15 May 2015

முகமூடி முகமாயுள்ளது


அத்வைதம்,த்வைதம், இவைகள் எல்லாம் இணைந்து ; இவர்களுடன் மோடியும், அருண்ஜேட்லியும் சேர்ந்து விசுவாச அரசியலின் கலாச்சாரமயத்தை ( culturalization of politics )  முழுமையாக்கி,அரக்கர்களை வென்று, நீதியை நிலைநாட்டிவிட்டனர்.அப்படித்தானே !.
      விசுவாச ஊடகங்களின் ( media ) ( பத்திரிக்கைகள் உட்பட) பதட்டம் ஓய்ந்து, எரிந்த கட்சி / எரியாத கட்சிக்கு விவாதமேடையில் குரலாட / கூச்சலாட வருமானத்தைப் பார்த்துக்கொண்டு வாழ்த்திக் கொண்டுள்ளனர்…….RESURRECTON (புத்துயிர்ப்பாம்)


மிச்சம்பேர் மனச்சாட்சியிடம் பேரம் பேசிக்கொண்டிருக்கின்றனர். விசுவாசிகளைத் தவிர பிறர் டி.வி.யில் தீவிரமாகவும் , காத்திரமாகவும் நீதிபதிகளைப்பற்றி புலம்பிக் கொண்டிருக்கின்றனர்.
      மன அலசல் ஆய்வாளர் ( Slavoj Zizek ) கூறியபடி சகிப்புத்தன்மை உச்சத்திற்குச் சென்றுவிட்டது. இதை, இந்த அரசியல் கலாச்சாரமயத்தை கட்சிகளின் ,தலைவர்களின் உபயம் எனலாமா? சாதி அடையாளம், மத அடையாளம், மொழி அடையாளத்துடன் இந்த    விசுவாசி ’ ( Faith) அடையாளமும் சேர்ந்துவிட்டது.
      இது பச்சை குத்துதல்,தோளில் துண்டுபோடல்,கரைவேட்டியில் ஆரம்பித்து,மண்சோறு தின்பது,ஆயிரம் கண்ணுடையாளுக்காக அனைத்தையும் ஏற்று, ஆட்சிக் கட்டிலுக்கு கான்களுக்குப் பதில் மோடிகளும் ஜேட்லிகளும் சிவப்புக் கம்பளமும் ஆசீர்வாதமும் வழங்கியாயிற்று.
      ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும் எனக்கொரு கவலையில்லை உண்மைதான்.
      இளந்தலைமுறையினருக்கு வரலாற்று உணர்வு பெருகுவதற்காக இது கொடுக்கப்படுகிறதா?
      ஜெயலலிதா மீது 1996 ஜூன் 14-ல் ( இப்போதைய ) பா.ஜா.கா-வின் பெருந்தலைவர் சுப்பிரமணியசாமி வழக்குத் தொடர்ந்தார்.
      1997-ல் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டது. 18 ஆயிரம் ஆவணங்கள், 88 ஆயிரம் பக்கங்கள் கொண்ட குற்றப்பத்திரிக்கை தாக்கல் ஆனது. பிறகு 2000-2014 வரை இழுத்தடிப்பு. 2014-ல் ஜெயலலிதா குற்றவாளி என்று தீர்ப்பு வந்தது.                               
      மனப்பதட்டம் , பித்து ஆரம்பித்துவிட்டது.தமிழகக் கோவில்களில் இராக்கால பூஜை வரை விடுதலை வேண்டி அர்ச்சனை. தீச்சட்டிகள், முளைப்பாரி, அப்புறம் மண்சோறு உண்ணல்; அரசு நிலைகுலைந்து ஸ்தம்பித்து ( stalemate ) நின்றது.
      அதாவது, சட்டப்படி ஜெயலலிதா முதல்வர் இல்லை;ஆனால் முதல்வர் பன்னீர் வேஷ்டி கட்டி வீதிக்கு வருவார், செயல்படவும் மாட்டார், விளையாடவும் மாட்டார். பின்னர் மேல்முறையீடு. 2015 மே 11-ல் நிர்வாகம் ஜெயலலிதா நிரபராதி என்று விடுதலை செய்தது.
எல்லோருக்கும் லட்டு .... மொட்டையடிப்பும் தொடங்கி விட்டது.
      ஒரு 19 ஆண்டுகள் ஒரு ஊழல் வழக்கை விசாரித்து  தீர்ப்பு சொல்ல எடுத்துள்ளது இந்த நிர்வாகம்.
      இதற்கிடையில் எத்தனை நீதி அதிகாரிகள் வந்து போயினர், அரசு வழக்குரைஞர்கள் எத்தனை பேர்?
       இவர்களுக்கான மொத்த செலவு எத்தனை லட்சம் அல்லது கோடிகள்? யார்வீட்டுப் பணம்?
      குற்றவாளி என்று தீர்ப்பு அளிக்கப்பட்டபின் சட்ட அமைச்சர் வந்து அந்த வீட்டில் கைநனைத்துச் சென்றால் என்ன பொருள்? இ.பி.கோ.-வில் அதற்கு இடமில்லை, ஆனால் நெறி  (Ethics) வேண்டாமா?
      தத்துவர் J.K சொன்னமாதிரி பார்ப்பவர் பார்க்கப்படுகிறார் என்பதில் சட்ட அமைச்சர், வழக்கு விசாரணை நிறுவனம் (court) , ஆளும்கட்சிகளின் ஊக வணிகம் (கத்திரிக்காய் முத்தினா சந்தைக்கு வந்துதானே ஆகணும்) பார்க்கப்படுகிறார்கள்.
      இந்த தில்லைஅம்பலத்து கூத்தை விட வழக்கு விசாரணை நிர்வாகம், அதன் கூத்தும் அம்பலக் கூத்தனைவிட அபிநயம் அருமையாய் இருந்தது.
      இது வரலாறு. இனியாகும் மனிதர்கள் இந்த வரலாற்றை எப்படி, எதை அகவயப்படுத்துவர் ( introjection ) , எதையெல்லாம் வெளித்தள்ளுவார்கள் ( projection ) உளவியலாக?
      சகிப்புத்தன்மைக்கு ( சாதியை குணம் , மணம் குறையாமல் காப்பவர்கள் ஆயிற்றே?) அளவேயில்லையா?
      நெறிக்கு (ethics) எதிரியாய் / முரணாய் இருப்பது இந்த பாராளுமன்ற ஜனநாயகமே.
      இமயத்தின் குமுறல் சென்னை வீதி வரை கேட்டது கனவிலா தூக்கத்திலா? அநீதிக்கு ஆதரவான விசுவாசமும், அரசியல் கலாச்சாரமயமாக்கலும் அதிகார மையங்களுக்கே நலம் பயக்கும். விசுவாசத்தின் மூப்பு மக்களுக்கு ஜனநாயகத்திற்கு வழிகாட்டாமல் அதிகாரத்துவ பாராளுமன்ற ஜனநாயகத்திற்கே வழி வகுக்கும். ( மிசா நினைவிருக்கட்டும் ) .
      [ அரசர்கள், நீதிஅரசர்களின் தன்விருப்பு அதிகாரத்தை (discrete power) இனியும் கேள்விக்குட்படுத்தி பொதுஜன கருத்தை விவாதித்து முடிவெடுக்காமல் இருக்கும்வரை விபத்துகளுக்கு பஞ்சம் இருக்காது ].
( முதல் காட்சி முற்றுப்பெற்றது )
      பி.கு : இனி சொத்து ( லஞ்சம் வாங்குபவர்கள் ) குவிப்பவர்களுக்கு உட்சநீதிமன்ற வழிகாட்டல் – உச்சபட்ச எல்லை 20 % - மிக உபயோகமாக இருக்கும் என மனதில் அகவயப்படுத்தாமல் இருந்தால்......சரி.
க.செ

No comments:

Post a Comment