10 Jan 2018

தங்க ஊசி கண்ணைக் குத்தினால்

           (தொழிற்சங்க முதலாளித்துவமும்,அரசு முதலாளித்துவமும்.)


ஏன் தொழிற்சங்க முதலாளித்துவம் என்ற பதத்தை பிரயோகப்படுத்துகிறோம் என்றால், பஸ் கார்ப்பரேசன்களை அரசு சொத்தாக; அதாவது, உங்கள் சொத்தாக பாவிப்பதுதான் வழக்கமாக உள்ளது.
இப்போது, கடந்த ஒரு வாரமாக வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளீர்கள்.  உங்கள் பொருளாதார நலனை காக்கும் பொருட்டு,
நீங்கள் நடத்தும் பொருளாதாரப் போராட்டம் நியாயமானதுதான்.
ஆனால் கார்ப்பரேசன் நட்டத்தில் ஓடுவதாகக் கணக்கு காட்டுகிறதே!
இந்த நட்டக் கணக்கு உண்மைதானா ?  நாணயமானதுதானா ?
மாணவர்களுக்கு இலவச பாஸ் கொடுப்பதால் எத்தனை கோடி தினமும் நட்டமாகிறது. இலவசம் ஒரு அரசியல்
தேர்தலுக்காக, ஓட்டுப் பொறுக்க இது நடக்கிறது. மக்களின் வறுமை ஒரு புறம்; இலவசத்தின் கவர்ச்சியிலிருந்து மீள்வதற்கான வழிவகைகளை எந்தக் கட்சியும் மக்களுக்கு விழிப்புணர்வை ஊட்டவில்லை.
மறுபுறம்., மார்க்சிய – லெனினியமும், பெரியார் சிந்தனைகளும் நூல் வடிவத்தில் முடங்கிக் கிடக்கிறது.
இலவசம்  சுயமரியாதையை குழிதோண்டி புதைத்து விட்டது.
 [ இலவச அரசியல் ஒரு ஓட்டுக்கு 10,000 ரூபாய் என்று ஏலத்திலும் போயிருக்கிறது]
அரசுப் பள்ளி இருக்கும் ஊர் மாணவர்களுக்கும் பஸ் பாஸ் நகரத்துப் பள்ளிகளுக்குச் செல்ல (அத்துடன் மாணவர்க்கு விலையில்லா சைக்கிளும் கூட).இது ஊதாரித்தனம் இல்லையா?அரசுப் பள்ளியை நன்றாக / ஒழுங்காக நடத்துவதற்கு வக்கில்லாத அரசாங்கம் நிர்வாகப் பொறுப்பில் ஏன் இருக்கிறது?
இதை நீங்கள் / தொழிலாளிகள் என்றாவது கேட்டதுண்டா?கண்டித்ததுண்டா? இலவசம் உங்களைத்தானே உடனடியாகப் பாதிக்கிறது;நட்டம் உங்களுக்குத்தானே! இப்படிப்பட்ட அரசாங்கம் ஆட்சியில் ஏற நீங்களும் காரணம்தானே!
இலவசம் யார் வீட்டு சொத்து ?  மக்களின் சொத்து . அரசாங்கம் , நிர்வாகம் பண்ணுவதற்குத்தான் உரிமை.  பதவியை காப்பதற்கு இலவசம் கொடுத்து மக்கள் சொத்தை நட்டப்படுத்த உரிமையில்லை.  இந்த நட்டத்தை நீங்கள் தடுத்திருந்தால் ?  அங்கு (கம்பெனி) நடக்கும் ஊழலை தடுத்திருந்தால் இன்றைய போராட்டம் தேவையாய் இருந்திருக்காது. தொழிலாளர் பணத்தை அரசாங்கம் கொள்ளையடிக்க ஏன் உங்கள் தலைமை விட்டது; வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தது?
அதை எதிர்த்து, அன்றைக்கு போராடியிருந்தால் இந்த நிலை வருமா ?
இந்த இலவசத்தில் நீங்களும் உரிமை எடுத்துக் கொள்கிறீர்கள்தானே ?
 அரசுடமை ஊழியெரன்றால் , பஸ்ஸில் ஓசி. அதாவது, மக்கள் மூலதனத்தை கம்பெனித் தொழிலாளிகளே இலவச உரிமை என்ற சலுகை.  இது லஞ்சமாகாதா?  மோசடியாகாதா?..
உங்கள் யூனியன் அனைத்தும் (கிட்டத்தட்ட) ஏதோவொரு கட்சி சார்ந்ததே .  உங்கள் யூனியன் (அதன் கட்சி) மீது கண்மூடித்தனமான நம்பிக்கை , என்ன ஊழல் நடந்தாலும் ஒரு பக்கச் சார்பு , நியாயமற்றதை , தீங்கானதை எதிர்ப்பதும் சரியானவற்றை ஆதரிப்பதும் என்ற இருவழிப்பாதை உணர்வு உங்களுக்கு இல்லை;  இதை யாரும் சொல்லித்தருவதுமில்லை , ஊட்டவுமில்லை . இத்தோடு இயற்கை சீற்றத்தால் மக்கள் துயர் அடைந்தாலும் , ஒரு தார்மீக ஆதரவுகூட ( moral support ) கொடுப்பதில்லை நீங்கள். நீங்கள் மக்கள் சொத்தாக இருக்கும கம்பெனித் தொழிலாளிகள். நீங்களும் , நிர்வாகிகளும் (அரசாங்கம்  மந்திரி) அதை உங்கள் சொத்தாக்கிக் கொண்டீர்கள்.
இது யார் சொத்து , உங்கள் சொத்தா ? வடிவேலு சினிமா மாதிரி இது தொழிலாளர் சொத்தாகவும்; மந்திரிகள்,  நிர்வாகிகள் சொத்தாகவும் ஆகிவிட்டது.
மக்களின் பக்கம் நீங்கள் இருங்கள் ; உங்களின் நியாயமான போராட்டத்தில் அவர்கள் உங்கள் பக்கம் நிற்பார்கள்.
நீங்கள் வெல்லற்கரிய சக்தியாகி விடுவீர்கள். உங்களின் பணத்தை கொள்ளையடிக்க நினைக்கும் கந்து வட்டி அரசியலுக்கு மக்கள் தகுந்த புத்தி புகட்டுவார்கள்.
எப்போது ?

சுயமரியாதை இழந்த உணர்வுகூட இல்லாமல் இறுமாப்புடன் இருக்கிறார்கள் மக்கள்.
இதை மக்கள் உணர்ந்துவிட்டாலோ , அமைப்பாகிவிட்டாலோ அப்போது விடிவெள்ளி முளைக்கும் ; தொழிலாளருக்கும் தான் !
க.செ



2 Jan 2018

நாங்கள் சொல்லவில்லை

‘‘ தன்மானமாகிய சுயமரியாதையைத்தான் மனிதன்              பிறப்புரிமையாகக் கொண்டிருக்கிறான்” ’’ .
ஆனால், நடைமுறையில் ,
வாசலில் வேட்பாளரின் அடையாளச் சின்னத்தை வரைவதின் மூலம் பெற்ற
லஞ்சம் 200 ரூபாய்;
வேட்பாளரை மலர்தூவி வரவேற்றால் 500 ரூபாய்;
வேட்பாளர், குழந்தைக்கு பெயர்சூட்ட குழந்தையை வாடகைக்குவிட்டால்
1000, 2000 ரூபாய்; .
ஊர்வலத்திற்கு போய்வந்தால் ரூ.100-ம் பிரியாணி பொட்டலமும் .
இது எதைக்காட்டுகிறது ?  ஓட்டர்களின் தன்மானத்தையா, தமிழனின் சுயமரியாதையையா?
‘‘ ஒரு மனிதன் தன் செல்வத்தை அல்லது முக்கியமான    பொருளை எங்கே இழந்துவிட்டானோ, அந்த இடத்தில் தேடினால்தானே கிடைக்கும் .பொருளை இழந்த இடத்தை விட்டு வேறு இடத்தில் தேடினால் கிடைக்குமா ?  அதுபோலத்தான் நம்முடைய மக்கள் தங்களுடைய மானத்தை-சுயமரியாதையை எந்த இடத்தில் இழந்துவிட்டார்களோ அந்த இடத்தில் தேடவேண்டும்” ’’ .
மேலும், இது பற்றி அந்தப் பெரியவர் கூறியது ,
‘‘ மானத்தைப் பற்றிக் கவலை இல்லாதவன் எவ்வளவு படித்தவனானாலும் அவன் தாசிக்குச் சம்மானவனே ஆவான் அவனது படிப்பும் மானாபிமானம் உள்ளவர்களுக்கு ஆபத்தாகவே முடியும் “. ’’
கடந்த ஒரு ஆண்டாக (ஜெயலலிதா இறப்பிற்குப் பின்) நடந்த கேலிக்கூத்து பற்றி நினைவில் கொள்ளவும் .  இது பற்றி அப்பெரியவர் பேசும்போது ,
‘‘ அரசியலில் கூடுவிட்டு கூடு பாய்வது ஒரு மாதிரி அரசியல் விபச்சாரமே ஆகும் . . .  படிப்பும் , பணமும் , அந்தஸ்தும் உடையவர்கள் அவர்கள் கட்சிக்கு துரோகம் செய்து விபச்சாரி ஆவதைவிட கொடுமை , மானக்கேடு , துரோகம் வேறுண்டா? ”.
அரசியல் , இன்றைய அரசியல் பற்றி அந்தப் பெரியவர் சொன்னதைப் பார்க்கலாம்:                                                        
‘‘ சினிமாத் துறைக்கு நிர்வாணக்காட்சி எவ்வளவு கவர்ச்சிகரமாக இருந்து வருகிறதோ, அதேபோல், அரசியலுக்கு அயோக்கியத்தனங்கள், காலித்தனங்கள், சண்டித்தனங்கள், திருட்டும், மானம், வெட்கமற்ற பொய், பித்தலாட்டங்கள் பெரிதும் கவர்ச்சிகரமாய் இருந்து வருகினறன”. ’’
அந்தப் பெரியவர் யாருமல்ல.  பெரியார்தான்.
அதாவது அரசியல் ஞானத்தைவிட சுயமரியாதையின் முக்கியத்துவம் நன்றாகப் புலப்படுகிறதல்லவா !
வெகு ஜனங்களின் சுயுமரியாதையை, கவர்ச்சி காட்டி வாங்கிப் பிழைப்பவர்களின் மானம் மரியாதை எப்படிப்பட்டதாக இருக்கும் ?
. . . . ‘‘ அறிவையும் மானத்தையும் தமிழர்களிடையே பெருக்க , அரசியல் கட்சிகள் முயற்சிக்கின்றனவா என்றால் இல்லையென்றுதானே சொல்ல வேண்டியுள்ளது” ’’ .
                                                   -க.செ.


                                  

28 Nov 2017

பள்ளி மாணவ, மாணவிகள் தற்கொலை ஏன்?

“அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம் அருகே 4 மாணவிகள்
கிணற்றில் குதித்து தற்கொலை
பெற்றோரை அழைத்து வருமாறு தலைமை ஆசிரியர் கூறியதால் விபரீத முடிவு”                                                                                                                                                    – தி இந்து 25-11-2017
“திருக்காட்டுப்பள்ளி அருகே பள்ளி வகுப்பறையில் ப்ளஸ்-2 மாணவர் தற்கொலை
பள்ளி வகுப்பறையில் உள்ள கொக்கியில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்”
          -மாலை மலர் 14-11-2017
“குஜராத் ,அகமதாபாத் அருகில் உள்ள பாப்பு நகர் பூமிபார்க்,
வகுப்பறையில் 11 ஆம் வகுப்பு பள்ளி மாணவர் தூக்குப்போட்டு தற்கொலை”
          -ttp://tamil.webindia.com
“ஹரியானா மாநிலம் குருகிராமில் (குர்காவ்ன்)உள்ள ரயான் சர்வதேச பள்ளியில் 7 வயது சிறுவன் கொலை வழக்கில் திருப்பம்.
தேர்வை தள்ளி வைக்க சீனியர் மாணவனே கொன்றதாக சிபிஐ அதிர்ச்சித் தகவல்”
-தி இந்து 9-11-2017
      “தஞ்சையில் கல்லூரி மாணவர் உயிருடன் ஆற்றில் புதைப்பு
       ...செப் 30-ம் தேதி சரவணனை ராஜகோரி மயானத்திற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
அப்போது ஏற்பட்ட வாக்குவாதத்தில் சரவணனின் கை, கால்களை கட்டிவைத்து அடித்ததுடன்,வாயை துணியால் அடைத்து, மாட்டுவண்டியில் ஏற்றி கூடலூர் வெண்ணாற்றங்கரைக்கு கொண்டு சென்றுள்ளனர்.பின்னர் ஆற்றின் நடுவில் குழிதோண்டி சரவணனை உயிரோடு புதைத்துள்ளது தெரிய வந்தது.”
 -தி இந்து 14-11-2017
22-11-2017 ,சத்தியபாமா பல்கலைக்கழகத் தேர்வில் காப்பி அடித்து,பிடிபட்ட மாணவி அவமானத்தால் தூக்கிட்டு தற்கொலை.

     தற்கொலை தனியாகவும் குழுவாகவும்     நடக்கிறது.;
        கிணற்றில்,குழுவாக தற்கொலை      நடைபெறுகிறது;
         பள்ளியில் தூக்குப்போட்டு தற்கொலை.

       இனி கொலைகள் பற்றி
.      தஞ்சையில் 5 மாணவர்கள் சேர்ந்து சக மாணவனை கொன்றுவிட்டனர்
(காரணம் தெரியவில்லை)
      செப்டம்பர் 8-ல், 2-ம்வகுப்பு மாணவனை அதே பள்ளியில் படிக்கும் சீனியர் மாணவர் கொன்றுவிட்டான்..
காரணம் தேர்வை தள்ளி வைப்பதற்காக இந்த பின்நவீனத்துவ (Postmodern) யுக்தியைக் கையாண்டிருக்கிறான்.
ஆக, தற்கொலையும் கொலையும் முக்கிய பாடததிட்டமாக (syllabus) மாணவரிடையே வந்திருக்கிறது.
உளவியலாகச் சொன்னால்,
தனக்குத்தானே துன்புறுத்தி இன்புறுவது (masochism) அல்ல.
பிறரைத் துன்புறுத்தி இன்புறுவதும் (sadism)அல்ல.
மாறாக, மன அலசல் ரீதியில் சொன்னால்,
“ சுயமோகத்தின்  ( narcissism ),கொடுந்துன்ப உணர்வுகளால்  (experiences of excessive unpleasure) உந்தப்பட்டே மாணவர்கள், (மனிதர்கள்) பிற மனிதர்கள் (மாணவர்) மீது குற்ற நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.”
-Henri Parens, journal of applied psychoanalytic studies vol3, 2001
                மேலும்,சுயமோகத்தின் பயம்,பீதி,மனக்காயம் போன்றவைகளை கையாளத்தெரியாமல்  கொந்தளிப்பு வசப்பட்ட மனம்,பிறரை( others) பலிகடாவாக ஆக்குகிறது;
வேறு சில சமயங்களில் மன / உடல் வேதனைகளை சமாளிக்கத் தெரியாததால்சுய அழிப்பு நடைபெறுகிறது.
கொடுந்துன்பத்தின் உந்தல்கள் கொலைக்கும் தற்கொலைக்கும் காரணிகளாக உள்ளன.
அடிப்படையில் துன்பங்கள் உளவியலாக,உடல் சார்ந்ததாக இருக்கலாம்.அத்துடன் பொதுவெளியில் ,’அவமானம்’ என்ற மாயப்பிசாசு கூட  தன்னிலையைத் துரத்திவிடக் கூடும். பலிகடாவாகி/பலிகடாவாக ஆக்கிவிடவும் கூடும்.
இதில் மன அலசல் ஆய்வு நடந்தவாறு இருக்கிறது.ஆய்வு, இதரர் மீது மேற்கொள்ளும் குற்றச் செயல்களை குறைப்பதற்கு மன அலசல் இப்படி ஆரம்பிக்கிறது. அதாவது,” மனிதர்களிடம் நிலவுகிற, தவிர்க்கப்படக்கூடிய கொடுந்துன்ப உணர்வுகளை (avoidable experiences of excessive  unpleasure ) அடையாளம் கண்டு,அவர்களிடம் நிலவுகிற தற்காதல்பயம், பிறர் மீது தாக்குதல் நடத்துவதற்கான மனப்போக்கை அறிந்து ,அதைக் குறைப்பதற்கான வழிவகைகளை அடையாளம் கண்டு, அவற்றை அவர்கள் ஏற்குமாறு செய்ய முயற்சி மேற்கொள்ளவேண்டும்”என்கிறது மன அலசல்.
இப்போது நம் தமிழ்கூறும் நல்லுலகத்தில் இதற்கான வசதியோ,சமூகக் கட்டமைப்போ இல்லை. ஊசிபோடும் வைத்தியமே சித்தத்திற்கும் போதும் என்ற எண்ணம் மேலோங்கி இருக்கிறது.
உருவகமாகச் சொன்னால் , மெட்ரிகுலேசன் கல்வி etc , போன்ற (சமூக) அமைப்பு தன்னைத் தானே கொலையும் செய்கிறது / குற்றமுமிழைக்கிறது.
அதாவது,மாணவர்களின் தனிநபர் தற்கொலை,குழுவாக தற்கொலை,இதரரை,சக மாணவன், ஆசிரியை / ஆசிரியர் கொலை ( நல்லவேளை இன்னும் அமெரிக்க துப்பாக்கிக் கலாச்சாரம் இன்னும் வரவில்லை);
அப்புறம், கல்லூரி என்றால் ஒருதலைக் காதல் கொலை,கைபேசிக்காக கொலை,கைச் செலவுக்காக கொலை,இரு சக்கர ஊர்திகளுக்காக கொலை,கூடவே சாதிக் கொலை.
இப்படி மாணவ உலகத்தின் சில காட்சிகள் / நிகழ்வுகள் நடைபெறுவது வாடிக்கையாக உள்ளது.
பொதுவாக ,பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகள் என்பதாலேயே அதைத் தங்க ஊசியாக (gold pin) நினைத்து, கட்டமைத்து, கையாளுகிறார்கள். இந்தத் தங்க ஊசிப் பெற்றோருக்கு பிற பிள்ளைகள் போல் தங்கள் பிள்ளைகளும் ,சைக்கோசிஸ் / வக்கிரம் / நியூரோசிஸ் என்ற கட்டமைப்பின் மூலமாக ,அதனின் முடுக்கத்தால்தான் (drive) இயங்குகிறார்கள் என்பதை இவர்கள் இன்னும் உணரவில்லை, உணர்த்தப்படவில்லை.இழப்பு ஏற்பட்டால் மற்றொரு கட்டமைப்பான பள்ளி,கல்லூரியை குற்றம் சாட்டுகின்றனர்.இவை இரண்டும் மாசற்றது அல்ல. இருந்தாலும் தங்களின் குழந்தை வளர்ப்பை ஒருமுறை சமூகக் கண்ணோட்டத்துடன் நினைத்துப் பார்க்கவேண்டும்.
பள்ளிகளில் பாடத்திட்டத்தை (syllabus) நடத்திவிட்டு காசை வேண்டிய மட்டும் வசூலித்துவிட்டு,காலரைத் தூக்கிவிட்டுக் கொள்கின்றனர் இந்த மெட்ரிக்,சிபிஎஸ்இ போன்ற ஆங்கிலவழிப் பள்ளிகள். தேர்வில் காப்பி அடிப்பது எங்கள் உரிமை என்ற உரிமை முழக்கமோ அல்லது தூக்குக் கயிறோ என்ற கட்டமைப்புதான் உள்ளது. ...பொறுப்பாளிகள் யார்??
பள்ளிகளில் அடிமைப்படுத்துதல்(கழிவறைச் சுத்தம்), துன்புறுத்தல், சித்திரவதை, நிர்வாணப்படுத்துதல்,மாணவர்களுக்கு முடிவெட்டுதல் (டிவி காட்சி)போன்ற நடவடிக்கைகள் தனியன் மீது ஏற்படுத்தும் பாதிப்புகள் ,அதன் தொடர்ச்சி எக்கச்சக்கமாக போய்விடுகிறது.
பாதிக்கப்பட்டவர்கள் தாங்கள் யார் என்பதை அறிந்துகொள்ள உள்நோக்கிய (அகம்) பார்வையும் ,தேடலும்; அதன்மூலம் தன்னை யார் என்று அறிதலும் ;பள்ளியில் ஒழுங்கும் கட்டுப்பாடும்,தன்னொழுங்கும், சமூகத்திற்குத் தேவை.அதை தண்டனை,அவமானம் என்ற கம்பாக நினைப்பது சுயமோகம் போன்ற ’புற்றுநோய் மனம்’; அது ஆரோக்கியமல்ல.உன்னை மதிப்பது போல் பிறரை (மாணவ,மாணவியரை) நீ மதி; உன் செயலுக்கு நெறி (ethics) வழிகாட்ட வேண்டும்
அதேபோல்,சமூக அமைப்பு புற்றுநோய் சுயமோகத்திலிருந்து (malignant narcissism) விடுபட்டு, மன ஆரோக்கியத்திற்கு சுய பயிற்சி, சுய முயற்சியை மேற்கொள்ளவேண்டும். அவர்கள் உங்கள் பிள்ளைகள். (உங்கள்) ஆசிரியர்கள் சுயமோகத்தை விட்டால்தான் ஆசிரியர்+மாணவர்+பள்ளி = குருகுலம் ஆகும். இல்லாவிட்டால்,துப்பாக்கிக் கலாச்சாரத்திற்கு வழிவிடுவதாகும்.
க,செ.