28 Nov 2017

பள்ளி மாணவ, மாணவிகள் தற்கொலை ஏன்?

அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் அருகே 4 மாணவிகள்
கிணற்றில் குதித்து தற்கொலை
பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியர் கூறியதால் விபரீத முடிவு                                                                                                                                                    – தி இந்து 25-11-2017
திருக்காட்டுப்பள்ளி அருகே பள்ளி வகுப்பறையில் ப்ளஸ்-2 மாணவர் தற்கொலை
பள்ளி வகுப்பறையில் உள்ள கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்
          -மாலை மலர் 14-11-2017
குஜராத் ,அகமதாபாத் அருகில் உள்ள பாப்பு நகர் பூமிபார்க்,
வகுப்பறையில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை
          -ttp://tamil.webindia.com
ஹரியானா மாநிலம் குருகிராமில் (குர்காவ்ன்)உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 7 வயது சிறுவன் கொலை வழக்கில் திருப்பம்.
தேர்வை தள்ளி வைக்க சீனியர் மாணவனே கொன்றதாக சிபிஐ அதிர்ச்சித் தகவல்
-தி இந்து 9-11-2017
      தஞ்சையில் கல்லூரி மாணவர் உயிருடன் ஆற்றில் புதைப்பு
       ...செப் 30-ம் தேதி சரவணனை ராஜகோரி மயானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரவணனின் கை, கால்களை கட்டிவைத்து அடித்ததுடன்,வாயை துணியால் அடைத்து, மாட்டுவண்டியில் ஏற்றி கூடலூர் வெண்ணாற்றங்கரைக்கு கொண்டு சென்றுள்ளனர்.பின்னர் ஆற்றின் நடுவில் குழிதோண்டி சரவணனை உயிரோடு புதைத்துள்ளது தெரிய வந்தது.
 -தி இந்து 14-11-2017
22-11-2017 ,சத்தியபாமா பல்கலைக்கழகத் தேர்வில் காப்பி அடித்து,பிடிபட்ட மாணவி அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை.

     தற்கொலை தனியாகவும் குழுவாகவும்     நடக்கிறது.;
        கிணற்றில்,குழுவாக தற்கொலை      நடைபெறுகிறது;
         பள்ளியில் தூக்குப்போட்டு தற்கொலை.

       இனி கொலைகள் பற்றி
.      தஞ்சையில் 5 மாணவர்கள் சேர்ந்து சக மாணவனை கொன்றுவிட்டனர்
(காரணம் தெரியவில்லை)
      செப்டம்பர் 8-ல், 2-ம்வகுப்பு மாணவனை அதே பள்ளியில் படிக்கும் சீனியர் மாணவர் கொன்றுவிட்டான்..
காரணம் தேர்வை தள்ளி வைப்பதற்காக இந்த பின்நவீனத்துவ (Postmodern) யுக்தியைக் கையாண்டிருக்கிறான்.
ஆக, தற்கொலையும் கொலையும் முக்கிய பாடததிட்டமாக (syllabus) மாணவரிடையே வந்திருக்கிறது.
உளவியலாகச் சொன்னால்,
தனக்குத்தானே துன்புறுத்தி இன்புறுவது (masochism) அல்ல.
பிறரைத் துன்புறுத்தி இன்புறுவதும் (sadism)அல்ல.
மாறாக, மன அலசல் ரீதியில் சொன்னால்,
“ சுயமோகத்தின்  ( narcissism ),கொடுந்துன்ப உணர்வுகளால்  (experiences of excessive unpleasure) உந்தப்பட்டே மாணவர்கள், (மனிதர்கள்) பிற மனிதர்கள் (மாணவர்) மீது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
-Henri Parens, journal of applied psychoanalytic studies vol3, 2001
                மேலும்,சுயமோகத்தின் பயம்,பீதி,மனக்காயம் போன்றவைகளை கையாளத்தெரியாமல்  கொந்தளிப்பு வசப்பட்ட மனம்,பிறரை( others) பலிகடாவாக ஆக்குகிறது;
வேறு சில சமயங்களில் மன / உடல் வேதனைகளை சமாளிக்கத் தெரியாததால்சுய அழிப்பு நடைபெறுகிறது.
கொடுந்துன்பத்தின் உந்தல்கள் கொலைக்கும் தற்கொலைக்கும் காரணிகளாக உள்ளன.
அடிப்படையில் துன்பங்கள் உளவியலாக,உடல் சார்ந்ததாக இருக்கலாம்.அத்துடன் பொதுவெளியில் ,’அவமானம்என்ற மாயப்பிசாசு கூட  தன்னிலையைத் துரத்திவிடக் கூடும். பலிகடாவாகி/பலிகடாவாக ஆக்கிவிடவும் கூடும்.
இதில் மன அலசல் ஆய்வு நடந்தவாறு இருக்கிறது.ஆய்வு, இதரர் மீது மேற்கொள்ளும் குற்றச் செயல்களை குறைப்பதற்கு மன அலசல் இப்படி ஆரம்பிக்கிறது. அதாவது,மனிதர்களிடம் நிலவுகிற, தவிர்க்கப்படக்கூடிய கொடுந்துன்ப உணர்வுகளை (avoidable experiences of excessive  unpleasure ) அடையாளம் கண்டு,அவர்களிடம் நிலவுகிற தற்காதல்பயம், பிறர் மீது தாக்குதல் நடத்துவதற்கான மனப்போக்கை அறிந்து ,அதைக் குறைப்பதற்கான வழிவகைகளை அடையாளம் கண்டு, அவற்றை அவர்கள் ஏற்குமாறு செய்ய முயற்சி மேற்கொள்ளவேண்டும்என்கிறது மன அலசல்.
இப்போது நம் தமிழ்கூறும் நல்லுலகத்தில் இதற்கான வசதியோ,சமூகக் கட்டமைப்போ இல்லை. ஊசிபோடும் வைத்தியமே சித்தத்திற்கும் போதும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.
உருவகமாகச் சொன்னால் , மெட்ரிகுலேசன் கல்வி etc , போன்ற (சமூக) அமைப்பு தன்னைத் தானே கொலையும் செய்கிறது / குற்றமுமிழைக்கிறது.
அதாவது,மாணவர்களின் தனிநபர் தற்கொலை,குழுவாக தற்கொலை,இதரரை,சக மாணவன், ஆசிரியை / ஆசிரியர் கொலை ( நல்லவேளை இன்னும் அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரம் இன்னும் வரவில்லை);
அப்புறம், கல்லூரி என்றால் ஒருதலைக் காதல் கொலை,கைபேசிக்காக கொலை,கைச் செலவுக்காக கொலை,இரு சக்கர ஊர்திகளுக்காக கொலை,கூடவே சாதிக் கொலை.
இப்படி மாணவ உலகத்தின் சில காட்சிகள் / நிகழ்வுகள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.
பொதுவாக ,பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்பதாலேயே அதைத் தங்க ஊசியாக (gold pin) நினைத்து, கட்டமைத்து, கையாளுகிறார்கள். இந்தத் தங்க ஊசிப் பெற்றோருக்கு பிற பிள்ளைகள் போல் தங்கள் பிள்ளைகளும் ,சைக்கோசிஸ் / வக்கிரம் / நியூரோசிஸ் என்ற கட்டமைப்பின் மூலமாக ,அதனின் முடுக்கத்தால்தான் (drive) இயங்குகிறார்கள் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை, உணர்த்தப்படவில்லை.இழப்பு ஏற்பட்டால் மற்றொரு கட்டமைப்பான பள்ளி,கல்லூரியை குற்றம் சாட்டுகின்றனர்.இவை இரண்டும் மாசற்றது அல்ல. இருந்தாலும் தங்களின் குழந்தை வளர்ப்பை ஒருமுறை சமூகக் கண்ணோட்டத்துடன் நினைத்துப் பார்க்கவேண்டும்.
பள்ளிகளில் பாடத்திட்டத்தை (syllabus) நடத்திவிட்டு காசை வேண்டிய மட்டும் வசூலித்துவிட்டு,காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கின்றனர் இந்த மெட்ரிக்,சிபிஎஸ்இ போன்ற ஆங்கிலவழிப் பள்ளிகள். தேர்வில் காப்பி அடிப்பது எங்கள் உரிமை என்ற உரிமை முழக்கமோ அல்லது தூக்குக் கயிறோ என்ற கட்டமைப்புதான் உள்ளது. ...பொறுப்பாளிகள் யார்??
பள்ளிகளில் அடிமைப்படுத்துதல்(கழிவறைச் சுத்தம்), துன்புறுத்தல், சித்திரவதை, நிர்வாணப்படுத்துதல்,மாணவர்களுக்கு முடிவெட்டுதல் (டிவி காட்சி)போன்ற நடவடிக்கைகள் தனியன் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் ,அதன் தொடர்ச்சி எக்கச்சக்கமாக போய்விடுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் யார் என்பதை அறிந்துகொள்ள உள்நோக்கிய (அகம்) பார்வையும் ,தேடலும்; அதன்மூலம் தன்னை யார் என்று அறிதலும் ;பள்ளியில் ஒழுங்கும் கட்டுப்பாடும்,தன்னொழுங்கும், சமூகத்திற்குத் தேவை.அதை தண்டனை,அவமானம் என்ற கம்பாக நினைப்பது சுயமோகம் போன்ற புற்றுநோய் மனம்’; அது ஆரோக்கியமல்ல.உன்னை மதிப்பது போல் பிறரை (மாணவ,மாணவியரை) நீ மதி; உன் செயலுக்கு நெறி (ethics) வழிகாட்ட வேண்டும்
அதேபோல்,சமூக அமைப்பு புற்றுநோய் சுயமோகத்திலிருந்து (malignant narcissism) விடுபட்டு, மன ஆரோக்கியத்திற்கு சுய பயிற்சி, சுய முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் உங்கள் பிள்ளைகள். (உங்கள்) ஆசிரியர்கள் சுயமோகத்தை விட்டால்தான் ஆசிரியர்+மாணவர்+பள்ளி = குருகுலம் ஆகும். இல்லாவிட்டால்,துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு வழிவிடுவதாகும்.
க,செ.


26 Nov 2017

ஔவையும் பஸ் எரிப்பும்

இந்தத் தலைப்பு பிரபல்யமான ஆன்மீகக் குட்டிக்கதை.முருகன் ஆடுமேய்க்கும் சிறுவனாக ஔவையின் பாதையில் குறுக்கிட்ட நேரமது.
கருநாவல் மரத்தடியில் இளைப்பாறும் ஔவையைப் பார்த்து முருகன் “ பாட்டி ,உனக்கு சுட்டபழம் வேணுமா சுடாத பழம் வேணுமா “? என்று கேட்டு வியப்படைய வைத்தான்.
பாட்டி வெயிலில் வறுபட்டிருந்ததால் சுடாத பழம் போடப்பா என்றாள்..
முருகன் கருநாவல் பழத்தைப் போட்டான்.அது தரையில் விழுந்துவிட்டது.பாட்டி பழங்களைப் பொறுக்கி கையில் வைத்து பழத்தை ஊதினாள் ஒட்டியிருந்த தூசியையும் துகளையும் நீக்க.
இப்போது முருகன் “பாட்டி பழம் சுடுகிறதா? ஊதுகிறாயேஎன்றான்.
ஔவை வியப்பின் எல்லைக்குச் சென்றுவிட்டு “ நீ யாரப்பா? என்றாள்.
முருகன் காட்சியளித்தான் ஔவைக்கு.கதை இன்னும் போகிறது. பின்னால் நாம் போகாமல் ஔவை பற்றி வழக்காடுவோம்.
ஔவை ஏன் முருகனிடம் ஏமாந்தாள்.அவள் கவி, போராளியும்கூட. அப்படியிருந்தும் முருகனின் மொழியை எங்கே அறியாமல் கோட்டைவிட்டாள்.
முருகன் கூறிய மொழியில் ‘சுட்டது ‘,சுடாததுஎன்ற குறிப்பான்கள் (வார்த்தைகள்) (signifier) ‘விசாரத்திற்குஉரியது (ஆராய்ச்சி அல்லது சோசித்தல்).அந்தக் குறிப்பான்களை அப்படியே நேரடி குறிப்பீடாக, அர்த்தமாகக் கொண்டுவிட்டாள் ஔவை. அது முருகனின் பரிகாசத்திற்கு இடம் கொடுத்துவிட்டது. இதற்கு மற்றுமொரு புறக்காரணம் ,சுட்ட பழம் வேண்டுமா ,சுடாத பழம் வேண்டுமா?என்று கேட்டது ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் தானே (object). என்ற இந்தப் பார்வையே அவளின் ஆய்வு மனத்தை உஷார்படுத்தவில்லை அவளின் நானுணர்வு ( ego). மற்றொன்று ஒலி (sound image). இரண்டினாலும் அவளிடம் எந்த வினாவையும் எழுப்பத் தோணவில்லை. எப்படியோ முருகன்  சுட்ட பழம் (அல்லது) சுடாத பழம் வேணுமா என்றவுடனேயே ஔவை பிரக்ஞை அடைந்திருக்க வேண்டும்.
“ ஒரு நிகழ்வு ( event ) ஒருவருக்கு எவ்விதத்தில் அர்த்தமாகிறது? அதனோடு இவருக்குள்ள ஈடுபாடு என்ன ,அது அவரை எப்படிப் பாதிக்கிறது என்பதைப் பொறுத்து ஒரு நிகழ்வானது ஒருவருக்கு யதாத்தமாகிறதுஎன்கிறது மன அலசல்.( Zizek)
இங்கு முருகன் ஒரு விளையாட்டை நடத்துகிறான்.ஔவையும் அதை உணர்ந்து ரசித்திருப்பார்.
இங்கு மொழி குறித்த லெக்கானின் கருத்துகள் கவனத்திற்குரியவையாகும்:
Language was  system of signs none of which signified anything in itself , for meaning arose solely from the place and function of a sign within the system as a whole”-Lacan.
(மொழி என்பது குறிகளின் அமைப்பாக இருக்கிறது, அவற்றில் எதுவும் தன்னளவில் / தனக்குத்தானே குறிப்பீடாக இல்லை,ஏனெனில், ஒட்டுமொத்த அமைப்பிற்குள் ஒரு குறிப்பிட்ட குறியின் இடம் மற்றும் செயல்பாட்டின் அடிப்படையிலேயே அதற்கு அர்த்தம் உருவாகிறது)
ஆனால்,ஔவையைப் போலவே கேட்கப்பட்ட வார்த்தைகளுக்கு நேரடிப் பொருள் / அர்த்தம் மட்டும் அதில் இருப்பதான சூழல் உருவாக்கப்பட்டு ( உண்மை மறைக்கப்பட்டு ) ஒரு மாவீரனின் உயிரையும் ஆட்சியையும் பறிக்கப்பட்டது புராணக்கதையாக உள்ளது.
நமது பிரதான ஆய்வுப் பொருளை எடுத்துக்கொள்ளுமுன் ஒரு சமகால நிகழ்வை (event)  புரிந்துகொள்வதில் வரும் சித்தப்போக்கும் , அது தளம் மாறும்பொழுது அந்த நிகழ்வு பற்றிய வாசிப்பின் கோணங்கள் மாறுவதும், அதனால் முடிவுகளின் குணாம்சம் எப்படி மாற்றமடைகிறது என்பதற்கு உதாரணப்பொருளாக, ஆய்வுப்பொருளாக , பிப்ரவரி 2000ல் அதிமுக தலைவி கைது செய்யப்பட்டதை எதிர்த்து தமிழகமெங்கும் சட்டமீறல்களும், பலாத்காரமும் நடந்தது. அந்த எதிர்ப்பின் விளைவாக, தர்மபுரியில் ஒரு பேருந்து உயிருடன் கொளுத்தப்பட்டு அதிலிருந்த மூன்று பெண்கள் கருகி செத்தனர்.
வழக்கு விசாரணைமன்றம், குற்றவாளி என்று 3 பேருக்கு தண்டனையாக தூக்குஎன்றது. இப்போது அந்த வழக்கு உச்ச நீதிமன்றம் சென்று அங்கு “ Diminished Responsibility என்று சொல்லிவிட்டது.
.... இச்சம்பவம் கட்டுக்கடங்காத வெறியின்போது ( mob frenzy),
கண்ணிமைக்கும் நேரத்தில் நடந்த ஒன்றாகும், ஏற்கனவே திட்டமிடப்பட்டு
நடந்ததல்ல (not premeditated); Diminished Responsibility-தான்.; பலிகடாக்கள்
யார் என்பது கூட குற்றவாளிகளுக்கு தெரியாது; இக்குற்றச் செயல் மரணதண்டனைக்கு ஏற்றதல்ல  என்றது உச்சநீதிமன்றம்.
- The  Hindu ,march 11,2016
       Diminished Responsibility-என்பதின் பொருள் என்ன? நோக்கம் என்ன? வேறு எது, எது இதில் அடங்கும் என்று தெரியவில்லை. .இந்த நிகழ்வுக்கு பொறுப்பானவர்கள் என்று எவரையும் சுட்டிக்காட்ட முடியாது என்கிறதா உச்சநீதிமன்றம்.?
        அந்த நிகழ்வில் பங்கேற்றவர் அனைவரும் யதார்தத்தில் குற்றவாளிகள்தானே ! தனியாக பொறுப்பாளியைத் தேடுவானேன்.
3 உயிர்கள் தூக்குக் கயிற்றிலிருந்து தப்பிக்க வைக்கப்பட்டது மகிழ்ச்சியே. பிரச்சினை அது பற்றியதல்ல; மாறாக, இம்மாதிரி தூக்குத் தண்டனைக்கு விலக்கு அளிக்கப்பட்ட சட்டத்தின் நெறிதான் ( Ethics) என்ன? உண்மை என்றால் என்ன அந்தச் சட்டத்தில்?? என்பதை புரிய முயற்சிக்கும் ஆய்வுதான் இது.
1. Diminished Responsibility. இதற்கு தரவு (data) என்ன? எந்தக் கோணத்தில் இந்தச் சட்டம் இந்த நிகழ்வைப் பார்க்கிறது.?
2. பலிகடாக்கள் யார் என்றுகூடத் தெரியாது.....
பேருந்தில் பெண்கள் இருந்தது தெரியாதா? தீயில் எரியும்பொழுது எழுந்த சாவுக்குரல் குற்றவாளிக்கு எட்டவில்லையா? பலிகடாக்களின் நிறம், உயரம், முகவரி வேண்டுமானால் தெரியாமல் (கண்ணால் பார்க்காமல்) இருக்கலாம். ஆனால், உயிருக்கான போராட்டக் குரல் குற்றவாளிகளுக்கு கேட்காமலா இருந்திருக்கும்? அக்கூக்குரலின் மூலம் பலிகடாக்கள் உள்ளிருப்பது தெரிந்திருக்குமில்லையா? காப்பாற்ற முயற்சி எதுவும் இந்தக் குற்றவாளிகளால் மேற்கொள்ளப்பட்டதா?
3.பேருந்துகள் எதற்காக எரிக்கப்பட்டது? பேருந்தை எரித்ததே சட்டப்படியான கைதை (ஜெ) எதிர்த்துத்தானே! தங்களின் மமகாரத்தை வெளிப்படுத்தத்தானே!
இதுவா Diminished Responsibility என்பது.
ஆக, நீதிக்கு, கொலையாளிக்கு பலி ஆட்டின் முகவரி தெரிந்திருந்தால்தான் அது படுகொலை என்றும் , இல்லாவிட்டால் Diminished Responsibility -யில் நடந்த செயல் என எடுத்துக் கொள்ளப்பட்டதுபோல் தெரிகிறது.
குற்றவாளிக்கும் இந்தப் பேருந்திற்கும் கூட ( things) நேரடி உறவோ, பகையோ கிடையாது; அதேபொழுது பலிகடாக்களுக்கும் நேரடி உறவு கிடையாது. இந்த நிகழ்வுக்கு Diminished Responsibility –தான் இந்தக் குற்றவாளிகளுக்கு என்றால் , தினம் லட்சக்கணக்கில் / கோடிக் கணக்கில் பயணிக்கும் பயணிகளுக்கு யார்தான் பாதுகாப்பு? எல்லாம் பலி கடாக்கள் தானா?
[ அதாவது,அப்படிப்பட்ட (risk)-ல்தான் பயணம் செய்யவேண்டும்]
கொலையாளிகளுக்கு பலிகடாவின் முகவரி தெரிந்திருந்தால் முழு கொலையாளி (தூக்குதண்டனைக்கு தகுதி); இல்லாவிட்டால் குறைந்த குற்றவாளி என்ற Technical point சரியாகக்கூட இருக்கலாம்.
ஆனால்,அது நெறியின் ( Ethics) மீதும், உண்மையின் மீதும் நிற்க வேண்டுமல்லவா...?

க.செ

17 Nov 2017

பேராசை எனும் BIG BOSS

பேராசையின் மூலாதாரங்கள் தெரியுமா? என்ரான்(Enran), வேர்ல்டு காம்(World com.), ஆண்டர்சன் (Anderson ) , அடல்பா(Adelpha) , ஹெல்த் சவுத் ( Health south ) ....இவைகள் பன்னாட்டு நிறுவனங்கள். சரி,  இது மறந்திருக்கலாம் .  கொங்கு நாட்டு ஈமு கோழிப் பண்ணைகள் , கொங்கு நாட்டு சீட்டுக்கம்பெனிகள், ஹர்ஷத் மேதா, கரூர் அன்புநாதன் , வேலூர் சேகர் ரெட்டி , ஜெயலலிதா , சசிகலா etc இவர்களெல்லாம் பொதுச் சொத்தை , மக்களின் பணத்தை தங்களின் பேராசைக்கு ஆகுதி ஆக்கிக்கொண்டனர்.
 முதல் பாராவில் சொன்ன பன்னாட்டுக் கம்பெனிகள் , குறிப்பாக அமெரிக்க வகை தொழில்நுட்ப சுரண்டலாம்.
கீழே கொடுக்கப்பட்டிருப்பது இந்திய கார்பரேட் கட்சிகளின் தலைவர்களின் ஊழல் பேராசையின் மொக்கை வடிவமாகும்.
லஞ்சம், திருட்டு, கறுப்பு பணம் என்பதெல்லாம் குறியீட்டுச் சொற்களாகும் . அடிப்படையில் வேசத்தைக் கலைத்துவிட்டால் பேராசை என்பது ஒளிவீசித் தெரியும்.
அரசாங்கம் இதற்கு குற்றத்தடுப்பு வழக்குப் ( criminal case ) போட்டு  ஏதோவொரு தண்டனையைக் கொடுக்கும். தனிமனித ரீதியில் மட்டுமே புரிதல் இருக்கும்.
பேராசையே அனைத்து சமூக அநீதிகளுக்குமான ஊற்றுக்கண்ணாகும். .இந்தக் கூற்றை கலாச்சார முன்னிருத்தலாக வெளிப்படுத்தியது நவீன உளவியல் அல்ல. அது யூத நெறியான 10 கட்டளைகளில் 10வது கட்டளையாகும்.
இங்கேயும் “ மண்பறீத்துண்ணேல் “; சொன்னது, பெண்ணியவாதி ஔவை .
யூத இலக்கியங்களும் பேராசையைக் கண்டிக்கிறதாம். மேலும் அதை தடை செய்வதாகவும் சொல்லப்படுகிறது.
இந்தியாவில் பேராசை என்பது பொருள்குவிப்புக் கலாச்சாரத்தின் வெளிப்பாடாகவும் உள்ளது.
இங்கு 1951ல் நேரு காலத்திலேயே முந்த்ரா மோசடி 124 லட்சம்; 1960ல் தர்மதேஜாய் கப்பல் கம்பெனிக் கடன் ஊழல்; இந்திரா காலத்தில் நகர்வாலா ஊழல், ராஜீவ் ஆட்சியில் போபர்ஸ் பீரங்கி ஊழல்; 1992ல் நரசிம்மராவ் காலத்தில் ஹர்சத் மேத்தா பங்குச் சந்தை ஊழல் 8 லட்சம்  கோடிகள்; லாலு பிரசாத்தின் மாட்டுத்தீவன ஊழல் 900 கோடிகள்,
இவைபோன்ற இன்னபிறவைகள் பழைய ஊழலுக்கான மாதிரிகள்.
இன்றைய காலக்கட்டத்தில் ...
காமன்வெல்த் விளையாட்டு நிதி -7000 கோடிகள் -சுரேஷ் கல்மாடி
2013ல் சாரதா சீட்டுக் கம்பெனி மோசடி 40000 கோடிகள். ,இது வங்காளத்தில்.
தமிழ்நாட்டில் சேகர் ரெட்டி 500 கோடிகள் , கரூர் அன்புநாதன்... இன்னபிற.
(ஜெ,சசிகலாவின் பேராசை எத்தனை ஆயிரம் கோடிகள் என்று சரியாகத் தெரியவில்லை) இநத பேராசையே அதிகாரத்திற்கான மூலதனமாகவும் உள்ளது.
ஒரு எம்எல்ஏ , எம்பி சீட்டுக்கு கோடிக்கணக்கில் மக்களுக்கு ஓட்டுக்காக / அதிகார வெறிக்காக பணத்தை வீசி எறிகிறார்கள் . மொத்த எம்பி சீட்டுகள் , இந்தியாவின் அனைத்து எம்எல்ஏக்களுக்குமான ஓட்டுகளுக்காக எத்தனை லட்சம் கோடிகள் ஒவ்வொரு தேர்தலிலும் வீசப்பட்டிருக்கிறது . இதுவரை நடந்த தேர்தல்கள் எத்தனை என்று கணக்கிட்டால் அது கோடி கோடிகளாக இருக்கும்.
அரசியல் பொதுவெளியில் , மக்களின் கலாச்சாரத்தில் சீரழிவு மனப்போக்கை வெகு தாராளமாக விதைத்து எங்கு பார்த்தாலும் விஷமுள்ளான சீமைக்கருவேலம்தான். மக்களின் ஆரோக்கியமற்ற மனபாவத்தால் தேர்தலின்போது விலையில்லா பொருட்களுக்காகவும் , இலவசத்திற்காகவும் கூச்சமில்லா எதிர்பார்ப்பிற்கு அடிமையாகிவிட்டனர் ; பேராசைக்கான விளைநிலமாகிவிட்டனர்.
பேராசையால் குவித்த கோடிகளை உடையவர்களை, மக்களில் பெரும்பாலோர் அம்மா என்றும், சின்னம்மா என்றும், ஐயா என்றும் பாதாரவிந்தங்களில் அடிபணியக் காத்திருக்கின்றனர் 1
ஆசை என்பது பேராசையாகவே ; பிறர்பொருளைக் கவர்வதற்கான பேராசையாகவே உள்ளது . தெருவில் போகும் பெண்களின் பொருளைக் கவர்வது ; வீட்டில் உள்ள மூத்த குடிமகன்/மகளைக் கொன்று கொள்ளையடிப்பது; செல்பி நாட்டம் பரவியது கல்லூரி மாணவர்களை குற்றச்செயல்களில் ஈடுபடத் தூண்டிவிட்டிருக்கிறது.
அத்துடன் பட்டம் பதவிகளுக்கான லஞ்சக் கலாச்சாரத்தை ஊக்கிவிடுகிறது.
“பேராசையே அனைத்து சமூக அநீதிகளுக்குமான ஊற்றுக்கண்ணாக உள்ளது“ என்கின்றனர். பிறர் பொருளைக் கவர்வதற்கான பேராசையானது மனித உறவுகளைக் குலைத்துவிடுகிற்து . இதனால்தான் யூதநெறியானது ‘எனக்கே முதலில்‘( me- first) என்கிற கவர்ந்து கொள்ளும் ( grabbing ) தூண்டலை மட்டுப்படுத்துமாறு முன்மொழிகிறது என்கின்றனர் . இத்தோடு செல்வப்பெருக்கால் வரும் பெருமையை கடுமையாக மறுக்கிறது யூத மதம்.
பேராசை என்பது கற்பிக்கப்பட்ட ஒன்றாகவே உள்ளது ; அது பாரம்பரியமாகவே சுவீகரிக்கப்பட்டதாக ,  அல்லது பொதுவானதாகவோ இல்லை என்கின்றனர் ஆய்வாளர்கள்.
பேராசை பற்றி மன அலசல் கூறுவது :
 “லிபிடோ ( libido) , குழந்தை வாயின் ஆதார ஆற்றலாக , உடலின் முக்கிய அங்கமாக உள்ளது . இயல்பான மன எழுச்சி வளர்ச்சிப் போக்கில் இந்த உந்தலானது சமூகரீதியாக ஒப்புக் கொள்ளத்தக்க , பயனளிக்கக்கூடிய நடவடிக்கைகளாக , உதாரணமாக , இடப்பெயற்சி (displacement) , புனிதப்படுத்துதல் (sublimation), பதிலீடு செய்தல் (substitution) மற்றும் எதிர் நடவடிக்கை உருவாக்கம் (reaction formation) போன்றவைகளைச் செய்ய  உந்துகிறது  என்கின்றனர்.
      ஆதார ஆற்றலுக்கு மகிழ்வு கிட்டாதபோது அவன் / அவளுக்கு மனப்பதட்டம் ( anxiety ) மன இறுக்கம் (tension) , விரக்தி ( frustration ) போன்றவைகளாக அது வெளிப்படுகிறது “ என்கிறார் ஆப்ரஹாம் (1927)
      தேவைக்காக மட்டும் பொருள்குவிப்பு நடக்கவில்லை . மாறாக, பொருட்களைச் சேகரிப்பதில் , பிறர் அறியாமல் பதுக்கிவைப்பதில் ( hoarding ) கிடைக்கும் இன்பத்திற்காகவே பொருள்குவிப்பு நடைபெறுகிறது . அதாவது , பொருள்குவிப்பானது தனி அடையாளம் சார்ந்த ஒன்றாக , பாதுகாப்பு , நிம்மதி , அதிகாரத்தைப் பதிலீடு செய்கின்ற குறியீட்டு நடவடிக்கையாகவே உள்ளது . பணம் என்பது மரணமற்ற ( eternity ) வாழ்வை அடைவதற்கான மாய அதிகாரத்தின் ( illusive power) குறியீடாக உள்ளது என்கிறது மன அலசல்.

 குழந்தை வளர்ப்பை ஆய்வு செய்யும் அட்லர் (Adler ) , Getting Type 
(விரும்புவதையெல்லாம் அடைகின்ற வகைமாதிரியினர்) என்ற கருத்தை
முன்வைக்கிறார்.
குழந்தை வளர்ப்பின்போது குழந்தைகளிடம் செல்லம் காட்டுவது அல்லது சலுகை காட்டுவது , தாராளமாக அனுமதிப்பது ( permissiveness ) மூலம் விரும்புவதையெல்லாம் பெறுகின்ற வகைமாதிரியின ( getting type ) சித்த ஆளுமைப் பண்பு வளர்ச்சி அடைகிறது. குழந்தைகளால் எவ்வளவு முடியுமோ அவ்வளவையும் அடைவதற்கு , விரும்புவதை யெல்லாம் பெறுவதற்கு , மற்றவர்களைவிட கூடுதலாகப் பெறுவதற்கு குழந்தைகள் ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். இதன் காரணமாக தனிமனித ஆளுமை ( personhood ) என்பது அவர்களுடைய பொருளாதார சொத்து மதிப்பிற்கு சமமானது என்றாகிவிடுகிறது.
      பாதுகாப்பற்றவர்களாக , அங்கீகரிப்பு தேடுபவர்களாக உள்ள பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளின் மனம் விரக்தி அடைந்து விடக்கூடாது என்ற எண்ணத்தில் குழந்தைகளின் உடனடியான கோரிக்கைகள் அனைத்தையும் ஏற்று , இடம்கொடுப்பவர்களாகிவிடுகிறார்கள் என்கிறார்  அட்லர்.
      குழந்தைகள் தங்களைத் தாங்களே சார்ந்திருப்பதற்கான வாய்ப்புகள் மறுக்கப்படுகின்றன,பேராசைக்கு செல்வம் ஈட்டப்படும் வழிமுறைகள் ஒரு பொருட்டல்ல. பணம் பணத்திற்காகவே குவிக்கப்படுகிறது.
      வரைமுறையற்ற செல்வக்குவிப்பு ஏற்படுத்தும் பாதிப்புகள் பற்றி கவலை இல்லை.இயற்கை ஆதாரங்கள் அழிப்பு , சமூகப் பிளவுகள் , இல்லாமையின் துன்பம் பற்றி எந்த அக்கறையும் இல்லை. ஈட்டிக்காரர்களாக உலாவுகின்றனர் .
பேராசைக்கு வழிவகுக்கின்றது சுயமோக ஊக்கிகள். இன்றைய தமிழகத்தில் பேராசையும் பொருள்குவிப்பும் நீக்கமற நிறைந்துள்ளது.
பொருள்குவிப்பை நுகர்வுக் கலாச்சாரம் மிகச் ‘சிறப்பாக‘ கையாளுகிறது. ஆடித் தள்ளுபடியை தமிழகத்தின் பண்டிகையாக ஆக்கிவிட்டார்கள்.
பேராசைக்கு தீனி போட்டு வளர்ப்பதில் குடும்பத்திற்கு கணிசமான பங்குள்ளது. கள்ளத்தனமான வர்த்தக நடவடிக்கை, அரசு ஊழிய உடம்புகளின் லஞ்ச லாவண்யங்கள் இன்னபிற.
இதனால் இவர்களின் பிள்ளைகள் பிறர் வாழ்க்கைக்கு பழக்கப்பட்டு விடுகிறார்கள். நண்பர்களின் தேர்வு கூட சொத்துக் குவிப்பில் பெரும் பங்குவகிக்கிறது. பிள்ளை, மனைவிக்கு செல்வம் ஈட்டப்படும் வழிமுறைகள் ஒரு பொருட்டே அல்ல.
தங்களின் பெருந்தீனிக்கு செல்வம் இருந்தால் போதும் என்கிற மனோபாவமே மேலோங்கியுள்ளது.
பேராசைக்குணம் பெருமளவில் கற்றுக்கொள்ளப்பட்ட ஒன்றாக இருக்கிறது. இதற்கு நெய் ஊற்றி எரியும் தீபமாக நுகர்வுக் கலாச்சாரம் இருக்கிறது.
ஒரு மதத்தின் மறை நெறி கடின உழைப்பை புனிதமானதாகக் கூறுகிறது ( hard work as sacred ). பாவ மன்னிப்பை உறுதிப்படுத்திக் கொள்வதற்கு சொத்துக்குவிப்பு என்பது மதரீதியான கடமை என்கிறது.
இப்போது சுயநலம் என்பது கேவலமான ஒன்று என்பது போய் சமூக இயல்பாக, கந்துவட்டிக் கலாச்சாரமாக உலாவி வருகிறது. இதனால் வரும் உயிர்ப் பலி கூட பரந்துபட்ட மக்களின் கோபத்திற்கும் வெறுப்பிற்கும் வித்திடவில்லை என்பது ஆச்சரியமாகும். காரணம் மக்கள் நுகர்வுக் கலாச்சாரத்தின் ஈர்ப்பு,வசியம் ஆகியவற்றின் அடிமைகளாக இருக்கின்றனர்.
இந்த ஈர்ப்பு,வசியம் ஆண்டு முழுவதையும் ஆடி மாதமாக மாற்றிவருகிறது.
ஒன்று வாங்கினால் மற்றொன்று இலவசம் ( buy one ; get one free ).அதிரடி ஆஃபர்
( Offer ) பேராசையைப் புரிந்துகொள்வது என்பது மட்டுமே பேராசைக் குணத்தைப் போக்குவதில் பலனளிக்கப் போவதில்லை..

உளவியல்நுட்ப ஆய்வுகள் எதையும் மேற்கொள்ளாமலேயே  தன்முனைப்பு சுயத்தின் வளர்ச்சியில் ( ego development ) மட்டுமே கவனம் குவித்து , நனவிலித் தளத்தில் மாற்றங்களைத் தூண்டிவிட முடியும் என்றாகிறது. கல்வி அறிவார்ந்த அறிதிறனை ( intellectual curiosity ) வளர்க்க முடியும்; தனிமனித ஆற்றலை ஊக்கப்படுத்த முடியும்.. கலை , இலக்கியம் சார்ந்தவைகளைத் தேடுமாறு தூண்டமுடியும். விளையாட்டுத் தளத்தில் ஈடுபடுமாறு தூண்டலாம்.
மற்றொன்று கல்வியாளர்களுக்கு :
பேராசை, நுகர்வுக் கலாச்சார வசியத்தை எந்தெந்த முறைகளில் மறு உற்பத்தி செய்கின்றன, வலுப்படுத்துகின்றன என்பதை கல்வியாளர்கள் பொறுமையாக, பலவந்த மில்லாமல் கட்டுடைத்து மாணவர்களுக்குப் புரிய வைக்கவேண்டும்.
அதைப்போலவே , நிலவுகின்ற பொருளாதார அமைப்பின் விழுமியங்களானது எவ்வாறு இந்த அமைப்பிற்கான பலிகடாக்களை உருவாக்குகின்றன என்பதையும் கல்வியாளர்கள் தெளிவாக விவரித்துவிடவும் முடியும்.
பேராசை நடத்தைகளின் ஊற்றுக் கண்கள் குறித்த விழிப்புணர்வை அதிகப்படுத்துவது , உளவியல்ரீதியாக ஒருங்கிணைப்பதில், சமூக விழுமியங்களை அகவயப்படுத்துதல் , சூழலுக்கேற்ப தகவமைத்துக் கொள்ளுதல், மன அழுத்தத்தை வெற்றிகரமாக சமாளிப்பது போன்றவை அடங்கும்.
குறிக்கோளாக, பிறர் நலன் பேணுதல், படைப்பாக்கத் திறனை வளர்த்தல் , மனித குலத்துடனும் பிற ஜீவராசிகளுடனும் உறவுகளை வளர்த்தல், இதரரை சமமாகப் பாவித்தல் , பரஸ்பரம் பிறர்மீது அக்கறை செலுத்துவது மூலம் பதிலியாகும்பொழுது தன்னிலையானது சுதந்திர உணர்வைப் பெறுவது சாத்தியமாகும்.
க.செ


உதவிய கட்டுரைகள்
The  pathogenesis  of  Greed  :causes  and  consequences –Arthur Nikelly
 ( international journal of applied psycho analytic studies -2006 )
Abraham  ( coblentz 1965 )
படங்கள்உதவி ww.google.co.in

நன்றி:
                                                        மற்றமை பற்றி.. ஜமாலன்