1 Jun 2017

பசுவதை தடையின் பேரில் சேடிசம் ( Sadism)

சட்டம் என்பது ஒடுக்கப்பட்ட ஆசையே “ - லெக்கான்
....நாடு முழுவதும் கால்நடை சந்தைகளில் பசு , காளைகளை இறைச்சிக்காக கொல்வதற்கு விற்கக்கூடாது....பசு,காளை , எருமை , கன்றுக்குட்டி , கறவை மாடுகள் , ஒட்டகம் உட்பட அனைத்து கால்நடைகள் விற்பனைக்கும் இந்தக் கட்டுப்பாடுகள் பொருந்தும்.                       
-          தி இந்து 17-5-2017
இது மத்திய அரசின் சட்டம் .
எல்லா தேசிய இனங்களையும் கட்டுப்படுத்தும் சட்டத்தை மத்திய அரசு வெளியிட்டிருக்கிறது . இந்தச் சட்டம் ஏன் இப்படி திடீரென வெடித்து கிளப்பப்பட்டிருக்கிறது ?
இங்கு சட்டம் ( எழுதபட்டது ) இருக்கிறது. ஆனால் அதன் உண்மையான நோக்கம் என்ன என்பதற்கு கிரகணம் பிடித்துள்ளது ( real ). அதாவது இருட்டடிப்பில் / மொழியற்று இருக்கிறது .
சுருக்கமாக , மன அலசல் மொழியில் கூறினால் “ Jouissance is forbidden லெக்கான்.
Jouissance  என்ற ப்ரெஞ்ச் வார்த்தை மொழியாக்கம் செய்யப்படாமல் அப்படியே உபயோகப்படுத்தப்படுவதையே லெக்கான் விரும்புகிறார்.
மொழிபெயர்ப்பாளர்கள் சுசான்ஸ் ( Jouissance ) என்பதை Enjoyment ( அனுபவிப்பு ) என்று மாற்றம் செய்துள்ளனர். சுசான்ஸ் என்ற வார்த்தை அதீதமான மனக்காய குணாம்சத்தை  (வலியில் அனுபவிப்பு ) உணரும் விதத்தில் மொழியாக்கம் செய்யப்படுகிறது
இப்போது நடந்திருப்பது Symbolic castration . அதாவது , சட்டரீதியான காயடிப்பு மாட்டுக்கறி உண்பவர்களுக்கு உண்டு என்பது தெளிவாகிவிட்டிருக்கிறது.
இந்தத் திட்டம் ஆர்.எஸ்.எஸ் ; பாஜக போன்றவைகளின் Super Ego ( பேரகன் ) ஆகும் . Symbolic castration மூலம் அந்தவகை மாமிசம் உண்பவர்களின் மகிழ்வை / சந்தோசத்தை / திருப்தியை அடையவிடாமல்  வக்கிரமாகத் தடுத்து , பிறரின் துன்பத்தில் இன்பம் காணும் Sadist  கட்டமைப்பும் இயங்குகிறது.
ஆர்.எஸ்.எஸ் ; பாஜகவினர் தங்களை முற்றிலும் ( ஆதி ) பேரகனாக ( Super Ego )  கற்பனையாக ( Imaginary ) ஆக்கிக்கொண்டதின் விளைவுதான் முத்தலாக் , மாட்டுக்கறி , பர்தா போடுதல் போன்றவற்றைத் தொடர்ந்து விமர்சனம் பண்ணுவதும் , ஏதோ ஒருவகையில் இஸ்லாமியர்களை நெருக்கடியில் , பதட்டத்தில் தொடர்ந்து வைத்திருப்பதும் அவர்களின் வழமையாக இருக்கிறது.
கால்நடைகள் மீது காட்டுவது உண்மையில் பரிவா? சற்று சந்தேகம்தான் ; இந்த சிம்பாலிக் சட்டத்தின் மூலம் அவர்களைக் காயடித்து துன்பப்படுத்துவதை ஏன் அவர்கள் உணரவில்லை ? பேரகன் உணராது ; பிறரை கட்டாயப்படுத்தி இன்புறுவதில் அதற்கு அலாதிப் பிரியம். மிருகங்கள் மீதான கருணை என்பது பொய். அது பிறரைத் துன்புறுத்தி இன்புறுபவர்களுக்கு ( Sadist )  ஒரு கருவி அவ்வளவே.
இங்கு லெக்கானின் கூற்று முக்கியமாகிறது. “ பேரகனின் அடிப்படையான கோரிக்கைகளைப் பொருத்தளவில் அதற்கும் ஒழுக்க நெறிப்படியான உளச்சான்றுக்கும் (moral conscience ) எவ்விதத் தொடர்பும் இல்லை . இதற்கு மாறாக , பேரகன் என்பது நெறிக்கு எதிரான முகமையாகும் ( anti-ethical agency ) “  என்கிறார். – Ego Ideal and Super Ego -Zizek
இச்சட்டத்தை சாதாரணமாக எதிர் கொள்ளக்கூடாது. தேசிய இனங்களுக்கு எதிரானது , Sadism , தன்னையே பேரகனாக எண்ணும் போக்கு , இவைகள் சமயம் கிடைக்கும் போதெல்லாம் அரசியல் விளையாட்டைத் தொடரத்தான் செய்யும்.
தேசிய அளவில் பரந்த ஐக்கிய முன்னணி ( தேர்தலை மையமாக வைத்து அல்ல ) கட்டப்பட்டு , அது பாசிச எதிர்ப்பு முன்னணிக்கு இணையாக, நீண்டகாலக் கண்ணோட்டத்தில் எதிர்கொள்ளத் தயாராக இருக்கவேண்டும். பிஜேபி-யின் ஒழுக்க அரசியல் முகமூடியை அம்பலப்படுத்துவதில் சுணக்கம் கூடாது. கல்லூரி மாணவர்களை , இளவட்டங்களை செல்பி கிறுக்கிலிருந்து விடுவித்து , யதார்த்தத்தை எதிர்கொள்ள வகைசெய்ய வேண்டும் ; முயற்சிக்க வேண்டும்.

கசெ

No comments:

Post a Comment