31 Mar 2016

இது போதவே போதாது

......மூக நீதிக்காகத்தான்  இட ஒதுக்கீட்டை அம்பேத்கர் கொண்டுவந்தார் ...
( ஆம் உண்மைதான் ; ஆனால் நடப்பது ! )
       ......இட ஒதுக்கீடு கொள்கையில் எந்த மாற்றமும் செய்யப்படாது என்பதை உறுதியாகச் சொல்லுகிறேன். இட ஒதுக்கீடு என்பது தலித் உள்ளிட்ட சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களின் உரிமை . அதை யாரும் பறிக்க முடியாது.
    .....நான் ஏற்கனவே கூறியதுபோல் அம்பேத்கரே மீண்டும் தோன்றினாலும் இட ஒதுக்கீட்டை பறிக்க முடியாது “ என்று அம்பேத்கர் நினைவிட அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் மோடி பேசினார் - தி இந்து , 22-3-2016 .
       பிரதமர் மோடியின் பேச்சில் கூர்ந்து நோக்கவேண்டியவைகள் (1) சமூக நீதிக்காகத்தான் ; (2) தலித் உள்ளிட்ட சமுதாயத்தில் பின் தங்கிய நிலையில் உள்ள மக்களின் உரிமை ; அதை யாரும் பறிக்க முடியாது .
       அதைப் பறிக்க யார் வருவது ? .
       அதை என்றும் காப்பாளனாகத்  தன்னை நனவிலியாக முன்னிறுத்துவதேன் ?
       அம்பேத்கர் மீண்டும் தோன்றி வந்தாலும் முடியாது என்ற கூற்றின் அடியில்  ஓடும் எண்ணம் என்ன ? இடஒதுக்கீட்டுக் காப்பாளன் “ நமோ “ ; அதாவது , குறிப்பாக கி.பி 2000 –ற்கான தலித்தின் நவீன காப்பாளர் “ நமோ “ என்பதாகிறது . நமோ இந்த நூற்றாண்டின் இட ஒதுக்கீட்டின் அடையாளமாகிறது. சற்று யோசித்தால் , நமோவின் இயங்கும் திசை அச்சமாக இருக்கிறது . இதை அறிய ஒரு அடிப்படையான கேள்வியைக் கேட்டுக்கொள்ளலாம் .
       நேருவின் இடத்தில் படேலை வைக்க எடுத்த அரசியல் நடவடிக்கையை நினைவு கூறும் நேரமிது ; இப்போது ‘ அம்பேத்கரே வந்தாலும் இட ஒதுக்கீட்டைத் தடுக்க முடியாது ‘ . ‘ நானிருக்கப் பயமேன் ‘ என நனவிலியாகக் கூறுகிறார் .
       இட ஒதுக்கீட்டில் எந்த மாற்றமும் வராது என்று உறுதியாகச் சொல்கிறது . இது மோடியின் தன்னிலையாகிறது . எது ? . இட ஒதுக்கீடு என்பது நிரந்தரம் / மாறாதது / அம்பேத்கர் திரும்பினாலும் மாற்ற முடியாது என்பது நனவிலியாகும் ஆசையாகும் . ஏன் இப்போது இவ்வளவு அக்கறை ?
       அம்பேத்கர் திரும்பினாலும் முடியாது என்பது கற்பனை ஒழுங்கு ( imaginary order ) .  சாத்தியமற்ற ஒன்றை ஏன் முன்னிறுத்த வேண்டும் ?
       ஒன்றுதான் நினைவிற்கு வருகிறது . காங்கிரசால் புறக்கணிக்கப்பட்ட படேல் , போஸ் ; இப்போது அம்பேத்கர் வருகிறார் .
       சமகால அரசியலில் , கலாச்சாரம் , மொழி சிம்பாலிக்காக ( symbolic ) ; மோடியின் நனவிலி ஆசை ( unconscious desire ) மேற்கூறிய சிம்பாலிக் அதிகாரத்தை ; படேல் , போஸ், அம்பேத்கர் போன்றோரின் வழித்தோன்றலாக ,  பாதுகாவலராக ; வரலாற்று நீடிப்பாக , தன்னை அடையாளப் படுத்துகிறார் மக்களிடம் .
                அவரின் நனவிலி ஆசையை அவரின் மனசுக்குள் சென்று அறிய வேண்டியதில்லை . அவரின் சொல்லாடல்களும் அதன் விளைவுகளும் (  effects ) ,  அதனை நடைமுறைப்படுத்தும் நினைவு விழாக்களும் , விளம்பரமும் ; தன்னை அவைகளுடன் நேரடியாக , மறைமுகமாக அடையாளப் படுத்திக்கொள்வதுதான் ( இன்றைய காவலனாக) அவரின் நனவிலி ஆசையின் உந்தலுக்கான சாட்சி . 
        இட ஒதுக்கீடு தனித்துவமானது ( entity )  அல்ல . அது சாதிய சமூகத்தின் பகுதி மட்டுமே . அதுவும் ஒரு இடைக்கால சரிசெய்தல் மட்டும்தான் .
       முழுமை என்பது சாதியம் . அந்தத் தீட்டை / Evil - ஐ  ஒழிக்க , குடியுரிமையை ( திருமணம் பண்ணும் உரிமையை ) நிலைநாட்ட , ஒரு சமூகப் புரட்சி தேவை / உண்மையான சமூக ஜனநாயகப் புரட்சி தேவை .
       அதை விடுத்து இந்தப் பாராளுமன்றத்தின் ஜனாதிபதி , முதல் மந்திரி , இட ஒதுக்கீடு , போன்றவற்றிற்கு உழைப்பது , பேசுவது , அதுவும் காத்திரமாக எழுதுவதும் இந்தப் பாராளுமன்ற ஜனநாயகம் காக்கத்தான் பயன்படும் . நடைபெறும் மாற்றமெல்லாம் பகுதியிலேதான் ; முழுமையில் அல்ல .   முழுமை இன்னும் வெகு தூரத்தில்.
       பாராளுமன்றமுறை நிரந்தரமாகக் கோலோச்ச சாதிய சமூகம் வேண்டும் .
      மனுவால் கட்டப்பட்ட சாதியம் அந்தந்த சாதிக்குரிய பாராளுமன்றவாதத்தால் நிரந்தரமான ஒதுக்கிடத்தில் ( Bay ) நங்கூரமிட்டு , சாதியம் நிற்கவைக்கப்பட்டுள்ளது .   அவ்வளவுதான் .

க.செ


22 Mar 2016

தேசியவாதம் எதன் நலன் காக்க ?

               பிறரும் , பிறரின் சொல்லாடல்களும்,
                    தன்னிலையின் கட்டமைப்பிற்கு முக்கியத்துவமாக உள்ளது .
                   அது ஒரு சமூக அடையாளத்தை நிறுவுகிறது  ” - லெக்கான்

       
புது டெல்லி . மார்ச்21. 2016- தி இந்து : 

       கருத்து சுதந்திரமும் தேசியவாதமும் இணைந்து இருக்க வேண்டியது அவசியம் 
                                                                       –  அருண் ஜெட்லி.
       யாருக்கு அவசியம் ? ஆளும் கட்சி , ஆளும் வர்க்கத்திற்குத்தானே ?
       இந்த சூத்திரம் , கல்வியாளர் , 70 வயது கல்புர்கியை சுட்டுக்கொன்றவர்களின் மனம் கவர்ந்த கட்சி ,  கருத்து எதுவோ ?
       அருண் ஜெட்லி அறியாததா.
       ஒரு டிராக்டர் கடனில் மிச்சம் இருந்ததால் போலீஸ் கூட்டணியோடு தமிழ்நாடு விவசாயியை அடித்து நொறுக்கியது யார் சுதந்திரம் ?
       சாராயக் கம்பெனி முதலாளி விஜய் மல்லையா கோடிகளில் கடனை வாங்கி விமான சர்வீஸ் நட்த்தி , பின்பு நல்ல விலை வந்தவுடன் விற்றுவிட்டு இங்கிலாந்தில் சுதந்திரமாக உலாவிவர மறைமுக உதவி / அனுமதி அளித்தது யார் ? மல்லையாவுக்கு உள்ள சுதந்திரம் , அதிகாரம் தஞ்சை விவசாயிக்கு இல்லையே !
       [ இன்னும் என்னென்ன அவமரியாதைகள் நடந்தாலும் விவசாயிகள் தங்கள் குறுங்குழுவாதம் , சாதிய மதர்ப்பு , ஆணவக் கொலைகளை கைவிட மாட்டார்கள் . அது தாராளவாதக் கருத்தாடல்களுக்கு மட்டுமல்ல ; ஏகத்துவத் தீவிரவாதத்திற்கும் உடன்பாடுதான் . உள்ளதெல்லாம்  நட்பு முரண்பாடே ] .
       கோடி கோடிகளில் ஊழல் பண்ணி ஓடி ஒளிந்திருக்கும் லலித் மோடிக்கு உதவிய அரச குலப் பெண்மணியும் , வெளியுறவு மந்திரி , மனிதாபிமான மந்திரி திருமதி  சுஸ்மாவும் லலித்திற்கு அளித்த சுதந்திரத்தை கடன் சுமையால் தற்கொலை பண்ணும் விவசாயிகளுக்கு பண்ணவில்லையே ஏன் ?
       சாதியத்தால் உயர் கல்விக் கூடங்களில் மாணவர்களின் தற்கொலைக்கு அருண் ஜெட்லி கூறும் கருத்து சுதந்திரம் உதவவில்லையே?
       இந்தியாவில் உள்ள சாதியம் இந்திய மக்களை ஒன்றிணையவிடாமல் வைத்துள்ளதே ? அதை ஜெட்லியின் கருத்து சுதந்திரமும் தேசியவாதமும் உதட்டளவிலான லிப்ஸ்டிக் சுதந்திரம் – காலையில் போட்டுவிட்டு பின் அழித்துக் கொள்ளும் தன்மை - தானே பேசுகிறது . எங்கே போயிற்று ஏகத்துவம் ?
       லலித் மோடியின் சொல்லாடல் அரசியலும் , சட்டவாதமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதல்ல. குடியுரிமை கூட ( திருமணம் உட்பட ) இல்லாத தன்னிலைகளுக்கு, இதை இனியும் சகித்துக் கொள்ளக்கூடாது என்று சொல்வதைக் காட்டிலும் , உரிமைகளை வயித்துப் பிரச்சினையாய்க் காட்டி M L A ; M P ,  மந்திரி பதவிகளுக்கு ஆளாய் பறக்கிறார்கள் ; பரப்புரை செய்கிறார்கள் . என்ன செய்ய ?
       ஆதிக்க சாதிகளின் பலாத்காரமும் வெகு லாவகமாக நடந்து வருகிறது . அத்துடன் , நவீனத்துடன் மதம் , கலை , இலக்கியம் , கருத்தாடல்களிலும் சாதியத்தை மீட்டுருவாக்கும் சுதந்திரம் காக்கப்படுகிறது.
       ஜெட்லி இப்படிக் கூறுகிறார் :
       நம் நாட்டின் நம்பிக்கைகளையும் தத்துவங்களையும் தேசியவாதக் கொள்கைதான் வழிநடத்துகிறது  ” .
       இயற்கை வளங்கள் கொள்ளை போவதும் ; நவீன தொழில்மயம் , வல்லரசு ஆசை போன்றவற்றால் காலத்திற்கும் தீங்கு பயக்கும் அபாயத்தை – அணு உலை – நவீன வளர்ச்சி என்று கோடி கோடியாய் கொட்டுகிறதே ? .அதுதான் தேசியவாதக் கொள்கை வழிகாட்டியா ? அல்லது வேறயா ? பட்டியல் இடுங்கள் தெரிந்துகொள்கிறோம். இதைவிடுத்து ,
       நாட்டை சீரழிக்கும் அறைகூவலை அனுமதிக்க முடியாது...( மிரட்டல் வேண்டாம் ).    நல்லது கனம் மந்திரி அவர்களே.நாங்கள் உங்களுடன் கைகோர்க்கத் தயார் . முதலில் சுய விமர்சனத்தை ஆரம்பியுங்கள். குஜராத் , ராம் ஜென்ம பூமி ,பாரத ரத யாத்திரை etc.. –ம் தொடருங்கள் . கையோடு இப்போது யார் உங்கள் முதல் எதிரி ( நாட்டைச் சீரழிப்பதில் ) என்று அடையாளம் காட்டுங்கள் . புரியும் குற்றங்களைப் பட்டியலிடுங்கள் . உங்கள் மனக் குரலை நிப்பாட்டிவிட்டு சட்டரீதியிலேயே உரையாடலைத் தொடருங்கள் .   காத்திருக்கிறோம்.
க.செ
22-3-2016

பி.கு ;
[ ஆணவக்கொலைக்கு தன்னகங்காரம் மட்டுமல்ல . அன்னியரின் சொல்லாடலும் அன்னியரும் சுயத்தைக் கட்ட மிக முக்கியம் . அது பிரதானமாக ஒரு சமூக அடையாளத்தை நிறுவ அத்தியாவசியம் . இந்த அத்தியாவசியமே , இதரரின் கேலி , எகத்தாளத்தைக் கண்டே , பிரதானமாக ஆணவக்கொலையில் ஈடுபடுகின்றனர் . சுய சாதிக் கௌரவமும் , பிற சாதியிடம் கிடைக்கப்போகும் சுயத்தின் அடையாளமும் எலும்புக் குருத்தில் அச்சமேற்படுத்துகிறது . இந்தக் கருத்தாடல் வெளிப்படையாய் கட்டுடைக்கப்படவில்லை . இது லெக்கானியம் ].


20 Mar 2016

“ பாரதமாதாவுக்கு ஜே ” சொல்லாவிட்டால் தேசத்துரோகமா ?

நிச்சயமாக இல்லை ; இது ஒரு பாசிஸ்ட் சிந்தனைப் போக்காகும்.
“ பாரதம் ”  ஒரு கருத்தாடல் . அந்தக் கருத்துக்கு அடியில் பல இனக் குரல்களும் ; மதக் குரல்களும் நெரிக்கப்படும் ஓசை கேட்பதால் , அது ஒரு விருப்பப் பொருளாக இருக்கலாம் . மகா வாக்கியமாக அதை ஆக்கவேண்டியதில்லை .
இந்தியாவுக்கு ஜே என்பதில் பல குரல்களும் , வர்ணங்களும் அடங்கும் ; பிரிந்து போகும் உரிமை உட்பட.                                                                                                                                                                                                                                                                                              க.செ                                                                                                                                                                                                                                                                                                                                                                      20-3-2016

17 Mar 2016

சாதியம் நரசிம்மமாக

1.        பொதுவாக சாதிவிட்டு சாதித் திருமணம் என்பது தீட்டாகத்தான் பார்க்கப்படுகிறது.
2.        தலித்-பிற்படுத்தப்பட்டோரின் கலப்புத் திருமணத்தை  Evil - ஆக , தீயது  / கெட்டது  / கொடூர மிருகத்தனமாக மட்டுமே பார்க்கப்படுகிறது.
3.        உயர்சாதி என்பது மேலாண்மை ( தலித்துக்குள்ளும்தான் ) சிந்தனை – அதாவது நோய்க்கூறு சுயமோகத்திற்கு , சுயமோக அதிகாரத்திற்கான சான்றை சாதியம் வழங்கி உள்ளது.
4.        உயர்சாதிப் பெண் , தலித் ஒருவரை திருமணம் செய்துவிட்டால் , அப்பெண்ணிற்கு முதல் எதிரி பெற்றோரை விட அந்த சாதிச் சொந்தக்காரர்கள்தான் ; அவர்களிடம் இழந்து போன மதிப்பை மீட்க , அதாவது மற்றமையிடம் அங்கீகரிப்பை வாங்க வேண்டிய நிர்ப்பந்தம் பெண் பெற்றோருக்கு உண்டு.
சங்கர் போன்றவர்களை கொல்ல வேண்டும், கௌசல்யாவும் இறக்க வேண்டும் ( இவர் எப்படியோ பிழைத்துக் கொண்டார்) . இது பெரிய சாதியின் நிர்ப்பந்தம்.
5.        இங்கு மனிதர்களுக்கான அடையாளம் பெயர் மட்டுமல்ல , அரூபமான சாதிப் பெயரும் தான்.
6.        உதாரணம் , பேச்சு வழக்கில் அவர் எங்கு வேலை பார்க்கிறார் என்று  ‘ ஒருவரைக் கேட்டால் பதில் நம்ம உடையார் கல்லூரியில்தான் etc.. 
7.        ஓட்டுக்கான கட்சிகள் ஒருபோதும் சாதியை  Evil -  ஆக நினைத்து சொந்த வாழ்வையும் அரசியல் வாழ்வையும் நடத்துவது இல்லை.
       ஓட்டுக்கான பிரச்சாரம்தான் மேlலோங்கியுள்ளது . Evil -  க்கான எதிர்ப்பு , தருமபுரி, உடுமலைப்பேட்டை போன்ற சம்பவங்களுக்குப் பின் அதை உபயோகித்து சாதிய எதிர்ப்பாளர்களாக காட்டிக் கொள்கிறார்கள் ; அவ்வளவே.
       சாதியம் கலாச்சாரமாக , சித்தமாக , நடத்தையாக , திருவிழாவாக , குலதெய்வ வழிபாடாக , சடங்காகவும் கல்வி நிறுவனமாகவும் நீடித்து நிலவுகிறது.
       தேர்தல் கட்சிகள் சாதியம் என்ற பாசிசத்தை ஒழிக்க , அவரவர் அன்றாட சமூக வாழ்வின் நடவடிக்கையில் , எண்ணப்போக்காக இருக்க என்னென்ன திட்டங்கள் உள்ளன ? உடன் வெளியிடட்டும் ; விவாதம் தொடங்கட்டும்.
      கொலை நடக்கலாம் / தாக்குதல் நடக்கலாம் எனும் அபாயம் உள்ள கலப்பு திருமணம் புரிந்தோருக்கு உடனடிப் பாதுகாப்புக்கு என்ன செய்யலாம் ( அரசாங்கம் தவிர ) என ஒரு உரையாடலை துவக்கலாமே ?

       மமஹாரமும் , அகங்காரமும் , சாதியின் படிநிலையில் உறைந்திருக்கிறது.
      சாதியத்தை உருவகப்படுத்தினால் அது ,
      உள் / வெளி ; பகல் , இரவு கடந்து ,  தூண் , துரும்பில் வசிக்கும் நரசிம்மம் அது.

                                                                     க.செ
                                                                     17-03-2016