இன்று வைகுண்ட ஏகாதசி. கிருஷ்ணனை தரிசிக்க மகரிஷிகளும் பக்த கோடிகளும்
துவாரகை நோக்கிச்செல்லும் ரோட்டில் நடைப்பயணம் மேற்கொண்டிருந்தார்கள்.
துவாரகையில்
நாரதன், கிருஷ்ணனின் மனைவியரான பாமா, ருக்மணி ஆகியோர் கூட்டம் சேர்வதைப் பார்த்து
மலைத்து ”
கிருஷ்ண பக்திக்கு அளவேது ! ” என
அவர்களாய்ப் புளகாங்கிதம் அடைந்தனர்.
இதைப்
பார்த்துக் கொண்டிருந்த கிருஷ்ணன் ஒரு நமட்டுச் சிரிப்புடன் சோகமானார். “அய்யோ!
தலைவலி, உயிர்போகுதே” என்றார்.
நாரதனோ “பரந்தாமா!
உனக்கா தலைவலி” என்றார். மருத்துவர்கள் வரிசையாக நின்றனர், தைலங்கள் அளவில்லாமல்
தடவப்பட்டது, தலைவலி போனதாகத் தெரியவில்லை. நேரமோ ஆகிக்கொண்டிருந்தது. பக்தர்
கூட்டம் கூடிக்கொண்டே இருந்தது.
நாரதன்
தலைமையில் ருக்மணி, பாமா சென்று, “பரந்தாமா! இந்தத் தலைவலிக்கு மருந்து என்னவென்று
கட்டாயம் உனக்குத் தெரியும். தயவுசெய்து
சொல்லிவிடு. எங்கிருந்தாலும் நாங்கள் கொண்டுவந்து விடுகிறோம்” என்று கேட்டனர்.
கிருஷ்ணன்,
“ஆம். எனக்குத் தெரியும். அது என் பக்தர்களிடம்தான் இருக்கிறது. ஆனால் அதை அவர்கள்
எனக்குத் தருவார்களா என அஞ்சுகின்றேன்” என்றார்.
நாரதரோ
கதறி அழுதுவிட்டார். “கிருஷ்ணா! உனக்காக என் உயிரையே தரத் தயாராக இருக்கிறேன்”
என்றார். பாமாவும் ருக்மணியும் கண்ணீர் விட்டனர். “சாமி ! என்ன இப்படிச்
சொல்லிவிட்டீர்கள்? என்ன வேண்டும் கேளுங்கள்” கோரசாகக் குரல் கேட்டது. “என்ன வேண்டும்,
சொல்லுங்கள் ஆண்டவரே” என்றனர்.
ஸ்ரீகிருஷ்ணர்,
“மகிழ்ச்சி. உண்மையான பக்தியுள்ள, என்மீது பக்தியுள்ள பக்தனின் பாதத்துளிதான் அந்த
மருந்து. அந்தப் பாதத்தூசியை எடுத்துவந்து
என் நெற்றியில் தடவினால் என் தலைவலி போய்விடும்” என்றார்.
இதைக்கேட்டு
அனைவரும் திடுக்கிட்டனர். “நாராயணா! நாராயணா!” என்றார் நாரதன். “என் பாதத்துளியை
பகவான் மீது தடவி அந்தப் பாவத்தைச் சுமக்க
நான் தயாராக இல்லை” என்றார்.
மனைவியர்
இருவரும், “நாரதா! நீரோ பக்தர் மட்டும்தான். நாங்கள் அவரின் பத்தினிகள். நாங்கள்
அந்தப் பாவகாரியத்தைச் செய்ய முடியுமா” என்றனர்.
எல்லோரும்
ஒருவர் முகத்தைப் பார்க்க அந்தப் பார்வை நாடு நகரமெங்கும் நகர்ந்து சென்றது.
நேரமாகிக்கொண்டிருந்தது. ஏகாதசியும் நெருங்கிவிட்டது. உண்மையான பக்தனின் பாதத்துளி
கிடைத்தபாடில்லை.
ஸ்ரீகிருஷ்ணனிடம் நாரதர், “சாமி! நேரமாகிறது.
என்ன செய்யலாம்” என்றார். கிருஷ்ணனோ “நாரதா! பிருந்தாவனம் சென்று கோபியர்களிடம்
கேட்டுப்பார், ஒருவேளை கிடைக்கலாம்” என்றார்.
உடனே
நாரதர் பிருந்தாவனம் சென்றார். கிருஷ்ணனுக்கு வந்துள்ள பிணியையும் அதற்கான
மருந்தையும் கோபியர்களிடம் சொன்னார்.
கோபியரோ
நாரதரிடம் கோபித்துக் கொண்டனர். “எங்களோடு கிருஷ்ணர் இருந்தவரை எந்தநோயும் வந்ததில்லை. நீங்களெல்லாம் அவரைச் சரியாகக் கவனிக்கவில்லை, அதனால்தான்
நோய்” என்றனர்.
அந்தப்பெண்,
“எங்களில் சிறந்த பக்தை யாரென்று சோதிக்க நேரமில்லை” என்று கூறிக் கொண்டே கீழே ஒரு
துணியை விரித்தாள். எல்லாப் பெண்களையும் அழைத்து “உங்கள் பாதத்தின் துளி இந்தத்
துணியில் படுமாறு ஒவ்வொருவரும் நடந்து செல்லுங்கள்” என்றாள்.
அவள் மேலும்,
“கிருஷ்ணன் குணமானால் போதும். எங்களுக்குப் பாவம்
வந்து சேர்ந்தாலும், நரகம் கிடைத்தாலும் பரவாயில்லை” என்று பாதத்துளிகளின் மூட்டையைக் கட்டி
நாரதரிடம் கொடுத்தார்.
நாரதர்
உடனே துவாரகை வந்து கிருஷ்ணனிடம் நடந்ததெல்லாம் கூறி பாதத்துளியின் மூட்டையைக்
காட்டினார்.
கிருஷ்ணன்
மூட்டையைப் பிரித்து பிருந்தாவனப் பெண்களின் கால்தூசியை தனது நெற்றியில் பூசிக்
கொண்டார். கிருஷ்ணனுக்குத் தலைவலி பறந்துவிட்டது.
நாரதர்
கைகூப்பி, கண்ணீர் மல்கி, “விளங்கிவிட்டது. எங்களை மன்னித்துக்கொள்ளுங்கள்.
உண்மையான பக்தியின் லட்சணம் என்னவென்றுபுரிந்துவிட்டது” என்றார்.
ஒரு புராணக் கதையை / Myth–ஐ,
நாட்டுப்புறவியல் கதையாடல்களை மனஅலசல் கருவியால் திறக்கமுடியுமா, வாசிக்கமுடியுமா என்ற
சோதனை ஓட்டம்தான் இது.
இம்முயற்சி (உளவியல் ஆய்வு) இப்போது நடைபெறத்தான் செய்கிறது. தமிழில்
மானுடவியல் மூலம் Myth-ஐ கள ஆய்வு செய்திருக்கிறார்கள்.
பேராசிரியர் பக்தவத்சல பாரதியால்
நரசிம்ம அவதாரம் பற்றி மானுடவியல் ஆய்வு ஒன்று “புதிய ஆராய்ச்சியில்” வெளிவந்திருக்கிறது. இன்னும் பல
முயற்சிகள், ஆய்வு நடந்திருக்கலாம்.
இவைகளைத் தொடர்ந்து ஒரு போக்காக ஆய்வுக்களம்
இருப்பதாகத் தெரியவில்லை. (மானுடவியலாளர் லெவிஸ்ட்ராஸ் பற்றியெல்லாம் வெகுஜனப்
பத்திரிக்கைகள் வெளியிட்டுள்ளன).
இங்கு மனஅலசல் ஆய்வுக்கு மேலே கண்ட
கதைக்கு தலைப்பு என்ன? - கடைசியில் கூட வைக்கலாம்.
கிருஷ்ணன் அவதாரமாக-மனுசனாக – சித்தரிக்கும்
கதையாடலில், மிகச் சின்ன கதை இது. ‘மகாபாரதம்’
கதைகளின் குவியல். இது அந்தக்
குவியலிலிருந்து ஒரு இனுக்கு.
கிருஷ்ணனுக்குத் தலைவலி என்பதே நம்பக் கூடியதாய்
இல்லை. பக்தர்களுக்கு. ஏன்? பகவான் ஆயிற்றே!
பின் வலியால் துடிப்பது? அதுதான்
பக்தர்களின் பதட்டத்திற்குக் (anxiety) காரணம்.
தலைவலி பகவானுக்கு. மருந்து
என்னெவென்று அனைவருக்கும் தெரியும்.
ஆனாலும் பகவானுக்கு உதவ யாருமில்லை,
அவரின் பத்தினிகள் உட்பட.
பாவம் பரமாத்மா. அவர் கூடாரத்தில்
எல்லோரும் இருக்கிறார்கள். ஆனாலும் கிருஷ்ணர் கண்களுக்கு அது No Mans land ஆக இருக்கிறது.
கால் தூசி பெறமாட்டாய். இதுஒரு வசைச் சொல்லாகத் தமிழில்
உள்ளது. ஆனால் அதுதான் இங்கு பிரச்சனை.
பிரச்சனை கால்தூசி என்றவுடன், பகவானின்
நெற்றிக்கு என்றவுடன், கொடுக்க ஆசைப்படத் தயாராக இருக்கும் நாரதன் உட்பட
அனைவருக்கும் வருவது காயடிப்பு பயம் (castration fear). இந்தக் காயடிப்புச் சிக்கலை மீறினால்?...
பதில் “பாவம்” வரும் (நாரதர் தரும் பதில், பத்தினிகளும்தான்). அதைத்
தொடர்ந்து ‘நரகம்’.
’பாவம்’, ‘நரகம்’ அச்சத்திற்குரியது. Taboo. இது Oedipal law.
அதாவது சனாதனம்.
ஒருவனின் பிறப்புக்கு முன் மொழியில் கட்டப்பட்ட கலாச்சாரச் சட்டம்; அந்தச் சட்ட மனத்தால் ஆளப்படுகிறான்
மனிதன்.
யார் இயற்றியது; கிருஷ்ணனும், அவர் சூரியனுக்குச் சொல்ல.... இப்படியே
மனுவிடம் சென்று, பின் மனுநீதியாகிவிட்டது. அதாவது, அத்வைதத்திற்கான ஈடிபலாக மனு
உள்ளது எனலாம்.
அது மொழியில், கலாச்சாரத்தில்
இருப்பதால் ’பாவம்’ , ’நரகம்’ என்ற குறிப்பான்கள் மக்களைப் பார்த்து
கட்டளை இட்டுக் கொண்டே இருக்கும். இதை அகவயப்படுத்திய தன்னிலைகள் சட்டத்தை,
கலாச்சாரத்தை மீற முடியாது,
ஆகையால் கிருஷ்ணன் பலமான Paradox-ல் சிக்கிவிட்டான்.
அவன் எய்த அம்பு அவனுக்கே திரும்பி வருகிறது.
கிருஷ்ணன் குருஷேத்திரத்தை நடத்தியவனாயிற்றே.
தன்னை நோக்கி வந்த ’பாவம்’ ’நரகம்’ என்ற பக்தர்களின் பயத்தை பிருந்தாவன்
நோக்கி கோபியர்களிடம் அனுப்பிவிட்டான்.
கோபியர்கள் பிரச்சனையை கால் வினாடியில்
தீர்த்துவிட்டார்கள்.
கிருஷ்ணரின் மண்டைவலியும் போயே விட்டது.
நாரதனுக்கு பக்தி என்றால் என்னவென்று தெரிந்துவிட்டது.
அன்று கிருஷ்ணதாசர் என்ற சமூகக்
குழுவினருக்கான அனுபவமாயிற்று இக்கதை.
அனைவருக்கும் (தான்). பக்தி என்பது
என்னவென்றால் அனைத்தையும் கடந்து- பாவம், புண்ணியம்,சரி, தப்பு, நரகம்,
சுவர்க்கம்-சென்றுவிடுவது.
கிருஷ்ணன் உணர்த்துவது இதுதான்.
DR.சுதிர்காக்கர் மேற்கத்தியனுக்கும், கிழக்கியத்தியனுக்கும்
வித்தியாசமுண்டுஎன்பார். மேற்கத்தியனுக்கு ’ I’ , “நான்” என்பது நான்தான்; கிழக்கிந்தியனுக்கு ‘I’ , ‘நான்’ என்பது அவன், அவன் குடும்பம், அவனின் கடவுள். Post modern காலத்தில் மெத்தப் படித்தவர்களிடம் இது
தேய்பிறையாய் இருக்கிறது.
அதாவது இங்குள்ள தன்னிலை கடவுளை தன்
அடையாளமாக்கிக் கொள்கிறது. இது மேற்கில் அரிது. அதாவது கடவுள் புறப்பொருள் அல்ல.
அதுவும் தன்னிலைதான் என்ற நிலைப்பாடு. [அகவயப்பட்டதைப் பொருத்தே இது நடைபெறுகிறது].
இக்கதையில் இடம்பெற்ற பிருந்தாவனத்தின்
கோபியர்களின் அக உலகம் (internal world) கட்டப்பட்டிருந்த வழியாகவே
கிருஷ்ணனிடம் உறவு வைத்தவர்கள்.
தனக்கான தலைவலிக்கு கால்தூசி மருந்தை
இட்டுக்கொள்ளும் நிலைப்பபாடு இருப்பதால் ‘பாவம்’ ‘நரகம்’ என்ற காயடிப்பு அச்சதிற்கு (castration fear) உள்ளாகவில்லை.
ஆதலால் அவர்கள் ஒரு Imaginary phallus-ஐ கிருஷ்ணனுக்கு வழங்கத் தயாராகிவிட்டனர்.கிருஷ்ணனின்
ஆசைப்பொருள் அது.
கோபியர்களின் நம்பிக்கை ‘நான்‘-ஐ கடந்து
அவர்களின் ஆசைப் பொருளை (love
object) கடந்து செல்வதால் நடைமுறைவாழ்வின்
பாவம், நரகம், புண்ணியம், ஒழுங்கு கடந்த நிலை அது என வாசிக்கத் தோன்றுகிறது.
இறுதியாக கிருஷ்ணன் மண்டைவலி என்று
கூறியது பொய். உன்மையான பக்தி என்ன என்பதை எல்லோருக்கும் காட்டவேண்டும் என்ற
கடவுளின் ஆசையே, அதாவது Imaginary
phallus. ஒரு கற்பித ஆசை. அவனுடைய
Need அல்ல. அதனால்தான் அந்த ஆவலை கால்தூசு
மூலம் கோபியர் நிறைவேற்றிவிட்டனர்.
பி.கு. [கடவுள் இருக்கிறாரா என்ற
கேள்வி உடனே தலை காட்டும். மனஅலசலில் கடவுள் ஒரு ந்ம்பிக்கை, நம்புபவர்களுக்கு.
அவ்வளவே. நம்பிக்கை என்றாகிவிட்டபிறகு அதன் இருப்பைப் பற்றிய கேள்விக்கு அவசியம்
என்ன உள்ளது. இங்கு மொழியில் உள்ள (Myth-ஐ)
கதையாடலை வாசிப்புக்கு மன அலசல் உட்படுத்தியிருக்கிறது அவ்வளவே].
இப்போது மற்றொரு ஞாபகம் வருதே. சிவனின்
கண்ணில் அடையாளத்திற்காக
செருப்பை வைத்தவன் கதை அது.
தலைப்பு: கிருஷ்ணனும் கால்தூசும்.
க.
செ
மற்றமை
— 5-வது இதழுக்காக