9 Apr 2015

எது கௌரவக் கொலை ?

அண்மையில் பெரும்பாலான வடமாநிலங்களிலும், பிற்படுத்தப்பட்ட சாதிப் பெண் தாழ்த்தப்பட்ட சாதி ஆணை திருமணம் பண்ணிவிட்டால் ‘ லட்சுமணன் ’ கோட்டை மீறிய பெண்ணை எப்படியும் கண்டு பிடித்து பெண்ணின் தகப்பனாரோ, உறவினரோ அப்பெண்ணைக் கொன்றுவிடுவதற்கு பத்திரிக்கைகள் கொடுத்துள்ள பெயர்தான் ‘ கௌரவக் கொலை ‘ ( honour killing ).
          கௌரவம் என்பது ஒரு நம்பிக்கை சார்ந்ததுதானே; விழுமியம்தானே. கௌரவம் என்பது ஏதோ Real  மாதிரியும் / எதார்த்தம் மாதிரியும், அதைப் பறிகொடுத்தவர்-பெண் தந்தை-இழந்ததை மீட்பதற்காக தன் மகளைக் கொன்று / தீ வைத்து கௌரவம் மீட்டெடுக்கப்படுவது மாதிரியான சித்தரிப்புத்தானே.
          கௌரவம் அடிப்படையில் மனம் ’ சார்ந்ததுதானே.

          வக்கிர சுயமோக காயத்தால் ஏற்பட்ட பாதிப்பால்( affect ) ஆதார இச்சையின்( Id ) உந்தலால், மற்றமையின் ( Other ) அதாவது சமூகக் கலாச்சாரம் இப்படி நடப்பதை-கொலை செய்வதை-விரும்புவதாக கற்பனை செய்து கொண்டு ( fantasize ), கொடூரத்திற்கு அந்தத்தன்னிலை ஆட்பட்டு, மகளை அழித்தொழிக்கிறது. இதில் எங்கே கௌரவம் இருக்கிறது? சாதியே ஒரு புனைவுக் கலாச்சாரத்தால் / தந்தை அதிகாரத்தால் / மொழியால் கட்டப்பட்டு, ஊட்டிவளர்க்கப்பட்டு, ஒரு பெயரும், அவன் / அவளுக்கு சாதி அடையாளமும் பிதுரார்ஜித சொத்தாக எல்லோருக்கும் வழங்கப்படுகிறது. கௌரவம்  என்பது   மனம் ; நம்பிக்கை. அவ்வளவே.         
          ஆனால் , தமிழகத்தில் கௌரவ கொலைகளே இல்லையென்று தமிழக முதல்வர் அறிவித்துவிட்டார். ( ஏற்கனவே தமிழகத்தின் கௌரவமே கொலை செய்யப்பட்டிருக்கிறது என்பதை உணர முடியாதவராக இருப்பவர் நிஜக் கொலைகளையும் மறுத்துவிட்டார் ).
          சாதாரணமாக, தன் மகளைக் கொல்வது என்பது சட்டப் பிரச்சினை, கொலைக் குற்றம், கோர்ட், தூக்கு, ஆயுள் தண்டனை, போதும், போதும்.
          ஆனால், தாழ்த்தப்பட்ட சாதி ஆணை மணந்ததற்காக பெண் கொலை செய்யப்படுவது என்பது முற்றிலும் வேறானது. முதலில், கொன்றது மகளை மட்டுமல்ல; மனித நாகரீகத்தையும் சேர்த்துத்தான் அது நடக்கிறது.
          இந்தக் கொலை மூலம் யாருடைய கௌரவம் காக்கப்படுகிறது?
          மனிதன் பிறக்கும்போது எந்த அடையாளத்துடன் பிறக்கிறான்? அடையாளம் என்பதுவே ஒரு கண்ணாடிப் பிம்பம்தானே ( illusion ) ; கானல் நீர்தானே?
          லக்கானின் மொழியில் சொன்னால், மனிதர்கள் ( human beings) உள்ளார்ந்த அல்லது
உண்மையான அடையாளம் எதையும் கொண்டிருக்கவில்லை ” (do not have an inherent or true identity ).                            
          லக்கானைப் பொருத்தவரை, மனித தன்னிலையாக்கமானது ( human subjectivity ) தனிமுதலான ( original ) அடிப்படையான ( radical ) அடையாளம் இல்லாமை ( lack of identity ) என்பதைக் கொண்டு விளக்கப்படுகிறது. நாம் யார் என்பதை நமக்கு நாமே புரிந்து கொள்வதற்கும் உள்வாங்குவதற்கும் முயற்சிக்கிறோம்.
           இப்படியாக இருக்க விருப்பம் ’ ( want to-be ) என்கிற மனிதர்களைப் பற்றி லக்கான் குறிப்பிடுகிறார்.
          அடையாளப்படுத்திக் கொள்ளல் ( identification ) என்பது குறிப்பான அகவுணர்வு முழுமையை அடைவதற்கான ஒரு வழிமுறையாகும் ( identification is a means of acquiring a greater subjective completion ).
          ஆனால், ஒரு அடையாளத்தைப் பெறுவதற்கு ஒருவர் மற்றொருவரை நாடவேண்டியது அவசியமாகிறது. ஆக, மற்றொரு நபருடன் உறவு கொள்ளும்போது மட்டுமே ஒருவரால் தனது அடையாளத்தைக் கோர முடியும். (லக்கான் 1979 )
          மீண்டும் இதை ஒருமுறை படித்துக் கொள்ளவும்.ஒரு கொலைக்கான தூண்டல், சக ஜாதிக்காரர்களின் அங்கீகாரத்திற்காக மகளைக் கொன்றுவிட்டு தன்மீது படிந்த  ஈனத்தை ’ கழுவிவிட்டதான illusion, delusion -ல் எஞ்சிய வாழ்வை மார்தட்டித்திரியலாம்
          மற்றொன்றும் கவனிக்கவேண்டிய ஒன்று.
           பிற்படுத்தப்பட்ட,தாழ்த்தப்பட்டவர்களுக்கிடையிலான (BC,SC) ஒப்பந்தத்தை மாப்பிள்ளைப் பையன், மகள் மீறிவிட்டதாக எஜமானத்துவம் அடிமைகள் மீது (மகள், தாழ்த்தப்பட்டவர்கள்) பாய எத்தனமும் ; சாதி ( master signifier ) அடுத்த தேர்தலுக்கான அமைப்பு வேலையாகவும் இதைக் கருதக்கூடும்.
          கொலைகளைத் தடுக்க கூடுதல் சட்டம் கேட்பது ஒருபுறம் சரி.
          மறுபுறம், இதை சட்டஒழுங்குப் பிரச்சனையாக குறுக்கக் கூடாது ( இது பொருளாதாரவாதம் ).
          ஏனெனில், இது போன்ற திருமணங்கள்  புதிய  விடியலுக்கான ஒரு  குறியீடாகக் கூட  
( symptom )   இருக்கலாம். யார் கண்டது. விழித்துப் பார்ப்பதற்கு, உற்றுக் கேட்பதற்கான நேரம் இது.
          வீட்டில் கலாச்சார விதிகள் மீறப்படும்பொழுது ,
          மாற்றத்திற்கான முயற்சி அல்லது வேறு ஒரு அமைப்பு முறையில் ( frame ) குடும்பக் கட்டமைப்பிற்கு தயாராவது, சாவுக்கும் தயாராய் இருப்பது ஒரு  குறியீடு  ( symptom ) இல்லையா?
          இதை நவசக்திக்கான குறி ( sign ) என்று ஏன் நினைக்கக்கூடாது? .
          பெண்களுக்கு, தங்கள் தேவையை ( demand ) தாங்களாகவே தீர்மானிக்கும்     Symbolic Phallus ( குறியீட்டு அதிகாரம் ) வேண்டும்.
          பெண்களுக்கு மகிழ்வு [ jouissance ] சுதந்திரம் வேண்டும். காமசுகம் அல்ல.
          நாம் ஒரு புதிய துவக்கத்திற்காக காத்திருப்பதும் ; சாதியத்தை, தந்தை அதிகாரத்தை மீறும்பொழுது உடனடியாக ஒரு காத்திருக்கும் வீடு, தைரியம் சொல்லி, உடனடி உதவிகள் அளிக்க புதுயுக நண்பர்கள் முன்னணி வேண்டும்.
          இந்த புதிய பறவைகளுக்கு ஒரு புதிய உலகு-தங்களைத் தாங்களே தீர்மானித்துக் கொண்டு, சமூக உறவு கொள்ள-அமைப்பும், அது பற்றிய கனவுடன் புறப்படும் அவர்களை ’குலவை’ போட ஆள் இல்லாவிட்டாலும், ஒரு big hallo ’ சொல்ல, வாழ்த்த, புன்முறுவலுடன் காத்திருக்கும் ஒரு நவயுகத்திற்கான முன்னணி தமிழகம் முழுவதும் அமைப்பதற்கான, விவாதிப்பதற்கான நேரம் வந்துவிட்டது.
          வாருங்கள்.விவாதிப்போம்.
          [ குறிப்பு : இநத கௌரவக் கொலை என்ற வார்த்தைக்குப் பதிலாக சித்தத்தையும் வெளிப்படுத்துவதுமாதிரி ஒரு புதிய வார்த்தையை கண்டுபிடிக்கலாமே ] 
க.செ
7-4-15