25 Aug 2015

அன்பு பற்றி – ஜாக் அலென் மில்லரின் பேட்டி (உளவியலாளர் )

பெண்கள் விரும்புவது என்ன என்பதை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என ஆண்களும், ஆண்கள் தங்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியவில்லை என பெண்களும் கூறுகிறார்கள்...
Jacques-Alain Miller (14 February 1944) is a psychoanalyst and writer. He is one of the founder members of the École de la Cause freudienne (School of the Freudian Cause) and the World Association of Psychoanalysis which he presided from 1992 to 2002. He is the sole editor of the books of The Seminars of Jacques Lacan.
ஹனா வார் (ஹ.வா):  அன்பு குறித்து மனஅலசல் நமக்கு ஏதேனும் கற்றுத் தருகிறதா?
ஜாக்லென் மில்லர் (ஜா-அமி) :   அன்பு குறித்து மன அலசலானது மிக விரிவாகவே விளக்குகிறது,
ஏனெனில் மன அலசலானது அன்பு என்னும் மூல உந்து விசையால் இயக்கப்பெறும் ஓர் அனுபவமாகும்.  இது இடமாற்ற நிகழ்வு (Transference) என அறியப்பெறும் செயற்பாட்டில், மனதினை அலசுவோருக்கும் (Analyst) மன அலசலுக்கு உட்படுவோருக்கும் (Analysand) இடையே தன்னியல்பாக எழுகின்ற, அதாவது நனவிலியிலிருந்து உருப்பெறும் அன்பு பற்றிய வினாவாகும்.  இது ஒரு திட்டமிடப்பட்ட அன்புதான் எனினும், உண்மையான அன்பானது கட்டப்படும் பொருட்களாலேயே இதுவும் உண்டாக்கப்படுகிறது. மன அலசலானது நீங்கள் உங்களின் உண்மையான உண்மையினை (true truth) உணர்ந்துள்ளதாக் கருதும் ஒருவர் மீதுதான் அன்பு செலுத்த முடியும் என இந்த அன்புசெலுத்துதலின் இயங்கு நுட்பத்தை விளக்குகிறது. ஏற்றுக்கொள்வதற்கு கடினமானதுதான் எனினும், அன்பானது இந்த உண்மையினை விரும்பத்தக்கதொன்றாகவும், அதனை ஏற்றுக் கொள்ளும்படியானதாகவும் உங்களை நினைக்கத் தூண்டுகிறது.

ஹ.வா:                    அப்படியெனில், உண்மையில் அன்புசெலுத்துவதென்பது என்ன?
ஜா-அமி:                   உண்மையில் ஒருவர் மீது அன்பு கொள்வது என்பது அவ்வாறு செய்வதன்மூலம் நீங்கள் உங்களைப்பற்றிய உண்மையினை அறிந்து கொள்ளுதல் என்று நம்பப்படுகிறது.  நான் யார்“ (Who am I?) என்ற கேள்விக்கு நிலையாகவோ அல்லது ஒரு பதிலினைத் தரவல்ல ஒருவர் மீதுதான் நாம் அன்புசெலுத்துகிறோம்.
ஹ.வா:          ஏன் ஒரு சிலர் மட்டும் எவ்வாறு அன்புசெலுத்துவதென்பதும், ஏனையோர் அதனை அறியாமலும் இருக்கிறார்கள்?
ஜா-அமி:                   தொலைக்காட்சி தொடர்களில் வரும் காதலர்களான ஆண்கள் மற்றும் பெண்கள் போன்று சில மனிதர்கள் எவ்வாறு மற்றவர்களிடம் அன்பினைத் தூண்டுவது என்று அறிந்திருக்கிறார்கள்.  மேலும், அவர்கள் எதனைச் செய்தால் தாங்கள் அன்புசெலுத்தப்படுவோம் என்பதையும் அறிந்தே வைத்துள்ளனர்.  இருந்தபோதிலும், அவர்கள் கட்டாயம் அன்புசெலுத்த வேண்டுமென்பதில்லை. அதற்கு மாறாக, அவர்கள் தங்களுடைய இரையுடன் பூனையும் எலியும் விளையாடுவதைப் போல விளையாடுகின்றனர்.  அன்புசெலுத்துவதற்கு நீங்கள் உங்களின் இன்மையை ( lack ) ஒப்புக்கொள்ள வேண்டும், மேலும் நீங்கள் தவறவிட்டிருக்கின்ற அவன் அல்லது அவள் என்ற அந்த மற்றொருவர் உங்களுக்கு வேண்டுமென்பதையும் உணர வேண்டும்.  தன்னளவில் முழுநிறைவுற்றவர்களாகவோ அல்லது அவ்வாறாக இருக்க விழைபவர்களோ, அன்பு என்பது என்ன என்பதை அறியாமல் இருக்கின்றனர்.  மேலும் சில வேளைகளில், இவர்கள் அன்புசெய்தலை வலிநிறைந்த ஒன்றாக்குகிறார்கள்.  அவர்கள் தவறாக விளக்கப்படுத்திக் கொள்வதன் மூலமாகவோ அல்லது ஒன்றையொன்று முரண்படுத்திக் கொள்வதன் வாயிலாகவோ அன்புசெலுத்துவதிலுள்ள அபாயத்தையோ அல்லது மகிழ்ச்சிகளையோ உணராதவர்களாக இருக்கின்றர்.

ஹ.வா:                     தன்னளவில் முழுமை என்று ஒரு ஆணினால் மட்டும் நினைக்க முடியுமெனின்….
ஜா-அமி:                   சரியாக சுட்டிக்காட்டினீர்.  அன்புசெலுத்துவதென்பது உங்களிடம் இல்லாத ஒன்றை கொடுப்பதாகும் என்கிறார் லக்கான்.  இதன் பொருள் யாதெனில், அன்புசெலுத்துவதென்பது உங்களின் இழப்பை / இல்லாமையை (lack) உணர்ந்து கொள்வதோடு அதனை மற்றவரிடம் (the other) கொடுப்பதுமாகும், அதாவது அவ்விழப்பை வேறொருவரிடம் தருவதாகும்.  இது உங்களின் உடமையையோ, பொருட்களையோ அல்லது அன்பளிப்புகளையோ கொடுப்பதல்ல, அதற்குமாறாக உங்களுடைய உடமைகளல்லாத வேறொன்றினைத் தருவதாகும், அவ்வேறொன்றானது உங்களுக்கு  அப்பாலும் செல்லும் தன்மையைக் கொண்டது.  இவ்வாறு அன்புசெலுத்துவதில் நீங்கள் உங்கள் இல்லாமையை(lack), அதாவது அதனை பிராய்டுன் மொழியில் சொல்வதானால் உங்கள் காயடிப்பைப் பற்றி அனுமானித்திருக்க வேண்டும்.  மேலும் இந்த அனுமானிப்பானது அடிப்படையில் பெண் தன்மை உடையது.  உண்மையில் பெண் நிலையிலிருந்து மட்டும்தான் ஒருவர் அன்புசெலுத்துகிறார். அன்புசெலுத்துதல் என்பது பெண் தன்மையுடையது. இதன் காரணமாகத்தான் ஆண்களிடம் அன்பு என்பது எப்பொழுதுமே ஓரளவிற்கு ஏளனத் தன்மையுடையதொன்றாகவே (a bit comical) காணப்படுகிறது. ஆயினும் ஒரு ஆண் இவ்வாறான ஏளனத்தன்மையின் அச்சுறுத்தலுக்கு தன்னையே ஆட்படுத்திக் கொள்வானாயின், பின்னர் உண்மையில் அவன் அவனுடைய பொதுவான வீரியத்தன்மை ‘ (virility) பற்றிய தெளிவில்லாமலேயே காணப்படுவான்.

ஹ.வா:                  அப்படியெனில் ஆண்களுக்கு அன்பு அன்புசெலுத்துவதென்பது கடினமானதொன்றா?
ஜா-அமி:                   ஆம், உண்மையில் அவர்களுக்கு அது கடினமானது தான். ஒரு ஆண் தான் அன்புசெலுத்தும் ஒன்றின் மீதே அதனைப்பற்றிய பெருமித எண்ணங்களையும், அதனோடு அதனையே அழித்து நாசமாக்கிவிடும் உணர்வுகளையும் கொண்டுள்ளான்.  ஏனெனில் இந்த அன்பு அவனை ஒரு முழுமையற்ற நிலையிலும் (a posistion of incompletness), மற்றவர்களை சார்ந்து (dependence) இருக்குமாறும் வைத்துள்ளது.  அதனால் தான் அவன் அன்புசெலுத்தும் காலத்தில் கைவிடப்பட்ட வீரியமான நிலையினை (virile position) மீட்டெக்க, அவன் காதலிக்காத ஒரு பெண்ணினைக்கூட விரும்புகிறான்.  இந்த கொள்கையினைத் தான் பிராய்டு Debasement of love life in men  என்கிறார்.  அதாவது இது ஆணின் காதலுக்கும் காம இச்சைக்கும் இடையேயான பிளவினை காட்டுவதாக அமைகிறது.
ஹ.வா:                  பெண்களிடம்.....?
ஜா-அமி:                   இது பெண்கள் மத்தியில் மிகவும் குறைவாகவே காணப்படுகிறது.  பெரும்பாண்மையான தருணங்களில், இது ஒரு ஆண் காதலனின் இரட்டிப்பாகவே (doubling-up) அமைகின்றது.  பெண்களான அவர்களுக்கு ஒருபுறத்தில் ஆணாக அவன் பெருமகிழ்வு/திருப்தியினை (jouissance) தருபவனாகவும், அவர்களால் விரும்பப்படுபவனாகவும் காணப்படுகிறான். ஆயினும் காதலில் ஆணாக உள்ள அவன் பெண்தன்மையாக்கப்பட்டு கட்டாயம் காயடிக்கப்பட்டவனாகவும் காணப்படுகிறான்.  உடற்கூறு ஒன்று மட்டுமே இதனை இயக்கும் புள்ளியல்ல, சில பெண்களும்கூட ஆணுடைய உடற்கூறு அமைப்பினைப் பெற்றுள்ளனர்.  இவ்வாறு உள்ளோர் மேலும் மேலும் அதிகரிக்கின்றனர்.
                 அன்பு என்னும் மூல உந்து விசையால் காதலிப்பதற்காக வீட்டில் ஒரு மனிதனும், வெளியில் இணையம், வீதிகள் மற்றும் தொடர்வண்டிகளில் சந்திக்கும் பிற மனிதர்கள் அவர்களை பெருமகிழ்வு/ திருப்தியுறச் செய்பவர்களாகவும் உள்ளார்கள். 


ஹ.வா:                  ஏன் இது மேலும் மேலும் ....?
ஜா-அமி:                   பெண்ணியல்பு தன்மை, வீரியமான நிலை போன்ற சமூக-பண்பாட்டு நிலை மாதிரிகள் (stereo types) தீவிர மாறுதலுக்கு உள்ளாகி வருகின்றன.  ஆண்கள் தங்களின் உணர்வுகள், அன்புமுறை மற்றும் தங்களையே பெண்தன்மைக்கு உட்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றை வெளிப்படுத்தும்படி எதிர்பார்க்கப்படுகிறார்கள். அதே வேளையில், அவைகளுக்கு மாறாக பெண்களும் சட்டரீதியாக நாங்களும் தான் என சொல்லுமளவிற்கு சமத்துவமான உந்துதல்கள் மூலமாக ஓரளவிற்கான ஆண்தன்மைக்கான முனைப்பானது ஊக்கப்படுத்தப்பட்டு வருகிறது.  இவைகளுடன், ஒரு பாலின உறவாளர்களும் இருபாலின உறவுடையோர்களைப் போலவே உரிமைகள் மற்றும் திருமணம், மகவுத்தொடர்பு போன்ற வழக்கங்களும் தங்களுக்கும் உரியதென உரிமை கோருகின்றனர்.  இவ்வகையில் உறவுகளிலுள்ள ஒரு பெரிய நிலைப்பற்றத்தன்மை, காதலென்னும் நாடக வெளியிலுள்ள பரந்த நெகிழ்வுத்தன்மை போன்றவைகள் யாவும் கடந்த காலத்தின் நிலைப்புத்தன்மையுடன் முரண்பட்டு நிற்கின்றன.
Zygmunt Bauman என்னும் சமூகவியலாளர் குறிப்பிட்டவாறு அன்புசெலுத்துவதென்பது நீர்போல நெகிழ்வு தன்மையடைந்து வருகிறது.  ஒவ்வொருவரும் தங்களுக்கான சொந்த வாழ்க்கை முறையை, காதலிக்கும் முறையை, திருப்திபடுத்திக் கொள்ளும் முறையை தேர்ந்தெடுத்துக் கொள்ள பணிக்கப்படுகின்றனர்.  மரபானவைகள் மெல்ல மெல்ல வழக்கொழிந்து வருகின்றன.  இதனை உறுதிபடுத்துகின்ற சமூக நிர்பந்தங்கள் மறைந்துவிடவில்லை, ஆயினும் அது வலிமை குறைந்து மங்கும் பாதையில் உள்ளது.

ஹ.வா:                     அன்புசெலுத்துவதென்பது எப்பொழுதும் பரஸ்பரமானது என்கிறார் லக்கான்.  நடப்பு சூழலிலும் இது உண்மைதானா?  அது விளக்கும் பொருள் என்ன?
ஜா-அமி:              இந்த வாக்கியம் சரியாக புரிந்து கொள்ளப்படாமலேயே மீண்டும் மீண்டும் பயன்படுத்தப்படுகிறது அல்லது தவறான முறையில் பொருள் கொள்ளப்படுகிறது.  இந்த வாக்கியத்திற்கு நீங்கள் அன்புசெலுத்துவதற்கு உங்கள் மீது பதிலுக்கு அன்புசெலுத்தும் ஒருவர் இருந்தால் போதும் என்பது பொருளல்ல.  அப்படி பொருள் கொள்வது அபத்தமானது. நான் உன்மீது அன்புசெலுத்துகிறேன் ஏனெனில் நீ அன்பானவள். நான் தான் உன்மீது அன்பு செலுத்துகிறேன், இருந்தபோதிலும்  நீயும் இந்த அன்பிற்குள் கலந்து உறைந்துள்ளாய், காரணம் யாதெனில் நான் உன்மீது அன்புசெலுத்துவதற்குரிய ஏதோவொன்று உன்னிடம் உள்ளது.  அன்பு பரஸ்பரமானது ஏனெனில் அது இரு பக்கங்களையும் கொண்டது; நீ எனக்கானவள் என்ற அன்பு ஏற்படுத்துகின்ற காரணத்தின் எதிர்விளைவுதான் நான் உன் மீது கொண்டுள்ள அன்பாகும்.  ஆகவே, நீயும் இதனோடு இணைக்கப்பட்டுள்ளாய்.  உன் மீதான என் அன்பு வெறும் என்னுடைய உறவு மட்டுமல்ல ; அது உன்னுடையதும் கூட.  என் அன்பு உன்னைப்பற்றி சிலவற்றை கூறுகிறது, அதனை நீயே கூட அறிந்திருக்க வாய்ப்பில்லை  ஒருவர் மற்றொருவர்மீது அன்புசெலுத்தினால் அவரும் பதிலுக்கு அன்புசெலுத்துவார் என்பதற்கு எவ்வித உத்திரவாதமும் இல்லை.  அவ்வாறு நடந்துவிடுமானால் அது ஒரு அதிசயம்தான்.  அது நடப்பதற்கு முன்னர் அவ்வாறு கணிக்க முடியாது.

ஹ.வா:                நாம் அவனையோ அல்லது அவளையோ தற்செயலாக தேர்வதில்லை.  ஏன் அந்த பையன் அல்லது அந்த பெண்?
ஜா-அமி:              இது தான் பிராய்டு குறிப்பிடுகின்ற liebes bedingung , அதாவது அன்புசெலுத்துவதற்கான நிபந்தனை, விருப்பத்திற்கான காரணம். தன் அன்பிற்க்கு உகந்த ஒருவரை தேர்வு செய்வதில் ஒரு குறிப்பிட்ட பண்பு அல்லது பண்புகள் தீர்மானகரமான பங்கினை ஆற்றுகின்றன.  இது முற்றிலுமாக நரம்பியலுக்குள் (neurosciences) பிடிபடாமல் தப்பிவிடுகின்றது.  ஏனெனில் இது ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு மாதிரியானது ;  ஒவ்வொரு மனிதனுக்கும் தனித்தன்மையானது.  அவரவர்களுடைய தனிப்பட்ட வரலாற்றோடு தொடர்புடையது.  சில வேளைகளில் இப்பண்புகள் நுணுக்கமாக செயற்படுகின்றன.  சான்றாக,

ஒரு பெண்ணுடைய மூக்கின் பளபளப்பு ஒருவர் அப்பெண்ணின் மீது அன்புகொள்வதற்கு காரணமாக அமைந்ததை பிராய்டு கண்டுபிடித்தார்.

ஹ.வா:                இதுமாதிரியான அற்ப விசயங்கள்கூட அன்புசெலுத்துவதற்கு காரணமாக அமையும் என்பதை நம்புவதற்கு சிரமமாக உள்ளது!
ஜா-அமி:              நனவிலியின் யதார்த்தம் (reality of unconscious ) புனைவை விஞ்சிய ஒன்றாகும். மனித வாழ்வில்  எவ்வளவு நிகழ்வுகள், அதுவும் குறிப்பாக அன்பு என்று வரும்பொழுது சின்னஞ்சிறு பொருட்கள், அற்பமானவைகள், புனிதமான தகவல்கள் பற்றியவை என உங்களால் கற்பனை செய்ய முடியாத அளவிற்கான நிகழ்வுகளைக் கொண்டுள்ளன. இவைகள் எல்லாவற்றிற்கும் மேலாக, ஆண்களிடம் உயிரற்ற பொருட்கள் ( Fetishes ) கூட அன்பினைத் தூண்டும் இன்றியமையாத காரணங்களாக அமைவதை நீங்கள் காணமுடியும்.  பெண்கள் தங்களுடைய காதலர்களை தெரிவுசெய்வதில் நுணுக்கமான தனிப்பண்புகள், தந்தை, தாய், சகோதரன், சகோதரி மற்றும் தனது சிறு வயதினோடு தொடர்புடையோர்கள் குறித்த பழைய நினைவுகள் போன்றவை முக்கிய பங்காற்றுகின்றன.  யினும், பெண்தன்மையுடைய அன்பின் வடிவமானது உடனடியாகவே உயிரற்ற பொருட்களோடான (fetishes) பிணைப்பைக் காட்டிலும் பிறர் தன்னை காதலிப்பதான மயக்க (ecotomania) நிலையிலேயே அதிகம் காணப்படுகிறது.  பெண்கள் தாங்கள் காதலிக்கப்பட வேண்டுமென விரும்புகிறார்கள், மேலும் அவர்களின் விருப்பம், அவர்களிடம் காட்டப்பட்ட அன்பு அல்லது வைகள் போன்றவற்றை அவர்கள் மற்றொருவர் மீது காட்டவிழைவது போன்றவை அவர்களுடைய அன்பைத் தூண்டுவதாகவும் அல்லது குறைந்தது அவர்களின் கருத்தினை கவர்வதற்கான மிக அடிப்படையான நிலைப்பாடாகவும் அமைகின்றன.  இந்நிகழ்வானது ஆண்கள் பெண்களுடன் உரையாடுவதற்கான அடித்தளத்தை அமைத்துக் கொடுக்கின்றது.

ஹ.வா:                இதில், புனைவுகளுக்கு எவ்வித பங்கையும் நீங்கள் தருவதில்லையா?
ஜா-அமி:              காதலனை தேர்வு செய்வதில் உள்ளதைக் காட்டிலும் திருப்தியுறுகின்ற நிலைப்பாட்டில் ( position of Jouissance ) பெண்களிடம் பிரஞ்ஞைபூர்வமான அல்லது நனவிலி புனைவுகள் முக்கிய பங்காற்றுகின்றன.

ஹ.வா:                ஆண்களின் புனைவு?
ஜா-அமி:              அவர்களின் புனைவுகள் முதல் பார்வையிலே உண்டாகும் காதலுக்கு சாட்சியமாக உள்ளது.  இதற்கு லக்கானால் விளக்கப்பட்ட மிக சிறந்த சான்று கதே ( Goethe )வின் நாவலில் உள்ளது.  வெர்தர் ( Werther ) என்ற இளைஞன் , குழந்தைகள் சூழ்ந்த குழாமுக்கு பாலூட்டும் சார்கலட் ( Charlotte  ) என்ற பெண்ணை முதல் முதலாக பார்த்த மாத்திரத்திலேயே அவள்மீது அன்பு செலுத்த தொடங்குகிறான்.  இங்கு அப்பெண்ணின் தாய்மைப்பண்பே ( Woman’s maternal quality ) அவனிடம் அவள் மீதான அன்பினைத் தூண்டியது.  பின்வரும் மற்றொரு சான்றானது எனது அனுபவத்திலிருந்து எடுக்கப்பெற்றது.  50 வயதான ஒரு முதலாளி செயலருக்கான விண்ணப்பங்களை பரிசீலித்துக் கொண்டிருக்கிறார்.  அப்பொழுது 20 வயதுடைய இளம்பெண் ஒருவர் உள்ளே வருகிறார்.  அவளை பார்த்த உடனேயே அவளிடம் நேரடியாகவே அவர் தன் காதலை சொல்கிறார்.  அவரை அவ்வாறு செய்ய வைத்து எது என்று ஆச்சரியப்பட்டு, ஆய்வுக்குட்படுத்திப் பார்த்தபோது அவர் அவரை அவ்வாறு செய்யத் தூண்டியது எது என்பதைக் கண்டுபிடித்தார்.  அவளின் நடவடிக்கையானது அவருக்கு தான் 20 வயதில் வேலைக்கு முதன்முதலாக நேர்காணலுக்கு சென்றதை நினைவூட்டியிருக்கிறது.  ஒரு விதத்தில் அவர் தன் மீதே காதலில் விழுந்துவிட்டார். 

இந்த இரு உதாரணங்களின் வாயிலாக நாம் பிராய்டு வேறுபடுத்திக்காட்டுகின்ற இருவகை அன்பினைப் பார்க்க முடியும். முதல் உதாரணத்தில் உங்களைப் பாதுகாக்கின்ற (protect) தாயின் மீது அன்பு செலுத்துகிறீர்கள், இரண்டாவதிலோ உங்கள் சுயமோக பிமபத்தையே (narcissistic image of jouissance) நேசிக்கிறீர்கள்.

ஹ.வா:                நாம் தலையாட்டி பொம்மைகள் போல உள்ளோம் என்று படுகிறது!
ஜா-அமி:              அவ்வாறு இல்லை.  எந்த ஆணுக்கும் பெண்ணுக்கும் இடையில் முன்னரே எழுதப்பட்ட வகையில் எதுவும் இல்லை, எந்த திசைகாட்டியும் இல்லை.  ஏற்கனவே நிர்ணயிக்கப்பட்ட உறவும் இல்லை.  விந்தணுவிற்கும் (Spcsmatozoon) அண்டத்திற்கும் (Ovum) இடையேயுள்ள உறவைப்போல, ஆண் பெண் எதிர்கொள்ளல் என்பது ஏற்கனவே நிரல்படுத்தப்பட்ட (programmed ) ஒன்றல்ல; மேலும் இது எவ்விதத்திலும் நமது மரபணுவுடன் தொடர்புடையதுமல்ல, ஆண்களும் பெண்களும் பேசிக்கொள்கின்றனர், அவர்கள் சொற்களால் ஆன (சொல்லாடல்) உலகில் வாழ்கின்றனர் ;ச்சொற்கள்தாம் அவர்களுக்கான உறவைத் தீர்மானிக்கும் ஒன்றாக உள்ளது.  அன்பு கொள்ளும் முறைமைகள் ( modalities of love ) அவைகள் சார்ந்துள்ள பண்பாட்டு சூழல்கலோடு அதீத உணர்வு நிலையினால் பிணைக்கப்பட்டுள்ளன.  ஒவ்வொரு பண்பாட்டு சூழலும் பால்தன்மைகளுக்கு இடையே அது கட்டிவைத்துள்ள உறவினைக் காக்க குரல் கொடுக்கிறது. 

தற்போதைய நிலையில் தாராளவாத, சந்தை மற்றும் சட்ட முறைகளிலான மேற்கத்திய சமூகத்தில் பெரும்பாலும் ‘ஒருவருக்கொருவர்’ என்பது புறம்தள்ளப்பட்டு ‘ஒன்றிற்கு மேலான’ (multiple) என்பது நன்முறையில் நடந்தேறி வருகிறது. ‘பெருமைக்குறிய வாழ்நாள் முழுதுமான அன்பு’ (Ideal model) மெதுவாக தோல்வியைத் தழுவ ஆரம்பித்துள்ளது. இதற்கு காரணாமாக  fast dating, speed love போன்றவற்றோடு ஒரு தொடர்ச்சியான alternative, successive மற்றும் simultaneous amorous scenarios போன்றவைகள் அமைந்துள்ளன. 

ஹ.வா:                நீண்ட கால அன்பு?  அழியா அன்பு என்பதெல்லாம்?
ஜா-அமி:              எந்த ஒரு அழியாத நித்தியமான உணர்ச்சி பிரவாகமும் (passion) அருவருப்பானதுதான் என்றார் பால்சாக். இருந்தபோதிலும், ஒரு பந்தமானது (bond) இந்த கட்டுக்கடங்கா உணர்ச்சி என்ற தளத்திற்குள்ளாக வாழ்நாள் முழுதும் நீடிக்க முடியுமா?  அதிக அளவில் ஒரு ஆண் தன்னையே பெண்ணிடம் அர்ப்பணிக்க அர்ப்பணிக்க, அவளும் அதிகமான அளவில் அவனுக்கான தாய்வழி குறித்தலை (maternal signification) மேலோங்கச் செய்கிறாள், அதாவது காதலிப்பதைக் காட்டிலும் அவள் புனிதமான, அதே வேளையில் தொடமுடியாத ஒன்றாகவும் உயர்கிறாள்.  இவ்வகையான பெண் வழிபாட்டை (cult of woman) மணமான ஓரின பாலுறவாளர்கள் (married homo sexual) சிறப்பாக வளர்ந்தெடுக்கின்றனர்.  எல்சா (Elsa) இறந்தவுடன் அரகன் (Aragon) அவள் மீதான காதலைப் பாடியதற்கு ஒப்பாக உள்ள இது ஒரு ‘ hello boys ‘ ஆகும். 

ஒரு பெண் ஓர் ஆணின் மீது பற்று கொண்டிருக்கும் பொழுது, அவளால் அவன் காயடிப்புச் செய்யப்படுகிறான். எனவே, இது ஒரு குறுகிய வழியாகும்.  மணவாழ்விற்குரிய மிகச் சிறந்த இலக்கு நட்புதான், அதையே தான் அரிஸ்டாட்டிலும் முதன்மையான தொன்றாகக் கூறுகிறார்.

ஹ.வா:                பெண்கள் விரும்புவது என்ன என்பதை தங்களால் புரிந்து கொள்ள முடியவில்லை என ஆண்களும், ஆண்கள் தங்களிடம் எதிர்பார்ப்பது என்ன என்பதை உணர்ந்து கொள்ள முடியவில்லை என பெண்களும் கூறுகிறார்கள்.........
ஜா-அமி:              உண்மைதான்.  அரிஸ்டாட்டிலினுடைய தீர்வினை அடையவிடாமல் தடுப்பது எதுவெனில் ஒரு பாலினத்திற்கும் மற்றொரு பாலினத்திற்குமிடையேயான உரையாடல் என்பது சாத்தியமில்லாததுதான் என்பதை ஏக்கப்பெருமூச்சுடன் விளக்குகிறார் லக்கான். 

உண்மையில் அன்புசெலுத்துவோர்கள் கடைசிவரை அன்புகொள்ளும் மற்றவர்களுடைய மொழியை அறிந்து கொள்வதை, அதாவது மொழியை ஒருங்கிணைத்து அதிலிருந்து புரிந்து கொள்தற்கான திறவுகோல்களை கண்டடைவதைக் கண்டனம் செய்பவர்களாகவே உள்ளனர். மேலும், கண்டடையும் அத்திறவுகோல்களானது எப்பொழுதும் மாற்றமடையக் கூடியதாகவும் அமைந்துள்ளன.
அன்புசெலுத்துதலென்பது மீள்வதற்கான வழிகள் ஏதுமற்ற தவறான பொருள்கொள்ளுதலுக்கான ஒரு புதிர்ப்பாதையாக அமைந்துள்ளது. 
தமிழாக்கம்:
கோவி. கனக விநாயகம்.