, பொதுப்புத்தியில் உள்ள பெண்ணடிமைவாதமும், திருநங்கை மீது உள்ள வக்கிர வெறுப்பும் மேற்கூறியவர்களை ஒரு அணியில் திரளுமாறு நிர்ப்பந்திக்கிறது. பொதுப்புத்தியில் இருக்கும் வக்கிரம் காலம் கடந்ததாக உள்ளது.
ஒரு சின்ன, நடந்த கதை
ஒரு 30 ஆண்டுகளுக்கு முன் தென்மாவட்டத்தில் உள்ள ஒரு சிற்றூர். சுயாட்சிக்கு பெயர் பெற்றது. அந்தக் கிராமத்திற்கு அருகில் உள்ள  சிறு நகரத்திற்குச்    செல்ல பேருந்து வசதி கிடையாது. தூரம் ஒரு 10 கிலோமீட்டர்.
அது அரசியலாகி ஒரு வழியாக நகரப் பேருந்து அந்தவழித் தடத்தில், அந்த ஊருக்கு செல்ல அனுமதிக்கப்பட்டது.
இன்று (அன்று) நகரப் பேருந்தின் முதல் ட்ரிப் . ஊர் மக்கள் மந்தையில் திரண்டிருந்தனர்.
தூரத்தில் பேருந்து கண்ணுக்குப் புலப்பட்டதும், மக்கள் ஆனந்தக் கூச்சலிட்டனர். பேருந்து வந்தது. கிராமத்து மக்கள் திடீரென இழவுக்கு வந்தவர்கள் மாதிரி ஆகிவிட்டனர். ஓட்டுநர்/ நடத்துநரிடம் முகம் கொடுத்துப் பேசவில்லை.
மீண்டும் பேருந்து நகரத்திற்கு திரும்ப எத்தனித்த போது யாரும் பேருந்தில் ஏறவில்லை. அத்துடன்  ஓட்டுநர் / நடத்துநரிடம், அடுத்த முறை இந்த ஊருக்கு பஸ் வரவேண்டுமென்றால் பஸ்ஸின் ரூட் எண்ணை மாற்றிவிட்டுத்தான் வரவேண்டும். நாங்கள் இளிச்சவாயர்கள் இல்லை, இந்த நம்பரை (பஸ்ஸிற்கு) ஏற்பதற்கு என்று, பஸ் பாடியைத் தட்டி கோபத்துடன் அனுப்பினர்.
அந்தப் பேருந்தின் ரூட் எண் 9. அந்த எண் பொதுப்புத்தியில் அலி / ஆண் அல்ல என்பதற்கான குறியீடு. அது, எண் அல்ல அங்கு.
இந்த எளிமையான (நடந்த உண்மை) உதாரணத்தின் மூலம் தமிழகத்தின் பொதுப்புத்தியில் திருநங்கைகள் மீதான வெறுப்பின் ஆழம் புரிந்திருக்கும்.
இந்த வக்கிரத்தின் வெறுப்பு ( குறிப்பாக 9,பொட்டை, etc  ) திருநங்கைகளின் ஆசை மீது, சந்தோஷத்தின் மீது தடை விதிக்கிறது / காயடிக்கிறது (castration ). இந்த ஆண்மையவாத மேலதிகாரம், பலாத்காரத்தையும், வெறுப்பையும அவர்கள் ஜீவிதத்தின் மீது செலுத்துகிறது.
இங்கு ஒன்றை கவனமாகப் புரிந்து கொள்ள வேண்டும். இது Symbolic Prohibition  ஆகும். இதற்கு எதிரான சட்டம் எல்லாம் உண்டு பலநாடுகளில்.
உ- ம் :  Hate crime - Hate crime  legislation often defines a hate crime as a crime motivated by the actual or perceived race. Color , religion, national origin , ethnicity , gender , disability or sexual orientation of any person.”
 - Gay straight alliance.
இவர்கள் எப்போது,
 காட்டுவாத்தாகி
 சிறகை விரி....
............
என்ற கவித்துவம் எதார்த்தமாகும்.
க.செ
                                                                                                                                                                                    © The author