15 May 2019

100 தோப்புக் கரணம் போடத்தயரா?


பாமரர்களாகிய நாம் பாவம். மூலதனக்காரர்களின் பாராளுமன்றத்திற்கான 2019 தேர்தலில் முன்னணிக் கட்சிக்காரர்களின் நடத்தை / பேச்சு டாஸ்மார்க் அந்தஸ்தைக்கூட ஆட்டம்கான வைத்துவிட்டது.
       கட்டுரையின் தலைப்பு தினமலர் மே 10, 2019- ன் கொடையாகும். இந்த உரையாடலின் பெரியதனக்காரர்கள் ( Owners)  பிரதமர் மோடியும், மேற்கு வங்கத்தின் முதல்வர் மம்தா பானர்ஜியும் ஆவார்கள்.
       ” நிலக்கரிச் சுரங்க ஊழலில் தொடர்பிருப்பதாக நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்" 
[ இவர்மேல் உள்ள இந்தியத் துணைக்கண்டம் அளவிற்கான ஊழல் குற்றச்சாட்டு சந்தி சிரிக்கிறது, முடைநாற்றம் வீசிக்கொண்டிருக்கிறது.அதுவும் அம்பானிக்கு தரகு வேலையாம்- அதற்கான பதில்தான் தலைப்பு ]
       ” இந்தக்குற்றச்சாட்டை நிரூபிக்கத் தவறினால் 100 முறை தோ[ப்புக்கரணம் போட மோடி தயாரா? “ இது மம்தா பானர்ஜி.
       பெரியதனக்காரர்களின் பஞ்சாயத்து மக்களுக்கு முன்னுதாரணம்தானே. இப்படி இந்தியா முழுக்கக் கவிச்சி வீச எங்கு கற்றாரோ மோடி.
       மோடி உண்மையில் பாராளுமன்றத்தை மதிக்கிறாரா ? மதித்தாரா? எத்தனைநாள் பாராளுமன்றக் கூட்டத்தில் கலந்துகொண்டு பாராளுமன்ற உறுப்பினர்களுடன் விவாதித்தார் ? பூஜ்ஜியம்தானே . நிரூபர்களுடனான பேட்டி எதையும் இதுவரை கொடுத்ததில்லை மோடி.
       இவரை ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு “ பொறுப்பில்லாத பிரதமர் நரேந்திர மோடி” என்கிறார். மேலும், …… நாட்டிலேயே முதல்முறையாக உச்சநீதிமன்றத்தைச் சேர்ந்த நான்கு நீதிபதிகள் “ நாட்டில் ஜனநாயகம் மிகவும் இக்கட்டான சூழலை நோக்கிச் செல்கிறது  என பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளனர் “( மே 10. 2019 தினமலர்  )
     இங்கு மோடி அனுதாபிகளும் ,மக்களும் ஒன்றைக் கவனிக்க வேண்டும். சொன்னது எதிர்க்கட்சியினர் அல்ல; எரிந்த கச்சியினரும் அல்ல..மிகமிக உச்சாணிக் கொம்பில் இருக்கும் உச்சநீதிமன்ற நீதிபதிகள்; அதுவும் நான்குபேர்.இதை காத்திரமான குற்றச்சாட்டாக பாவிக்கவேண்டாமா ? மூலதனப் பாராளுமன்றம் நிலநடுக்கத்தில் இருக்கிறது என்றுதானே இதற்குப் பொருள்.                           
 யார் இதுபற்றி அக்கறையோடு விவாதிக்கிறார்கள் பொதுவெளியில்?  ஊடகங்களின் கவனம் போதுமானதாக இருந்ததா ? இருக்கிறதா?
       பாராளுமன்றத் தேர்தல் இன்னும் முடியவில்லை. கடைசி நாளுக்காக காத்திருக்கிறது இந்தியா. அத்தோடு தேர்தல் முடிவுகள் வெளியாக வேண்டும் .அப்புறம் ஆட்சி அமைக்கும் பணி துவங்கும், இப்படிச் சூழல் இருக்கையில் மத்திய அரசு ஒரு பெரிய வெடியை வெடித்திருக்கிறது..
       அதாவது , தூத்துக்குடி புகழ் ஸ்டெர்லைட்டின் தாய் நிறுவனமான வேதாந்தாவுக்கு ஹைட்ரோகார்பன் ( திரவ வாயு ) எடுக்க புதுச்சேரி ,விழுப்புரம் மாவட்டத்தில் இடம் அனுமதித்திருக்கிறது மத்திய அரசு. ஓ.என்.ஜி.சி ( பொதுத்துறை ) ,அமெரிக்க எண்ணெய் நிறுவனம் ஆசியோடு மத்திய அரசு அனுமதித்திருக்கிறது.
       அனுமதி வழங்கிய நேரம் முக்கியமானது. இந்தியாவின் கவனம் தேர்தல் முடிவு என்றிருக்கிற காலத்தில், சந்தடிசாக்கில் மூலதன அதிகாரத்தின் விஸ்தரிப்புக்கு இடம் கொடுத்திருக்கிறது.
       இந்த எண்ணெய் கிணறுக்கு மக்களிடையே ,பிரதான எதிர்கட்சிகளிடையே எதிர்ப்பு உள்ளது. காவிரி டெல்டாப் பிரதேசம் பாலைவனமாகிவிடும் என்ற அச்சம் நிலவிவரும் வேளையில் சப்தமில்லாமல் அனுமதி வழங்கி,விவசாயிகளுக்கு மூலதன அதிகாரமும் அரசாங்கமும் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கிறது..
       அதிகார மமதைக்கு “ சமூக அறிவுத்திறன் ( social intelligence ) எங்கே போயிற்று ? அதாவது, பிறர் உணர்வுகளை புரிந்துகொண்டு, தன்னை அவற்றுடன் அடையாளப் படுத்திக் கொண்டு / இனம் கண்டுகொண்டு ( empathy ) மனித உறவுகளில் புத்திசாலித்தனத்துடன் நடக்கும் திறன் எங்கே போயிற்று ?” ( .Emotional intelligence ;Thorndike )
       எண்ணெய் கிணறுகளுக்கு மத்திய அரசு அனுமதி என்றவுடன் , ஹைட்ரோ கார்பன் என்ற பெயர்ச் சொல்லை கேட்டவுடனே விவசாயிகளின் நனவிலியில் ( unconscious ) மனப்பாதிப்பை (affect) ஏற்படுத்தியிருக்குமே ! என்கிறது உளவியல். நனவிலி, மனவெழுச்சியை (emotion ) இதரராக (other) கட்டமைத்திருக்குமே !. அவர்களின் மனப்பாதிப்பு (affect) எதை எதையெல்லாம் எதிர்பார்க்கும் (anticipate); சந்தேகம், பயம், கெஞ்சல் (solicitting ) போன்ற மனப்பாதிப்பு  / மனப்பிராந்திக்கு ஆட்படுவார்களே ! கலாச்சார ரீதியில் எதை எதையெல்லாம் ஏற்பது / விடுவது என்ற ஆழ்மன விவகாரங்கள் துவங்கிவிடுமே !
       ஒருவேளை விவசாயம், விவசாயிகளின் வேதனை, துன்பம் , துயரம் போன்றவை மூலதனத்திற்கும், அரசாங்கத்திற்கும் பெரு மகிழ்ச்சியாக உள்ளதோ?.
       மக்களின் மனஉடல் ஆரோக்கியம் பற்றி மூலதன அதிகாரத்திற்கு அக்கறை இருக்காது. வாஸ்தவம். ஆனால், அரசாங்கம் , ஐஏஎஸ் போன்ற படிப்பாளிகள் , வல்லுனர்களிடம் மக்கள் மீது அக்கறை , பரிவு இருந்திருந்தால் ,முதலில் மக்களிடம் பேசி ,அவர்களின் எலும்பு மஜ்ஜையில் உள்ள பயம் , கூச்சம் ,சந்தேகங்களைப் போக்கி ,அவர்களுக்குப் புரியவைத்து ,மன ஆரோக்கியத்திற்கு அடிகோலியபின் அனுமதித்திருக்கலாமே.
       இறுதியாக ஒரு சந்தேகம் .” நான் சிறுவனாக இருந்தபோது டீக்கடையில் இருந்திருக்கிறேன் “ என்று சொன்னது உண்மைதானா ? அந்தப் பையனுக்கா இன்று மக்கள் மீதான நடவடிக்கையில் நெறி ( Ethics ) இல்லை; மக்கள்மீது தயை , பரிவு இல்லையே  அவரிடம் . எது உண்மை ?
ஓட்டுக்காக வித விதமாக குள்ளாய் அணிந்து, கூலைக் கும்பிடு போட்டு , ராப்பிச்சைக்காரனாக காட்சி அளிக்கத் தெரிந்த நுட்பம் , மக்களின் சேவையில் இல்லையே !  . மூலதனத்திற்கு சேவை செய்வதேன் ?அதிகாரம், பணம் இன்ன பிறவற்றிற்காகவா இவைகள் ?
க.செ

No comments:

Post a Comment