27 May 2019

விழித்துக்கொள்வோம் !!

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எதிர்க்கட்சிகளின் சுயமோகப்பித்தால் வலிமையான ஐக்கிய முன்னணியைக் கட்டமுடியாததால், மக்கள் அகவய நிலைப்பாட்டுடன் வாக்களித்து தாமரையை உயர்த்திப்பிடித்து விட்டனர் (குறிப்பாக வட இந்தியாவில் ).பழைய பாட்டு ( முழக்கம் ) ஒன்று நினைவுக்கு வருகிறது..” வடக்கு வாழ்கிறது “….
பிரதமர் மோடியின் தற்போதைய மனநிலையை ப்ராய்டின் மொழியில் சொன்னால்  ”Oceanic Feeling ”ல் மோடி இருக்கிறார் எனலாம்.
       ” ஓசியானிக் ஃபீலிங் என்பது எல்லையற்ற சுயமோகத்தை மீண்டும் கொண்டுவருவது போன்ற……ஏதோவொன்றைத் தேடுகின்ற எண்ணமாகும் / உணர்வாகும்”                                                                                       -கென்பெர்க்.(Kernberg)
       இந்த ஓசியானிக் ஃபீலிங் நிலையை முனைவர் கென்பெர்க் சுயமோகப் பரவசம்             ( Narcissistic Elation ) என்று மொழிந்தார்..
இந்த மனநிலையின் ஒரு பக்கம் சம்பந்தப்பட்ட நபருக்கு தேவைகள் அல்லது ஆசைகள் இல்லாத பரிபூரணமான சமநிலை மாறாத் தன்மையைக் குறிப்பிடுகிறது. மற்றொருபுறம்….          ” தன்னைத்தானே உயர்வாக , மாபெரும் ஆளுமையாக எண்ணிக்கொள்ளும் மனநிலையும் உண்டு” என்கிறார் லக்கான்.
………” இந்த தன்னை மறந்த நிலையானது ,மிகவும் பொய்யான கோரிக்கைகளை ( the most  false of demands ) உருவாக்குகிறது “ ( அதே கட்டுரை )
இப்படி தன்னிலை இருக்க , 24-5-2019 காலையில் மோடியின் கூற்றாக , தொலைக்காட்சியில் எழுத்தாக ஓடிக்கொண்டிருந்த நேரத்தில் ஒரு சிறு துண்டுச் செய்தி:  “ புதிய இந்தியாவை உருவாக்க மக்கள் வாக்களித்துள்ளனர் “ –மோடி என்கிறது. இதை ஒரு வார்த்தையாக எண்ணினால் – புதிய இந்தியாவை - ,முட்டாள் பட்டத்தை முழுமையாக, அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.  ஏனெனில், புதிய இந்தியா என்ற சொற்கள் ஒரு கருத்து—கருத்தியல்- ( Ideology ). இது ஒரு கருவியாக இனிச் செயல்படும். இந்தக் கருத்தியலானது மேலாண்மை உறவுக்கான அடித்தளமாகும்.
தேர்தல் காலக் கட்டத்தில் இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டதாகத் தெரியவில்லை.
மிகப் பெரிய வெற்றிப் பரவசத்தில், புதிய மந்திரிசபைக்கான பிரதம மந்திரி பதவி ஏற்காமலேயே “ புதிய இந்தியா “ என்ற கருத்தாடல் சமூக அரசியல் தளத்தில் பரப்புரையாக வெளிவந்து விட்டது .
இந்த “ புதிய “ இந்தியா ஒருபக்கம் இருக்கட்டும் .” பழைய ” இந்தியா என்னவாயிற்று? பிரான்சின் ரஃபேல் போர் விமானப் பிரச்சினையில் தார்மீக நெறிகளுக்கு உட்பட்டவர்கள் யார்?யார்?.
பழைய இந்தியாவின் வங்கிகளில் கடன் என்ற பெயரில் கோடி கோடியாய் கொள்ளையடித்தவர்களின் நிலை என்னவாயிற்று?
எண்ணெய்க் கிணறுக்காக நெல் வயல்களை பாலையாக்கும் விவசாயிகள் / மக்கள் விரோதத் திட்டம் என்னவாயிற்று? 
தூத்துக்குடி ஸ்டெர்லைட்  துப்பாக்கிச் சூடும், அந்த ஆலையை நிரந்திரமாக மூடுவதும் என்னவாயிற்று ?
மோட்டார் கார் தொழிலுக்கு அனுசரனையாக எட்டுவழிச் சாலை, நான்குவழிச் சாலை எனும் பெயரில் நஞ்சை நிலங்களை பாலையாக்கும் திட்டங்கள் என்னவாயிற்று?
ஓசியானிக் பிரதமர் மோடிக்கு இனியாகும் இந்தியத் திட்டத்தில் நண்பர்கள் மக்களா….அம்பானிகளா ?  
புதிய பிரதமரிடம் ஒரு வேண்டுகோள் ; புதிய இந்தியத் திட்டத்தை முதலில் வல்லுநர்கள் கையில் கொடுப்பதற்கு முன் மக்கள் மன்றத்தில் வைத்து கருத்துக் கேட்கும் ஜனநாயகத்திற்கு முன்னுரிமை கொடுக்கவேண்டும் என்ற மக்கள் குரல் சும்மா அதிரவைக்குமாறு செயல்பட்டால்தான் , அப்போதுதான் “ நவ இந்தியாவின் “ அங்கலட்சனத்தை அறிந்து / புரிந்து கொள்ளமுடியும்.
க.செ                                                          
  

2 comments:


  1. நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில், மக்களின் வாக்கைக் காட்டிலும், தேர்தல் கமிஷனின் "உள்குத்து" வேலைதான், பெரும்பான்மையான வெற்றியை பா.ஜ.க.வுக்கு தந்தது. எங்கெல்லாம், அளவுக்கு அதிகமான எதிர்ப்பு இருந்ததோ, அங்கு மட்டும்தான், அவர்கள் தங்கள் 'கைவரிசை'யை காண்பிக்கவில்லை. உதாரணமாக, பஞ்சாப், கேரளா மற்றும் தமிழ்நாடு. தமிழ்நாட்டிலும், பா.ம.க. மூலம் சாதி கலவரத்தைத் தூண்டி, மாநிலம் முழுதும் பரவவைத்து, மக்களை திசைதிருப்பி, தில்லுமுல்லு செய்ய நினைத்தார்கள். ஆனால், பலிக்கவில்லை. விழிப்புடன் இருந்ததால், மதுரை, மயிரிழையில் தப்பியது. எவ்வளவுதான் விழிப்புடன் இருந்த போதிலும், தேனியில் யாரும் கேட்காமலேயே மறுதேர்தல் நடத்தி, ரவீந்திரநாத்தை வெற்றிபெற வைத்தனர். ஒ.பி.பன்னீர்செல்வம் குடும்பத்துடன் காசி யாத்திரை சென்று, தவமிருந்து, வரம் வாங்கிவந்ததன் பலன் அது! நினைத்திருந்தால், அன்புமணி ராமதாஸையும் வெல்ல வைத்திருப்பது பெரும் கடினமல்ல. தன் பக்கமே, 'கோல்' போட்டவரை எதற்கு வெற்றிபெற செய்வது? அவருக்கு எதிரான பழைய வழக்குகள் விரைவில் புதுப்பிக்கப்படும். காலில் விழுந்தால், ஒருவேளை தப்பலாம்.

    அ.தி.மு.க. தன்னுடைய ஆட்சி கவிழ்ந்துவிடக்கூடாது என்று, பாராளுமன்றத் தேர்தலைக் காட்டிலும், இடைத்தேர்தலிலேயே தன் கவனத்தைச் செலுத்தியது. பணத்தை வாரி இறைத்தது. அ.ம.மு.க. விற்கு ஒரு ஓட்டு கூட சில பகுதிகளில் கிடைக்காதவாறு, வாக்கு இயந்திரங்களை 'சரிபார்த்து'விட்டனர்.

    மோடி முன்முகம், அமித் ஷா பின்முகம். எல்லா வேலைகளையும் செய்வது அமித் ஷாதான். "புதிய இந்தியா" எனும் சொல்லாடல் பயமுறுத்துகிறது. அது 'வறுமையற்ற இந்தியா', 'வேலைவாய்ப்புள்ள இந்தியா' என்பதாக தோன்றவில்லை. 'எதிர்ப்பே இல்லாத இந்தியா', 'சிறுபான்மையினர் அடங்கி ஒடுங்கும் இந்தியா', 'பன்னாட்டு முதலாளிகளின் இந்தியா' என்றே ஒலிக்கின்றது.

    அமித் ஷா, உள்துறை அமைச்சர் என்பதால், பல 'அகமதாபாத்'களும், 'கொழும்பு'களும் நிறைவேறும் நாளும், தூத்துக்குடியிலும், தஞ்சை மண்ணிலும், தண்ணீருக்கு பதிலாக, செந்நீர் ஓடும் நாளும் வெகுதொலைவில் இல்லை என்றே தோன்றுகிறது.

    நாட்டின் முற்போக்கு கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர்ந்து நின்று, அவர்களின் அசைவுகளை கூர்ந்து கவனித்து, முன்னெச்சரிக்கையுடன் கூடிய நடவடிக்கைகளை விரைவாக எடுத்தால்தான், அவர்களின் ஆட்டத்தை, நிறுத்தவோ அல்லது குறைக்கவோ முடியும்.

    ReplyDelete
  2. கட்டுரை புரியும்படி உள்ளது.
    தொடர்ந்து எதிர்பார்க்கிறோம்

    ReplyDelete