26 Apr 2016

Drive- ஆல் இயக்கப்பட்ட வைகோ... உருவக மொழியை பேசியதேன்?

தேர்  , திருவிழா என்றாலே வேடிக்கை ,விளையாட்டு , விலகல் ,விபரீதம் , சில சலுகைகளை மனம் எடுத்துக்கொள்ளும்தானே.
சித்திரைத்  திருவிழா காலத்திலேயே சட்டசபைத் தேர்தலுக்கான மக்களைத் திரட்டுவதற்காக (mobilization ) , 40 டிகிரி செலுசியஸில் சாவுகளைக்கூட கணக்கில் எடுக்காமல் தில்லானாவின் சலங்கை தமிழகமெங்கும் கேட்கிறது.
        அத்தோடு political marketing trade - ன் வீச்சு மற்ற தேர்தல்களைவிட மிக நவீன யுக்தியுடன் Ad-ம் மார்கெட்டிங் செவிப்பறையை நீடிக்கிறது.
4 G - க்கான Ad -ன் போட்டி பல வடிவத்தில் , வண்ணத்தில் செல் கம்பெனிகளிடையே நடந்துகொண்டிருக்கிறது.
அதையும் அரசியல் சந்தைப் போட்டி மிஞ்சிவிட்டது . அதனால்தான் தேர்தல் பரப்புரை தீப்பிடித்திருக்கிறது என்று கூறலாம்.
தமிழகத்தின் தலைசிறந்த பேச்சாளர் என்றும் , நடுத்தரத்தினரின் அன்பிற்கு பாத்தியப்பட்டவருமான வைகோ…….” தாய்மீது சத்தியமாக உள்நோக்கத்துடன் பேசவில்லை.என் வரலாற்றில் நான் செய்த மிகப்பெரிய குற்றம் “…..என்று மன்னிப்புக் கேட்டுள்ளார்.
போட்டிகளுக்கிடையில் சுறாவை ( விஜயகாந்த் ) வைகோ வலையில் வீழ்த்தி , அதற்கே உற்சாகமாகி ஆனந்த வெள்ளத்தில் மிதந்தார் ( Narcissistic Elation ) ; மிதக்கவிட்டார். அன்றைய இருட்டில் என்ன நடந்ததோ தெரியாது. வைகோ குழுவின் கூடாரத்தில்இடி ‘.அது ,பதட்டத்தை, Anxiety-யை, தீவிரத்தை வெளிப்படுத்தியது இப்படி….
இப்போது அரசியல் இரண்டாம் நிலைக்குச் சென்றுவிட்டது . இது நெறியா  (Ethics )? இப்படிப் பேசலாமா ? வெளிப்படலாமா ? இந்தச் சூழலில்தான் வைகோவின் சீன வெடி.
இப்போது மன அலசல் பார்வையில்  நடந்த பதிவேடுகளை வைத்து கெட்ட வார்த்தை சரியா ,தப்பா ? என்பதைத் தள்ளிவிட்டுவிட்டு :
வைகோவின் திடீர் வெளிப்பாட்டிற்கு நெறி வழிகாட்டியா ,இல்லையா என்று அறியும் ஒரு முயற்சி இது.
முதலில் வைக்கோவின் Narcissistic Elation mood - ஐச் சிதைத்த நிகழ்வுக்கு வரலாம்.
தேசிய முற்போக்குமக்கள் நலக்கூட்டணி விஜயகாந்த் தலைமையில் அமைக்கப்பட்டது.
அது மறுநாளே பிளவை நோக்கியது. அப்போது வைகோவின் எதிர்வினை :
கருணாநிதி குறித்து ஜாதி ரீதியாக
அப்படி என்னதான் பேசினார் வைகோ One Indiya – tamil. 7-4-2016.
தேமுதிகவின் சந்திரகுமார் செய்தது பச்சைத் துரோகம்….இதைவிட நீ பாலில் விஷத்தைக் கொடுத்து…..விஜயகாந்துக்கு விஷத்தைக் கொடுத்திருக்கலாம்சோத்துல விஷத்தைப் போட்டிருக்கலாம்….
போடுவீங்க நீங்கஇந்த மாதிரி ஆளுக…. நாங்க நம்புறவனுக்காக தலையைக் கொடுப்போம்….இந்த மாதிரியான கீழ்த்தரமான ஈனத்தனமான வேலை
        இதை ரொம்ப கடுமையான வார்த்தையில் சொல்லனும்னா வேற ஒரு தொழில் இருக்கு….அந்த தொழிலை செய்யலாம்னு சொல்லலாம்….
……..நான் இதைவிட இன்னொரு தொழில் பண்ணலாமேன்னு கேட்டுறலாம்…..அது என்ன தொழில்னு சொல்றாங்க….
தறி நெசவா இருக்கும்…..உழுவதா இருக்கும்உழவு செய்யறதா இருக்கும்…,பிசினஸ் பண்றதா இருக்கும்….வேற ஒரு தொழில்
உலகம் பூராவும் பிரசித்திபெற்று ஆதிமனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்….அதை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று பலபேர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்..அந்தத் தொழிலை செய்யலாம் இவங்க….
கலைஞரும் செய்யலாம்….இவங்களும் செய்யலாம்…..நாநான் ஒன்னும் தப்பா சொல்லலைங்க….அவரு நாதஸ்வரம் வாசிக்கக்கூடிய தொழிலும் தெரியும்அதனால சொன்னேன்ஒன்னும் இழிவா சொல்லலைஉலகத்தின் தலைசிறந்த இசை தமிழிசைஅதுக்குத்தான் உயர்வா சொல்றேன் அண்ணன் கலைஞரை……”
இவ்வாறு வைகோ கூறியிருந்தார்.
இதனால் திமுக தலைவர் கருணாநிதியை ஜாதி ரீதியாக வைகோ விமர்சனம் செய்ததாக சர்ச்சை வெடித்தது. திமுக தொண்டர்கள் தமிழகம் முழுவதும் வைகோவின் கொடும்பாவியை எரித்தனர், இதைத் தொடர்ந்து வைகோ தாய் மீது சத்தியமாக உள் நோக்கத்துடன் பேசவில்லை ;என் வரலாற்றில் தான் செய்த மிகப் பெரிய குற்றம்; ஆகையால்அண்ணன் கலைஞரிடம்மன்னிப்பு கேட்கிறேன் என அறிக்கைவிட இந்த பஞ்சாயத்து ஓய ஆரம்பித்துள்ளது
ஆதாரம் : http:// tamil.oneindia.com/news/tamilnadu/vaiko’s castiest remark on karunanidhi-250668.html.
வைகோவின் பேச்சு அவர் கட்சி , ஊடகங்களிடையே கொந்தளிப்பைக் கிளப்பிற்று.
தனிமனிதத் தாக்குதல் உடன்பாடில்லை என்றும் ,ஜாதிப் பெயரால் அரசியல் வேண்டாமென்றும் ,இன்னும் இது மாதிரி…..வைகோவின் பேச்சை ,வார்த்தைக்கு நேரடி பொருள் புரிந்து எதிர்வினை ஆற்றினார்கள்.
ஆனால், வைகோவின் இறுதிப் பேச்சில்….
……” வேற ஒரு தொழில்
உலகம் பூராவும் பிரசித்தி பெற்று ஆதிமனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில் அதை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று பலபேர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்…..அந்த தொழிலை செய்யலாம் இவங்க…..”
தமிழ் வாசிப்பு பொதுவாக வார்த்தைகளுக்கு நேரடி அர்த்தம் / பொருள் கொள்வது வழக்கமாய் உள்ளது.
இம்முறையில் உண்மைக்கு அருகே நெருங்கமுடியாது என்பதால் ,லெக்கானிய மன அலசல் மொழியியலில் , சசூரின் கோட்பாட்டில் ஜேக்கப்சன் சில மாற்றங்கள் செய்துள்ளார். அதைப் பின்பற்றி லெக்கான் மன அலசலுக்கானதாக மொழிக்கோட்பாட்டை மாற்றிக் கொள்கிறார்.
செய்யப்போகும் ஆய்வுக்கு இந்த மொழிக்கோட்பாடு அவசியம் தேவை. ஆதலால் அறிமுகப்படுத்திக்கொள்ளலாம்.
குறிப்பான் பெற்றுள்ள முன்னுரிமையைசசூரின் ஆய்வு உறுதி செய்கிறது என்று  பார்த்ததின் மூலம் , மொழியை  ஆகுபெயர் ( metonymy ), உருவகம் ( metaphor ) என்ற அச்சுக்களில் பொருத்திப்பார்க்கும் ஜேக்கப்சனின் முறையை ஏற்றுக்கொண்டதும் அடிப்படையான வழிமுறை ஒன்றை உருவாக்க லெக்கானுக்கு இடமளித்தது.இதன் அடிப்படையில் ப்ராய்டின் நனவிலி குறித்து மொழிரீதியான விளக்கத்தை லெக்கானால் கொடுக்க முடிந்தது. அவரது கருத்தை மிகச் சுருக்கமாகக் கூறலாம் .
ஏற்கனவே நிலவுகின்ற மொழிக் கட்டமைப்பை ( pre - existing language structure ) ஒரு தனியன் கைவரப்பெறுகின்ற திறன் அவர் / அவளின் நனவிலி நிறுவனவயப்பட்டதுடன் தொடர்புடையதாகும் , ஒத்துப்போகக்கூடியதாகும்(coincidence ).இது உருவகப்படுத்தப்படுதலின் மூலம் நிறைவேற்றப்படுகிறது. உருவகப்படுத்துதல் என்பதோ ஈடிபல் செயலோடு ( oedipal drama ) பிரிக்கமுடியாத தொடர்புடையதாகும். ஆக , ஒரு தனியனின் பிரக்ஞைபூர்வமான சொல்லாடல்கள் , செயல்களின்மீது அத்தனியனின் நனவிலியின் தாக்கத்தை / விளைவை     (effect) உருவகம் , ஆகுபெயர் முதலானவற்றின் செயல்பாடுகளைக் கொண்டே விளக்க வேண்டும் ; உருவகம் , ஆகுபெயர்களிலேயே காணவும்  வேண்டும் . நமது அடிப்படை விருப்பங்கள் ( original desires ) குறிப்பான் சங்கிலிக்குள் சென்று அதனுள் கரைந்துவிடுகிறது. இந்த விருப்பங்களை நம்மால் முற்று முழுதாக ஒருபோதும் மீட்டெடுக்க முடியாது .நம்மால் முடிந்ததெல்லாம் இந்த விருப்பங்கள் மேற்கொண்ட உருவக , ஆகுபெயர் வகைப்பட்ட பாதைகளை மட்டுமே மறுகட்டமைப்புச் செய்யமுடியும் ; அர்த்தத்தை எவ்வாறு இழந்தோம் என்பதை மறுகட்டமைப்புச் செய்யமுடியும்……” - Conscious and Unconscious –David Archer
நிகழ்வின் ( event ) துவக்க நிலைக்கு வரலாம்..
அப்போது வைகோ என்னவாக இருந்தார் ?......மற்றமையாக ( Other ), அதாவது,
மற்றமை என்பது ஒரு தளம் அல்லது அந்தஸ்து ஆகும் (place or position ).அது ஒரு மனிதனின் நடவடிக்கைகளுக்கு அர்த்தத்தைக் கொடுக்கிறது “ – The subject of Lacan.
ஐக்கிய முன்னணி தலைவர்கள் மௌனம் காக்க
வைகோ பொங்கி எழுகிறார் :
…..” சந்திரகுமார் செய்தது பச்சைத் துரோகம்….இதைவிட நீ பாலில் விஷத்தைக் கொடுத்து….விஜயகாந்த்க்கு விஷத்தைக் கொடுத்திருக்கலாம்….சோத்துல விஷத்தை போட்டிருக்கலாம்….”என்று குமுறுகிறார். எவ்வளவு சிறந்த பேச்சாளர் பேச்சில் பிறழ்வு ;நடத்தையில் பதட்டம் . ஏன் இப்படி ?
ஏனெனில் ,இதுவரையில் அவரின் சுயமோக பரவசம் படர்ந்திருந்தது .
தேமுதிக-விலிருந்து சந்திரகுமார் வெளியேற்றம் வைகோவின் சுயமோகப் பரவசத்தை காயடித்து , Castration fear -  க்கு உள்ளாக்கிவிட்டது. பாதிப்பு ,மிகு உணர்ச்சிக்கு தள்ளிவிட்டு கலைஞர்தான் காரணம் என்று கொந்தளிப்பு வசப்பட்ட மனம் முடிவு பண்ணியது.
இந்தக் கொந்தளிப்பு வசப்பட்ட மனம் எவ்வளவு தற்காப்பாக செயலாற்றுகிறது என்பதற்கு கீழ்க்கண்ட வாக்கியங்களே உதாரணமாகும். தொடர்ந்து வைகோவின் பேச்சு....
…….” இதை ரொம்ப கடுமையான வார்த்தையில் சொல்லனும்னா வேற ஒரு தொழில் இருக்குஅதைச் செய்யலாம்னு சொல்லலாம்……
எம்மேல ரொம்ப பிரியமான டிவிக்கள் 2,3 டிவிகள் இங்கே இருக்கு….அவங்க இதை எடுத்துப்போட்டு உலகம் பூராவும் என்னை டேமேஜ் பண்ணிருவாங்க…..பயப்பட வேண்டியிருக்கு உங்களுக்கு….நான் இதைவிட இன்னொரு தொழில் பண்ணலாமேன்னு கேட்டுறலாம்அது என்ன தொழில்னு சொல்றாங்க
தறி நெசவா இருக்கும்….உழுவதா இருக்கும்….உழவு செய்யறதா இருக்கும்…..பிசினஸ் பன்றதா இருக்கும்வேற ஒரு தொழில்….
உலகம் பூராவும் பிரசித்திபெற்று ஆதிமனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்அதை சட்டபூர்வமாக்க வேண்டும் என்று பலபேர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்….அந்தத் தொழில் செய்யலாம் இவங்க….” – One India
இப்போது வைகோவின் கூற்றை ஆய்வுக்கு உட்படுத்தலாம்.
இதை ரொம்ப கடுமையான வார்த்தையில் சொல்லனும்னா…..வேற ஒரு தொழில் இருக்கு…..”
பின்பு அவரே அது என்ன தொழில் என்று சொல்லிவிடுகிறார்.
தறி நெசவாக இருக்கலாம்….உழுவதா இருக்கலாம்….உழவு செய்யறதா இருக்கும்….பிசினஸ் பன்றதா இருக்கும்…” என்று பட்டியலிடுகிறார்.
ஆனால் , இது திசை திருப்பும் வேலை . ஏனெனில்,இதில் எந்தத்தொழிலும் தவறானதோ , சமூகத்தால் விமர்சனத்திற்கு உள்ளாக்கப்படுவதும் இல்லை. வைகோ படிக்காமல் இருந்திருந்தால் இந்தத் தொழிலில் ஏதொவொன்றைத்தான் செய்யவேண்டி இருந்திருக்கும் . மேலும் ,
உலகம் பூராவும் பிரசித்திபெற்று ஆதிமனிதன் காலத்தில் இருக்கிற ஒரு தொழில்….அதை சட்டபூர்வமாக்கவேண்டும் என்று பலபேர் கேட்டுக்கொண்டிருக்கிறார்கள்…. அந்தத் தொழிலை செய்யலாம் இவங்க….”
இங்கு திடீரென்று ஒரு உருவகத்தை , அதுவும் புதிரான ஒன்றை வீசி எறிகிறார். அதே சமயம் இந்தப் புதிரை பொதுப்புத்தி ( common sense ) எப்படி வேண்டுமானாலும் புரிந்து கொள்ளலாம்  என்று விட்டுவிடுகிறார்.
அத்தொழில் , அதாவது , சட்டபூர்வமாக ஆக்கவேண்டும் என்கிற அத்தொழில் real-க்குள் மறைந்து விடுகிறது , இந்த real என்பது மன அலசலின் ஒரு தொழில்நுட்ப வார்த்தையாகும். .இதன் பொருள்இது மொழியால் சொல்லமுடியாதது ; அர்த்தப்படுத்தமுடியாதது ; அதை உணரமட்டுமே முடியும் (real-க்கும் யதார்த்தத்திற்கும் எந்த உறவும் இல்லை ).இப்படிப்பட்ட முட்டுச் சந்தில் அந்தப் புதிரை வைத்து விடுகிறார் , மேலும் ,
சுசான்ஸில் ( jouissanse ) ( திருப்தியில் ) பலவகை உண்டு. இங்கு இவர் அடைந்து கொண்டிருக்கும் மற்றமையின்  திருப்தி ( jouissance of the Other ) மொழிக்கு வெளியே நிலவுகிறது. அது பேச முடியாதது, மற்றமையின் திருப்தியை பெண்ணிய சுசான்ஸாக   (feminine jouissance) அடையாளப்படுத்துகிறார் லெக்கான் ; ஆனால் , இந்த திருப்தியானது பெண்களுக்கு மட்டுமே உரியது அல்ல ; அல்லது ஒவ்வொரு பெண்ணும் இத்திருப்தியைக் கொண்டுள்ளனர் என்றும் அர்த்தமல்ல ; இது Real registerக்கும் Imaginary register -க்கும் இடையில் உள்ளது .” ( register என்பது மனப்பதிவு , அனுபவப் பதிவு , Affect -ன் பதிவாகும் )
       இத்திருப்தியை பொருத்தளவில் , புதிரின் பிரதானமான சாட்சியமானது ( mystic’s essential testimony ), அவர்கள் அதை உணர்கிறார்கள் ; ஆனால் ,அதுபற்றி அவர்களுக்கு எதுவும் தெரியாது என்று நுட்பமாக உள்ளது  ( They feel it but they know nothing about it ) .மேலும் பேசும் நபரால் அணுகமுடியாத ( inaccessible ) அல்லது வார்த்தைகளால் வெளிப்படுத்தமுடியாத பேரானந்தமாக  ( bliss ) , மிகச் சிறப்பாக உணரப்பட்ட இந்தத் திருப்தியானது தனக்குத்தானே மூடிக்கொண்டதாக , தனக்குத்தானே அனுபவிக்கின்ற திருப்தியாகும் “.
[ தமிழ் இலக்கியத்தில் பத்ரகிரி சித்தரின்,
தன் கணவன் தன் சுகத்தில் தன் மனம் வேறானதுபோல்
என் கருத்தில் உன் பதத்தை ஏற்றுவது எக்காலம் ? ”
என்று ஏற்கனவே , இங்கேயே உதாரணம் இருந்திருக்கிறது ].
லெக்கான் Jouis –sens என்று எழுதியிருக்கிற அர்த்தமுள்ள திருப்தியானது (  Jouissance of meaning )  ,(வைகோவின் )   கற்பனை ,சிம்பாலிக் register -களின் ( Imaginary and Symbolic register ) குறுக்கு வெட்டுத்  தளத்தில் இருத்தப்பட்டுள்ளது. இது நனவிலித் திருப்தியாகும் (unconscious jouissance ). நனவிலியானது குழூஉக் குறியாகவும், சங்கேதக் குறியாகவும் (code and cipher ) ஏன் நீடிக்கிறது என்ற கேள்விக்கு இந்த திருப்தி விடையளிக்கிறது . இந்த நனவிலித் திருப்தியின் இயக்கு விசை  Lalangue  ஆகும்.
இந்த  Lalangue  -ஆனது நாம் பேசுகின்ற மொழியையும் , நனவிலியில் உள்ள ஆசைகளையும்  (  language we speak and unconscious that desires )  இணக்கிறது “…..
-Jouissance in the cure ; Andre Potsalides and Kareen Ror Malone :The Subject of Lacan-ல்
இப்படி ஆய்வுகள் இருக்கையில் , “ நான் ஒன்றும் தப்பா சொல்லல….அவருக்கு நாதஸ்வரம் வாசிக்கக்கூடிய தொழிலும் தெரியும்என்று சொன்னதை வைத்து குறியீட்டு அர்த்தமாக அவருடைய ஜாதி இது என்று கண்டக்குரல்களும் கிளம்பிவிட்டன. ஆனால் உண்மை வெகு தூரத்தில்.
மொழியியல் ஒரு தொழிலாகும் ( entreprise ) ; அது, இல்லாமையும் ( lack ) , பேச்சில் உள்ள ஓட்டைகள் / விரிசல்களையும் ( holes ) மூடிமறைக்கிற , புறந்தள்ளுகிற , மறுக்கிற ஒரு வழிமுறையாக; பேச்சுமொழி குறித்த அறிவியல்பூர்வமான ஒரு Metalanguage  - உருவாக்க முயற்சிக்கிறது…..எந்தவொன்றும் அனைத்துமானதாகவோ அல்லது முழுமையான தாகவோ இல்லை என்றும் ; மொழியானது முரண்பாடுகளையும் , ஓட்டைகள் / விரிசல்களையும் ( inconsistencies and holes ) குறிப்பிடுகிறது என்று லெக்கானிய பார்வை கூறுகிறது . [ இப்பார்வையின்படி  Lalangue  என்பது “ not-all “ of language என்று ஆகும் ) “ (அதே நூல் ).
        இன்னமும் ...ஆதிமனிதனின் உலகப்பிரசித்திபெற்ற தொழில் “.... வைகோவின் real register- ல் மற்றமையாக உறைந்து , சுசான்ஸை அளித்துக் கொண்டிருக்கிறது எனலாம் .

க.செ
24-4-2016

No comments:

Post a Comment