15 Feb 2012

வேட்டையாடு ! விளையாடு! ! (உமாமகேஸ்வரி மிஸ்ஸின் மரணம்)

                                                        அன்றொரு நாள் !


“ ஆச்சாரியர், சீடர் ஆகிய நம் இருவரையும் இறைவன் காப்பாராக! அறிவின் ஆற்றலை நாம் இருவரும் அனுபவிக்குமாறு ஊக்குவிப்பாராக! நாம் இருவரும் ஈடுபாடு மிக்க ஆற்றலுடன் உழைப்போமாக! கற்றது நமக்குப் பயனுள்ளதாக விளங்கட்டும்! எதற்காகவும் நாம் ஒருவரையொருவர் வெறுக்காமல் இருப்போமாக! ”
- தைத்திரீய உபநிஷதம்.

13.2.2012. இன்று அந்தப் பள்ளி திறக்கும் நாள்.
இன்று ‘உமாமகேஸ்வரி மிஸ்’ மட்டும் பள்ளிக்கு வரமாட்டார்.

இன்று, மேலே கூறிய உபநிஷத கால இறைவணக்கம் கூறா விட்டாலும் நவீனகால இறைவணக்கம் பாடியிருப்பார். ஆனால், அது (இறைவணக்கம்) மாணவர்களுடனான ஒருவருக்கொருவருடனான (Inter Personal) உறவை முன்னிலைப்படுத்தாது.
                                   
அதுதான்,உமாமகேஸ்வரி மிஸ்சைக் கொன்று விட்டது.
அப்படி என்ன செய்து விட்டார் ' உமாமகேஸ்வரி மிஸ்' ? பெரும்பாலோர் செய்யும் தவறுதான் அது.

இன்றுள்ள தனியன்களும் நிறுவனங்களும் தாராளமயமாக்கல், உலகமயமாக்கல், சுதந்திர வணிகமயமாதல் போன்றவற்றின் கட்டமைப்புகள்; அத்தோடு வணிகமயமான கல்வியானது விரிவுபடுத்தப்பட்ட மறு உற்பத்திக்கான (Extended reproduction) மூலப்பொருளாக மாற்றப்பட்டுவிட்டது.

ஆகையால், கல்விக்கூடம் என்பது நுகர்வுப் பொருளான கல்வியை உற்பத்திபண்ணும் தொழிலகம். இப்போது கல்வி! ‘Object!’
[கல்வி எதற்காக பெற்றோர்களால் வாங்கப்படுகிறது? அவர்களின் Fantasy (புனைவுரு) ஆன அதீத சம்பளம், வசதி, மகிழ்விற்கானதாக உள்ள உயர்கல்விக்கான எதிர்காலம், இதை அடையவே கல்வி ].

இப்போது ஆசிரியர் என்பதை உருவகமாக வாசித்தால் கூடுதலாக சில கிடைக்கும். நுகர்வுப் பொருளான இந்தக் கல்வி உயர்கல்விக்கான அடிப்படை. இதைச் சிறப்பாக நுகர்ந்துவிட்டால், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஐரோப்பா உன் காலடியில் என்கிறது மற்றமை(Other). அதாவது, கலாச்சாரம் ஆணையிடுகிறது. தாய்/தந்தைமார்கள் (ஈடிபல்) அந்த வாசனைக்கு அடிமையாகி அவற்றை அடையும் இன்பப் பெருக்கத்திற்கு (Jouissance) உந்தப்படுகிறார்கள். இந்த வகைக் கல்விகள் சமூக அந்தஸ்தில் மேலதிகாரம் (Phallus) செலுத்துகிறது. இந்த நிறுவனங்களின் கவனம் கல்விக் கூடமல்ல. காசை அச்சடித்துக் கொண்டிருக்கிறார்கள் (Mint). ஆரம்பக் கல்வி முதல், மேலே, உச்சிவரை இதுதான். இதில் ஆசிரியர்கள் என்பது நுகர்வுப் பொருளான கல்வியை (Syllabus) கைமாற்றுபவர்கள். அவ்வளவே.


அவன் மாணவன்/மாணவி அல்ல. நுகர்வோன் / நுகர்வோர். அவ்வளவே. இந்த அடிப்படையில் மாணவன்/மாணவி ஆகியோர் கட்டப்பட்டுள்ளனர்.

இந்த விநாடிகளில், Valentine’s day limited period offer! Enjoy BSNL full talk value..... இது BSNL- ல் sms.

BSNL என்பது அரசு நிறுவனம்; வணிக மயமாதல், தனியார் அமைப்புடன் போட்டி! விளைவு, அவர்களின் மேலாண்மையில் 10 வயது மகன்/மகளிலிருந்து, 70 வயது பாட்டி கையில் இருக்கும் கைபேசியில் காதலர் தினம் offer பதிவு செய்யப்பட்டு, வாசிக்கப்பட்டிருக்கும். Post Modern கலாச்சாரம். இதில் உமாமகேஸ்வரி மிஸ் தன்னை,ஆசிரியையாக அடையாளப்படுத்திக் கொண்டுவிட்டார். அவரிடம் நுகரவந்தவரை மாணவர் என்று தவறாகக் கணித்துவிட்டார். (எல்லோரையும் அப்படித்தான் கணிக்கிறார்கள்). அவர், ஆசிரியர், மாணவர் என்ற உறவில், ஒருவருக்கொருவருடனான உறவிலிருந்து செயல்பட்டார். செயல்படுகிறார்கள்.

நுகர்வோன், தன் நுகர்வுப் பொருளை கைமாற்றுவோரின் விரும்பாத நடவடிக்கையால் - மதிப்பெண்கள், வருகைப்பதிவு - தந்தையிடம் புகார். அதைவிட நுகர்வோனுக்கு நல்உபதேசம்.
இப்போது, நுகர்வோனின் இன்பப்பெருக்கு (Jouissance) காயடிக்கப் பட்டுவிட்டது (castrated ), rejection / denial.

ஆசிரியர்/ஆசிரியை அதிகாரத்தை (Phallus) உடையவர்களாக, மாணவனில், அவன் அகத்தில் கட்டப்பட்டிருந்தால்; கலாச்சாரத்தால், இவனைத் தங்களின் நீடிப்பாக மட்டுமே பார்க்கும் சுயமோகப் பெற்றோர்களால் இவனுக்கு மரியாதை, கீழ்படிவு வந்திருக்கும்.
[அரசு கூட, மாணவர்களைக் கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும், ஒழுக்கப்படுத்தவும் (சமூகத்திற்காக) ஏற்கனவே இருந்த அதிகாரத்தைப் பறித்துவிட்டது ].

சுயமோகப் பெற்றோருக்கு இன்றைய காலப் பிள்ளைகள் Precious Child. அதாவது ஒரு பிள்ளை அல்லது இரு பிள்ளைகள். ஆகவே, வேட்டையாடு ! விளையாடு ! ஆனால் மதிப்பெண்கள் முக்கியம். சுயமோகப் பெற்றோர்கள் தங்களின் குழந்தைகளுக்கான Symbolic role-ஐக் (கலாச்சார, மொழி, முன்மாதிரியான பெற்றோரிய நடத்தை)கூடச்செய்யாமல் குழந்தைகளிடம் (கேட்டதெல்லாம் கிடைக்கும், தன்னைப் பற்றி மிகுமதிப்பீடு, அரியவன்/ள் என்ற உள்வாங்கலுக்கான வசதி செய்து கொடுப்பது) அவன்/அவள் தன்னை மாபெரியஆள் ( Grandeur self) என்ற எண்ணம் உருவாகக் காரணமாகி விடுகின்றனர்.

இங்கு பெற்றோருடன் மற்றொரு பெற்றோரின் முக்கியத்துவம் மிக முக்கியம். அதுதான் சின்னப்பெட்டி,TV என்ற தொலைக்காட்சி. இங்கிருந்துதான் தன் Ideal ego-ஐ (லட்சிய அகன்), தன்னை ஐஸ்வர்யாராயாக, விஜய்-யாக, மானாட மயிலாட, உங்களில் ஒரு பிரபுதேவா,நீயா நானா?-கோபியாகவும். இப்படிப் பலவாக, லட்சியப் புருஷி/ புருஷர்களுடன் லட்சிய அகனைக் கட்டிக் கொள்கிறார்கள்.

இதெல்லாம் திருமதிக்குத் தெரிந்திருக்கும். ஒருவேளை அவரின் ஒழுக்கம், கடமை, நேர்மை என்ற விழுமியங்களால் (Super ego) கட்டப்பட்டவராக இருந்திருக்கக்கூடும். குற்றம்/குறை கண்டவுடன் (பேரகனின்) Super ego-வின் உந்தலானது (drive) Ego -வின் தற்காப்பையும் மீறி செயல்பட்டு, அந்த அவனின் நல்லதற்காக, திருத்த எடுத்த முயற்சியை அவன் இன்பப் பெருக்கு (Jouissance) காயடிக்கப்பட்டதாக, (castrated) காயம்பட்டுவிடுகிறான் (affect). (வேறுமாதிரி அவன் மாணவனாக கட்டப்படவே இல்லை; காசு கொடுத்து வாங்கும் கல்வி, அவன் நுகர்வோனாகவே உருவாக்கப்பட்டவன்). விளைவு ! மோசம்.


“திவசக்குருக்”களான Mass Media –க்களுக்கு தீனி கிடைத்து, கொலை, குற்றவாளி, அப்பா, அம்மா மோசம் ; இத்தியாதி. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டு திவசம் முடிந்துவிட்டது. இனி அடுத்த திவசத்திற்குத்தான் எல்லோரும் பங்கேற்பர்.

உலகமயமாதல், கல்வி வணிகமயமாதல், நுகர்வுக் கலாச்சாரம், தாராளமயமாக்கல், அனைத்தும் வழமைபோல். எல்லோரும், இலவசம், offer-க்காகக் காத்திருப்போம். எத்தனை வாய்தாக்கள்; எத்தனை கோடிகள்; கேட்பாரற்ற கொள்ளை; எல்லாம் ஈஸ்வரன் செயல்.

2 comments:

  1. //ஆசிரியர்/ஆசிரியை அதிகாரத்தை (Phallus) உடையவர்களாக, மாணவனில், அவன் அகத்தில் கட்டப்பட்டிருந்தால்; கலாச்சாரத்தால், இவனைத் தங்களின் நீடிப்பாக மட்டுமே பார்க்கும் சுயமோகப் பெற்றோர்களால் இவனுக்கு மரியாதை, கீழ்படிவு வந்திருக்கும்.
    [அரசு கூட, மாணவர்களைக் கண்டிக்கவும், ஒழுங்குபடுத்தவும், ஒழுக்கப்படுத்தவும் (சமூகத்திற்காக) ஏற்கனவே இருந்த அதிகாரத்தைப் பறித்துவிட்டது ].
    //
    வெளிநாடுகளில், குறிப்பாக அமெரிக்காவில் சர்வ சாதாரணமாக நடக்கும் இது போன்ற படுகொலைகளை அலசிய யாரும் இந்தக் கருத்தை சொன்னார்களா என்பது சந்தேகம் தான். ஏனென்றால் அங்கு ஆசிரியர்கள் தண்ணீர்ப் பாம்பாகக் கூட இல்லை. பயப்படவே அவசியமில்லாத சாதாரணப் பல்லிகளே.

    இந்த உலகமயமாதல் சூழலிலும் ஆசிரியர்களைக் காப்பாற்றும் வழியாக இது நாள் வரை ஆசிரியர்களை அதிகாரத்தின் நீட்சியாக வைத்திருந்தது தான்.

    ReplyDelete
  2. //திவசக்குருக்”களான Mass Media –க்களுக்கு தீனி கிடைத்து, கொலை, குற்றவாளி, அப்பா, அம்மா மோசம் ; இத்தியாதி. மெட்ரிகுலேசன் பள்ளிகளில் இரங்கல் செய்தி வாசிக்கப்பட்டு திவசம் முடிந்துவிட்டது. இனி அடுத்த திவசத்திற்குத்தான் எல்லோரும் பங்கேற்பர்.

    உலகமயமாதல், கல்வி வணிகமயமாதல், நுகர்வுக் கலாச்சாரம், தாராளமயமாக்கல், அனைத்தும் வழமைபோல். எல்லோரும், இலவசம், offer-க்காகக் காத்திருப்போம். எத்தனை வாய்தாக்கள்; எத்தனை கோடிகள்; கேட்பாரற்ற கொள்ளை; எல்லாம் ஈஸ்வரன் செயல்.


    காபி கொடு! Hindu வந்திருச்சா !!//
    இன்றைய நிலையை இதை விட தெளிவாக சொல்லமுடியாது
    காபி குடிங்க ஜி..

    ReplyDelete