10 Mar 2019

” எவனுக்கு பொய் பேச தைரியம் இருக்கிறதோ ”……..பெரியார்




                 கனவான் நேர்மையில் அக்கறை கொள்கிறார்
                அற்பமான மனிதனோ லாபம் குறித்து கவலைப்படுகிறார்
                                                         –கன்பூசியஸ் கோரிய பண்புகள்.

        2019 –ம் ஆண்டின் பாராளுமன்றத் தேர்தலில் சுவாரஸ்யமாய் காலம் சென்ற யுத்த தந்திரத்தை மீண்டும் செயலூக்கமிக்க சூழ்ச்சித்திறமாக ( Tactics ) கையில் தூக்கியுள்ளனர்.     இலை மறைவு காய் மறைவாக. ஓட்டுக்காக லஞ்சம் / வெகுமதி ; ஒவ்வொரு சாதிக்கும் அடிப்படையான அடையாளவேட்கைக்கு தீனி போடுவது போன்ற நடவடிக்கைகளை துவக்கியுள்ளனர். உதாரணமாக , சினிமா பக்தர்களுக்காக சென்னை சென்ட்ரல் ரயில்வே ஸ்டேசன் பெயரை இனி எம்ஜிஆர் ரயில்வே ஸ்டேசன் என்று பெயர் மாற்றப்போவதாக பிரதமர் மோடி வெகுஜனங்கள் முன்னிலையில் சூளுரைத்துள்ளார்.
       [ ஒருவேளை 2024 பாராளுமன்றத் தேர்தல் நடந்தால்; மோடி காத்திரமாக இருந்தால் சினிமா பைத்தியம்,இரட்டை இலை பைத்தியங்களின் ( அதிமுக) நல்லெண்ணத்திற்காக தமிழ்நாடு என்ற பெயரை எம்ஜிஆர் ; ஜே நாடு என்று பெயர் சூட்டுவேன் என்பார் மோடி என்று எதிர்பார்க்கலாம் ].
       இந்த மானம் கெட்ட போக்கின் காரணத்தை சில தலைவர்களின் பெயரைச் சொல்லிவிட்டாலோ ; கட்சிகளின் பெயரைச் சொல்லிவிட்டாலோ போதுமான உண்மையல்ல அது. பேருண்மையை அறிய பெரியார் சொல்வதை நம்பி காது கொடுக்கலாம்.
       ஏன் பெரியார் ? என்று கேள்வி எழுவது சகஜம்தான்.
       இந்தியாவின் பிரதான முரண்பாட்டின் பிரதான அம்சங்களில் ஒன்றான சாதியம் எப்படியெல்லாம் வெறியேற்றப்படுகிறது ; அதிகாரத்திற்கான கருவியாக்கப்படுகிறது( tool ); சாதியப் பார்வையே சமூகப்பார்வையாக மாற்றப்படுகிறது என்பதை நுணுகி அறிய பெரியார் உதவுகிறார்.
        இதற்கு யார் யாரெல்லாம் ஒருவேளை காரணமாகலாம் என்பதையும், இந்த சாதி அபிமானம் / வெறி யார்யாருக்கெல்லாம் எப்படியெல்லாம் பயன்படுகிறது என்று பெரியார் அந்தக் காலக்கட்டத்தில்,20-ம் நூற்றாண்டின் நடுவே கூறியதை கொஞ்சம் வாசிக்கலாம்.
       சாதியமுரண்பாட்டை கையாண்டவர்களுள் பெரியார் , அம்பேத்கர் போன்றோர் முன்னிலை வகிக்கின்றனர்.
       தேர்தல் பற்றி பெரியாரின் கோட்பாடுகள் மிக விஷேசமாக உள்ளது.
       இப்போது தேர்தல் பற்றி பெரியார்:
       ” எவனுக்கு பொய் சொல்லத் தைரியம் இருக்கின்றதோ , எவனுக்கு பொருள் செலவு செய்யச் சக்தி இருக்கின்றதோ, எவனுக்கு பொய்ப் பிரச்சாரம் செய்ய சவுகரியமாயிருக்கிறதோ அவனுக்கு வெற்றி கொடுக்க நம் நாடு தயாராயிருக்கிறது “                                                                    – பெரியார் கணினி.
       ( “ எவன் “, ”அவன்” ஏகவசனம்; பெரியாரின் தார்மீகக் கோபம்தான் அது )
       அவனுக்கு வெற்றி கொடுக்க நம் நாடு தயாராயிருக்கிறது “. என்ன பொருள் ?        இந்தியர்களின்,தமிழர்களின் ஆசையானது பொய் சொல்ல , பொருள் செலவு செய்யச் சக்தி உள்ளவர்கள்;பொய் பிரச்சாரம் செய்யும் செளகரியம் உள்ளவர்களுக்கு வெற்றியைக் கொடுப்பதற்கு தயாராய் உள்ளது என்கிறார் பெரியார்.
       9-3-2017,வெள்ளி மாலை தொலைக் காட்சி செய்தியில்,
        பிரமலைக் கள்ளர்களுக்காக , பெருங்காமநல்லுர் போராளிகளுக்கான / வெள்ளையரை எதிர்த்த போராட்டத்தில் மரணம் அடைந்தவர்களின் நினைவாக ஒரு நினைவு மண்டபம் கட்டப்போவதாக எடப்பாடி அரசாங்கம் அறிவித்துள்ளது.
[ தப்பு;தப்பு. மரணம் அடைந்தவர்களின் நினைவாக அல்ல.
“ பிரமலைக் கள்ளர் சமூகத்தை கவுரவிக்க”……-தினத் தந்தி.9-3-2017 ]
       மதுரை விமான நிலையத்திற்கு தங்கள் சாதித் தலைவர் பெயரை வைக்கவேண்டும் என்ற கோரிக்கை ஏற்கனவே உள்ளது. ஆனால் அதற்கான அதிகாரம் எடப்பாடியாரிடம் இல்லை; மோடியாரிடம் உள்ள அதிகாரமது. எதிபார்க்கலாம் !!
       பாராளுமன்ற அரசியல் வெளியில் சந்தர்ப்பவாதம் குறித்து ஒருவரையொருவர் ( குழு ரீதியில்) ‘ நீதான் சந்தர்ப்பவாதி ‘ என்று பினாத்துகிறார்கள். சந்தர்ப்பவாதம் குறித்து பெரியார் கூறுவது புருவத்தை தூக்கவைக்கிறது.
       ” விபச்சாரம்”. அரசியலில் கூடுவிட்டுக் கூடு பாய்வது ஒருமாதிரி அரசியல் விபச்சாரமே”….அதே நூல்.
       இறுதியாக ’ கவர்ச்சி அரசியல்’ பற்றியும் பெரியாருக்கு அப்பொழுதே பிரக்ஞை இருந்திருக்கிறது.
” சினிமாத் துறைக்கு நிர்வாணக் காட்சி       எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்து வருகிறதோ,அதேபோல் அரசியலில் அயோக்கியத்தனங்கள், சண்டித்தனங்கள், சிறிதும் மானம் வெட்கம் அற்ற பொய் பித்தலாட்டங்கள் பெரிதும் கவர்ச்சிகரமாய் உள்ளது “  – அதே நூல்

       சிம்னிவிளக்கு வெளிச்சமானாலும் அது வெளிச்சம்தானே.

       கடைசித் தந்தி: அபிநந்தனுக்கு ‘ பரம்வீர் சக்ரா ’ விருது வழங்கவேண்டும்.பிரதமர் நரேந்திர மோடிக்கு எடப்பாடியார் கடிதம்.
                                                                           -க.செ.

No comments:

Post a Comment