“மகர்கள் இல்லாமல் மகராஷ்டிரம் இல்லை” அதாவது கிராம அசிங்கங்களை சுத்தம் செய்ய மகர்கள் இருப்பார்கள்”.
ஒரு தலித்திடமிருந்து-வசத்முன்
மகர் என்னும் சாதியில் பிறந்தவர்தான் டாக்டர் அம்பேத்கர். இது தமிழகத்துக்கு புதிதல்ல .
தமிழ்நாட்டின் கிராமங்கள் அனைத்திலும் , கிராமங்களின் ஓரத்தில் ( காலனி ) வாழும் தலித்துகள் இல்லாத ஊரே இல்லையெனலாம் .
கிராமத்தில் ஓரம் என்பது என்ன? அதுதான் தலித்திற்கு ஆதிக்க சாதிகளால் விதிக்கப்பட்ட சட்டம் .
டாக்டர்.அம்பேத்கர் கூறுகிறார் “வெளியில்-ஊருக்கு வெளியில்-இருப்பவர்கள் ஊருக்குள் வரவேண்டும்,”.. . . எல்லோரும் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும்”
தலித்துகளுக்கு சுடுகாட்டுப்பாதை வேண்டும் , பொதுப்பாதையில் உரிமை வேண்டும் , பொதுக்கிணற்றில் , குழாயில் நீர் எடுக்க வேண்டும் .. மந்தை கோவிலில் ஆதிக்க சாதிகளுக்குரிய சம உரிமை வேண்டும். . ஊருக்குள் கடை வைக்க இடம் வேண்டும் . சுருக்கமாகச் சொன்னால் அவர்கள் அந்தந்த கிராமங்களின் குடிமகனாய் சமத்துவத்துடன் நிம்மதியாக வாழவேண்டும் .
அரசியல் அமைப்பு சட்டம் சொல்வதென்ன ? (தி) ஷரத்து 19(1)(e) இந்தியாவிற்குள் எப்பகுதியிலும் தங்கி வாழும் உரிமை (FREEDOM
TO RESIDE AND TO SETTLE) இது குடிமக்களுக்கு அளிக்கப்படும் சுதந்திரம் உரிமைகளாகும். நடைமுறையில் இன்றும் தலித்துகளுக்கு எந்த உரிமையும் இல்லை.
இன்றும் கூட தலித்துகள் கிராமங்களில் நிராகரிக்கப்பட்டவர் களாய்தான் உள்ளனர்..
அவர்களுக்கு இட ஒதுக்கீட்டினால் பொருளாதார வசதிக்கான தளம் கிடைத்துள்ளது. வாஸ்தவம். சட்டசபை, பாராளுமன்றத்திற்கு ஓட்டுப் போடும் சுதந்திரம் கிடைத்துள்ளது, வாஸ்தவம்.
தீண்டாமை ஒழிப்பு செயலாக்கம் செய்வது? சுதந்திரற்கு முன் பின் என்பதெல்லாம் ஒன்றுமில்லை. ஒரே காலம்தான். நகரங்களில் ஓளரவு இது தகர்ந்திருக்கிறது. உற்பத்தி சக்திகளின் வளர்ச்சியால், உற்பத்தி உறவுகளில்(கலாச்சாரத்தில்) சில வேண்டவெறுப்பாய் மாற்றம் உள்ளது.
இன்றையதினம் நகர வீதிகளில் மகிழ்ச்சி தெரு கொண்டாடும் ஒலி, ஒளி வீசுகிறது. கிராமங்கள் இதை நினைத்து பார்க்க முடியுமா? கிராம சர்வாதிகாரம் அனுமதிக்குமா ?
நடந்து முடிந்த பஞ்சாயத்து தேர்தலில் சுமார் 9000 ஆயிரம் பஞ்சாயத்துத் தலைவர்களில் எத்தனை பேர் தலித்துகள் (தெரியவில்லை) ஆனால் என்ன? எத்தனை தலித்தலைவர்கள் இதர சாதி மெம்பர்களுடன் சேர்ந்து, தலைவர் நாற்காலியில் உட்கார்நதிருப்பார்கள் உண்மை கசப்பாகத்தான் இருக்கும்.
தலித்துகளின் இந்த இழிநிலைக்கான காரணமாக கருதப்படுவது தீட்டு என்ற கருத்துரு
தீட்டு என்ற இந்த கருத்தாக்கம் எப்போது, எப்படி, என்று வரலாற்று ஆசிரியர்களின் கதையாடலை கேட்டால்தான் புரியும்.
எவ்வளவு கலமாக இருந்து வருகிறது? ஒரு சிறு வரலாறு
"ஆசுசம் ஆசுசம் என்பர் அறிவியலார்
ஆசுசம் ஆம் இடம் ஆரும் அறிவியலார்
ஆசுசம் ஆம் இடம் ஆரும் அறிந்தபின்
அசுசட் மானிடம் ஆகுசம் ஆமே”.
என்று திருமூலர் கண்டிக்கிறார். ஆசூசம் என்பது தீட்டு மற்ற வனைத் தொட்டால் தீட்டு என்று தீண்டாமை பாராட்டுகிறவன் , உண்மையில் தனக்கே அல்லவா தீண்டாமை பாராட்டிக் கொள்ள வேண்டும், மனித உடலே அழுக்கின்-மலத்தின்-விளைவுதானே! திருமூலரை தொடர்ந்து . .
சிவ்வாக்கியர் (38) ” பறைச்சியாவதேதடா பனத்தியாவதேதடா
இறைச்சிதோல் எலும்பிலும் இலக்க மிட்டுக்கிறதோ”.
பாம்பாட்டி சித்தர் (123) சாதிப்பிரிவினிலே தீயை மூட்டுவோம்”,
பத்ரகிரியார் ”சாதி வகையில்லாமல் சஞ்சரிப்பது எக்காலம்”
திருமூலர் காலத்தின் குரல்.
தீட்டு என்பது ஒரு உளவியல்படி அது ஒரு கற்பிதம் (Imaginary). ஆளும் வர்க்கத்தால் கற்பனையாக கட்டப்பட்ட கருத்துரு அவ்வளவுதான். தீட்டு என்ற கட்டமைப்பு புனித்த்தின் (கற்பனை) மாபெரும் புரட்டால், தனக்காக கீழ்மையான அசுத்தமான வேலைக்காக ஒதுக்கப்பட்ட பிரிவினரை , பிறப்பிலேயே மாறக்கூடாத வேலைப்பிரிவினையை நிரந்தரமாக்க , சுரண்ட ஏற்படுத்தப்பட்ட சூது. (தீட்டு நீண்டகால வரலாற்றை கொண்டதாக உள்ளது). புனிதம் என்பது ஒரு நம்பிக்கை, அது போலவே அசுத்தத்தை தீட்டு என்பதும் அதிகாரத்துவ நம்பிக்கையாகும். கற்பிதம் (தீட்டு) என்பது யதார்தத்திற்கு புறம்பானது. அது ஒரு கருத்துருவம்.
இப்போது கருத்துருவம் என்பது பல வண்ணங்களாளனது. அதை கொஞ்சம் அறிமுகப்படுத்திக் கொள்ளலாம்.
கருத்தியலுக்கும் நம்பிக்கைகளுக்கு மிடையில் உள்ள உறவு.
நாம் யதார்த்த அரசியல் தளத்திலும், மதத்தளத்திலும் நம்பிக்கை என்ற இயங்கு நுட்பத்தின் ஆளுமைக்கு கட்டுப்பட்டு நடப்பர்களாக உள்ளோம். ஆகவே உளவியல் (மனஅலசல்) ஆய்வு உண்மைகளில் இருந்து தெரிந்து கொள்வது விழிப்பாக இருக்க உதவி புரியும்.
“நம்பிக்கையானது மறைமுகமாகச் செயல்படுகிறது. அதாவது கருத்தியல் அடையாளத்திலிருந்து சிந்தித்தலை அது பிரித்துவிடுகிறது. நீக்கிவிடுகிறது. கருத்தியல் நம்மீது ஒரு பிடிமானத்தை செலுத்துவதற்கு இது வழிவகுக்கிறது” என்கிறார் சிசெக்.
இனி அல்தூசர்;
”நம்பிக்கை என்பது கருத்தியல் ரீதியானதொரு இயங்கு நுட்பம் அல்லது பிரதிநிதித்துவ அமைப்பாகும். இது மத, சமூக, அரசியல் ரீதியான சடங்குகள் மூலம் செயல்படுத்தப்படுகிறது. இந்த சடங்குளின் நடவடிக்கைகளானது கருத்தியல் செயல்பாட்டினை , கருத்தியல் ரீதியான அரசு சாதனங்கள் மூலமாக (Ideological
state apparatus) அங்கீகாரம் பெற வழிவகுக்கிறது .
அரசு சாதனம் நாங்கள் என்பதில் குடும்பம், ஊடகங்கள், தொழில்நுட்பம், மதம் உற்பத்தி முறை முதலானவற்றின் செயல்பாடுகளும் அடங்கும். இச்சாதனங்கள் ஒரு தன்னிலையை (மனிதனின் அகநிலைப்பாடு) கட்டமைத்து இயக்குகின்ற சமூகச் சூழநிலைகள் மற்றும் செயப்பாடுகளின் தொகுதியாகும்.”.
இதன் மூலம் யதாத்த புலக்கத்தில் உள்ள பழக்க வழக்கங்கள், சடங்குகள், சாஸ்திரங்களின் உண்மைத்தன்மையை அறியலாம்.
இதற்கு இந்து மதமும், சனாதனமும் (புனிதம் vs தீட்டு) விலக்கல்ல.
மேலும் சிசெக் கூறுகையில் ஒருவர் என்ன சொல்கிறார் , சிந்திக்கிறார் , உணர்கிறார் என்பதைவிட அவர் என்ன செய்கிறார் என்பதின் மூலமே ஒருவரின் நடவடிக்கையானது தீர்மானிக்கப்படுகிறது.
”கடவுள் இருந்தால் எதுவும் அனுமதிக்கப்படும்”.
(உ-ம்) மிகச் சமீபத்தில் அதாவது அக்டோபர் 2023ம் ஆண்டின் முதல் வாரத்தில் ஊடகத்தில் ஒரு திருமணத்தை விமர்சியாக்க இடம் பெற்று இருந்தது அது இதுதான்.
“மழை வேண்டி தவளைகளுக்கு திருமணம்” அந்த ஊர்மக்கள்
மேலதாளத்துடன் .திருமணத்தை நடத்தினர். கோவை அருகே உள்ள வேடபட்டியில் , இது போக கழுதைகளுக்கு திருமணம் மக்களின் இந்த மன விசாலத்திற்கு காரணம் நம்பிக்கையும், கருத்தியலும் தான்.
மனிதகுலத்தின் இயங்கும் தன்மைபற்றி (மனஅலசல்) உளவியல் கூறுவது, ”நாம் நிறைவு செய்து கொள்ளுகின்ற ஆசையின் (desire that
we Gratuify ) விளைவுகள் குறித்து எவ்விதமான அறிதலும் இன்றி ஆசையை நிறைவு செய்து கொள்ளுகிறோம்.”
மேலும்.சமூக மனத்தின் நானுனர்வு மகிழ்வு கோட்பாட்டை மையமாக கொண்டே நமது வாழ்க்கையை அமைத்துக் கொள்கிறோம். நாம் எதை விரும்புகிறோம், நமக்கு நன்மை பயப்பது எது என்று நாம் நினைக்கிறோமோ அதன் வழியில் நம் ஆற்றல்களை ”செலுத்துகிறோம்” அல்லது மறுக்கிறோம் என மகிழ்வு கோட்பாடு கூறுகிறது”, லெக்கான்.
மேலும் மகிழ்வு கோட்பாடு நான் (Ego) உணர்வு மேல் கட்டப்படுகிறது . நம்முடைய விருப்பங்களை அல்லது தேவைகளை கிட்டத்தட்ட பகித்தரிவுக்குட்பட்ட
விதத்தில் திருப்திபடுத்தி வாழ்க்கையை வழிநடத்துகிறது அல்லது ஒழுங்குபடுத்துகிறது – லக்கான்.
இதை மனதில் இருத்தினால் , சாதி , சனாதனம் போன்றவைகளின் துவக்கத்திற்கான
காரணங்களை புரியலாம் .
இப்போது , சனாதனம் , இந்து மதத்தைப் பார்க்கலாம் சனாதனம் வர்ணத்தை படைத்தது , இந்து மதம் சாதிகளை படைத்தது எனக் கூறலாமா ?
முதலில் மதமானாலும், சனாதனம் , கடவுள் என்றாலும் நம்பிக்கை சார்ந்தது. அவ்வளவே. ஆம் என்றாலும் , இல்லை என்றாலும் நம்பிக்கையே.
இருந்தாலும் சனாதனத்தைப் பார்க்கலாம் . வேத மரபு சார்ந்தது சனாதனம், கீதை சார்ந்தது சனாதனம் என்கிறார்கள்.
வேதம் தெரியாது (சமஸ்கிருதம் தெரியாது)
கீதையை எடுத்துக்கொள்ளலாம்.
அதன் பிறப்பிடமே போர்களம். நேரம் இருபடைகளும் எதிரே அணிவகுத்து நிற்கிறது. மாவீரன் அர்சுணன் எதிரிகளை கொன்று குவித்து வெற்றிக்கனி பரிக்க வந்துள்ளான். போருக்கு முன் யார் யார் என்னுடன் போரிட வந்துள்ளனர் என்று பார்க்க இரண்டு படைகளுக்கிடையில் நின்று பார்க்கவும் அப்போது அவனுடைய ஆழ்மனம் விழித்துக் கொள்கிறது. விளைவு அவன் பார்க்கும் பொருள்கள் தாத்தா, குரு , குலகுரு , அண்ணன் , தம்பி , பெரியப்பா மகள்கள் , மைத்துன்ன் மற்றும் உறவினர் , சொந்தம் தொடர் கதயாகி அவனின் காண்டிபம் தேரில் விழுந்துவிட்டது.
இந்த கனம்தான் கீதையின் காலமும், பிறப்பிடமும் ஸ்ரீகிருஷ்ணன் ஆரம்பிக்கிறார் , நோக்கமென்ன? அர்சுணன் கோழைத்தனத்தை நீக்கி , காண்டிபத்தை கையேந்த வைப்பதுதான்.
இந்த இடத்தில் திருமூலர் ஞாபகத்திற்கு வருகிறார்.
”மரத்தில் மறைந்தது மாமதயானை” என்பது அர்சுணன் என்ற மாவீரனின் எதிரிகள் என் காட்சிப் புலனில் மறைந்து உறவினன் ஆகிவிட்டனர்.. ஸ்ரீகிருஷ்ணனின் உபதேசம் அர்சுணனால் நீண்ட பயணத்தை மேற்கொள்கிறது. சனாதன கோட்பாளர்கள் 2ம் அத்யாயத்தில் சனாதனம் பேசப்படுகிறது என்று இதை ஆதாரமாக முன் வைக்கிறார்கள். அது அழிவற்றது , நிரந்தரமானது (etc.) இன்ன பிற இந்த அழிவற்றது , நிரந்தரமானது என்ற குறிப்பான்களின் (சொற்கள்) நோக்கமென்ன? சனாதனம் என்ற நம்பிக்கையையும் தாண்டி விசுவாசத்திற்கானது” என்றும் மாறாதது . என்று நம்மை நம்பவைப்பதற்கானது .
(M.G.R.
விசுவாசுகிகள் இன்றும் இரட்டை இலையை காப்பாற்றுவதே விசுவாசத்திற்கு அத்தாட்சி).
கீதையை நீதிமன்றங்களில் சாட்சிகளின் சத்யத்திற்கான மூலப் பொருளாய் வைத்திருக்கின்றனர். கீதையின் பல்வேறு கோணங்களில் உரையாடல் தொடர்கிறது.
அதில் முக்கியமானது அழிவது (சாவது) உடல்தான் ஆன்மா அல்ல என்பதுதான். இங்கே உடல் , ஆன்மா என்ற இரட்டைய நிலைநிறுத்துகிறார். ஆக கொலை செய்யப்படுவது உடல்கள்தான் , ஆன்மா அல்ல. ஆன்மா அழியாதது , நிரந்தரமானது என்பதுதான் கீரையின் வாக்கு.
அர்ஜூனைக்கு கொலைகாரன் என்ற உணர்வை ஊட்டுவதுதான் கீதை அதில் வெற்றியும் பெறுகிறார் கிருஷ்ணர் .
அர்ஜூன்ன் காண்டிபம் எடுத்தான் கீதையின் ”அருளால்”
வரலாற்று பார்வை ஒன்று குறுக்கிடுகிறது , அது ஹிட்லர் லட்சகணக்கான யூதர்களை கொன்று குவித்தது அவன் பாக்கெட்டில் நிரந்தரமாக என்றும் இருந்தது “பகவத்கீதை” எனும் நூல்தான். “சிசெக்”
அதாவது துரியோதனை அழிக்க காண்டிபம் ஏற்கவைத்தது கீதை.
ஜெர்மனியில் லட்சக்கணக்கில் யூதமக்களை கொன்று குவித்த ஹிட்லரின் கையில் கீதை என்னும் புனிதநூல்.
ஹிட்லர் கீதையில் என்ன கண்டிருப்பான் ?
சனாதான செய்தி தொடர்பாளர்கள் தான் கூறவேண்டும். சனாதனம் பிறப்பால் 4 வகை வர்ணம் என்று சொல்லவில்லை , மாறாக குணரீதியாக 4 வகை வர்ணங்கள் என சொல்ல ஆரம்பித்துள்ளனர்.
ஆகவே அதையும் அலசிப் பார்த்துவிடலாம்.
கீதை 18ம் அத்யாயம் 11.41.11
“பரந்தப! பிராமணர் , சத்திரியர் , வைசியர் , சூத்திரர் அவர்களிடம் சுபாவத்தால் காணப்படும் குணங்களுக்கேற்ப அவரவர்குரிய கர்மங்கள் வகுக்கப்பட்டுள்ளன”
சுபாவம் என்பது இயல்பில் விளையும் குணங்களின்படி என்பதை பார்த்தால் வெறும் குணத்தின் அடிப்படை” என்றாக தோன்றுகிறது.
உபநயனமென்பது இப்போது பிறப்பால்தானே நடைபெறுகிறது. போகட்டும் அடுத்தது. சூத்திரர்கள் ஒரு பிறப்பாளர் (உபநயனமில்லாதார் ) ஆதலின் வேதங்களை கற்க உரியவர்களல்லர்” ,
மேலும் 4 வகை வர்ணத்தாருக்கும் குணத்தையும் நிர்ணயிக்கப்படுகிறது.
பிராமணருக்கு சத்துவகுணம் , கூத்ரியருக்கு ரஜோ குணம் , வைசியருக்கு தமோகுணம் , சுபாவம் என்பது ஈசுவரனின் பிரகிருதியாகும். அது முக்குண வடிவான மாயையாகும். அப்படியானால் சூத்திரதிற்கு தனிக்குண மேதுமில்லை என்று தானே அர்த்தம் ? இதற்கு பதிலாக கீதை சூத்திரரருக்கு எனக்கூறுவது ரஜோ குணத்தைக் கீழாகக் கொண்ட தமோகுணம் என்கிறது.
”ஆதிசங்கரர் அருளிய கீதைப் பேருரை. கீதையில் சூத்திரர்கள் பற்றி போதிய விளக்கமில்லை. ஆகவே மனுதரும சாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி) சொல்வதென்ன என்று பார்ப்போம்.
ஆதாரம் . அசல் மனுதருமசாஸ்திரம் (1919 பதிப்பில் உள்ளபடி ) திராவிடர் கழக வெளியீடு.
413 பிராமணன் சம்பளம் கொடுத்தேனும் , கொடாமலும் சூத்திரனிடத்தில் வேலை வாங்களாம், ஏனெனில் அவன் பிராமணன் வேலைக்காகவே பிராமனால் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறானல்லவா ”
இதற்கு விளக்கம் எழுத வேண்டுமா ?
84 பிராமனன் பிறப்பினாலேயே தேவர்களுக்கும் பூசிக்கத் தக்கவனாகவிருக்கிறான், மனிதர்களுல் மிகவும் உயர்ந்துள்ளனர் .
மேற்கூறிய கருத்தமைவுகளால் கட்டப்பட்ட இன்றய பிராமணன், அன்றய பிராமணன் மனம் , சித்தம் , எப்படி இருக்கும். மெகலா மேனியாகத்தானே இருக்கும். உளவியல் ஆய்வை ஆங்கிலத்திலேயே கொடுக்கப்படுகிறது.
“MEGALOMANIA IS COMMONLY UNDERSTOOD AS A MENTAL
BEHAVIOR CHARACTERIZED BY EXCESSIVE DESIRE FOR POWER AND GLORY AND ILLOSORY
FEELINGS OF OMNI POTENCIAL THE LATTER CAN BE EXPRESSED IN THE
PSYCHOPATHOLOGICAL FORM OF DELVISIONS OF GROANDEUR” .
சனாதான பிரச்சாரக்காரர்களின் கூற்றை மனுதரும சாஸ்திரம் முகமூடியை கிழித்துவிடுகிறது. விமர்சனத்திற்கு முன் (மனஅலசல்) உளவியலாகப் பார்த்தால் சனாதனம் பார்பனனின் மேலாமண்மைக்கு அதிகாரத்திற்கானது என்பது வெளிப்படையாய் தெரிகிறது. மற்றொன்னு, மற்றவர்கள் பார்ப்பனரின் சுதந்திரம் (Desire) ஆசை இரண்டும் ஒரு சேர “மாபெரும் சக்தியால்” காயடிக்கப்படுகிறது.
வர்ணாசரம் பார்ப்பனரை தவிர்த்து (3 வகை) சாதிப்பிரிவினை என்பது மாபெரும் சக்தியின் (Sadism) பிறரை துன்புறுத்தி இன்பம் காண்பதாகும்.
இந்த சேடிசம் இந்து மத சாதிகளில் கீழ்நோக்கிச் செல்லச்செல்ல காத்திரமாகி தலித்களிடம் வரும் போது கொடும் துன்பம் விளைவித்து இன்பம் காண்பதில் பிற இதரர்களுக்கு பங்கு இருக்கிறது.
பார்ப்பனியத்தின் , பிற உயர்சாதியினரின் மேலாண்மை கருத்தியலும் ,ஆதிக்க சாதிகளின் பலாத்காரமும் தலித்துகளை மீளாத்துயரத்தில் ஆழ்த்துகிறது.
வர்ணத்தை சாதியத்தை ஏற்றுக்கொண்டு வாழ்பவர்கள் மசோகிசத்தால் (MASOCHISM) இன்புருகிறார்கள். அதாவது மாபெரும் சக்தியிடம் தங்களை ஒப்படைத்துவிட்டு, ஒடுக்கப்படுவதால் ,மேலாமண்மை சொல்லும் விழும்பியங்களால் அனைத்து வகை துன்பங்களை அனுபவித்து அதை இன்பம் என அடைகின்றனர்.
அதாவது ஒடுக்குவதாலும் இன்பம் , ஒடுக்கப்படுவதாலும் இன்பம் இந்தப் போக்கை SADO
MASOCHISM என உளவியல் கூறுகிறது. இது உண்மைதானே!
”நான் நிரந்தரமானவன் , அழிவற்றவன் என்பது கிருஷ்ணனின் பிரகடனம். அதையே சனாதனம் தனதாக்கிக் கொள்வதால் விசுவாசத்திர்குறிய தாக்குகின்றனர்.
இந்து மதத்தை , சனாதனத்தை கட்டுடைப்பது இன்றய காலத்தின் கட்டாயம்.
பள்ளிச் சிறுவர்கள் தங்களின் புது அடையாளமாக சாதிக்கான அடையாளக் கயிறை கட்டிக் கொண்டு பள்ளியில் சக தாழ்த்தப்பட்ட நிராகரிக்கப்பட்ட மாணவர்களை தாக்குவதென்பது நடைபெற்றிருக்கிறது.
கிரிக்கெட் விளையாட்டில் விளையாட்டு வீரர்களின் பெயர் சர்மா , அய்யர் யாதவர் போன்ற சாதிகளின் பெயர்களை தங்கள் பெயரில் ஒட்டவைத்துள்ளனர்.
இனி எந்தெந்த துறைக்கு சாதிப் பெர்கள் வரப்போகிறதோ தெரியவில்லை.
இனி நடப்பது புதிய நிகழ்வாக இருக்க வேண்டும். ”நிகழ்வு என்பது நிலவும் மேலாமண்மை ஒழுங்கை அழித்தொழிப்பது. புதிய ஒழுங்கை வரையறுப்பது ஆகிய இரண்டையும் கொண்டிருக்க வேண்டும்” மேலாண்மை கருத்தியலும் , ஆதிக்க சாதிகளின் வன்முறையும் ஒரு நாணயத்தின் இரண்டு பக்கங்கள்.
மேலும் விளையாட்டு , கிரிக்கட் தளத்திலிருந்து சாதி மதத்தின் அடையாளமாக மாறிவருகிறதோ என்ற அச்சம் தோன்றுகிறது.
சமீபத்திய கிரிக்கட் விளையாட்டியில் இந்தியாவுடன் விளையாடிய பாகிஸ்தான் வீரர்களைப் பார்த்து ஜெய்ஸ்ரீராம் என கோசமிட்டு, கேலி செய்துள்ளனர். தங்கள் மத மேலாண்மையை கோசமாக்கி மகிழ்ந்துள்ளனர் ரசிகர்கள்.
இதர மதங்களின் மேல் இந்துமத வெறுப்பின் விளைவு கிரிக்கெட் ரசிகர்களையும் விடவில்லை. இடம் மோடி மைதானம் , குஜராத். வேறு ஏதாவது ஞாபகத்துக்கு வருகிறதா? (குஜராத் மதக்கலவரம் ?
இன்றய காலத்தின் தீங்குகளாக கீழ் கண்டவைகளைக் கூறலாம்.
Ø “என்றும் மாறாதது என்பது மெய் அல்ல அது போலித்தோற்றம்.
Ø தீட்டு என்பது பிறப்பின்பால்பட்டதில்லை. பார்பன , மேல் ஜாதியினரின் நலனுக்காக மேலாதிக்கத்திற்கானதாக உள்ளது.
Ø பேர் தெரியாத , மக்கள் புழகத்தில் இல்லாதவர் ஒன்றை (சனாதனம்) வலுக்கட்டாயமாக புகுத்துவது பெரும் கேடாகும்.
இந்த மூன்றும் (EVIL) தீங்காகும்.
சனாதனத்தை (அரூபம்) யதார்த்தமாக்க இந்தியாவை , பாரதம் என்பதும் , கங்கை இராமர் கோவில் என்பதும், இந்தியாவை இந்து நாடாக்க முயற்சிப்பது, நவீனத்தின் தலைவராக படேலுக்கு வானுயர சிலை , குஜராத்தில் கிரிக்கெட் உலகின் மாபெரும் விளையாட்டு மோடி மைதானம் இன்னும் பிற மெல்ல மெல்ல அரூபத்தை ரூபமயமாக்கல். நடைபெற்று வருகிறது. மேலும் இந்தியா முழுவதும் சூப்பர் விரைவு வண்டியாக வந்தே பாரத் பெயரில் புதுவகையான நளினமான, அழகுமிகுந்த ரயில்களின் அறிமுகம். அதுவும் அதிவிரைவு ரெயில்கள் இந்த ரயில்களின் வேகத்தை கூட்டி காண்பிக்க வேண்டி ஏற்கனவே உள்ள மிகு வேக ரயிலின் வேகத்தை குறைப்பது போன்ற நடவடிக்கை தொடர்கிறது.
இதர மதங்களை காயடிக்கும் முயற்சிச மெல்ல மெல்ல வளர்ந்து வருகிறது. உதாரணம் பொது சிவில் உரிமை சட்டம் , முகமதியர்களின் தனி உரிமை பறிக்க எத்தனம், மேலும், ஒரே மொழி சான்ஸ்கிரிட் , ஹிந்தி ஒரே தேசம். இனி அகண்ட பாரதத்தை நோக்கி படை நகர்த்துதான் நோக்கம். நோய்க்கூறு சுயமோகத்தால் இந்து தத்துவவாதிகளும் , அரசியல் தலைவர்களும் பலத்த ஓசையை எழுப்பி வருகின்றனர்.
ஒரே பூமி! ஒரே குடும்பம்!! ஒரே எதிர்காலம்!! இது G2ம் உச்சிமாநாடு இந்தியாவில் நடக்கும் போது இந்திய அரசு வைத்த முழக்கம்.
இந்திய கிராமங்களில் ஒரே பூமி என்பதை நடைமுறைபடுத்த முடியவில்லை. தலித்துகள் ஊருக்கு வெளியே காலனியாக வாழ்ந்து கொண்டுள்ளனர். அதுவும் நிராகரிக்கப்பட்ட தீண்டத்தகாத மக்களாக ஆதிக்க சாதிகளால் நடத்தப்படுகின்றனர். இங்கெல்லாம் , வேலைகளில் ரிசர்வேசன் பாராளுமன்ற தேர்தலுக்கு ஓட்டளிக்கும் சுதந்திரத்தோடு நிறுத்திக்கொண்டு சமூக உறவுகளுக்கு இடையில் என்ன நடக்கிறது என்பதை பார்ப்பதில்லை. தங்களுக்கான ஆதரவு சக்தியாக மாற்றுவதில் தான் அதிகார அமைப்புக்கு கண்ணாயிருக்கிறது, மற்றொரு கோணத்தில் பார்க்கலாம்.
அங்கீகாரம் அடையாளம்.:-
சாதி என்பது ஒரு அடையாளமும் கூட. இது இயற்கையானது அல்ல. அது ஒரு சமூக உருவாக்கம் அடையாளத்தை பெறுதல் என்பது அடிப்படையான அங்கீகரித்தலாகும். இங்கு சாதிகளுக்குகிடையில் பரஸ்பர அங்கீகாரம் உள்ளது. சாதி அடையாளம் தனித்தனியே உள்ளது. அவரவர் அடையாளத்தை மீற முடியாது. அப்படி மீறினால் இதரரின் அங்கீகாரம் கிடைக்காது. மீறல் என்பது இலக்கன பிழையாகவிடுகிறது. மீறியவர்கள் ஒதுக்கப்படுகின்றனர். தண்டிக்கப் படுகின்றனர்.
ஒருவருக்கொருவர் அங்கீகாரம் முக்கியமானது. இதுவே ஒருவகையினரின் அடையாளத்தையும், உறவினுடைய இயல்பையும் தீர்மாணிக்கிறது. பிறருடைய அங்கீகாரத்தின் மூலமே சமூக உறவில் தனக்கான களத்தை பெறமுடியும். (லெக்கான்)
இந்த வகை அதிகார அங்கீகார உரிமை மேல் சாதியினரை தாங்கள் எஜமானர்கள் என்ற கற்பனையில் சுகமடைகிறார்கள். கீழாக்கப்பட்ட சாதியினர் தங்களை தாழ்ந்தவர்களாகவே மதிமயக்கத்திற்குள்ளாகிறார்கள்.
( ஆனால் எஜமான் அடிமை உறவில், அடிமைகளுக்கு விடுதலை உணர்வு இருக்கும். )
சாதி உறவில் இது நடைபெறுவதில்லை. தங்களைத் தாங்களே மௌனத்தில் மூழ்கடித்துக் கொள்கின்றனர். சாதியின் கடைசி கல்லுக்கூட குலரீதியில் உயர்ந்தவன், தாழ்ந்தவன் என்று பேதம் பார்த்து வாழ்கிறார்கள். பார்ப்பனியம் இவ்வளவு வீர்யமான நஞ்சாக இருக்கிறது.
இந்து மத்த்தில் தீட்டு என்ற பிம்பம் அடிப்படையாகும்.
இந்துக்கள் அனைவருமே நனவிலியாகவே தீட்டு என்ற பிம்பத்தை காணுகிறார்கள். இந்து குழந்தை பிறப்பதற்கு மன்னரே, மொழியிருக்கிறது. மொழியில் தீட்டு, சாதி, நிராகரிப்பு உள்ளது. (Castration) காயடிப்பு தொடக்கத்திலே நானுர்வு (Ego) ஏற்படும் போதே தீட்டு அறிமுகமாகிவிடுகிறது.
இப்படி தொடக்க காலத்திலே உருவான தீட்டு என்ற எண்ணம் ,கருத்து நஞ்சாக நினைவில் இடம் பிடித்து விடுகிறது.
v தலித் என்ற கருதுகோள் இதர சாதிகளின் ஆழ் மனத்திலிருந்து எப்படி வெளியேற்றுவது என்பது பெரும் கேள்வியாக உள்ளது.
v பார்ப்பனிய கருத்தமைவை எதிர்பது , புரிந்து கொள்வது சாத்யமாய் உள்ளது.
v ஆனால் ஆதிக்க சாதிகளின் கொலை வெறி தீண்டாமையை, கிராமங்களில் சமத்துவம் இன்றி சுயமரியாதை இன்றி ஒருவொருவரை மதித்தல் எக்காலம் ? எப்படி. ? தலித் மனதில் உண்டாக்கப்பட வேண்டும் ,
அடங்கமறு அத்துமீறு!! போன்றவைகள் வலுவிழந்துவிட்டதாக தோன்றுகிறது.
-காமு- -நிசாகந்தி-
©மற்றமை - நவம்பர் 2023