-
சிக்மண்ட் பிராய்டு(1908)
-
தமிழாக்க்ம் : முனைவர் கனக விநாயகம்
ஏற்கனவே கூறியிருந்தவாறு பிராய்டு கட்டுரையின் முதல்
பகுதி இப்போது இடம் பெறுகிறது .மீதி பிறகு வெளிவரும் – ஆசிரியர்
கார்டினல் 1 அரிஸ்டோவிடம் வினவியதற்கு ஒப்பானதைப்
போல, பாமரர்களாகிய நமக்கும் படைப்பாளி என்கின்ற விநோதமான
மனிதன் எந்த மூலங்களிலிருந்து தனது படைப்பிற்கான கருப்பொருளினைப் பெறுகிறான்
என்றும் ; மேலும் , அவ்வாறு பெற்ற கருப்பொருளைக் கொண்டு நம்மால் நினைத்துக்கூட பார்க்கமுடியாததொரு மனப்பதிவினை
நம்மீது உண்டாக்குவதோடு மட்டுமல்லாமல், நமக்குள்ளாகவே எவ்வாறு
ஒரு மனக் கிளர்ச்சியையும் தூண்டிவிடுகிறான் என்பதையும் அறிந்துகொள்வதில்
எப்பொழுதுமே ஒரு தீராத ஆர்வம் இருந்துவருகின்றது. இந்த ஆர்வத்தைப்பற்றி
நாம் கேள்வியெழுப்பும் பொழுது, படைப்பாளியால் அதற்கு
பதிலளிக்க முடியாமலோ அல்லது அவருடைய பதிலானது நிறைவளிக்கக் கூடியதாகவோ இல்லாத பொழுது
இந்த ஆர்வமானது மேலும் அதிகரிக்கவே செய்கிறது. அதேவேளையில், படைப்பாளியினுடைய கருப்பொருள்
தேர்வு மற்றும் கற்பனையை வடித்தெடுக்கும் கலையினைப் பற்றிய தெளிவான உட்பார்வையுடைய
விளக்கங்களும் கூட நம்மை ஒருபடைப்பாளியாக
மாற்றமுடியாது என்பதோடு , எந்த வகையிலும் நம்முடைய இந்த ஆர்வத்தையும் குறைக்கவோ
அல்லது மட்டுப்படுத்த்வோ செய்வதில்லை.
ஒருவேளை நாம் நமக்குள்ளாகவோ அல்லது நம்மை ஒத்தவர்களிடமோ படைப்பாக்கத்திற்கு
நெருக்கமான ஏதோவொரு செயற்பாட்டினைக் கண்டுகொள்ளும் பொழுதுதான் நம்முடைய இந்த ஆய்வானது நாம் படைப்பாக்கத்தை பற்றி புரிந்து கொள்வதற்கான தொடக்கத்தை
அடைந்துவிட்டோம் என்ற ஒரு நம்பிக்கை நமக்குள்ளாக உருவாக்குகிறது. மேலும் உண்மையிலேயே
இவ்வாறு நடைபெறுவதற்கான சாத்தியங்களும் இல்லாமல் இல்லை. அதேவேளையில், படைப்பாளிகளும் அவர்களால் இயன்றவரை அவர்களுடைய படைப்புத் தன்மைக்கும் பொதுவாகக்
காணப்படும் மனிதத் தன்மைக்கு மிடை யேயான இடைவெளியினைக் குறைக்கவே விரும்புகின்றனர். அவ்வாறு செய்வதின்
மூலமாக அவர்கள் நம்மிடம் எல்லா மனிதர்களும் அவர்களுடைய மனதளவில் கவிஞர்கள்தாம்
என்றும்; அதனால் இந்த உலகில் கடைசிமனிதன் உயிரோடிருக்கும்வரை கடைசிக் கவிஞனும்
உயிரோடிருப்பான் என்பதையும் அவ்வப்போது உறுதிப்படுத்தி வருகின்றார்கள்.
குழந்தைப் பருவத்தின் ஆரம்பத்திலேயே காணப்படுகின்ற இந்த கற்பனைச் செயற் பாட்டின்
தொடக்கப் புள்ளி எதுவென்று நாம் தெரிந்துகொள்ள வேண்டாமா ? குழந்தை அதிகமாக
விரும்புவதோடு மட்டுமின்றி, தன்னையும் அதனோடு ஒன்றிணைத்துக் கொள்ளும் செயற்பாடென்பது அதன்
விளையாட்டோடுதான் என்னும் பொழுது, நாம் ஏன் விளையாடும்
பொழுது எல்லா குழந்தையும் ஒரு படைப்பாளரைப் போலவே நடந்து கொள்கின்றது என்று
கூறக்கூடாது?
ஏனெனில் விளையாடும் பொழுது குழந்தை தனக்கானதொரு உலகைக் கட்டமைக்கிறது. அல்லது , இதையே
வேறுவகையில் சொல்வதானால் நடப்பு உலகின் பொருட்களை அதற்கு உகந்தவகையில்
மறுசீரமைத்துக் கொள்கிறது . மேலும் , அவ்வாறு கட்டமைத்த உலகினை
அக்குழந்தை முக்கியத்துவம் உடையதொன்றாக எடுத்துக் கொள்வதில்லை என்று நாம்
வாதிடுவது தவறான ஒன்றாகும். மாறாக , குழந்தையானது
அதனுடைய விளையாட்டினை முக்கியத்துவமுடையதொன்றாக எடுத்துக் கொள்வதோடு மட்டுமல்லாமல்
அவ்விளையாட்டின் மீது அளவிற்கதிகமான உணர்ச்சிகளையும் கொட்டுகிறது. அந்தவகையில், விளையாட்டிற்கான எதிர்நிலை என்பது எது முக்கியத்துவமானது என்பதல்ல, மாறாக எது உண்மை என்பதாகும். குழந்தை அதன் விளையாட்டு உலகத்தை உணர்ச்சிகளையெல்லாம் கொட்டி கட்டியிருந்த பொழுதும், அவ்விளையாட்டு உலகத்தை அது தன்னுடைய உண்மையான உலகத்திலிருந்து மிகத் தெளிவாக
வேறுபடுத்தி அறிகிறது. மேலும் , மட்டுமின்றி அக்குழந்தை அதனுடைய கற்பனையான
பொருட்களையும், சூழல்களையும் உண்மையான உலகில் காணப்படுகின்ற பார்த்து
தொட்டுணரக்கூடிய பொருட்களோடு தொடர்புபடுத்த விரும்புகிறது. இந்த தொடர்பு படுத்தும்
செயல்முறைதான் குழந்தையின் ‘ விளையாட்டினை ‘ கற்பிதம் செய்து கொள்ளல்/ மனக்கோட்டை கட்டுதல் ‘ என்பதிலிருந்து வேறுபடுத்துகிறது.
படைப்பாளரின் செயல்களானது குழந்தை விளையாட்டினை ஒத்திருக்கின்றன. படைப்பாளர்
கற்பிதமானதொரு உலகினை உருவாக்குவதோடு மட்டுமின்றி , அதனை முக்கியத்துவம்
உடையதொன்றாகவே கருதுகிறார். மேலும் அக்கற்பித உலகத்தினை இந்த நடைமுறை உலகிலிருந்து துல்லியமாக வேறுபடுத்தி
அறிதல் என்பது அவருக்கு அவ்வளவு எளிமையான ஒன்றல்ல. ஏனெனில் , அக்கற்பித உலகினை அவர் தனது அதிகப்படியான உணர்ச்சிகளைக் கொட்டி கட்டி
எழுப்பியுள்ளார் . படைப்பாக்கத்திற்கும் குழந்தை விளையாட்டிற்கும் இடையே நிலவும் இந்த ஒத்த தன்மையானது
மொழியின் வாயிலாக பாதுகாக்கப்படுகின்றது. மேலும் இக்கற்பித உலகங்களானது தொட்டு உணரக்கூடிய பொருட்களோடு
தொடர்புறுத்தப்பட்டிருப்பதோடு இவைகளைப் பிரதிநிதித்துவப்படுத்துகின்ற கற்பனையான
படைப்பாக்க வடிவங்களானது ஜெர்மானிய மொழியில்
‘Spiel’ (அதாவது ‘ விளையாட்டு ‘ ) என்று அழைக்கப்படுகின்றன. மேலும் இம்மொழியில் ‘ Lustspiel ’ ‘ Trauerspiel ’ (‘ இன்பியல் ‘ , ‘துன்பியல் ‘ ) என்ற வார்த்தைகளுக்கு நேரான மொழிபெயர்ப்பானது ‘ மகிழ்வான விளையாட்டு ‘ மற்றும் ‘ துன்பமான விளையாட்டு ‘ என்பதாகும் . அதே வேளையில் இந்த இரு வார்த்தைகள் குறிக்கும் பொருளினை வெளிப்படுத்துபவர்கள் ‘Schauspieler’ ( ‘ விளையாட்டாளர்கள்
‘ : நேரான வார்த்தை மொழிபெயர்ப்பு ‘ Showplayers ’ என்பதாம் ) என்றும் அழைக்கப்படுகின்றனர் . படைப்பாளருடைய உண்மையில்லாத இந்த கற்பனை உலகமானது அவருடைய கலை
நுணுக்கத்திறத்தில் மிக முக்கியமான விளைவுகளை உண்டாக்குகிறது. உண்மையான
நிலையிலிருக்கும் பொழுது எவ்வகையான களிப்பினையும் உண்டாக்காத பெரும்பான்மையான
பொருட்களானது கற்பித விளையாட்டுகளின் பொழுது களிப்பினையுண்டாக்குகிறது. அதே வேளையில், பெரும்பாலும் உண்மையில் துன்பம்
நிறைந்து காணப்படுகின்ற மனக்கிளர்ச்சிகளானது , படைப்பின் வழியாக வெளிப்படும் பொழுது , அப்படைப்பினை
செவிமடுக்கின்றவர்களுக்கோ , அல்லது அதனைப்
பார்வையிடும் வாசகர்களுக்கோ மிகுந்த மகிழ்ச்சியினை தரக் கூடியதொரு மூலமாக
அமைகின்றன. இவற்றோடு மட்டுமல்லாமல் மற்றொன்றையும்
கருதி , நாம் உண்மை மற்றும் விளையாட்டு என்ற இந்த இரு
நிலைப்பாடுகளுக்கு இடையேயான வேறுபாடுகளில் இன்னும் சிறிதுநேரம் நிலைத்திருக்க
வேண்டியிருக்கிறது. ஒரு குழந்தையானது வளர்ந்து அதனுடைய விளையாட்டை எல்லாம் நிறுத்திவிட்ட
பிறகும்கூட , அதாவது , ஒரு குழந்தையானது சில பத்தாண்டுகள் செலவுசெய்து வாழ்க்கையினுடைய உண்மைகளை
எல்லாம் முறையாகத் தேடிக் கண்டடைந்த பின்னரும்கூட , ஒரு நாள் அந்த வளர்ந்த குழந்தையானது தன்னை மீண்டுமொருமுறை இந்த உண்மை மற்றும்
விளையாட்டு என்ற இரட்டைநிலையினை வேறுபடுத்தி உணரக்கூடிய மனநிலையினை அடையலாம் . ஆழ்ந்த பொறுப்புணர்வுடன் கூடிய
வளர்ந்த குழந்தையானது , தான் ஒரு காலத்தில் அதிக
அக்கறையுடன் செயல்பட்ட தனது இளமைப்பருவத்து விளையாட்டுகளை திரும்பிப்பார்ப்பதோடு
மட்டுமின்றி , அதனை தனது தற்போதைய அலைக்கழிக்கும்
அன்றாட வாழ்வோடும் பொருத்திப்பார்க்கலாம் . அதன் மூலமாக, அதன் மீது இந்த வாழ்க்கையால்
சுமத்தப்பட்ட மிகக் கடினமான சுமைகளை எல்லாம் உதறித் தள்ளிவிட்டு , நகையுணர்வினால் விளையக்கூடிய அதிக அளவிலான மகிழ்வினையும் அறுவடை செய்யலாம் .
மனிதர்கள் வளர வளர விளையாடுவதை நிறுத்திக் கொள்வதோடு , அவ்விளையாட்டின் மூலமாக தாங்கள் அடைந்த மகிழ்ச்சியினையும் கைவிட்டு
விடுகிறார்கள் என்பது போலானதொரு தோற்றம் உருவாகிறது . ஆனால் , மனிதனுக்கு இருப்பதிலேயே மிகவும் கடினமானதொன்று உண்டென்றால், அது அவன் ஒருமுறை
அடைந்த மகிழ்ச்சியினைக் கைவிடுவதுதான் என்பது மனித மனதினை நன்றாக
அறிந்தவர்களுக்குத் தெரியும் . உண்மையில் நாம்
எதனையும் கைவிடுவதில்லை மாறாக , நாம் ஒன்றிற்கு பதிலாக மற்றொன்றிற்கு மாற்றம் செய்து கொள்கின்றோம் . ஒன்றினைத் துறந்ததாகத் தோன்றுவது உண்மையில் அதற்கான பதிலியினை அல்லது அதற்கு
ஒத்த மற்றொன்றினை உருவாக்குகின்ற செயற்பாடாகும் . அவ்வகையில் , வளருகின்ற குழந்தையானது விளையாட்டினை நிறுத்திக்கொள்ளும் பொழுது எதனையும்
இழப்பதில்லை , மாறாக , அது உண்மையான பொருட்களோடு தொடர்பினை உண்டாக்கிக்கொள்கிறது . விளையாட்டிற்கு பதிலாக அது தற்போது கற்பிதங்களை உருவாக்கிக்கொள்கிறது. காற்றில் கற்பனைக்
கோட்டைகளைக் கட்டுவதோடு, எவையெல்லாம் ‘ பகற் கனவுகள்‘ என்று அழைக்கப்படுகின்றனவோ அவைகளை
உருவாக்குகிறது . பெரும்பாலானவர்கள் தங்களுடைய வாழ்க்கையில் பலநேரங்களில் கற்பிதங்களைக்
கட்டுகிறார்கள் என்றே நான் நம்புகிறேன் . மேலும் , இந்த உண்மையானது வெகுகாலமாக கீழ்த்தரமானதொன்றாக
கருதிவரப்பட்டதனால் அதனுடைய முக்கியத்துவமானது போதுமான அளவில்
ஊக்கப்படுத்தப்படவில்லை . மனிதர்களுடைய கற்பிதங்களானவை குழந்தையின் விளையாட்டைக் காட்டிலும்
புரிந்துகொள்வதற்கு எளிமையான ஒன்றல்ல . குழந்தையானது தானாகவோ அல்லது
விளையாட்டு என்பதற்காகவோ மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடுகிறது.அவ்வாறு மற்ற குழந்தைகளுடன் இணைந்து விளையாடும் பொழுது , அவ்விளையாட்டில் ஈடுபடும் குழந்தைகள் தங்களுக்குள்ளாக மட்டுமே
உணர்ந்துகொள்ளும் வகையிலமைந்த தனித்துவமானதொரு மனநெறியினை (விதிகளை) வடிவமைத்துக்
கொள்கின்றன . குழந்தைகள் முதியோர்களுக்கு முன்பாக விளையாடுவதில்லை என்றபொழுதும் , அவர்கள் முதியோர்களிடமிருந்து அவர்களுடைய விளையாட்டினை மூடிமறைப்பதில்லை . இதற்குத் நேர்மாறாக , வயது வந்தவர்கள் அவர்களுடைய கற்பிதங்களுக்காக வெட்கப்படுவதோடு மட்டுமில்லாமல் , அக்கற்பிதங்களை மற்றவர்களிடமிருந்து மூடிமறைக்கவும் செய்கின்றனர் . மேலும் பெரியோர்கள் அவர்களுடைய
கற்பிதங்களை அவர்களுக்கு மட்டுமேயான தனித்தன்மை- யானதொரு பண்பு என்றும் கருதி
களிப்படைகின்றனர் . இந்நிலையில் , உண்மையில் நடப்பது என்ன என்று
பார்த்தால் , பெரியவர்கள் மற்றவர்களிடம்
அவர்களுடைய கற்பிதங்களை வெளிப்படுத்துவதற்கு பதிலாக , அவ்வாறு கற்பிதப்படுத்துகின்ற தன்னுடைய தவறான செய்கைகளுக்காக மன்னிப்பு
கோருகின்றார்கள். இவ்வாறான செயற்பாடானது , தான் ஒருவர்
மட்டும்தான் இந்த உலகில் இதுபோன்ற கற்பிதத்தை உருவாக்கிக்கொள்ளும் மனிதன் என்றும் , கற்பிதத்தை உருவாக்கிக்கொள்ளல் என்பது எல்லா மனிதரிடமும் காணப்படும் பொதுவான ஒன்றுதான்
என்பதை அறியாத காரணங்களினால் தோன்றுவதாகும் . விளையாடுகின்ற மற்றும்
கற்பித்துக்கொள்ளும் மனிதர்களுக்கு இடையேயான நடத்தைகளில் உள்ள வேறுபாடுகளானவை , அவ்விரு செயற்பாடுகளுக்குக் காரணமாக அமைந்துள்ள ‘ உட்கிடக்கை ‘ களால் தீர்மானிக்கப்படுகின்றன . எவ்வாறாயினும் அவ்விரு
உட்கிடக்கைகளும் ஒன்றுடன் ஒன்று தொடர்புடையன .
ஒரு குழந்தையின் விளையாட்டானது விருப்பங்களினால் தீர்மானிக்கப்படுகிறது . மேலும் அறுதியிட்டு
சொல்ல வேண்டுமெனில் , ஒரு குழந்தை வளர்வதற்கு துணை
செய்கின்ற , அதாவது பெரியவனாகவும் புகழ்
உடையவனாகவும் வளரவேண்டும் என்ற ஒற்றை விருப்பத்தினால் தீர்மானிக்கப்படுகிறது . குழந்தை தன்
விளையாட்டின் பொழுது , தன்னை எப்பொழுதுமே
வளர்ந்தவர்களுக்கு ஒப்பாகவும் ; எவைகளையெல்லாம்
பெரியோர்கள் வாழும் வாழ்க்கையினைப் பார்த்து உணர்ந்துகொண்டதோ , அவைகளையெல்லாம் அப்படியே விளையாட்டின் மூலமாக பிரதிபலிக்கவும் செய்கிறது . குழந்தைக்கு இந்த
விருப்பத்தை மறைத்து வைப்பதற்கு அதனிடம் எவ்விதக் காரணமும் இல்லை . மாறாக , பெரியோரிடம் இதே செயல்பாடானது குழந்தையிடம் உள்ளதைப்போல காணப்படவில்லை. பெரியவர்கள் , ஒரு புறத்தில் இனி ஒரு போதும் விளையாடவோ அல்லது கற்பிதப்படுத்திக் கொள்ளவோ
கூடாதெனவும் , அதற்கு மாறாக உண்மையான உலகில்
செயற்படும்படியாகவும் எதிர்பார்க்கப்படுகிறார்கள் ;
அதேவேளையில் மறுபுறத்தில், அவர்களுடைய ஒரு சில வருப்பங்களானவை
கட்டாயமாக மறைத்து வைக்கப்பட வேண்டிய தன்மையினைக் கொண்டிருக்கின்றன . அவ்வகையில்
வயது வந்தோர்கள் தங்களுடைய கற்பிதங்களை குழந்தைத்தனமானவைகளாகவும் , நடைமுறை சட்டதிட்டங்களுக்கு எதிராக உள்ளதாகவும் கருதி
வெட்கப்படுகின்றனர்
இவ்வாறாக , மக்கள் தங்களுடைய கற்பிதப்படுத்துதல்களை புதிர்த்தன்மை உடையதாக மாற்றிக்
கொள்ளும் பொழுது , அவைகளைப் பற்றி நம்மால் எவ்வாறு இவ்வளவு தூரம் அறிந்துகொள்ள முடிந்தது என்ற வினா எழலாம். கடவுள் ( உண்மையில் அது ஆண் கடவுளல்ல ; மாறாக கடுகடுப்பானதொரு பெண் தெய்வம்
- கண்டிப்பானது ) மனிதர்களுக்குள்ளாக ஒரு குறிப்பிட்ட
வகுப்பினரிடம் அவர்களை துன்பத்தில் ஆழ்த்துவதும் , மகிழ்ச்சி பொங்க செய்வதும் எவை எவைகள்
என்பதை விளக்கும் பொருப்பினை ஒப்படைத்துள்ளார் 2 . இவர்கள் யாரெனில் , பதற்ற நோயினால் பாதிக்கப்பட்டவர்கள் . மேலும் , அவர்கள் மருத்துவரிடம் மற்ற
எல்லாவற்றோடும் இணத்து தங்களுடைய கற்பிதங்களையும் வெளிப்படுத்தி , அதன் வாயிலாக மருத்துவ சிகிச்சையினை மேற்கொள்ளுவதன் மூலம் குணமடையலாம் என்று
எதிர்பார்க்கிறார்கள் . இவர்கள் யாவரும் கற்பிதப்படுத்திக்கொள்ளும் செயல்பாடுகளின் தன்மைகளைப் பற்றி
அறிந்துகொள்வதற்கான சிறந்த மூலமாக அமைவதோடு மட்டுமில்லாமல் , நம்முடைய நோயாளிகள் நம்மிடம் சொல்லாத எதையுமே நாம் ஆரோக்கியமாக இருக்கும்
மனிதர்களின் வாயிலாக அறிந்துகொள்வது என்பது இயலாது என்று அனுமானிப்பதற்கான காரணத்தை
வழங்குகிறது .
இத்தருணத்தில்
நாம் நம்மை ஒரு சில கற்பிதப்படுத்திக்கொள்ளும் செயற்பாடுகளின் பண்புநலன்களோடு
பழக்கப்படுத்திக் கொள்வோம் . மகிழ்ச்சியான ஒரு மனிதன் தன்னை எப்போதும் கற்பிதப்படுத்திக் கொள்ளும்
செயற்பாடுகளில் ஈடுபடுத்திக்கொள்வதில்லை என்றும் , நிறைவடையாத விருப்பமுடைய ஒருவனே அவ்வாறான
செயல்களில் ஈடுபடுகிறான் என்றும் வரையறுத்துக் கொள்வோம் . அவ்வகையில் கற்பிதச்
செயற்பாடுகளின் உந்து சக்தியாகச் செயல்படுவது நிறைவேறாத விருப்பங்களாகும் . மேலும் எல்லா
தனித்தனிக் கற்பிதமும் கூட ஒருவகையான விருப்ப நிறைவேற்றம்தான் ; அதாவது , நிறைவேற்றமடைய முடியாத உண்மையினுடைய
பதிலியாகும். இவ்வாறு உந்துகின்ற விருப்பங்களானவை , கற்பிதப்படுத்திக்கொள்ளும்
ஒருவருடைய பால் , நடத்தை மற்றும் சூழலைச் சார்ந்து
மாற்றமடைகின்றன என்றபொழுதிலும் , அவைகள் யாவும்
இயல்பாகவே இரண்டாக வகைப்படுத்தப்பட்டதொரு தொகுதிக்குள்ளாக வந்தடைந்து விடுகின்றன . ஒன்று , கற்பிதப்படுத்திக்கொள்ளும்
ஒருவருடைய ஆளுமையினை உயர்வடையச் செய்கின்ற வகையிலமைந்த பெரிய நோக்கமுடைய விருப்பங்கள்
; மற்றொன்று பாலுணர்வெழுப்புகின்ற
விருப்பங்கள் இளம் பெண்களிடம்
பாலுணர்வுத் தூண்டல் விருப்பங்கள் குறிப்பிட்டுச் சொல்லும்படியான அளவில் மேலாண்மை
செலுத்துகின்றன. அவர்களுடைய உயர் நோக்கமானது , பாலுணர்வினைத் தூண்டும்
போக்குகளினால் உள்வாங்கப்பட்டதொரு விதிமுறையாக உள்ளது .
இளம்பருவ ஆண்களிடம் , உயர் நோக்கமுடைய விருப்பங்களாக , பாலுணர்வினை எழுப்புகின்ற விருப்பங்களோடு அதற்கு இணையாகத் ‘ தான் ‘ என்ற அக உணர்வும் தெளிவாக முன்னிலைப்படுத்தப்படுகின்றன . எவ்வாறாயினும் , இவ்விரு போக்குகளுக்கு இடையேயான எதிரெதிரான தன்மைகளின்மீது நாம் கவனத்தைக்
குவிப்பதற்கு மாறாக அவ்விரு போக்குகளும் பெரும்பான்மையான நேரங்களில்
இணைந்தேயிருக்கின்றன என்கின்ற உண்மையினை முக்கியத்துவப்படுத்துவோம் . எவ்வாறெனில் , கடவுள் வழிபாட்டுக் கூடங்களில் உள்ள பல்வேறு கலைப்படைப்புகளின் ஒரு மூலையில்
அதனைக் கொடையளித்தவரின் பெயரானது பொறிக்கப்பட்டிருப்பதைப்போல , பெரும்பான்மையான உயர் நோக்கமுடைய கற்பிதங்களின் ஏதேனுமொரு மூலைமுடுக்கில் தான்
நாம் அந்தப் பெண்ணை - அதாவது யாரை மையமிட்டு அவன் தனது வீரதீரமான
கற்பிதங்களை கட்டுவதோடு மட்டுமில்லாமல் , யாருடைய காலடியில் அவன்
பெற்ற வெற்றிகளையெல்லாம் சமர்ப்பணம் செய்கின்றானோ அவளை – காணமுடியும். இந்நிகழ்வில்
மறைத்தல் என்கின்ற செயற்பாட்டிற்கான உறுதியான உந்துதல்கள் இருப்பதனைக நம்மால்
காணமுடியும் . அதாவது , நன்முறையில் வளர்க்கப்பட்ட ஒரு பெண்
, தன்னுடைய பாலுணர்வைத் தூண்டும் விருப்பங்களை மிகக்
குறைந்த அளவில்தான் வெளிப்படுத்த அனுமதிக்கப்படுகிறாள் . அதேவேளையில் இளம் வயதுடைய ஆண்மகன் தன்னுடன் சுமந்துகொண்டு
வரும் அளவிற்கதிகமான அவனுடைய குழந்தைப் பருவத்தின் சிதைந்த நினைவுகளைக் கடந்துபோக
கற்றுக்கொள்ள வேண்டுமெனவும் , அதன்மூலமாகத்தான் அவன்
சமூகத்தில் அவனுக்கான இடத்தை -அதாவது சமுதாயத்தில் வலுவான தேவைகளை உருவாக்கும் மற்ற
தனிமனிதர்களுடன் சமமான நிலையில் அவனுக்கான இடத்தினைப் பெறமுடிகிறது . பல்வேறு
வகையிலமைந்த கற்பிதங்களின் - காற்றில் கோட்டை
கட்டுதல் , பகற்கனவுகள் போன்ற கற்பனையாக உருவகித்துக்கொள்ளும் செயற்பாடுகள் -
மூலமாக கிடைக்கப்பெறும் விளைபொருட்களானவை ஒரே தன்மையுடன் இருப்பதாகவும் , அவைகள் மாற்ற
இயலாத ஒன்றெனவும் கருதுதல் கூடாது . மாறாக , அவைகள் கற்பனையாக உருவகித்துக்
கொள்ளப்படுகின்ற பொருட்களின் மாறுகின்ற வாழ்க்கைப் பதிவுகளுக்கு ஏற்ப தங்களைப்
பொருத்திக் கொள்வதோடு மட்டுமின்றி , மாறும் சூழ்நிலைக்கு
ஏற்ப தங்களையும் மாற்றிக்கொள்கின்றன . இவற்றோடு மட்டுமின்றி , அவைகள் ‘ அன்றாட நிகழ்வுகளின் பதிவு ‘ என்ற வகையில் தோன்றும் ஒவ்வொரு புதிய செயல் உணர்வுகளிலிருந்தும்
மாற்றத்திற்கான தரவுகளை உள்வாங்கிக்கொள்கின்றன . பொதுவாக ஒரு கற்பிதத்திற்கும்
கால நிலைக்கும் இடையேயான உறவானது முக்கியமானதொன்றாகும் . கற்பிதமானது மூன்று
காலங்களிலும் தோன்றுகிறது . அதாவது , காலவெளியில் நம்முடைய எண்ணங்களுக்கு உருக்கொடுக்கும் சாத்தியங்களான மூன்று
கணங்களுக்கு இடையேயும் அவைகள் மிதந்து கொண்டிருக்கின்றன என நாம் விவரிக்கலாம். மனச் செயற்பாடானது , சில நடைமுறையிலுள்ள நிகழ்வுகளோடு இணைக்கப்பட்டுள்ளது . நிகழ்காலத்திலுள்ள சில
தருணங்கள் கற்பனை செய்வோருடைய முக்கியமானதொரு விருப்பத்தினைத் தூண்டு வதற்கான
காரணமாக அமைகின்றன . இந்த நிகழ்கால தூண்டும் தருணங்களிலிருந்துதான் முன்னர் எந்த ஒன்றில் இருந்து
இந்த விருப்பமானது நிறைவடைந்ததோ ( பொதுவாகக் குழந்தைப்
பருவத்தினுடையது ) அந்த நினைவானது
ஞாபகப்படுத்தப்படுகின்றது ; மேலும் , அது தற்போது எதிர்காலத்தையும் உள்ளடக்கிய வகையில் , அந்த விருப்பம் நிறைவேற்ற மடைவதற்கான ஒரு சூழலைக் கட்டமைக்கிறது . இவ்வாறு
கட்டமைக்கப்பெறும் ஒன்றானது பகற்கனவாகவோ , மேலும் கற்பிதமாகவோ அமைகின்றது . இப்பகற்கனவோ அல்லது கற்பிதமோ தோற்றம் கொள்வதற்கான சுவடுகளானவை ,
நிகழ்காலத்தில் அமைந்த தூண்டும் தருணங்களோடு நம்முடைய முந்தைய நினைவு சேகரத்திலும்
காணப்படுகின்றன . இவ்வாறாக , கடந்த காலம் , நிகழ்காலம் மற்றும் எதிர்காலம் யாவும் ஒன்றாக ஒரே நூலிலையில் இணைக்கப்பெற்று , அந்நூலிலையின் ஊடாக விருப்பமானது பயணிப்பதான தோற்றம் உருவாகிறது .
1.
கார்டினல் இப்போலிடோ
தேஎஸ்தா ( 1479-1520 ) இத்தாலியைச் சார்ந்த ஒரு
கத்தோலிக்க பாதிரியார் . ஒர்லாண்டோ ஃபரிஸோ என்னும் காதல் காப்பியத்தை
எழுதிய லுடோவிகோ அரிஸ்டோவினை ( 1474- 1533 ) முதலில் ஆதரித்தவர் .
இக்கவிஞர் பெற்ற வெகுமதி யாதெனில் பின்வரும் வினாதான் :“ எங்கிருந்து இவ்வளவு
கதைகளைத் தெரிந்து கொண்டாய் லுடோவிகா ?”
2.
இந்த உருவகமானது யொஹான் வூல்ப்காங்
கதே ( 1749- 183 )யின் Torquato Tasso என்ற நாடகத்தின் நிறைவுப்பகுதியில் அதன்
கதைத் தலைவனால் பேசப்படும் புகழ்மிக்க வரிகளான – “ மனிதகுலம் அதன் துயரத்தின்
ஆழத்தில் பேச இயலா ஊமையாய் இருக்கும் பொழுதில் ,ஒரு கடவுள் என்னை நான் எவ்வாறு
துயரப்பட்டேன் என்று விவரிக்கப் பணித்தார் “ – என்பதைக் குறிப்பதாகும்
( தொடரும் )
No comments:
Post a Comment