11 Mar 2015

இவர்களில் யார் குற்றவாளி ?


B B C-யின்...?
“A girl is far more responsible for rape than boy”.
            இதைச் சொன்னவன் பெண்ணை-அவளை-உடலாக மட்டும் பாவிக்க, அனுபவிக்க அவன் சூழலால்,மொழியால் வழிகாட்டப்பட்டவன்.

            அவன் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டவன். ஆனாலும் மேலே கூறிய பேச்சு அவன் பிரக்ஞைபூர்வமாகக் கூறப்பட்டிருக்கிறது.Boy ’என்று கூறியது பொதுவான ஆளையல்ல.தன்னைத்தான் ‘ Boy ’ என்கிறான். அவன் திமிராகப் பேசவில்லை. அவன் நனவிலி(unconscious) ஆசையைத்தான் நிறைவேற்றிக்கொண்டான் (தடை செய்யப்பட்டது).ஆனால், தடை செய்யப்பட்ட ஆசையை மீறுவதற்கான தூண்டல்,மயக்குதல் அதிகமா? அல்லது சமூக ஒழுக்கத்திற்குக் கட்டுப்பட்டு நடக்கத் தூண்டும் முன்மாதிரிகள் அதிகமா? ( சினிமா,சின்னத்திரை, நுகர்வுக்கலாச்சார விளம்பரங்களைப் பார்க்க ).
      சமூகப் பிரக்ஞையில் கூட பெண் என்பவளை Grandeur Self ஆகக் காட்டுவது ( காளி, பராசக்தி,லெட்சுமி ); பெண் அப்படியாக இருக்கவேண்டும் என்ற ஆசையின் புனைவுதான் (Fantasy) அது.
      ஆனால்,எதார்த்தத்தில் பெண்களை தன்னிலைகளாகப் பார்ப்பதில்லை.மாறாக, ஆசைக்கான பொருளாகப் (object)  பார்க்கப்படுவதுதான் எதார்த்தம்.
            டெல்லியில் தினந்தோறும் ஐந்து பெண்களாவது வல்லுறவிற்கு ஆளாகிறார்கள் ”.
                                                        –www. New Indian Express.com.5-3-2015.
      [ அதாவது கேஜ்ரிவால் முன்னுள்ள பிரச்சினையாக்கப்பட்டுவிடும் இனி ]
      மேலே படித்தது, டெல்லியில் அன்றாட வாழ்வின் ஒரு அங்கம் அது.
      அந்தக் குற்றவாளியின் சொந்த வார்த்தை அல்ல அது.
            பலாத்காரத்திற்கான பொறுப்பு பெண்ணுக்குத்தான் அதிகம்? ஏன்? சமூகத்தில்,மொழியில் உள்ள மற்றொரு பரிமாணம் “ Sexual hierarchy ”. –பாலினப் படிநிலைஅமைப்பில் ஆண்கள் உச்சாணியில்.
            மொழியில் ( நாவலில்) “ எல்லாப் பொம்பளைகளும் இன்னிக்கி தேவடியாள்தான் ”.
      இதை ஆண்கொழுப்பு என்பதா? அல்லது படைப்புச் சுதந்திரம் என்பதா?

      அந்தக் குற்றவாளிக்கான வக்கீலின் கூற்று இன்னும் ஒருபடி மேல். அவருடைய லட்சியம் (ideal) இப்படிச் சொல்லுகிறது:
     தெருவில் இனிப்பை வைத்தால் நாய் வந்து தின்னத்தான் செய்யும் (வக்கீல் சர்மா)
                                                   -www.Times of India.indiatimes.com              
      இரவில் பெண் நடமாடினால் மிருகங்கள் அவர்களை தின்னலாம் என்கிறார் வக்கீல்; அவர் (இன்னும் நிறைய பேர்) வயிறு மட்டும்  இருக்கும் ஆசாமி. புலி வேட்டைக்கு ஆசி கூறுபவர்கள் இவர்கள்.
      A.P. சிங் என்ற மற்றொரு வக்கீல் சிந்திய புனிதம் :-
      என் மகளோ அல்லது தங்கையோ திருமணத்திற்கு முன் இதுபோன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தால், அவமானப்படுத்தப்பட்டிருந்தால், நான் நிச்சயமாக, அவளை என் தோட்டவீட்டில் வைத்து,என் குடும்பத்தார் முன்னிலையில்,பெட்ரோல் ஊற்றி,தீவைத்து கொளுத்திவிடுவேன் என்கிறார்.                                                                                      www.in.news.yahoo.com
            ஜாக்கிரதை. இந்தப் புனிதவாதம்தான் தினந்தோறும் நடக்கும் கௌரவக் கொலைக்குத் தூண்டுகோல் / காரணம். இதுதான் காரணம். இந்த வல்லூறுக் கலாச்சாரத்தின் தொற்று இங்கிருந்து தான் நாடெங்கிலும் பரவுகிறது. இதை நடைமுறைப்படுத்துபவன் வெறும் கிரிமினல் குற்றவாளி.
      இந்தக் கருத்துருவங்களை பரப்பும் நெறி (ஒழுக்கமல்ல) யற்ற தன்னிலைகளை இ.பி.கோ. என்ன செய்யும் ? 
                  பெண்ணாகப் பிறப்பதில்லையாம். பெண்ணாக ஆக்கப்படுகிறாளாம்  .
      யாருக்காக? ஒரு தாவரம். பூ கூட முதலில் தன்னைத் தானே விருத்தி செய்துகொள்ளத்தான் பூக்கிறது. ஆனால், பெண் ?
     
பெண் மீது பலாத்காரம் செலுத்துபவன் மட்டுமே குற்றவாளி என்று தண்டிப்பது  அவன் செயலுக்கானது. இம்மாதிரியை நியாயப்படுத்தும் விழுமியங்களையும், கருத்துக்களையும் அன்றாடம் பரப்பும் மொழியை என்ன செய்வது ?

      இம்மாதிரி ( குறிப்பான்கள் ) மொழியில் இல்லாவிட்டால் இனியாகும் மனிதர்களில் (ஆண்-பெண்) உடல் வித்தியாசம் மட்டும்தானே மிஞ்சும். மேலாண்மை அதிகாரம் இருக்காதல்லவா? விவாதிப்போம்.
க.செ
©the author