23 Dec 2016

பெரியாரின் தன் மதிப்பும் - அதிமுகவில் காயடிப்பு அச்சமும்

 ”மகிழ்வுக் கோட்பாட்டை மையமாகக் கொண்டே நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம் –லெக்கான்.
தமிழகத்தில் மீண்டும் ஒருமுறை குறைப்பிரவசத்திற்கான முயற்சி நடக்கிறது  என முனகல் சப்தம் கேட்கிறது.
........." ஆட்சி , அதிகாரம் , வரம்பில்லா வருமானம் போய்விடுமோ என்ற அச்சம் ஆட்டிப்படைக்கிறது . ஓடும்வரை வண்டி ஓடட்டும் என்று , சசிகலாவை பொதுச்செயலாளர் என்னும்  ஓட்டுநர் இருக்கையில் அமர வைத்து அழகு பார்க்கத் துடிக்கின்றனர் ;  பதவிக்காக பல்லாக்கு தூக்குகின்றனர்“ -தினமலர் 18-12-2016

 இதே பார்ப்பன பத்திரிக்கைகளும் , ஊடகங்களும் நுணுக்கமாக J.வை ஆதரித்து வந்ததும் , தூக்கிப் பிடித்ததும் ‘ போதுமான அளவிற்கு ‘ அம்பலப்படுத்தப்படவில்லை . J.-  வின் மறைவுக்குப் பிறகு , ‘ சசிகலா ’ வை எதிர்க்கும் மனோபாவத்தில் , முதல் மந்திரி , அதிமுகவில் பிராமணச் செல்வாக்கு இழந்து விடாமல் இருக்க எடுக்கும் காத்திரமான எழுச்சியை பார்ப்பன பத்திரிக்கைகள் அரசியல் முனைப்புடன் செயல்படுத்துகிறது . எம்ஜிஆர் , ஜெயலலிதா பிம்பத்தை கட்டிக் காக்க பார்ப்பனிய ஊடகங்கள் செய்யும் பரப்புரை கவனிக்க வேண்டிய ஒன்றாகும்.
 “  பல்லாக்கு தூக்கிகள் இழப்பதென்ன? பெறுவது என்ன ?
பெறுவது :அதிகாரம் ; வரம்பில்லா வருமானம் .
இழப்பதென்ன :   ஜனநாயக உரிமை இழத்தல்.
அத்துடன் சுயநிர்ணய சிந்தனைப் போக்கிற்கு இடமில்லாமல் செய்தல் .
ஊத்தைக் கலாச்சாரத்திற்கும் , வக்கிரத்துக்கும் வக்காலத்து வாங்கல்.
சாதிய அடையாளத்தையே அரசியல் மூலதனமாகக் கொண்டுள்ள பொதுவெளிக்கு , அதன் மணத்தை ஆசைதீர முகரும் வக்கிர மனத்திற்கு சுய நிர்ணய உரிமையின் அங்கலட்சணம் எப்படித் தெரியும் ? மேலும் , நடப்பது BC  politics . அதற்கான அடிக் கட்டுமானத்தில் சாதிய பீடிப்பு மனநோய் . இங்கு ஜனநாயகத்திற்கோ , சுயநிர்ணய உரிமைக்கோ லட்சியமாக இராதுதானே ?
இது ஈ. வே. ராவின் கொள்கைகளுக்கு புறம்பாகத் தெரிகிறதே .
“ நமது நாட்டில் ஒவ்வொரு தனிமனிதனும் தனது அறிவையும் ஆற்றலையும் பெருக்கிக் கொள்ளுதல் வேண்டும் ; ......தனித்தியங்கும் பெருமையை அடைய வேண்டும் ....”  . சொன்னது பெரியார் 1925ல். 
    பெரியாரியல் –தொகுதி 1 . வே . ஆனைமுத்து.
அன்று தன் மதிப்பு என்பதுதான் சுயமரியாதைக் கொள்கை என்ற பெயரால் தொடர்ந்து அவரால் முன்வைக்கப்பட்டது “ –அதே நூல்.
தன் மதிப்பு (self respect ) என்பதுதான் சுயமரியாதை என்பதை உணராமல் , தலைவர் வழிபாடு , கட்சி வழிபாடு , சாதி வழிபாடு ,  சினிமா வழிபாடு , மத வழிபாடு என்ற கும்பல் கலாச்சாரம் தமிழகத்தில் தழைத்தோங்கி நிற்கையில் , பெரியார் இன்று இருந்தால் அவரின் உராய் வீச்சு எந்தத் திசையில் இருக்கும் ?
பெரியாரின் பார்ப்பன எதிர்ப்பை மீறி , பல்கிப் பெருகி இருப்பது பார்ப்பனரின் புரோகிதமும் , மதச் சடங்குகளும்தானே ! இனி சுய நிர்ணய உரிமை பார்ப்பனரல்லாத மக்களிடம் எப்படி ஜீவித்திருக்கும் ?
அதிமுக மந்திரிகள் , எம்.எல் ஏ , முக்கியஸ்தர்களின் பார்வையில் தமிழக முதல்வர் , கட்சிப் பொதுச்செயலாளர் ஆவதற்கான தகுதிகளாக சித்தரிக்கப்பட்டவைகளிருந்து சில :
சி. பொன்னையன் , செய்தித் தொடர்பாளர் :
......எம்ஜிஆரின் மனச் சாட்சியாக ஜெயலலிதா விளங்கியதுபோல , ஜெயலலிதாவின் மனச் சாட்சியாக வாழ்ந்து வருபவர் சசிகலா....
... அதிமுகவுக்கு தலைமை ஏற்கவும் , பொதுச் செயலாளராக வருவதற்கும் முழுமையான தகுதி படைத்தவர் அவர்தான்....
.....சசிகலாவை பொதுச் செயலாளராக தேர்வு செய்வதற்கு ஏதுவாக கட்சியின் விதிகள் தளர்த்தப்படும் . இது குறித்து விரைவில் முடிவு எடுக்கப்பட்டு பொதுக் குழுவில் அறிவிக்கப்படும் “ .... – தி இந்து .16-12-2016
.......முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கடந்த 1991-ம் ஆண்டில் ஸ்ரீராம் இன்வெஸ்ட் லிமிடெட் என்ற நிறுவனத்தில் ரூ .7 லட்சம் முதலீடு செய்தார். இந்த தொகைக்கு வாரிசுதாரர் பெயராக என். சசிகலா என்றே குறிப்பிட்டுள்ளார் .இதில் ஜெயலலிதா கையொப்பமிட்டுள்ளார்...”                                                         -தி இந்து 17-12-2016
கே. ஏ . செங்கோட்டையன் , எம்எல்ஏ. :
.....இந்த இயக்கத்தை வழிநடத்திச் செல்வதற்கான முழு தகுதியும் உங்களிடம்தான் இருக்கிறது . பல ஆண்டுகளாக ஜெயலலிதாவுடன் இருந்து இயக்கத்தை எப்படி வழிநடத்திச் செல்வது என்பதை கூர்ந்து கவனித்துள்ளீர்கள் . உங்களால் மட்டும்தான் அதை நிறைவேற்றிட முடியும்.....
அதிமுக-வின் முழுப்பொறுப்பை தாங்கள்தான் ஏற்கவேண்டும் என சசிகலாவிடம் வலியுறுத்தியுள்ளோம்....” – தி இந்து 11-12-2016
தம்பிதுரை எம்பி , பாராளுமன்ற உதவி சபாநாயகர் :
......கடந்த 35 ஆண்டுகளாக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவோடு நெருங்கிப் பழகி , அவருடனேயே வாழ்ந்து , அவருக்காக எல்லாவகையான தியாகங்களையும் செய்திருப்பவர் சசிகலா.....
அண்ணா , எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் வழியில் சாதி , மத வேறுபாடுகளைக் கடந்து , தொண்டர்களை அரவணைத்து , பாதுகாத்து , வழிநடத்தும் ஆற்றல் நிறைந்தவர் சசிகலா மட்டுமே . இவரே ஜெயலலிதாவின் வாரிசு.....”    – தி இந்து 12-12-2016
வி.வி. ராஜன் செல்லப்பா , எம்எல்ஏ. :
......  ஜெயலலிதா தன்னுடைய வாழ்க்கையை மக்களுக்காக அர்ப்பணித்தார் ; ஜெயலலிதாவுக்காக சசிகலா தம்முடைய வாழ்க்கையை அர்ப்பணித்தார் . காமராஜர் , அண்ணா , எம்ஜிஆர் , ஜெயலலிதா உள்ளிட்ட தலைவர்களுக்கு வாரிசு இல்லை . அதுபோல், சசிகலாவுக்கும் வாரிசு இல்லை . இயற்கையாகவே இந்த ஒற்றுமை அமைந்துவிட்டது.....”
– தி இந்து 13-12-2016.

இதுபோக , போயஸ் கார்டனில் திரளாக அதிமுக-வினர் கும்பிட்ட கையோடு சசிகலாவிடம் கெஞ்சும் காட்சிகளையும் பார்க்க முடிகிறது.
ஏன் இப்படி ஒருவரிடம் கெஞ்சல் நடக்கிறது . மன அலசலுக்கு இம்மனப்போக்கை உட்படுத்தினால்....
ஆட்சியில் தலைமை மாறவேண்டிய கட்டாயம் . இந்தக் கட்டாயச் சூழலில் பொறுப்பில் உள்ளவர்கள் , முக்கியஸ்தர்கள் , மந்திரிகள் , செல்வாக்குப் பொருந்தியவர்கள் அனைவருக்கும்  காயடிப்புப் பயம் ( castration fear ) வந்து விட்டது . அதிகாரம் ,  பெற்றிருந்த செல்வாக்கு அனைத்தும் கேள்விக்குறியாகிவிட்டது .
பழைய உறவு முறையே நீடிப்பதே தமக்கு நலம் பயக்கும் என்ற முடிவால் , இப்போதும் தம் ஆசைக்கான ஆசைப்படுபொருளாக ( object ) , சின்னம்மா ( சசிகலா) தென்படுகிறார்கள் ; மேலும் , தலைமை மாற்றமடைந்தால் தங்களின் அடையாளங்கள் என்னவாகும் என்ற காயடிப்பு பயமும் தொத்திக் கொள்கிறது .
இப்போது அடையாளத்தைப் பெறுவது என்பதில்  முதலில் தலைமை நீங்கள்தான் என்று இவர்கள் சின்னம்மாவை அங்கீகரிக்கிறார்கள் ; பதிலுக்கு சின்னம்மா இவர்களின் அடையாளத்தை அங்கீகரிக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்போடு .
அங்கீகாரமே ஒருவரின் அடையாளத்தையும் உறவினுடைய இயல்பையும் தீர்மானிக்கிறது (லெக்கான்) . இருவரிடமும் பரஸ்பரமாக அங்கீகரித்தல் நடைபெறுகிறது .
இந்த அங்கீகாரத்தின் மூலமாகவே ஒரு மனிதர் சமூக உறவில் , தளத்தில் தன்னுடைய இடத்தையும் பெறமுடியும் ( லெக்கான் ) .
இப்போக்கில் முதலில் ஜனநாயகம் செத்துவிடுகிறது.
சுய நிர்ணய உரிமை / சுதந்திரம் அடிமையாக்கப்பட்டு விடுகிறது.
இந்த அடையாள அரசியல், சுயமோக அதிகாரத்தின் மேல் உள்ள பித்து / ஆசையாகும் (desire ).
சுயமோகப் பித்து தான் அதிகாரத்தைப்போல் ஒன்றைக் கொண்டிருக்கவேண்டும் ; அதாவது , தான் அதிகாரமாகவே (  phallus ) இருக்கவேண்டும் ;
மற்றொன்று , அதிகாரத்தின் ( phallic power ) ஆசைக்குரிய , நம்பிக்கைக்குரிய , நம்பகத்திற்குரிய நபர் / ஆசைப்படுபொருளாக  ( object ) தான் இருக்கவேண்டும் .
இந்த இரண்டு போக்குகளுமே காயடிப்பு அச்சத்தை  ( castration fear ) போக்கிக் கொள்ளும் முயற்சியே ஆகும் என்கிறார் லெக்கான்.
மேற்கூறிய போக்கு சமூகத்தில் மேலாண்மை பெற்ற கருத்தாக இருக்கும்வரை  சுயநிர்ணயம் “ என்பதும் , தன்மதிப்பு என்பதும் கேலிக்குரியதாக இருக்கும் . ஆண்டான், அடிமை என்ற உறவு ; தலைவர் , தொண்டர் என்ற வார்த்தை மாற்றம் ஏற்பட்டிருக்கிறது. மற்றபடி , சாராம்சத்தில் ஆண்டான் , அடிமை உறவே நீடிக்கிறது.
சுயநிர்ணய உரிமை காலூன்றாமல் காற்றில் ஆடிக்கொண்டிருக்கிறது.
மக்களிடம் மற்றமையாக ( Other ) மேற்படி உறவே செல்வாக்குச் செலுத்துகிறது .
க.செ
22-12-2016

1 comment:

  1. ஆம்..
    மொத்த தமிழகமுமே காயடிக்கப்பட்ட கூட்டமே.

    ReplyDelete