22 Mar 2016

தேசியவாதம் எதன் நலன் காக்க ?

               பிறரும் , பிறரின் சொல்லாடல்களும்,
                    தன்னிலையின் கட்டமைப்பிற்கு முக்கியத்துவமாக உள்ளது .
                   அது ஒரு சமூக அடையாளத்தை நிறுவுகிறது  ” - லெக்கான்

       
புது டெல்லி . மார்ச்21. 2016- தி இந்து : 

       கருத்து சுதந்திரமும் தேசியவாதமும் இணைந்து இருக்க வேண்டியது அவசியம் 
                                                                       –  அருண் ஜெட்லி.
       யாருக்கு அவசியம் ? ஆளும் கட்சி , ஆளும் வர்க்கத்திற்குத்தானே ?
       இந்த சூத்திரம் , கல்வியாளர் , 70 வயது கல்புர்கியை சுட்டுக்கொன்றவர்களின் மனம் கவர்ந்த கட்சி ,  கருத்து எதுவோ ?
       அருண் ஜெட்லி அறியாததா.
       ஒரு டிராக்டர் கடனில் மிச்சம் இருந்ததால் போலீஸ் கூட்டணியோடு தமிழ்நாடு விவசாயியை அடித்து நொறுக்கியது யார் சுதந்திரம் ?
       சாராயக் கம்பெனி முதலாளி விஜய் மல்லையா கோடிகளில் கடனை வாங்கி விமான சர்வீஸ் நட்த்தி , பின்பு நல்ல விலை வந்தவுடன் விற்றுவிட்டு இங்கிலாந்தில் சுதந்திரமாக உலாவிவர மறைமுக உதவி / அனுமதி அளித்தது யார் ? மல்லையாவுக்கு உள்ள சுதந்திரம் , அதிகாரம் தஞ்சை விவசாயிக்கு இல்லையே !
       [ இன்னும் என்னென்ன அவமரியாதைகள் நடந்தாலும் விவசாயிகள் தங்கள் குறுங்குழுவாதம் , சாதிய மதர்ப்பு , ஆணவக் கொலைகளை கைவிட மாட்டார்கள் . அது தாராளவாதக் கருத்தாடல்களுக்கு மட்டுமல்ல ; ஏகத்துவத் தீவிரவாதத்திற்கும் உடன்பாடுதான் . உள்ளதெல்லாம்  நட்பு முரண்பாடே ] .
       கோடி கோடிகளில் ஊழல் பண்ணி ஓடி ஒளிந்திருக்கும் லலித் மோடிக்கு உதவிய அரச குலப் பெண்மணியும் , வெளியுறவு மந்திரி , மனிதாபிமான மந்திரி திருமதி  சுஸ்மாவும் லலித்திற்கு அளித்த சுதந்திரத்தை கடன் சுமையால் தற்கொலை பண்ணும் விவசாயிகளுக்கு பண்ணவில்லையே ஏன் ?
       சாதியத்தால் உயர் கல்விக் கூடங்களில் மாணவர்களின் தற்கொலைக்கு அருண் ஜெட்லி கூறும் கருத்து சுதந்திரம் உதவவில்லையே?
       இந்தியாவில் உள்ள சாதியம் இந்திய மக்களை ஒன்றிணையவிடாமல் வைத்துள்ளதே ? அதை ஜெட்லியின் கருத்து சுதந்திரமும் தேசியவாதமும் உதட்டளவிலான லிப்ஸ்டிக் சுதந்திரம் – காலையில் போட்டுவிட்டு பின் அழித்துக் கொள்ளும் தன்மை - தானே பேசுகிறது . எங்கே போயிற்று ஏகத்துவம் ?
       லலித் மோடியின் சொல்லாடல் அரசியலும் , சட்டவாதமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கானதல்ல. குடியுரிமை கூட ( திருமணம் உட்பட ) இல்லாத தன்னிலைகளுக்கு, இதை இனியும் சகித்துக் கொள்ளக்கூடாது என்று சொல்வதைக் காட்டிலும் , உரிமைகளை வயித்துப் பிரச்சினையாய்க் காட்டி M L A ; M P ,  மந்திரி பதவிகளுக்கு ஆளாய் பறக்கிறார்கள் ; பரப்புரை செய்கிறார்கள் . என்ன செய்ய ?
       ஆதிக்க சாதிகளின் பலாத்காரமும் வெகு லாவகமாக நடந்து வருகிறது . அத்துடன் , நவீனத்துடன் மதம் , கலை , இலக்கியம் , கருத்தாடல்களிலும் சாதியத்தை மீட்டுருவாக்கும் சுதந்திரம் காக்கப்படுகிறது.
       ஜெட்லி இப்படிக் கூறுகிறார் :
       நம் நாட்டின் நம்பிக்கைகளையும் தத்துவங்களையும் தேசியவாதக் கொள்கைதான் வழிநடத்துகிறது  ” .
       இயற்கை வளங்கள் கொள்ளை போவதும் ; நவீன தொழில்மயம் , வல்லரசு ஆசை போன்றவற்றால் காலத்திற்கும் தீங்கு பயக்கும் அபாயத்தை – அணு உலை – நவீன வளர்ச்சி என்று கோடி கோடியாய் கொட்டுகிறதே ? .அதுதான் தேசியவாதக் கொள்கை வழிகாட்டியா ? அல்லது வேறயா ? பட்டியல் இடுங்கள் தெரிந்துகொள்கிறோம். இதைவிடுத்து ,
       நாட்டை சீரழிக்கும் அறைகூவலை அனுமதிக்க முடியாது...( மிரட்டல் வேண்டாம் ).    நல்லது கனம் மந்திரி அவர்களே.நாங்கள் உங்களுடன் கைகோர்க்கத் தயார் . முதலில் சுய விமர்சனத்தை ஆரம்பியுங்கள். குஜராத் , ராம் ஜென்ம பூமி ,பாரத ரத யாத்திரை etc.. –ம் தொடருங்கள் . கையோடு இப்போது யார் உங்கள் முதல் எதிரி ( நாட்டைச் சீரழிப்பதில் ) என்று அடையாளம் காட்டுங்கள் . புரியும் குற்றங்களைப் பட்டியலிடுங்கள் . உங்கள் மனக் குரலை நிப்பாட்டிவிட்டு சட்டரீதியிலேயே உரையாடலைத் தொடருங்கள் .   காத்திருக்கிறோம்.
க.செ
22-3-2016

பி.கு ;
[ ஆணவக்கொலைக்கு தன்னகங்காரம் மட்டுமல்ல . அன்னியரின் சொல்லாடலும் அன்னியரும் சுயத்தைக் கட்ட மிக முக்கியம் . அது பிரதானமாக ஒரு சமூக அடையாளத்தை நிறுவ அத்தியாவசியம் . இந்த அத்தியாவசியமே , இதரரின் கேலி , எகத்தாளத்தைக் கண்டே , பிரதானமாக ஆணவக்கொலையில் ஈடுபடுகின்றனர் . சுய சாதிக் கௌரவமும் , பிற சாதியிடம் கிடைக்கப்போகும் சுயத்தின் அடையாளமும் எலும்புக் குருத்தில் அச்சமேற்படுத்துகிறது . இந்தக் கருத்தாடல் வெளிப்படையாய் கட்டுடைக்கப்படவில்லை . இது லெக்கானியம் ].


1 comment:

  1. Very good .The foot note is notable and should be expanded to an article.

    ReplyDelete