27 May 2019

விழித்துக்கொள்வோம் !!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சுயமோகப்பித்தால் வலிமையான ஐக்கிய முன்னணியைக் கட்டமுடியாததால், மக்கள் அகவய நிலைப்பாட்டுடன் வாக்களித்து தாமரையை உயர்த்திப்பிடித்து விட்டனர் (குறிப்பாக வட இந்தியாவில் ).பழைய பாட்டு ( முழக்கம் ) ஒன்று நினைவுக்கு வருகிறது..” வடக்கு வாழ்கிறது “….
பிரதமர் மோடியின் தற்போதைய மனநிலையை ப்ராய்டின் மொழியில் சொன்னால்  ”Oceanic Feeling ”ல் மோடி இருக்கிறார் எனலாம்.
       ” ஓசியானிக் ஃபீலிங் என்பது எல்லையற்ற சுயமோகத்தை மீண்டும் கொண்டுவருவது போன்ற……ஏதோவொன்றைத் தேடுகின்ற எண்ணமாகும் / உணர்வாகும்”                                                                                       -கென்பெர்க்.(Kernberg)
       இந்த ஓசியானிக் ஃபீலிங் நிலையை முனைவர் கென்பெர்க் சுயமோகப் பரவசம்             ( Narcissistic Elation ) என்று மொழிந்தார்..
இந்த மனநிலையின் ஒரு பக்கம் சம்பந்தப்பட்ட நபருக்கு தேவைகள் அல்லது ஆசைகள் இல்லாத பரிபூரணமான சமநிலை மாறாத் தன்மையைக் குறிப்பிடுகிறது. மற்றொருபுறம்….          ” தன்னைத்தானே உயர்வாக , மாபெரும் ஆளுமையாக எண்ணிக்கொள்ளும் மனநிலையும் உண்டு” என்கிறார் லக்கான்.
………” இந்த தன்னை மறந்த நிலையானது ,மிகவும் பொய்யான கோரிக்கைகளை ( the most  false of demands ) உருவாக்குகிறது “ ( அதே கட்டுரை )
இப்படி தன்னிலை இருக்க , 24-5-2019 காலையில் மோடியின் கூற்றாக , தொலைக்காட்சியில் எழுத்தாக ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு சிறு துண்டுச் செய்தி:  “ புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் வாக்களித்துள்ளனர் “ –மோடி என்கிறது. இதை ஒரு வார்த்தையாக எண்ணினால் – புதிய இந்தியாவை - ,முட்டாள் பட்டத்தை முழுமையாக, அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஏனெனில், புதிய இந்தியா என்ற சொற்கள் ஒரு கருத்து—கருத்தியல்- ( Ideology ). இது ஒரு கருவியாக இனிச் செயல்படும். இந்தக் கருத்தியலானது மேலாண்மை உறவுக்கான அடித்தளமாகும்.
தேர்தல் காலக் கட்டத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதாகத் தெரியவில்லை.
மிகப் பெரிய வெற்றிப் பரவசத்தில், புதிய மந்திரிசபைக்கான பிரதம மந்திரி பதவி ஏற்காமலேயே “ புதிய இந்தியா “ என்ற கருத்தாடல் சமூக அரசியல் தளத்தில் பரப்புரையாக வெளிவந்து விட்டது .
இந்த “ புதிய “ இந்தியா ஒருபக்கம் இருக்கட்டும் .” பழைய ” இந்தியா என்னவாயிற்று? பிரான்சின் ரஃபேல் போர் விமானப் பிரச்சினையில் தார்மீக நெறிகளுக்கு உட்பட்டவர்கள் யார்?யார்?.
பழைய இந்தியாவின் வங்கிகளில் கடன் என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடித்தவர்களின் நிலை என்னவாயிற்று?
எண்ணெய்க் கிணறுக்காக நெல் வயல்களை பாலையாக்கும் விவசாயிகள் / மக்கள் விரோதத் திட்டம் என்னவாயிற்று? 
தூத்துக்குடி ஸ்டெர்லைட்  துப்பாக்கிச் சூடும், அந்த ஆலையை நிரந்திரமாக மூடுவதும் என்னவாயிற்று ?
மோட்டார் கார் தொழிலுக்கு அனுசரனையாக எட்டுவழிச் சாலை, நான்குவழிச் சாலை எனும் பெயரில் நஞ்சை நிலங்களை பாலையாக்கும் திட்டங்கள் என்னவாயிற்று?
ஓசியானிக் பிரதமர் மோடிக்கு இனியாகும் இந்தியத் திட்டத்தில் நண்பர்கள் மக்களா….அம்பானிகளா ?  
புதிய பிரதமரிடம் ஒரு வேண்டுகோள் ; புதிய இந்தியத் திட்டத்தை முதலில் வல்லுநர்கள் கையில் கொடுப்பதற்கு முன் மக்கள் மன்றத்தில் வைத்து கருத்துக் கேட்கும் ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற மக்கள் குரல் சும்மா அதிரவைக்குமாறு செயல்பட்டால்தான் , அப்போதுதான் “ நவ இந்தியாவின் “ அங்கலட்சனத்தை அறிந்து / புரிந்து கொள்ளமுடியும்.
க.செ                                                          
  

20 May 2019

பிரதமரும் பிரக்யாசிங் தாக்குரும்

கோட்சே ஒரு தேசபக்தர் “ .சொன்னவர் பிரக்யா சிங் தாக்குர் என்ற சாத்வி.  போபால் பாராளுமன்றத் தொகுதியின் பாஜக வேட்பாளர். இவர் “ சுதந்திர இந்தியாவின் முதல் பயங்கரவாதி ஒரு ஹிந்து ; அவரது பெயர் கோட்சே “ என்ற கூற்றுக்கு மறுப்பாக “ கோட்சே ஒரு தேபக்தர் “ என்றார்.
இவரின் கூற்றை தயவு தாட்சண்யமின்றி மறுக்கிறார் ஒரு பாஜகக்காரர்.             அவர் பிரதமர் மோடி.
மகாத்மா காந்தி அல்லது நாதுராம் கோட்சே பற்றி பலவித கருத்துக்கள் உலவுகின்றன . ஆனால், பிரக்யா சிங் தெரிவித்துள்ள கருத்தானது மிகவும் மோசமான ஒன்று. எனவே, இதுபோன்ற செயல்களில் ஈடுபடுவோர், அது குறித்து நூறுமுறை சிந்திக்க வேண்டும்.       
தனது கருத்துக்காக பிரக்யா மன்னிப்பு கோரியுள்ளார். எனினும்,  மகாத்மா காந்தியை சுட்டுக் கொன்ற கோட்சேவை தேசபக்தர் எனக்கூறிய அவரை, என்னால் மனதார மன்னிக்க முடியாது”       என்றார் மோடி. -   இந்து தமிழ் மே 18 ,2019     
பிரதமர் மோடியின் இந்தக்கூற்று உண்மையானதுதானா? என்று சந்தேகப்பட  வேண்டியுள்ளது.
சமீபத்திய முகநூல் மற்றும் யூட்யுப் பக்கங்களில் கோட்சேவின் அஸ்தி கரைக்கப்படாமல் (அவரது வேண்டுகோள்படி) பூனாவில் ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்தில் இருப்பதாக செய்திகள் பரவியுள்ளது ( www.youtube.co/watch? )


கோட்சேவின் வேண்டுகோள் “ சிந்து நதி என்று பாரதத்துடன் இணைகிறதோ அன்றுதான் என் அஸ்தி கரைக்கப்படவேண்டும் “ என்பதுதான் விஷேசம்.
மோடி என்ற டீ பையன் ஆர்.எஸ்.எஸ்-ன் தீவிர உறுப்பினன் என்ற அந்தஸ்தில் இருந்து பொதுவாழ்வை துவக்கியவர்.அன்றே ஆர்.எஸ்.எஸ்-ல் கோட்சே அஸ்தி பற்றியும், அவரின் வேண்டுகோள் பற்றியும் கேள்வி கிளப்பியிருப்பார் தானே ( ஒரு சந்தேகமாகக்கூட அது இருக்கலாமே )
மோடியின் வரலாற்றில் இது இடம் பெற்றிருக்குமா ? அப்படி ஒருக்கால் இல்லாவிட்டால் ,இப்போதைய மேற்கண்ட கருத்தாடலை எப்படி ஏற்பது?
அதாவது, ஆர்.எஸ்.எஸ்.காரராக இருந்து கோட்சேவை ஏற்பது.
பிரதமாரக இருப்பதால் ( தேர்தல் நேரம் ) கோட்சே தேசபக்தர் என்ற கூற்றை மறுப்பது அவசியமாக உள்ளது.
தேசத்தந்தை என்று கூறப்பட்டவரை சுட்ட கோட்சேயை தேசபக்தர் என்று பிரதமர் கூறினால் என்னவெல்லாம் நடக்கும். மனக்கொந்தளிப்புக்கு உள்ளாக மாட்டார்களா கட்சிகளும் மக்களும்.
ஆகையால்,கோட்சேவின் தேசபக்த வேசத்தை மோடி கலைத்துவிட்டார் என்றே தோன்றுகிறது. சாத்வி / சந்நியாசினியை மறுத்தாலும் மற்றொருபுறம் அவரை பிரதமர் தற்காக்கின்றார் என்பதே உண்மை.
சந்நியாசினி ஆர்.எஸ்.எஸ்-க்கு புறம்பான கருத்து எதையும் சொல்லவில்லை.
ஆனால் உண்மைக்குப் புறம்பானதை மறுக்கும் வக்கிரம் ( perversion  ), வக்கிர சிந்தனையின் வெளிப்பாடுதான் அது. மகாத்மா என்று அழைக்கப்பட்ட ஒரு முதியவரை ஈவு இரக்கமின்றி கொன்றவனை தேசபக்தன் என்றால்…… எப்படிப் போகிறது வக்கிரம்.
சந்தனக்கடத்தல் வீரப்பன் சந்தன மரங்களை ஆயிரக்கணக்கில் தருசாக்கியதோடு பல காவலர்களுக்கு எமனாகவும் இருந்தவர். அவரின் சொந்த ஊரில் தியாகி வீரப்பன் என்று ஆளுயர சிலை வைப்பதுதான் வீரத்தை மதிப்பதாகும் என்று கூறினால் எப்படியிருக்கும்..
ஏன் வக்கிரம் என்று சொல்லப்பட்டது? ஆண் / பெண்-க்கு உடலியல் உறுப்பு அடையாளங்கள் வேறு வேறு. பெண் என்பவர் பெண்தான்; அவளுக்கு ஆண் உறுப்பு இருக்காது என்கிற உண்மை தெரியும். ஆனால் உண்மையை ஒத்துக்கொள்ள மனம்வராது வக்கிரத்திற்கு. ஆகவே, மனிதர்கள் எல்லோருக்கும் ஆண் உறுப்பு உண்டு என்ற ஆசையும் /வீம்பும் புடைத்து யதார்த்தத்திற்கு வருவதுதான் வக்கிரம்.
தேசமே விரல் நீட்டி கோட்சேயை கொலைகாரன் என்றபோது ரகசியமாக பரவசப்பட்ட ஜனசங்கத்தின் வாரிசுதான் இந்த சன்னியாசினி.
கோட்சே தேசபக்தர் என்பது அவரின் கண்டுபிடிப்பல்ல.அவரின் சமூக, அரசியல் கட்டமைப்பில் உன்னதம் / லட்சியம் ( ideal ) அது. அதுதான் புனிதரின் அஸ்தி காத்திருக்கிறது இன்றுவரை. இந்த இடத்திற்கு சன்னியாசினியின் வரலாற்றை பின்னனிக்கு கொண்டுசெல்வதின் மூலம் அம்மையாரைக் காப்பாற்றுகிறார் ஆர்.எஸ்.எஸ் மோடி.
தன் கட்சிக்காரரால் , சன்னியாசினியால், பாராளுமன்ற வேட்பாளரால் புனிதர் கோட்சே என்று அழைக்கப்பட்டது பிரதமர் மோடிக்கு மனப்பதட்டத்தை  (anxiety) கொடுத்துவிட்டது; மேலும்,  காயடிப்பு அச்சம் ( castration fear ) தன் தலைமீது தொங்கும் கத்தியாக ( கற்பனையாக ) ஆடிக்கொண்டிருப்பதை அவரால்  உணர முடியும். அஸ்திவாரமே ( பிரதமர் என்பதுவே ) ஆடிப்போகிற காயடிப்பு பயமாகும் அது. அதாவது, இதை மன அலசலில் Bedrock of castration என்பார் Fink . பலவகை குல்லாய் அணிவதில் கில்லாடியான மோடி, இப்போது காந்தி பக்தர் குல்லாயுடன் உலாவருகிறார்.
க.செ

15 May 2019

100 தோப்புக் கரணம் போடத்தயரா?


பாமரர்களாகிய நாம் பாவம். மூலதனக்காரர்களின் பாராளுமன்றத்திற்கான 2019 தேர்தலில் முன்னணிக் கட்சிக்காரர்களின் நடத்தை / பேச்சு டாஸ்மார்க் அந்தஸ்தைக்கூட ஆட்டம்கான வைத்துவிட்டது.
       கட்டுரையின் தலைப்பு தினமலர் மே 10, 2019- ன் கொடையாகும். இந்த உரையாடலின் பெரியதனக்காரர்கள் ( Owners)  பிரதமர் மோடியும், மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆவார்கள்.
       ” நிலக்கரிச் சுரங்க ஊழலில் தொடர்பிருப்பதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்" 
[ இவர்மேல் உள்ள இந்தியத் துணைக்கண்டம் அளவிற்கான ஊழல் குற்றச்சாட்டு சந்தி சிரிக்கிறது, முடைநாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.அதுவும் அம்பானிக்கு தரகு வேலையாம்- அதற்கான பதில்தான் தலைப்பு ]
       ” இந்தக்குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் 100 முறை தோ[ப்புக்கரணம் போட மோடி தயாரா? “ இது மம்தா பானர்ஜி.
       பெரியதனக்காரர்களின் பஞ்சாயத்து மக்களுக்கு முன்னுதாரணம்தானே. இப்படி இந்தியா முழுக்கக் கவிச்சி வீச எங்கு கற்றாரோ மோடி.
       மோடி உண்மையில் பாராளுமன்றத்தை மதிக்கிறாரா ? மதித்தாரா? எத்தனைநாள் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விவாதித்தார் ? பூஜ்ஜியம்தானே . நிரூபர்களுடனான பேட்டி எதையும் இதுவரை கொடுத்ததில்லை மோடி.
       இவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு “ பொறுப்பில்லாத பிரதமர் நரேந்திர மோடி” என்கிறார். மேலும், …… நாட்டிலேயே முதல்முறையாக உச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த நான்கு நீதிபதிகள் “ நாட்டில் ஜனநாயகம் மிகவும் இக்கட்டான சூழலை நோக்கிச் செல்கிறது  என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர் “( மே 10. 2019 தினமலர்  )
     இங்கு மோடி அனுதாபிகளும் ,மக்களும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். சொன்னது எதிர்க்கட்சியினர் அல்ல; எரிந்த கச்சியினரும் அல்ல..மிகமிக உச்சாணிக் கொம்பில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்; அதுவும் நான்குபேர்.இதை காத்திரமான குற்றச்சாட்டாக பாவிக்கவேண்டாமா ? மூலதனப் பாராளுமன்றம் நிலநடுக்கத்தில் இருக்கிறது என்றுதானே இதற்குப் பொருள்.                           
 யார் இதுபற்றி அக்கறையோடு விவாதிக்கிறார்கள் பொதுவெளியில்?  ஊடகங்களின் கவனம் போதுமானதாக இருந்ததா ? இருக்கிறதா?
       பாராளுமன்றத் தேர்தல் இன்னும் முடியவில்லை. கடைசி நாளுக்காக காத்திருக்கிறது இந்தியா. அத்தோடு தேர்தல் முடிவுகள் வெளியாக வேண்டும் .அப்புறம் ஆட்சி அமைக்கும் பணி துவங்கும், இப்படிச் சூழல் இருக்கையில் மத்திய அரசு ஒரு பெரிய வெடியை வெடித்திருக்கிறது..
       அதாவது , தூத்துக்குடி புகழ் ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தாவுக்கு ஹைட்ரோகார்பன் ( திரவ வாயு ) எடுக்க புதுச்சேரி ,விழுப்புரம் மாவட்டத்தில் இடம் அனுமதித்திருக்கிறது மத்திய அரசு. ஓ.என்.ஜி.சி ( பொதுத்துறை ) ,அமெரிக்க எண்ணெய் நிறுவனம் ஆசியோடு மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.
       அனுமதி வழங்கிய நேரம் முக்கியமானது. இந்தியாவின் கவனம் தேர்தல் முடிவு என்றிருக்கிற காலத்தில், சந்தடிசாக்கில் மூலதன அதிகாரத்தின் விஸ்தரிப்புக்கு இடம் கொடுத்திருக்கிறது.
       இந்த எண்ணெய் கிணறுக்கு மக்களிடையே ,பிரதான எதிர்கட்சிகளிடையே எதிர்ப்பு உள்ளது. காவிரி டெல்டாப் பிரதேசம் பாலைவனமாகிவிடும் என்ற அச்சம் நிலவிவரும் வேளையில் சப்தமில்லாமல் அனுமதி வழங்கி,விவசாயிகளுக்கு மூலதன அதிகாரமும் அரசாங்கமும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது..
       அதிகார மமதைக்கு “ சமூக அறிவுத்திறன் ( social intelligence ) எங்கே போயிற்று ? அதாவது, பிறர் உணர்வுகளை புரிந்துகொண்டு, தன்னை அவற்றுடன் அடையாளப் படுத்திக் கொண்டு / இனம் கண்டுகொண்டு ( empathy ) மனித உறவுகளில் புத்திசாலித்தனத்துடன் நடக்கும் திறன் எங்கே போயிற்று ?” ( .Emotional intelligence ;Thorndike )
       எண்ணெய் கிணறுகளுக்கு மத்திய அரசு அனுமதி என்றவுடன் , ஹைட்ரோ கார்பன் என்ற பெயர்ச் சொல்லை கேட்டவுடனே விவசாயிகளின் நனவிலியில் ( unconscious ) மனப்பாதிப்பை (affect) ஏற்படுத்தியிருக்குமே ! என்கிறது உளவியல். நனவிலி, மனவெழுச்சியை (emotion ) இதரராக (other) கட்டமைத்திருக்குமே !. அவர்களின் மனப்பாதிப்பு (affect) எதை எதையெல்லாம் எதிர்பார்க்கும் (anticipate); சந்தேகம், பயம், கெஞ்சல் (solicitting ) போன்ற மனப்பாதிப்பு  / மனப்பிராந்திக்கு ஆட்படுவார்களே ! கலாச்சார ரீதியில் எதை எதையெல்லாம் ஏற்பது / விடுவது என்ற ஆழ்மன விவகாரங்கள் துவங்கிவிடுமே !
       ஒருவேளை விவசாயம், விவசாயிகளின் வேதனை, துன்பம் , துயரம் போன்றவை மூலதனத்திற்கும், அரசாங்கத்திற்கும் பெரு மகிழ்ச்சியாக உள்ளதோ?.
       மக்களின் மனஉடல் ஆரோக்கியம் பற்றி மூலதன அதிகாரத்திற்கு அக்கறை இருக்காது. வாஸ்தவம். ஆனால், அரசாங்கம் , ஐஏஎஸ் போன்ற படிப்பாளிகள் , வல்லுனர்களிடம் மக்கள் மீது அக்கறை , பரிவு இருந்திருந்தால் ,முதலில் மக்களிடம் பேசி ,அவர்களின் எலும்பு மஜ்ஜையில் உள்ள பயம் , கூச்சம் ,சந்தேகங்களைப் போக்கி ,அவர்களுக்குப் புரியவைத்து ,மன ஆரோக்கியத்திற்கு அடிகோலியபின் அனுமதித்திருக்கலாமே.
       இறுதியாக ஒரு சந்தேகம் .” நான் சிறுவனாக இருந்தபோது டீக்கடையில் இருந்திருக்கிறேன் “ என்று சொன்னது உண்மைதானா ? அந்தப் பையனுக்கா இன்று மக்கள் மீதான நடவடிக்கையில் நெறி ( Ethics ) இல்லை; மக்கள்மீது தயை , பரிவு இல்லையே  அவரிடம் . எது உண்மை ?
ஓட்டுக்காக வித விதமாக குள்ளாய் அணிந்து, கூலைக் கும்பிடு போட்டு , ராப்பிச்சைக்காரனாக காட்சி அளிக்கத் தெரிந்த நுட்பம் , மக்களின் சேவையில் இல்லையே !  . மூலதனத்திற்கு சேவை செய்வதேன் ?அதிகாரம், பணம் இன்ன பிறவற்றிற்காகவா இவைகள் ?
க.செ

3 May 2019

நவீன அரசியல் கலாச்சாரம்


நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தல், தமிழகச் சட்டமன்றத்திற்கான தேர்தல்களில் மையப்பொருளாக,முக்கிய அரசியல் ,பொருளாதாரப் பிரச்சினைகள் என்னென்னவாக இருந்தன? என்று ஞாபகத்தை திருகினால் , அங்கொன்றும் இங்கொன்றுமாக சில வெளிவருகின்றன.
ஆனால் , தலைப்புச் செய்திகளாக அனுதினமும் இடம் பிடித்தது எது, எது என்றால்  , உணர்ச்சிகளை மையமாகக்கொண்டு குற்றச்சாட்டுகளும் ,பதிலுக்கு உணர்ச்சிமயமான குற்றச்சாட்டுகளே.
[ பொள்ளாச்சி பிரச்சினைக்கு எந்தக் கட்சியும் அரசியல் போராட்டம் தெருவில் நடத்தவில்லை.மாறாக, ஊடகங்களில் காட்சி அளிப்பதோடு சரி.அவர்களுக்கு அது குற்றப் பிரச்சினையாக மட்டுமே தெரிகிறது }
உதாரணமாக,ராகுலின் மோடிமீதான உணர்ச்சிகரமான குற்றச்சாட்டுகள். அதற்கான பதிலோ / விடையோ இல்லாமல், மோடி தன் உடல் மீதான சுய ஆராதனையோடு ராகுல் மீது வாரியிறைக்கும் உணர்ச்சிமயமான குற்றச்சாட்டுகள் கேள்விக்குப் பதிலாக தரப்பட்டது.
தமிழக அரசியலில் “ திரையில்” ஸ்டாலின் எடப்பாடி மீது விடாது நீள நீளமான – பொள்ளாச்சி பிரச்சினை உட்பட- உணர்ச்சிமயமான விமர்சனங்கள்;
பதிலாக, எட்டப்பர் ( எடப்பாடி ) ஸ்டாலின்மீது உணர்ச்சிகரமான , தனிமனிதர் மீதான பாய்ச்சல் பதிலாக வீசப்பட்டது.
சமூக அரசியல் பிரச்சினைகள் , மலைக்கிராமங்களில் சாலை வசதி இல்லாமல்         ( 21-ம் நூற்றாண்டில் கூட) நகரங்களுக்கு எட்டுவழிப்பாதை ,ஆறுவழிப்பாதை , நான்கு வழிப்பாதை கேட்கிறது. வாக்குச்சீட்டு எந்திரங்கள் கழுதை மீதேற்றி ( சாலை வசதி இல்லாததால் ) ஊர்வலம் போவது காட்சியாகக் காட்டப்பட்டது.
குடிநீருக்காக காலிக்குடங்களோடு இந்தக் கொடூரமான வெயிலில் வீதி வீதியாக பெண்கள் அலைமோதுவதும் ; வியாபாரிகள் குடம் தண்ணீர் ரூபாய் 10 வரைகூட விற்று ஆதாயம் தேடும் அவலம் ( பெண்களுக்கான ஒதுக்கீடு எப்போது )
இது ஒவ்வொரு வெயில் காலத்திலும் திரும்பத் திரும்ப யதார்த்தமாகும் பிரச்சினை. என்ன செய்யப்போகிறார்கள் பருண்மையாக ; அதற்கான திட்டம் என்ன, எவ்வளவு காலத்தில்?
மோடி அரசின் சூப்பர் ஹைவேயால் ஆயிரக்கணக்கான மரங்களும் ,எண்ணற்ற செடிகொடிகளும் வாழ்விழந்தன ,கொல்லப்பட்டன ( கொள்ளை லாபம் ).இந்த இழப்புகளை எப்போது ,யாரால் சீரமைக்கப் போகிறார்கள்? திட்டமென்ன ,தீர்மானமென்ன?
முக்கியமாக ஒன்றைக் கவனிக்கவேண்டும் . சமூக ஊடகங்கள் அரசியல்வாதிகளையும் மிஞ்சி ,உணர்ச்சிமயமான தலைப்பில் வாதப் பிரதிவாதங்களை நடத்தி பிழைப்பை ஓட்டுகிறார்கள். சினிமாவின் சண்டைக் காட்சிகளுக்கு இணையாக அவைகள் நடந்தேறுகின்றன..
ஜனநாயகம் கேள்விக்குறியாகிக் கொண்டிருக்கிறது. இவர்கள் நடத்தும் லாவண்யக் கச்சேரியை அரசியல் என்று ஜனத்திரள் ஏற்று அல்லது ஏமாந்து வழிதெரியாமல் முழிக்கிறது ; மற்றொருபுறம் இலவசத்திற்காக காத்திருக்கிறது.
நடந்து முடிந்தது சமூக அரசியல் அல்ல.அது பொம்மலாட்ட பொழுதுபோக்கு.       அதன் அடிப்படை அதிகாரப்பசி . அவ்வளவே.
க.செ